
பெத்தாச்சியைக் காணேல. !!! வெளியில் போய் கனநேரமாப் போச்சு.
வெளியில் போனால் இப்பிடிக் கனநேரமாக நிக்கமாட்டா. இரவில போவில வசந்தியைக் கூட்டிக் கொண்டு போகோணுமெண்டு, நான் பெத்தாச்சிக்கு அடிக்கடி சொல்லுறனான்.
எனக்கு லாம்பை வெளியில் கொண்டுபோகப் பயமா இருக்கு. பொழுதுபட்டால் வெளிச்சங்கள் வெளியில தெரியக்கூடாது. தெருவால போகேக்கை அவங்கள் வெளிச்சங்களைக் கண்டால் பெரிய ஆய்க்கினை.
பெத்தாச்சி காலமை முகம் கழுவக் கிணத்தடிக்குப் போகேக்கை மயங்கி விழுந்தவா. இண்டு முழுவதும் மாறாட்டக் கதையளோடதானிருந்தவா. எனக்குப் பெத்தாச்சியை நினைக்கக் கவலையா இருக்கு.
பெத்தாச்சி… பெத்தாச்சி ..”
முற்றத்திலயும், முருங்கை மரத்தடியிலயும், கோடியிக்கையும் நிண்டு பெரிசாக் கூப்பிட்டன் பெத்தாச்சியின்ர குரலோ அசுகையோ எதையும் காணேல.
மாறாட்டக் குணத்தில் பெத்தாச்சி எங்கையோ வெளிக்கிட்டுப் போயிருக்கிறா. பெத்தாச்சி போவில் அம்மாவீட்டை தான் போயிருப்பா. மற்றப் பிள்ளையள் எல்லாம் வன்னியில். அம்மாவீடு எங்கட வீட்டில் இருந்து ரண்டு கட்டை றோட்டால போவில் சந்தியில அவங்கள் உள்ளொழுங்கையளுக்கையும் இரவில படுக்கிறவங்களாம்.
பெத்தாச்சியைத் தேட எனக்குப் பயமா இருக்கு. தேடாமலிருக்கவும் மனம் வரதாம். சின்னனில இருந்து பெத்தாச்சி என்னில நல்ல கவனம். அம்மா கூப்பிட்டாலும் நான் போக மாட்டனாம்.
பெத்தாச்சி நல்ல வளத்தி ஊரில அவாவை மாதிரி வளந்தாக்கள் ஒருதருமில்லை. சீலை கட்டினால் கெண்டங் காலளவுக்குத்தானிருக்கும். ஊரில எல்லாரும் பெரியாச்சி எண்டுதான் கூப்பிடுறவை. நான் சின்னனில நாக்குப்புரளமாட்டாமல் பெத்தாச்சி எண்டு கூப்பிட்டுத்தானாம் பெத்தாச்சி எண்ட பேர் வளந்ததாம்.
என்னால பெத்தாச்சியைக் காணாமல் இருக்கேலாதாம். பெத்தாச்சியை நினைக்க எனக்கு முந்திய ஞாபகங்கள் வருகுது. பொழுது பட்டால் பெத்தாச்சி முத்தத்தில இருக்கிற மணலுக்கு வந்திடுவா. வல்லிபுரக்கோயில் வெள்ளை மணல் அப்ப கும்பியா இருந்தது. காலுகளை நீட்டிக்கொண்டு இருப்பா. சீலையை முழங்காலுக்கை சிரைச்சுப் போட்டு குனிஞ்சு காலுகளை உருவிக் கொண்டிருப்பா. பக்கத்தில வெத்தில உரல் இருக்கும். வெத்திலை,பாக்குச் சுண்ணாம்பு எல்லாதையும் சேத்து இடிச்சுப் போட்டு “குஞ்சு ” எண்டு கூப்பிடுவா.
அப்ப நான் மாலுக்கை விளையாடிக் கொண்டிருப்பன். மாலுக்கு நடுவில் பாணி போட்ட பொயிலையை ஐயா பெரிசாப் பாடம் போட்டு வைச்சிருப்பார். வளைகளில வெங்காயப்பிடியள் தூங்கும் காத்தடிச்ச மால் உலாஞ்சும். வெங்காயப் புடிகளில் ஒட்டியிருக்கிற மண்கட்டியன் கொட்டுப்படும். பூரான் பூச்சியளும் விழும்
“உதுக்கிள இருந்து பொரியப்போறியே மோணை, இஞ்சால வாவன்.”
