×

“எப்படிப் பட்டவர்கள் எம் மக்கள்? “

“எப்படிப் பட்டவர்கள் எம் மக்கள்? “

மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியே எப்பொழுதும் மேலெழுகின்றது. ” சூரியப் பிரகாசம் 1 இன் போது, கட்டிய துணியோடு கைதடி தாண்டுகையில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் விழி பிதுங்கி. வாய் மூடி மௌனித்துப் போனது சிங்கள அரசு.

இப்பொழுதும் அதே கேள்வி மேலெழுகின்றது. ஆனால், இப்பொழுது வேறுபாடு என்ன வெனில், சிங்களம் உரக்கக் கத்துகின்றது; வானுக்கும் மண்ணுக்கும் துள்ளிக் குதிக்கின்றது; யாழ்ப்பாணம் திரும்பிய மக்களைத், தனது நாளேடுகளின் தலைப்புச் செய்திகளை உருவாக்கும் மாந்தராக்குகின்றது; வண்ண வண்ண ஒளிப்படங்களின் நாயக, நாயகிகளாக்குகின்றது; எம்மக்கள் அங்கு என்ன செய்தாலும், அவர்கள் தோசை சுட்டு விற்றாலும், ஆட்டு மந்தை மேய்த்தாலும் அதனையே அதிசயச் செய்தியாக்குகின்றது.

யாழ்ப்பாணம் திரும்பும் மக்களை, வாழும் போது இறந்தோர் திரும்புகின்றனர்” என்றும், செத்த நகராகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண மண் சிங்களப் படையின் சீரிய பாதம்பட்டு அகலிகை உயர்த்தாற்போல் உயிர்க்கின்றது என்றும் வர்ணிக்கின்றது; யாழ்ப்பாண நகரைக் கட்டியெழுப்பி யாழ் மக்களை மீண்டும் கல்விக் கடலுக்குள்ளும், வேளாண்மைத் தொழிலுக்குள்ளும் முற்றிலுமாக மூழ்கடிக்கப் போவதாகவும் பெருமையடித்துக் கொள்கின்றது. எவ்வளவு பரிவு. எவ்வளவு அன்பு. எவ்வளவு கரிசனை.

எனவே, இப்படிப்பட்டவர் தான் தமிழ்மக்கள் என்கிறது சிங்களம். கிடுகு வேலிக்குள் அதுவே உலக மென்றும், தானுண்டு, தனது குடும்பம். தோட்டம், அரசாங்கத் தொழிலுண்டு என்றும், அடக்க ஒடுக்கமாக வாழ்ந்த மக்களிடையே, புலிகள் போன்ற பயங்கரவாதிகள் தோன்றியது ஒரு தற்செயல் விபத்து. இப்போது, எல்லாமே சரியாகி விட்டது. இம் மக்கள் இரண்டொரு வார இலவச உணவுப்பங்கீட்டினைப் பெறுவதையும், இ போ.ச. நவீன வண்டியில் இருந்து போவதையும், சதோச சலுசலாவில் சகாய விலையிற் பொருட்கள் வாங்குவதையும் இடைக்கிடை வந்து, இல்லாமலே போகும் மின்னொளியைக் காண்பதையுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாகக் கருதும் எளிமையான மக்கள். அதனால்தான், “அவர்கள் புலிகளைக் கைவிட்டு எம்பக்கம் வந்துவிட்டனர்” என்கின்றது சிங்களம்.

“இல்லை இல்லை. இதுவல்ல உண்மை; யாழ்ப்பாணத்தார் அப் படியானவர் அல்லர். தமது உழைப்பால் தேடிய தோட்டங்களில், வீடு வாசல்களில், நிம்மதியாக, வசதியாகத் தனிமையாக வாழ விரும்பும் மத்தியதர வகுப்பு மனநிலை கொண்டவர்கள். எனவே தான் அவர்கள் வலிகாமம் திரும்பினர்.” என்கிறார், த.வி. கூட்டணிக்குத் தள்ளாத வயதிலும் தலைமை தாங்கும் சிவசிதம்பரம். “புலிகளை வெறுத்தும்தான், மறுத்தும்தான்-மக்கள் வலிகாமம் வந்தார்களா?” என்ற சிங்களத்துச் செய்தியாளரின் கேள்விக்குச் சிவசிதம்பரம் மட்டுமல்ல, புலிகளை எதிர்க்கும் தமிழ்க்குழுக்கள் கூட பதில் சொல்ல மறுத்து விட்டனர். அது உண்மையல்ல என்பது மட்டுமன்றி; ”ஆம்” எனத் தாம் அளிக்கும் பதில், தம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பேரம் பேசும் ஆற்றலையும் இழக்க வைத்து விடும் என்கிற பயமும் இவர்கட்கு மிகுதியாக உண்டு. அதனால் தான் புலிகளை அழிக்க விரும்புவோர் கூட, தாம் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தமது அரசியல் வாழ்வைத் தக்க வைக்கப் புலிகளையே நம்பியிருக்கிறார்கள். இது ஒரு விசித்திர நகை முறண் என்பது வேறு விடயம் தான். எனவே, மீண்டும் அக்கேள்வி எழுகின்றது. “இப்படிப் பட்டவர்களா எம் மக்கள்?”

