×

இலங்கை வரலாற்றுப் பின்னணி

இலங்கை வரலாற்றுப் பின்னணி.

பழந்தமிழ் நாடு. செந்தமிழ்நாடும் கொடுந்தமிழ் நாடும் என இரு பிரிவாகப் பிரித்து பேசப் பெற்றது. அவற்றை மருவிச் சூழ்ந்துள்ள நாடுகள் பதினேழு என்று குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றைக் கீழ்வரும் பழம் பாடலால் அறியலாம்.

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்கடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கவங்கம் கங்கம் மகதம் கவுடம் கடாரம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே!

ஈழம் என்பது சிங்களத்தின் மறு பெயராகும் என்பது, இலக்கண விளக்கம் ‘செந்தமிழ் நிலஞ்சேர்’ என்னும் நூற்பாவுரையால் அறியப்படும். ‘ சிங்களம்’ என்னும் பெயர், சிங்கவாகுவின் மகன் விசயன், தன் தந்தையின் பெயரடிப்படையாகக் கொண்டு அமைத்ததென்பது பொருந்தாது. சிங்கவாகுவின் மகன் இலங்கைக்கு வந்தது இன்றைக்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன். ஆனால் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாரதத்தில் சிங்களம் என்னும் பெயர் வந்துள்ளது. இப்பெயர் அங்குப் பேரளவில் விளையும் கறுவாப்பட்டையால் வந்தது என்பதே பொருந்துவதாகும். இலக்குமன் இராமச்சந்திர வைத்திய பண்டிதர் என்பார் எழுதிய சமற்கிருத – ஆங்கில அகர முதலியில் சிங்களத் துவீபம் என்பதற்குப் பட்டைத் தீவு என்றே பொருள் தரப் பெற்றுள்ளது.

இனி, சிங்களம் என்னுஞ் சொல்லால் இந்நாடு குறிக்கப் பெறுவதை விட, இலங்கை, ஈழம் என்னுஞ் சொற்களால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப் பெறுவதே பெருவழக்காக உள்ளது.

தொல்லிலங்கை கட்டழித்த

-சிலப். 2.35:3

‘பெருமா விலங்கை

-4 : 178-6.

‘இலங்கைக் கிழவோன்’

-40 : 374-6.

‘தொல்மா விலங்கை’

-சிறுபாண் -119.

‘இலங்கையில் எழுந்த சமரம்’

– சிலப். 26-38.

‘ஈழத்துணவு’

-பட்டினப்-191.

‘ஈழம்’

முத்தொள்.26-3.

முதலிய குறிப்புகளால் இதனை உணரலாம். இவ்வாறாகப் பலவகை இலக்கியக் குறிப்புகளாலும், பற்பல வரலாற்றுக் குறிப்புகளாலும், இலங்கைக்கும் சிங்களவர்க்கும் உள்ள தொடர்பை விட அல்லது உரிமையை விட, அதற்கும் தமிழர்க்கும் உள்ள தொடர்பே மிகுதி என்று நிலை நாட்டலாம். சேர மண்டிலம், சோழ மண்டிலம், பாண்டிய மண்டிலம், தொண்டை மண்டிலம் என்று மண்டிலப் பெயர் கொண்டு வழங்கும் நாடுகளுள் ஈழ மண்டிலம் என்பதும் ஒன்றாகப் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப் பெறுகிறது.

விசயன் இலங்கைக்கு வந்த கி.மு.543க்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே, அந்நாடு தமிழ் மக்கள் குடி கொண்டிருந்த நாடாக இருந்தது என்பர் பெர்டோலாக்கி (Bertolocei) பென்னட் (Bennet) ஆகியஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள்.

அந்நாட்டில் வழங்கும் பல ஊர்களின் பெயர்கள் இன்னும் தூய தமிழ்ப் பெயர்களாகவே விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக . அம்பாறை, பாலாவி, மாதோட்டம், மாந்தை, சிலாபம், குசலை, உடைப்பு, ஆனைமடு பள்ளம், கற்பிட்டி, குதிரை மலை, வில்பற்று, முசலி, மன்னார் மூதூர், கந்தளாய், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி, பச்சிலைப் பள்ளி, கரைச்சிக் குடியிருப்பு, முள்ளியவலை, குமணை, உகந்தை, நல்லூர், அரிப்பு, வெருகல் (ஆறு), பருத்தித்துறை, புத்தளம், வதுளை, கண்டி, கதிர்காமம், கொழும்பூ (இதுவே பின்னர் கொழும்பு என்றானது), சிலாத்துறை, சுண்ணாகம், செம்பியன் பற்று, ஆனையிறவு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மண்டைத்தீவு. வேலணை, காரைத்தீவு, எழுவைத் தீவு, அனலைத் தீவு, புங்குடு தீவு, (இது பொன் கொடு தீவு என்பதன் மருவாதல் வேண்டும்) நெடுந்தீவு, பாலைத்தீவு, மாங்குளம், அருவியாறு, ஆனைமேடு, களுத்துறை, அலம்பில், வப்புவெளி, செங்கலம், கோட்டை முனை, பொலனறுவை, மட்டக்களப்பு, தும்பௗஞ்சோலை, அக்கறைபற்று, வெளிமடை, அப்புத்தளை, வெல்லவாய், புத்தளை, கருக்குப்பனை, முந்நூல், அறுகும்குடா, அம்பாந்தோட்டை, தேவுத்துறை, பாணன்துறை, கமம் முதலிய பரவலான எண்ணிறந்த ஊர்கள் தூய தமிழ்ப் பெயர்களே!

மேலும் இவற்றுள் பல பெயர்கள் பண்டைக் காலந் தொட்டே அங்கு வழங்குகின்றன. தேவாரத்தில் பாலாவி, மாதோட்டம், மாந்தை, திரிகோணமலை, திருக்கேதீசுவரம் முதலிய பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன. இலங்கையில் பண்டையில் ஆண்ட சோழ, பாண்டிய அரச வழியினர் மாதோட்டத்தில் கட்டியிருந்த கோட்டை மிக்க வலிமையும் அழகும் வியப்பும் உடையதென்றும், பெருமாக்கலங்கள் மன்னார் கடலில் வருமாயின் அவற்றைத் தன்பால் இழுத்துக் கொள்ளும் காந்தப்பொறியுடையதாய் இருந்த தென்றும் கூறுவர்.

(பார்க்க: தமிழ்ச் சங்கமும் ஈழநாடும் – கட்டுரை -செந்தமிழ் தொழுதி 8-பகுதி 10).

உரோமர் இலங்கையிலே வாணிகம் செய்த காலத்திலேயே தமிழர் மாதோட்டத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு செய்தார்கள் என்னும் செய்தி குறிக்கப் பெறுகிறது.

(Journal of the Royal Asiatic Society-Ceylon Branch. 1848-p. 73)

மேலும் பண்டைய நாகர்களுக்கும் இலங்கைக்கும் பெருந்தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப் பெறுகிறது. நாகர்கள் பழந்திராவிடர்கள். இராவணன் நாகர்கள் மரபில் வந்தவனே என்பர். ஒரு காலத்தில் நாகர்கள் இலங்கையிலிருந்து இமயம் வரை ஆட்சி செய்தனர் என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன . இலங்கை விசயனால் ஆளப்படுவதற்கு முன்னரே, அங்கிருந்த அரசர்கள் நாகராயர் என்னும் பெயரைப் புனைந்திருந்தனர் என்றும் தெரிய வருகிறது.

(Sketches of Ceylon History).

இலங்கையிலும் தமிழகத்திலும் நாகபுரம், நாகர்கோயில், நாகப்பட்டினம் முதலிய பெயர் கொண்ட பல ஊர்கள் இன்றும் உண்டு. ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் சிங்களவர்களால் நாகத்தீவு என்றே வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அரசிழந்த நாகர்கள் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் விந்தனைப் பகுதியிலும் நயினார் தீவிலும் போய் ஒதுங்கியிருந்தார் என்பர். மேலும் முதற்கழகப் புலவர் முடி நாகராயர் என்பாரும், ஈழத்துப் பூதந் தேவனார் என்பாரும், இறையனாரகப் பொருளுரையைப் பாடங்கேட்ட இளநாகர் என்பாரும், அவர் மாணவர் நீலகண்டனாரும் ஈழநாட்டுப் புலவர்களாதல் வேண்டும் என்று அறிஞர் பலர் கருதுவர். யாழ்ப்பாணத்துக்கு மணற்றி என்றொரு பெயரும் உண்டு. இன்னும் மாந்தையிலும், மணற்றியிலும் பாண்டியர் போர் புரிந்து பெற்ற கொற்றமும் இறையனார் அகப்பொருட் கோவையிற் கூறப் பெறுகின்றது. மாந்தை என்பது மாதோட்டத்துக்கு அண்மையில் உள்ள ஊர். மணற்றி என்பது மணல் மேடு என்றும் மணற்றிடல் என்றும் ஒரு காலத்தில் வழங்கப் பெற்றதாகத் தெரிகிறது. இஃதொரு காலம் இலங்கையரசர் பாண்டியரொடும் சோழரொடும் பொருதிய போர்க்களமாகவிருந்தது. இதன் பகுதிகளுள் ஒன்று இன்றும் களபூமி என்னும் பெயரால் வழங்கும் மாந்தையிலும் மணற்றியிலும் கி.மு 103-இல் ஒரு பெரிய போர் வாலகம் நடந்ததென்றும், அப்போரில் பாண்டியர் பாகுவைப் புறங்கண்டு அவன் மனைவியையும் புத்த கலத்தை பாத்திரத்தையும் கவர்ந்து கொண்டு போனதுடன், ஈழநாட்டையும் தமதடிப்படுத்திப் போயினர் என்றும் மகாவம்சம் கூறுகிறது.

.”இன்னும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ஈழ நாட்டார் எனப்படுவார். அவர் குணபூசண சிங்காரிய அரசர்க்கு அமைச்சராயிருந்து, ஈழநாட்டில் பல அறச்சாலைகளும், கல்விக் கூடங்களும் அமைத்தார். அஃது அடியார்க்கு நல்லா குளமென வழங்குகின்றது. அது வண்ணைச் சிவன் கோவில் சந்நிதித் தெருவில் உள்ளது. அதற்கயலிலே அவர் தம் அரசன் பெயராற் அமைப்பி்த்த குளம் ஆரியகுளம் என இக்காலத்து வழங்குகிறது. அவர் இருந்த மனைநிலமும் அவர் பெயராலேயே வழங்குகின்றது. அவர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழர் மிகப் பேரளவில் இருந்தனர். அவரே அறுபத்து மூன்று நாயன்மார்கள் கோவிலும், பூசைக் கட்டளை யும் வகுத்தவர். அக்கோவில் இருந்த இடம் ‘ நாயன்மார் கட்டு’ என்று இன்றும் வழங்குகின்றது. அடியார்க்கு நல்லார் நிரம்பை என்னும் ஊரில் பிறந்தவர்”

(தமிழ்ச் சங்கமும் ஈழநாடும் – கட்டுரை. ‘செந்தமிழ்’ தொகுதி8; பகுதி 10)

மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள செம்பியன் பற்று, பல்லவராயன் கட்டு, தொண்டைமானாறு, பாண்டியன் தாழ்வு முதலிய இடப் பெயர்களை நோக்குமிடத்துத் தமிழ்நாட்டு வேந்தர்கள் யாழ்ப்பாணத் தொடர்புடையவர்களாயிருந்தனர் என்பது நன்கு துணியப்படும். இன்னும் மாதோட்டத்துக்குத் தெற்கேயுள்ள குதிரை மலை மிக்க பழமையும், யவன நாடுவரையும் பரந்த புகழும் உடையது. அஃதொரு காலம் சிற்றரசருள்ளே எழினியும் பிட்டங்கொற்றனும் புறநானூற்றில் பாடப்பட்டோராவர். (மேற்படி கட்டுரை)

இவ்வாறான பல இலக்கிய வரலாற்றுச் செய்திகளால், இலங்கையைத் தொடக்கத்தில் தமிழினத்தவரின் முன்னோர்களே ஆண்டிருந்தனர் என்பதும், இடையில் கி.மு. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டளவிலேயே ஆரிய இனத்தவரான சிங்களவர்கள் வட இந்தியாவினின்று வந்து அங்குக் குடியேறித் தமிழ் அரசர்களுடன் சண்டையிட்டு அந்நாட்டைக் கைப்பற்றினர் என்பதும், அதன் பின்னரும் அந்நாடு தமிழர் கைக்கும் சிங்களர் கைக்கும் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததென்பதும், இறுதியில் கி.பி. 1070 வரை இலங்கை முழுவதும் இராசேந்திர சோழனால் ஆளப்பெற்றதென்பதும், அதன் பின்னரே போர்த்துக்கீசியர் அதனைக் கைப்பற்றி ஆண்டனர் என்பதும் தெரிய வருகின்றன. இவ்வகையில் இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் நெருங்கிய கலை, பண்பாட்டு,சமய, குமுகவியல், மாந்த உறவுகள் உண்டு என்று வரலாற்றுப் பேராசிரியர் பலரும் அறுதியிட்டுக் கூறுகின்றனர். இதற்கான அகப் புறச் சான்றுகள் வடமொழி, பாலி, தமிழ் ஆகிய மும்மொழி இலக்கியங்களிலும் பரந்து கிடக்கின்றன .

-தொடரும்…..

-தமிழீழம்

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

 

guest
1 Comment