கூப்பிடுவா. நான் ஓடிப்போய் மடியிக்கை விழுந்திடுவன். இடிச்ச வெத்திலைத்தூளை எனக்கும் தருவா. எனக்கு நல்லா நிறக்கும். லிப்ரிக்ஸ் அடிச்சமாதிரி சொண்டு சிவப்பாயிருக்கும். சின்னனில பீதிண்டனானாம் அதுதான் நிறக்குதெண்டு சொல்லுவா.
பெத்தாச்சி நல்ல நல்ல கதையள் சொல்லுவா. நான் காலுகளால தெண்டித்தெண்டி பெத்தாச்சியின்ர மடியில தலையால தலை இடிச்சிடிச்சுக் கேப்பன். தலையைத் தள்ளித்தள்ளிச் சொல்லுவா.
காரைக்கால் அம்மையார். மனுநீதிச்சோழன். பாரதப்போர் ராமாயணக்கதையள் எல்லாம் பெத்தாச்சி சொல்லித்தான் தெரியும்.
நான் பெருத்தாப்பிறகு எங்கையாலும் போகேக்கை பெத்தாச்சிக்குச் சொல்லிப் போட்டுத்தான் போறனான். நான் வரும் வரைக்கும் நித்திரை கொள்ளமாட்டா. கையில அடவியன் வைச்சிருப்பா. முன்னால கைவிளக்கு எரிஞ்சுகொண்டிருக்கும். ஊருற எறும்புகள் எல்லாத்தையும் அடவியனால அடிச்சடிச்சு சுவர்க்கரேல ஒதுக்கிக் கொண்டிருப்பா.
அப்ப சிலோன் ஆமியள் றோட்டுவழிய திரியிறகாலம் வாகனங்களில் போகேக்கை ஒழுங்கையளுக்கு பலர் கூடின லைற்றுக்களால அடிச்சுக் கொண்டு போறவங்கள், அப்பதான் கண்ணி வெடியளும் கூடுதலா வெடிக்கிறது. கண்ணி வெடியெண்டா அவங்களுக்குச் சரியான பயம்.
நான் வந்ததும் எரிஞ்சு தள்ளுவா. அவாவுக்கு ஆமியள் எண்டா சரியா பயம். அப்ப அலன் தம்பதியளை ஆரோ கடத்திக்கொண்டு போக வீட்டை வந்த ஆமியள் பெத்தாச்சிக்கு அடிக்கக் கால் ஓங்கினவங்கள்.
பேந்து பெத்தாச்சி அச்சுவேலியிக்கை பெரியமாமா வீட்டை நிக்கேக்கை கப்டன் பண்டிதர் இருந்த காம்பைச்சுத்தி வளைச்சுச் சுட்டவங்கல். விடியக்காத்தாலை ஆச்சி கெடுதிப்பட்டுக் கிடக்க அமுதனும் கொஞ்சப் பெடியளும் சேந்து சுட்டுச்சுட்டு ஆமியளின்ர வளைப்பை பிச்சுல் கொண்டு போனவங்கள், அந்த ஆத்திரங்களில் பெரியமாமாவுக்கு குழறச்குழற அடிச்சுப் போட்டுப்போனவங்கள். மாமாவுக்கு சலமும் சாறத்தோட போட்டுது.
அந்த ஊட்டுக்கைதான் வல்வெட்டி வாசியசாலை ஒண்டுக்கை வைச்சு இருபத்தைஞ்சு முப்பது பெடியளைப் பிடிச்சுப் பம்பண்ணிப்போட்டும் போனவங்கள். ஊருக்கை அவங்கள் செய்த கொடுமையள் தான் முதல் தடவை: வெறும் தசையளையும், எலும்புகணை யும் வண்டிலில அள்ளிக் கொண்டு போய் எள்ளங்குளச் சுடலையில் எரிச்சதுகள்; அதுகளுக்கும் பயந்து தான் நான் இரவில வர எல்லாத்தையும் சொல்லீச் சொல்லிப் பேசுவா ….. அம்மாவுக்கு ஒண்டும் கேளாதபடிதான் பேசுவா……
பெத்தாச்சிக்குப் பக்கத்தில் தான் அம்மா சோறை வைச்சு மூடுறவா, பேசிப்பேசித்தான் சோத்தையும் எடுத்துத் தருவா. எல்லாத்தையும் நினைக்க எனக்கு கண்ணீர் வருகுது. வசந்தி வெளியில போகவேண்டாமெண்டு கையில பிடிச்சாள் பெத்தாச்சி என்னில வைச்சிருக்கிற அன்புபாசங்களும் நான் வைச்சிருக்கிற அன்புபாசங்களும் வசந்திக்குத் தெரியுமா? அவள் இடையில வந்த உறவு. எனக்கு உயிர்.
மெதுவாக அவளின்ர கையளை நீக்கிப்போட்டு நிண்டன். என்னில பெத்தாச்சி பெருத்துக்கொண்டு வந்தா. லாம்பைத்தூக்கிகொண்டு வெளியில போனன். வசந்தி ஓடிவந்து லாம்பை தணித்து விட்டாள். எனக்கும் பயமாத் தானிருந்தது. அந்தப்பயத்தை விட பெத்தாச்சியின்ர நினைப்பு பெரிசாத்தெரிஞ்சிது.
மெல்ல நடந்து நடந்து வீட்டுக்குப் பின்னுக்குப் போனன். பின்னுக்கு வாழைத்தோட்டம். இரவில் பெத்தாச்சி அந்தப் பக்கம்தான் எழும்பி போறவா. வெட்டி விழுத்தின ஒரு வாழைக்குத்திக்கு மேல பெத்தாச்சி குப்புறக்கிடந்தா. வாழையின்ர அடிப்பக்கம் பெத்தாச்சியின்ர நெஞ்சுக்கை கிடந்தது.
நான் பயந்து போனன் மூச்சு அடைச்சுக் கொண்டு வந்தது. லாம்பை அப்பிடியே வைச்சிட்டு பதறிக்கொண்டு மண்ணுக்கை குத்திக் கொண்டிருந்த தலையை தூக்கினன். கடவாயில ரத்தம் காய்ஞ்சிருந்தது. “பெத்தாச்சி..” எண்டு கத்திக்கொண்டு முகத்தை நெஞ்சோட அணைச்சன். கண்கள் முழிச்சபடியிருந்தன. மூக்கில கையை வைச்சுப்பாத்தன். மூச்சு கையில உதைக்கலே. எனக்கு கவலையள் நெஞ்சுக்கை வெடிச்சிது.
முந்தி அம்மய்யாவும் இப்பிடித்தான். கிறிதி தூக்கி எறிஞ்சுதான் செத்தவா. திடீர்ச்சா நல்லதெண்டு பெத்தாச்சி நொந்து சொல்லுவா. நான் கண்களைத் துடைச்சுப் போட்டு விளக்கைப்பாத்தன் வசந்தி விளக்குக்கு முன்னால நிண்டாள். சொண்டுகள் வெம்பிக்கொண்டிருந்தன நான் பெத்தாச்சியை தூக்கிக் கட்டிலில கொண்டு போய் வளர்த்தினன்.
அம்மா வந்தால் விடிய விடிய ஒப்பாரி வைச்சுக் கொண்டிருப்பா. அம்மாவுக்கு இழவு அறிவிக்க எனக்குப் பயமா இருக்கு. பெத்தாச்சி அனாதையாக் கிடக்கவும் மனம் வராதாம். வசந்தியைப் பககத்தில நிக்கச் சொல்லிப்போட்டு பூரணமாச்சியிட்டப்போனன் . வசந்தியும் வந்தாள். அவளுக்குச் சவமெண்டால் சரியான பயம்.
எங்கட வீட்டில இருந்து மூண்டு வீடு தள்ளித்தான் பூரணமாச்சியின்ர வீடு. பின் கடவையால போனன் பக்கத்துச் சனங்கள் எல்லாம் எங்கட வீட்டிலதான் தண்ணியள்ள வாறதுகள்.
முந்திகேற்றாலைதான் எல்லாரும் வந்து அள்ளுறதுகள். அவங்களுக்குப் பயந்துதான் பின்னுக்கு கடவையை வைச்சனான். பின்னுக்குக் கடவை வைச்சாப் பிறகுதான் பயமில்லாமல் இரவிலயும் தண்ணியள்ளிக்கொண்டு போகுங்கள் .
நான் விசயத்தைச் சொன்னாப் பிறகு பூரணமாச்சி துடிச்சுப் போனா. எங்களுக்கு முதல் தலேலை அடிச்சுக்கொண்டு ஓடினா. பூரணமாச்சி பெத்தாச்சியின்ர சகோதரம். பூரணமாச்சி பெத்தாச்சியில நல்ல கவனம். ஆசைத்தீனா ஏதும் கூழ் எண்டு காச்சினால் பெத்தாச்சிக்குக்கொண்டு வருவா. பூரணமாச்சி கூழ் காச்சினால் நல்லா இருக்கும் தூள் மீனுகள் அலைஞ்சு திரிஞ்ச வாங்கியருவா. கொவ்வை இலையும் பிலாக்காச் கொட்டையுமில்லாட்டி காச்சவே மாட்டா . சூடை மீனைச் சுட்டு அதை ஒடியல் மாச்சட்டியிக்கை மசிச்சுப்போட்டு பெரிய வளந்துப் பானேக்கை போட்டுக் கலப்பா.
பூரணமாச்சி கூழ் காச்சினால் எல்லாருக்கும் குடுத்துத்தான் . குடிப்பா. வளந்துப் பானைக்கு வந்தால் தெரியும் பூரண மாச்சி கூழ் காச்சப்போரர்வெண்டு. வெந்நீர் வைக்கிறதுக்கும் பெத்தாச்சியிட்டத்தான் ஊரில பானைக்கு வாறதுகள். மறுக்காமல் குடுத்திட்டுப் போனாப் பிறகுதான், பெத்தாச்சி பேசுவா.உடைச்சுப் போடுங்கள் எண்டு அவாவுக்குப் பயம்.
நான் பூரணமாச்சிக்குப் பிறத்தால போனன். பூரணமாச்சி கூழைப்பற்றியெல்லாம் ஒப்பாரி வைப்பா. அதை எப்ப கேப்பன் எண்ட அவாவில் பெத்தாச்சிக்குப் பக்கத்தில இருந்தன். வந்த வரத்துக்குப் பெத்தாச்சிக்கு மேல விழுந்தபூரணமாச்சி…..
“ஓலையொண்டு அனுப்பவில்லை
என்ரை அம்மா நானுனக்கு தெளிவு ரம்ப விட்டிருப்பன்……
“தந்தியொண்டு அடிக்கவில்லை,
என்ரை அம்மா முந்தி வந்துனக்கு முத்தம்பல தந்திருப்பன்………
“என்ர குஞ்சு போனதைப் போல…
நீயும் படுத்திரமால் போனனியோ…….
மடியில எனக்காரும் இல்லையம்மா – ஊரார்
மலடி எண்டு நகைக்கிறார்கள்…”
பூரணமாச்சி ஒப்பாரியளில் கூழைப்பற்றியோ பெத்தாச்சியைப் பற்றியோ எதுவும் சொல்லேல. தன்ர கவலையள அடுக்கிக் கொண்டு போறா. ஏமாந்த என்ர மனதில கவலையள் புகைச்சிது, பூரணமாச்சியின்ர குரலக் கேட்டு அயல் ஒவண்டாக் கூடியது சத்தம் பெரிசாக் கேக்குதெண்டு வந்தாக்கள் எல்லாம் பயந்து கொண்டு நிண்டார்கள் வந்த பொம்பிளையளும் பெத்தாச்சியைப் பற்றி ஒப்பாரியள் வைக்கேல.
பெத்தாச்சி எத்தின பேருக்கு ஊரில பிரசவம் பாத்தவா. பெத்தாச்சிக்கு ஏலாத வரைக்கும் ஊரில அனேகப் பொம்பிளையள ஆசுப்பத்திரிக்குப் போறேல. இதுகளை ஒருத்தரும் ஒரு வரியிலயும் சொல்லாததை நினைக்கப் பெரிய கவலையா இருக்கு.
தங்கட தங்கட கவலையள சொல்லியழுறதுக்கு செத்த வீடுகள் தான் ஒரு களம் எண்டதை எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது. எனக்கு அம்மாவைப் போய்க் கூட்டி வரவேணும் போலையிருக்கு. அம்மா வந்தால் பெத்ததில இருந்து வளத்து ஆளாக்கினது வரைக்கும் இரவிரவா ஒப்பாரிவைப்பா. அம்மாவிட்டை போகப் பயமா இருக்கு.
சனங்கள் கூடியிட்டுது பெற்றோல் மாக்ஸ் கொழுத்தவும் பயமா இருக்கு. பந்தலும் போடேலை மரந்தடியளுக்கு வீடுவீடாகப் போககோணும். நாயளும் அமளியாக் குலைக்க எல்லாரும்நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள. எல்லாருக்கும். வாழறதுக்கு ஆசையள் தானே? உயிருகளை பலூனுகளுக்கை அடைச்சுக் கொண்டு முள்ளுகளுக்கை நடக்கிறம்.
நாயளின்ர சத்தங்கள் நீண்டு கொண்டிருக்குது. செல்வத்துரையண்ணை எல்லாரையும் அழவிடாமல் நிறுத்திப் போட்டார். வழிந்து தூங்கிய தொங்கல் சீலையை எக்குக்கை செருகிக் கொண்டு பூரணமாச்சி – பெத்தாச்சிக்குப் பக்கத்தில போயிருந்தா. பெத்தாச்சிக்கு வாய் திறபட்டுக் கிடந்தது. பூரணமாச்சி வாயை மூடுறதுக்கு சொண்டுகளை அமத்திக் கொண்டிருந்தா.
பெத்தாச்சிக்குப் பக்கத்தில எல்லாரும் அழாமலிருக்கிறதைப் பாக்க நெஞ்சு கொதிச்சுக் கொண்டு வந்திது முந்தியெண்டா இவளவுக்கு பறை முழங்கிக் கொண்டிருக்கும். சணபதியற்றை தண்டிகை படலேக்கை நிக்கும். தலைமாட்டில நிண்டு ராமப்பா தேவாரம் பாடிக்கொண்டிருப்பார். கால்மாட்டில் சாம்பிராணி புகைச்சுச் கொண்டிருக்கும். சுருட்டு வெத்திலையளும் தட்டுகளில முடிஞ்சு கொண்டிருக்கும்.
மனம் புகையப் புகைய நினைவில தீப்பிடிக்குது. இப்ப எங்கட வீட்டு நாயும் கேற்றுக்ககை நிண்டு குரைக்குது வாகனச் சத்தங்களும் தூரத்தில் கேக்குது. வீட்டுக் கூரையள்,முத்தங்கள், மரங்களில் எல்லாம் வெளிச்சங்கள் துலாவிக் கரையுது. ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால்தான் இப்பிடி இருக்கிறது.
எனக்கு உயிர் ஒடுங்கி மூச்சு நிக்கிற மாதிரி இருக்கு. இரவில சனங்கள் கூட்டமா வீடுகளில் நிக்கக் கூடாது. எல்லாரும் பதறிக் கொண்டு நிக்குதுகள், வீடுகளுக்குப் போய் அவங்கள் ஆக்களை விசாரிக்கேக்கை சிலர் குறைஞ்சால் எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போவாங்கள். பொம்பிளைப் பிள்ளையளை கனநாளாக வைச்சிருப்பாங்கள் சிலவேளைகளில் தாங்கள் பிடிக்கேலை எண்டும் சொல்லுவங்கள்.
தவிப்புகள் வீட்டுக்கை கனத்துக் கனத்து சீறலுகளாக வெளியில வருகுது. சப்பாத்துக் காலுகளின்ர சத்தங்கள் சுவர்களில் தெறிக்க மனதில வலிக்குது. அந்தவலிப்புக்களில் பெத்தாச்சி மிதக்கிறா. அவங்கள் இரவுகளில் இப்பிடியான நடவடிச்கையளில் ஈடுபட்டால் எல்லாரையும் விடிய அள்ளிக்கொண்டு போவாங்கள். கலியாண வீடுகளா இருந்தாலும், செத்தவீடுகளா இருந்தாலும் அவங்களுக்கென்ன? எங்கட சந்தோஷசங்களப் புடுங்கிறதுதானே அவங்கட வேலை.
பெத்தாச்சி தனியாக்கிடந்து நாறப்போறா பந்தல் போட்டு, பாடைகட்டி, சுடலைக்கு விறகுகள் கொண்டுபோய், அடுக்கி சந்தைக்குப் போறதெப்ப?
பெத்தாச்சிய தூக்கிக் குளிக்கவாக்கிறதுகளும் பாடை காவிறதுகளும் நவதானியங்கள விதைச்சுக் கொண்டு போறதுகளும், தேவாரம் பாடுறதுகளும் நாத்தங்களில முகங்களைச் சுழிக்கப் போகுதுகள் ; பெத்தாச்சிக்கு இப்பிடியொரு நிலையும், எங்களுக்கு இப்பிடியொரூ நெருக்கடியளும் வந்ததை நினைக்க மனம் வெடிச்சுக் கொண்டு வருகுது.
நிலம் வெளிக்குது.தெருவில அவங்கள் நிக்கிறாங்கள். ஒருத்தன் கேற்றில அடிச்சுக்கொண்டு நிண்டான். கேற்றைத் திறக்கிறதுக்குத்தான் அடிக்கிறான். பதறிப்பதறி ஓடிப்போய் கேற்றைத் திறந்தன்.
“மல்லி” எள்ளாறும் பத்து மணிக்கிடலை ஊறை விட்டுப் போவிடணும் நாம காய்ம் பண்ணப் பொறம்.”
கொச்சைத் தமிழில சொல்லிப் போட்டு போனான். எனக்குத் தலை சுத்திக்கொண்டு வந்தது. என்ன செய்யிற தெண்டு தெரியேல. முந்தி ஆனையிறவில் சண்டையள் நடக்கேக்கையும் இப்பிடித்தான் எங்கள வெளிக்கிடுத்திப் போட்டு ஊரில ஆட்லறியளைப் பூட்டிப் போட்டு பளைக்கும் சாவகச்சேரிக்கும் அடிச்சவங்கள். சரியா ஒரு மாதத்துக்குப் பிறகுதான் போனவங்கள்.
வீட்டை வந்து பாக்க வீட்டில ஓடுகள் இல்லை கூரையளில்லை, நிண்ட தென்னையளுமில்லை. எல்லாம் எட்டங்களில பங்கறாக் கிடந்தது; மரத்தடியள் எடுக்கேக்கை சண்டையளும் வந்தது. பெத்தாச்சியையும் வீட்டுச் சாமனுகளையும் என்னெண்டு கொண்டு போறதெண்டு தெரியேலை. வாகனங்களும் பிடிக்கேலாது, எல்லாரும் தங்கட சாமானுகளை கொண்டுபோய்ச் சேர்க்கத்தானே நிக்குங்கள்.
முந்தி எல்லாரும் வன்னிக்கு ஓடேக்கை பெரியமாமா காறைக் கொண்டு வந்திட்டு ஏறு எண்டு பெத்தாச்சியை எத்தினை தடவையள் கேட்டவர்.
“நான் செத்ததும் என்னை இந்தச் சுடலேலதான் எரிக்கோணும்” எண்டு நிண்டவா.
ஒவ்வரு பிள்ளையளும் வன்னிக்கு ஓடேக்கை பெத்தாச்சியிட்டையும் வந்துதான் போனதுகள். கடசியா ஆய்க்கினையள் தாங்காமல் என்னோட வாறனெண்டு எல்லாரையும் கலைச்சு விட்டவா. நானும் வன்னிக்குப் போயிருந்தால் இவளவுக்கு கடமையள் எல்லாத்தையும் வடிவாச் செய்திருக்கலாம். எல்லா? பிள்ளையளும் வாய்க்கரிசியள் போட்டு தண்டிகை பறையளோட போய்ச் சேந்திருப்பா….
நான் செல்லையரால தான் வன்னிக்கும் போகாமல் விட்டனான். நான் மூடை முடிச்சுகளைக் கட்டி வெளிக்கிட ஒடி வருவர்.
“அங்கை ஒரே ஷெல்லடி கடலிக்கையும் பொடி மிதக்குமாம். கிழவியைக் கொண்டு போய் என்ன செய்யப்போறாய்? என்னட்ட வாகனம் நிக்குது தானே பாத்து எல்லாரும் ஒண்டாப் போகலாம்” எண்டு மறிப்பர்.
இப்பதான் தெரியுது அவர் ஏன் எங்களை மறிச்சார் எண்டு. அவருக்கு எக்கச்சக்கமான சொத்துகள். காணியளும் நிறைய.அவருக்கு அதுகளை விட்டிட்டு வெளிக்கிட மனம்மில்லை நாங்களும் வெளிக்கிட்டா அயலில துணைக்கொருத்தருமில்லை. தன்ரை பாதுகாப்புக்குத்தான் எங்களை மறிச்சவர். இனி, அவரில் கோபப்பட்டு என்ன எங்கட முடிவுகளை நாங்கள் தானே எடுக்கோணும்…..
நான் போய் விசயத்தைச் சொன்னதும் எல்லாரும் தலையளில் கையளை வைச்சுச் கொண்டு தங்கட வீடுகளுக்கு. ஓடினார்கள் பெத்தாச்சிக்குப் பக்கத்தில் பூரணமாச்சியைத் தவிர வேறை ஒருத்தருமில்லை. பூரணமாச்சிக்கும் பிள்ளையள் எண்டா அவாவும் ஓடியிருப்பா….
நான் உறவுகள் எவரிலயும் கோவிக்கேலை, இந்தநிலமேலை எல்லாரும் தஙகட உயிர்களை தங்கட பொருள் பண்டங்களைத்தானே காப்பாத்த நினைக்குங்கள்.
‘விழுவாராலை மனிசர் நிம்மதியா இருக்கேலாதாம் நீயேன்ரா உதில நிண்டு அழுகிறாய் ?
செல்லையற்ரை மிசினைக் கேட்டுப்பார். கிழவியை எண்டாலும் கொண்டு போய்ச் சேப்போம்.
பூரணமாச்சி என்னைக் கலைச்சு விட்டா: கண்களைத் துடைச்சுக் கொண்டு செல்லையர் வீட்டை போனன்: மிசின் சாமானுகளால் பின்னுக்கு நிறைஞ்சிருந்தது. கொஞ்ச இடம் வெளிப்பா இருந்தது. நான் தயங்கிக் தயங்கிக் கேட்டன்.
“இதுக்கிளை என்னெண்டு ஏத்திறது அந்த இடத்தில கிழவியை ஏத்தினா என்னெண்டு மனிசி பிள்ளையளை ஏத்திறது? சவம் எண்டா அதுகளுக்குச் சரியான பயம்தம்பி”
சொல்லிப் போட்டு மிசினை எடுத்தார். நான் பேந்தொண்டும் கதைக்கேல . அவர் நினைச்சால் மனிசி பிள்ளையள் நடந்து வரலாம்.
நான் பூரணமாச்சிக்குக் கிட்டப் போய் அழுதன்.
”உந்த மனிசத்தன்மையள் இல்லாததுகள் இஞ்சை இருக்கிறதாலைதான் நாங்கள் இப்பிடிக் கசங்கிறம். கெதியா மண் வெட்டியை எடுத்து தேசிக்காய்க் கண்டுக்குக் கீழை கிடங்கை வெட்டு. இது பெத்தாச்சியின்ர நிலம்.
தெருக்களெல்லாம் சனங்கள் மூடை முடிச்சுகளோடை நடப்பதும் சைக்கிளுகளோடயும் வண்டிலில வாகனங்களிலயும் இடிபட்டும் குழந்தையள் கதறவும் போய்க்கொண்டிருக்கிதுகள்.
நான் மண்வெட்டியைத் தூக்கினன்.
-கருணைரவி
-வெளிச்சம் 2001
தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்