அல்லது, ஆய்வாளர், அறிஞர், அறிவுஜீவிகள் எனத் தம்மை, தாமே அழைப்போர் கூறிக்கொள்வது போல நிலவுடமைச் சமூகத்தின் அடிப்படைகளை கொண்ட இன்னமும் சாதியடிப்படையிலான ஒரு சமூக அதிகாரப் படி நிலை முறைமையைப் பின்பற்றுகிற. அதன் மூலம் தனது சமூக அதிகாரப் பேணலைக் காப்பாற்ற விரும்புகின்ற, அதற்காக ஆளும் அதிகாரமுடையோரோடு அவர் எவராயினும் சரி இணக்கமாகச் செல்லும் இயல்பு உடையவர்களா எம் மக்கள்? நாவலரிலிருந்து, மெத்தப் படித்த பொன்னம்பலம் இராமநாதன் வரை, அன்றும் சரி இன்றும் சரி – பாரம்பரியத்தைப் பேணுவதை முதன் நிலைப் படுத்தியதை இதற்கு இவர்கள் சான்றாகுகின்றனர். இன்னும் சில வரலாற்றாளரோ, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஆகியோர், தம் காலத்தில் எம் மக்கள் பற்றிய தமது மனப்பதிவுகளை எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதை விளக்குகின்றனர்” இந்த நாட்டின் நல்லாட்சிக்குத் தமிழரின் மூளைத் திறன், அவர்களின் சுறு சுறுப்பான உழைப்பு என்பன கடந்த காலங்களில் மிக்க பயனுள்ளதாக அமைந்தன. அதே போலவே, எதிர் காலத்திலும் விலைமதிக்க முடியாத பங்கை இவர்கள் ஆற்றுவர். நாட்டின் நல்லாட்சிக்கு பிரித்தானியர் எப்போதுமே தமிழரின் உதவியை நாடி நிற்பார் என, 1930 களில் ஆங்கிலேய ஆள்பதி ஒருவர் கூறியதைப் பொதுமைப்படுத்தி எம்மக்கள் இத்தகையவர்கள் என எண்ண இடமிருக்கின்றது என்கின்றனர். எனவே, எம்மக்களின் சொந்தமுகம்-உண்மை முகம் எது? அந்நியர் எவராலும் அடி முடி அறியப்படாத எப்படிப்பட்டவர்கள் எம் மக்கள் என்கிற கேள்விக்கு விடை காணவே முடியாதா? வலிகாமத்திலிருந்து ஏன் வந்தார்கள்? பின்பு ஏன் திரும்பிப்போனார்கள்?

இக் கேள்விகளுக்கான மிகச் சரியான விடையை அண்மிப்பதற்கு, நாம் பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும். அப்போது தான், அந்நியர் ஆதிக்கம் என்கிற பாரிய வரலாற்று நெருக்கடிகள் எதிர்ப்பட்ட போதெல்லாம், அதற்கு முகம் கொடுக்க எத்தகைய உத்திகளை எம்மக்கள் பயன் படுத்தினார். என்பதை நாம் அறிய முடியும்; வெளிக்காட்டப்பட முடியாத அவமானச் சின்னமாகத்-தாழ்வுச் சிக்கல் வடுவாக – தன்மானத்திற்கேற்பட்ட தழும்பாக எம் மக்களின் ஆழ்மனதிலே பதிந்து விட்ட அடிமை வாழ்வு மறுப்பின் வெளிப்பாடு, எதிர்ச் செயற்பாடு எது? என்பதை உணர முடியும்.

எத்தனை கொடியேற்ற இறக்கங்களைக் கண்டவர்கள் எம் மக்கள் ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களின் போதும் பல்வேறு உத்திகளூடான பாரம்பரியப் பேணலாக – வெளியார் ஆதிக்கத்திற்கு எதிரான முனைப்பான செயற்பாடாக இணங்கிப் போவது போல அந்நியனோடு உறவாடிப் பின்னர் தம் சொந்த வழியிற் செல்லும் தந்திரோபாயமாக எத்தனையோ வழிகளைக் கையாண்டு, தமது சுகத்தைச் சொந்த முகத்தைத் தேசியத்தின் ஆன்மாவை வேறெவரிடத்திலும் பறிகொடுக்காமல் காப்பாற்றி வருபவர் எம்மக்கள். 1621 இல் போர்த்துக்கேயரிடமும், 1658 டச்சுக்காரரிடமும், 1796 ஆங்கிலேயரிடமும் அடிமைப்பட்டதற்கும், 1948 இல் நாதியற்றுப்போனதற்கும், 1956 58.77.81. 83 இல் அடியுதை பட்டதற்கும், பலம்மிக்க தேசவிடுதலைப் படையணி இன்மையே பிரதான காரணம் என்பதை உணர்ந்தவர்கள் எம் மக்கள். இதன் வெளிப்பாடாகவே விடுதலை உணர்வென்னும் அகல் விளக்கை அணையவிடாமல் நெஞ்சக் கூட்டுக்குள் வைத்துக் காப்பாற்றியதாலேயே, 1970 களில் தமிழர் விடுதலைப் போராட்ட அணியாக முகிழ்ந்த புலிகள் இயக்கம் வளர்ச்சியடைந்த வரலாறு. பரிணமித்தது. இந்தப் புது வரலாற்றின் அடிவரலாறு சங்கிலியனில், பூதத் தம்பியில், பண்டார வன்னியனில், இன்னும்பெயர் தெரியாது, முகமறியாது.விடுதலைக்காக கழுவிலேற்றப்பட்ட மண்ணின் மைந்தரில் உள்ளது என்பதே உண்மை. இது முன்னைய கதை; அண்மைய கதை எவ்வாறுள்ளது?

1990 ஆம் ஆண்டின் போர் தொடங்கிய பின்னாலான நாட்களில், போரோசையைத் தவிர வேறோசை கேட்காத நேரங்களில், சிதறும் தசைத் துண்டங்கள், பாய்ந்திடும் பச்சைக் குருதி என எங்கும் காரிருள் சூழ்ந்த வேளையில் எவ்வாறு இருந்தனர் எம்மக்கள்? என்றுமில்லாதவாறு தம் முன்னே தோன்றிய போர்ச் சூழலை மிக,மோசமான பொருண்மியத் தடையை எவ்விதம் தாண்டினர் எம்மக்கள் ? அசைக்க முடியாத மனவுறுதியின் வெளிப்பாடாக, உள்ளார்ந்த ஆற்றலின் எல்லையை, தமது தாங்கு சக்தியின் உச்சத்தை அப்போது அடைந்தனர் தமிழ் மக்கள். இப்படிப் பட்ட மக்களை எவரால் என்ன செய்யமுடியும்? தாமும் வாழ்ந்து, தமது போராளிகளையும், தாயகத்தையும் வாழவைத்த மாண்புடையவர்களே எம் மக்கள்!

எனவேதான், பாரிய படை யெடுப்பு எதிர் வந்தபோதும், அது சரி வராதபோது பின்பு கதையை மாற்றி எதிரி வஞ்சக உறவாடிய போதும், அந்தந்தச் சூழலுக் கேற்ப தமது பட்டறிவு சொன்ன பாதைக்கேற்ப நடந்தனர் எம் மக்கள். எம்மக்கள் கையாண்ட உத்தியின் பெறுபேறுதான் என்ன? வலிகாமத்தில், வடமராட்சியில், தென்மராட்சியில், தென் தமிழீழத் தின் எல்லைப் பரப்போடும் வன்னிப் பெருநிலத்திலும் – எங்கும் -எம் மக்கள் கால் பதித்துப் பரவி நிற்கின்றனர். எங்கெல்லாம் எம்மக்களோ அங்கெல்லாம் புலிகளும்!
இப்போது வட தமிழீழத்தின் ஆகக்கூடிய நிலப்பரப்பாக கொண்ட வன்னிப் பெருநிலம் பெருமிதம் அடைகின்றது. தமிழீழத்திற்குள் புதிய குடித்தொகைப் பரம்பலிது.

எனவே, உறுதிமிக்க தேசிய விடு தலைப் படையணியாகப் புலிகள் பூரணமாக உருவெடுக்கும்வரை, இடம்பெயர்ந்தும் இடம்சேர்ந்தும் எம்மக்கள் வகுக்கும் உத்திகளைச் சிங்களம் எவ்வாறு புரியும்? ஆழமான நுட்பமான மனப் பாங்குள்ள எம்மக்களைத் தவறாகக் கணிப்பதன் விளைவு தவிர்க்கமுடியாத பெருஞ் சங்கடத்துட் சிங்களம் சிக்குகின்றமையேயாகும்.

பாரதி பாடியதுபோல “நல்ல தோர் வீணைசெய்தே அதை நலம் கெடப் புழுதியில்” எறிபவரல்லர் எம்மக்கள்; சுடர்மிகு அறிவுடன்” உள்ள அவர்கள் “நிலச் சுமையென ஒருபோதும் வாழ்ந்திடார்” என்பதை இந்த உலகம் மிக விரைவில் அறியும்!

– க. வே. பாலகுமாரன்
– விடுதலைப்புலிகள் இதழ் வைகாசி 1996.
– தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments