×

அமெரிக்க அரசின் உயர்நிலை அரசியல் அதிகாரிகளும் பென்டகனின் இராணுவ அவதானிகளும்

அமெரிக்க அரசின் உயர்நிலை அரசியல் அதிகாரிகளும் பென்டகனின் இராணுவ அவதானிகளும்

அமெரிக்க அரசின் உயர்நிலை அரசியல் அதிகாரிகளும் பென்டகனின் இராணுவ அவதானிகளும் – அதனது சிறப்புப் படைப்பிரிவுகளின் பயிற்சி நிபுணர்களும் -அடிக்கடி கொழும்பிற்கும் களமுனைகளுக்குமென பயணம் செய்கின்றனர்.

அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவான கிறின் பரேட்டின் பயிற்சியாளர்கள் . சிங்களத்தரைத் துருப்புகளுக்கு சமர்ப் பயிற்சி அளித்துவருவது பழைய சங்கதி. இப்போது, அமெரிக்கக் கடற்படையின் தாக்குதலணியான ‘”சீல்” கொமாண்டோப்பிரிவின் பயிற்சியாளர்கள் -சிங்களக் கடற்படையினரின் கடற்சண்டைத் தரத்தை உயர்த்தவென -கொழும்பு வந்துள்ளனர்.

இதேசமயம், வடக்கு கிழக்கு போர்முனைகளுக்கு நேரடி விஜயம் செய்யும் அமெரிக்க அதிகாரிகள் சிங்களப்படை முகாங்களில் தங்கி நின்று சிங்களப் படைத் தளபதிகளுடன் சந்திப்புக்களையும் கலந்தாலோசனைகளையும் நடாத்தி வருகின்றனர்.

இதேசமயம்,உயர்தொழில்நுட்ப இராணுவ உபகரணங்களை அமெரிக்க அதிகாரிகள் சிங்களப்படைக்கு வழங்கி வருகின்றனர். சிங்களத் துருப்புகளுக்குச் சிம்மசொப்பனமாக மாறிவிட்ட புலிகளின் மோட்டர்-ஆட்டிலறிகளை அழிப்பதற்காக அவற்றின் ஏவுதளங்களை இனங்காண முயலும் நவீன வேவுச் சாதனங்களையும் அதற்கான பயிற்சியாளர்களையும் இலங்கைக்கு அது அனுப்பி வைக்கின்றது.

மொத்தத்தில், சிறிலங்கா அரசின் படை பலத்தை பலப்படுத்தி விடுவதிலும் இலங்கையின் இனப்போரில் தனது இராணுவத் தலையீட்டை அதிகரிப்பதிலும் அமெரிக்க அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

பயிற்சிகள் – சாதனங்கள் என்று படையியல்ரீதியான உதவிகளை வழங்கி சிங்கள அரசுக்கு இராணுவ ஆதரவை நல்கும் அமெரிக்க அரசானது அரசியல் -இராஜதந்திர மார்க்கங்களிலும் இலங்கைத்தீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது.

இலங்கைத்தீவு அமைந்துள்ள தென்னாசியப் பிராந்தியத்தில் தனது *தேசிய’ நலன்களைப் பேணவென அமெரிக்க அரசு நியமித்த முக்கிய அதிகாரிகள், அடிக்கடி, கொழும்பு சென்று- சிங்கள ஆட்சியாளர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடாத்திச் செல்வது கடந்த சில வருடங்களில் அதிகரித்துச் செல்கின்றது.

மிக அண்மையில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தென்னாசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கால் இன்டபுத் (Karl Inderfuth), அமெரிக்க தேசிய பாதுகாப்புச்சபையின் தென்னாசிய விவகாரங்களுக்கான முத்தபணிப்பாளர் புரூஸ்ரைவில் ஆகியோருடன் ஐ. நா. சபைக்கான அமெரிக்கத் தூதர் பில் றிச்சட்சனும் கொழும்பு சென்று சந்திரிகாவையும் அவரது பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

பல்வகை அரசியல் ஆதரவை சந்திரிகா அரசாங்கத்திற்கு நல்கிவந்த அமெரிக்க நிர்வாகம், தான் தயாரித்த பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகள் இயக்கத்தையும் இணைத்து- இதன் மூலம் சிங்கள அரசின் போர்முயற்சிக்கு அரசியல், தார்மீக ஆதரவைக் கொடுத்து- சிங்கள அரசையும் தன்வசப்படுத்தியுள்ளது.

இதேவேளை, பொருண்மிய உதவிகள் மற்றும் முதலீடுகள் என்ற ரீதியில் இலங்கைத்தீவின் பொருளாதாரத்திலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கனிமவளங்களைக் கிண்டி எடுக்கவென்றும், வானொலி- தொலைத்தொடர்பு நிலையத்திற்கென்றும் பெருமளவு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுக்க அமெரிக்கா முயல்வது அனைவரும் அறிந்த செய்தி. போர்ச்சுமைச் செலவால் அல்லலுறும் சிங்கள அரசுக்கு பொருளாதார உதவிகள் புரிந்து கைதூக்கி விடுவதன்மூலம் போரையும் தூண்டிக் கொண்டு-இலங்கைத்தீவின் பொருண்மியத்தையும் தன்மீது தாங்கி நிற்கும் நிலைக்கு அமெரிக்கா இட்டுச் செல்கின்றது.

இதேவேளை, சிலாபப்பகுதியில் ஒரு பாரிய வானொலி அறிவியல் நிலையத்தை அமைத்துவிடுவதிலும் அமெரிக்கா அக்கறை காட்டுகின்றது. ஒலிபரப்பு நிலையம் என்ற கோதாவில் ஒரு தொலைத்தொடர்புத் தனத்தை இலங்கைத்தீவில் உருவாக்க அமெரிக்கா முயல்கிறது என்று சிலர் ஐயப்படுகின்றனர். இது அப்பிராந்தியத்திற்கான அமெரிக்க புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டு மையமாக செயற்பட வாய்ப்புண்டு என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவ்விதம்,இராணுவ- அரசியல் பொருளாதார – புலனாய்வு ரீதியில் இலங்கைத்தீவின் மீது தலையீடுகள் செய்து. தீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவர அமெரிக்கா பகீரதப்பிரயத்தனம் செய்கின்றது. சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இந்த அமெரிக்கப் படையெடுப்பு தீவிரம் பெறத்தொடங்கியது.

புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திவிட்டு, அதை ஒரு சாட்டாக வைத்து பயங்கரவாதத்தை ஒழிக்க சிறிலங்கா அரசுக்கு உதவுதல் என்ற போர்வையில் இலங்கைத்தீவில் தனது தலையீட்டை அமெரிக்கா வேகப்படுத்தியுள்ளது.

இலங்கைத்தீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தப்பிராந்தியத்தில் அது கொண்டுள்ள வல்லரசு நலன்தான் மிக முக்கிய காரணியாகும்.

இந்தியா-இலங்கை – பாகிஸ்தான்-பங்களாதேஸ்-நேபாளம்-பூட்டான் மாலைதீவுகள் ஆகிய நாடுகளைக் கொண்ட தென்னாசிய மண்டலத்தில் தனது வல்லாதிக்கச் செல்வாக்கை நிலை நிறுத்தக்கூடிய சாதக அம்சங்களைக்கொண்ட வாய்ப்பான அரசாக அது சிங்களத்தைக் கருதுகின்றது.

அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கடல்வழி இராணுவக் கேந்திரமாக இலங்கைத்தீவு இருந்து வருகின்றது. இலங்கையின் இனப்போரில் சிங்களப்படைக்கு உதவுவதற்கென தனது கடல் கொமாண்டோ அணியான ‘சீல்’பிரிவினரை அமெரிக்க அரசு அனுப்பினாலும் அந்த உதவிப்பணிக்கும் அப்பால், இந்திய-இலங்கைக்கடற்பரப்பில்’சீல்’கொமாண்டோக்கள் எதிர்காலதேவைகருதி- சில இராணுவ ஆய்வுகளையும் இரகசியமாக மேற்கொள்வர் என்பது திண்ணம்.

இதேவேளை, இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடான இந்தியாவுடன் சிறிலங்கா அரசு கொண்டிருக்கும் அவநம்பிக்கை – அமெரிக்காவின் தெரிவிற்கு வலுச்சேர்த்துள்ளது.

சிறிலங்கா அரசானது அடிப்படையில் இந்திய எதிர்ப்புக் குணாம்சத்தைக் கொண்டிருக்கின்றது. காலத்திற்கு காலம், தனது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பேராபத்தை விளைவிக்க முயன்ற இந்திய சீன போரின்போது சீன ஆதரவு நிலைப்பாட்டையே சிங்கள அரசு கடைப்பிடித்தது. இந்தியாவின் ஆதரவுடன் நடந்த பங்களாதேஸ் விடுதலைப்போராட்டத்தின்போது அந்த விடுதலைப்போரை அடக்க முயன்ற பாகிஸ்தானிய போர்விமானங்கள், தனது நிலப்பரப்பிற்கு மேலாகப் பறக்க இந்திய அரசு தடைவிதித்தது (பாகிஸ்தானையும் பங்களாதேசையும் இந்திய நிலப்பரப்பு பிரிக்கின்றது). இந்த நிலையில் பாகிஸ்தானிய போர்விமானங்களை இலங்கைத்தீவின் மேலாகப் பறந்து – இந்தியாவைச்சுற்றி பங்களாதேசிற்குச் செல்ல சிங்கள அரசு அனுமதித்து-இந்தியாவுக்கு விரோதமாகச் செயற்பட்டிருந்தது.

இலங்கைத்தீவு மீது அண்மைக்காலமாக விரிவடைந்துவரும் அமெரிக்க ஆதிக்கத்தை இந்தியா கண்டும் காணாமலும் இருந்து வருகின்றது இதற்கு இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நெருக்கடியே பிரதான காரணியாகும். நிலையான ஆட்சியின்மையால் இந்திய அரசு, கடந்த சில வருடங்களாக நிலை தடுமாறியபடி உள்ளது. உள்நாட்டு அரசியல் சிக்கல் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக இந்திய ஆட்சிபீடத்தினர் அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதனால் அதனது கொல்லைப்புறத்தில் புற்றுநோய் போல் பரவிவரும் அமெரிக்க தலையீட்டை, அது கண்டும்- காணமலும் இருந்துவருகின்றது.

தென்னாசியப் பிராந்தியத்திலுள்ள தனது வல்லாதிக்க நலன்களை உறுதியாகப் பாதுகாக்க வேண்டுமாயின் சிங்கள அரசின் ஒற்றையாட்சி இரும்புப்பிடிக்குள் இலங்கைத்தீவு முழுவதும் இருக்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது. அதனால்தான் தமிழரின் விடுதலைப்போரை இராணுவ ரீதியாக ஒடுக்கி – இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பை பாதுகாக்கத் தேவையான சகலவிதமான உதவிகளையும் சிங்கள அரசுக்கு நல்கி வருகின்றது அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டால் சிங்கள அரசும் உற்சாகம் பெற்று தமிழ் இனத்துடனான போரைத் தீவிரப்படுத்துகின்றது.

– விடுதலைப்புலிகள் இதழ்
– சித்திரை 1998.

– தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments