
இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு 1987 யூலை 29ஆம் திகதி ராஜீவ் – ஜே.ஆர். ஒப்பந்தம் கைச்சாத்தியது.
தனது சதித்திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகி, புலிகள் இயக்கத்தின் மேலாதிக்கம் மேலோங்கி வந்தமை இந்திய அரசுக்கு திகைப்பைக் கொடுத்தது. சிங்கள இராணுவத்தின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுத் தமிழீழ மண் படிப்படியாகப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து கொண்டிருப்பதையும் இந்திய அரசால் ஜீரணிக்க முடியவில்லை. நான்கு ஆண்டு காலமாக நடாத்திய அரசியல், ராஜதந்திர சுழியோட்டங்களினாலும், சூழ்ச்சிகளாலும் எவ்வித பயனும் கிட்டவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பாரதம், நேரடி இராணுவத் தலையீடுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தது.
புலிகளின் ஆயுதப் போராட்ட நெருக்குதலால் ஆட்டம் கண்டிருக்கும் சிங்களக் கிழட்டு நரி, இந்திய இராணுவத் தலையீட்டை எதிர்க்காது என்றும் புதுடில்லி கணிப்பிட்டது. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து விடும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடும், சிங்கள இராணுவத்தைப் பலிகொடாமல் இந்தச் சாதனையைச் சாதித்து விடலாம் என நப்பாசை கொண்ட ஜெயவர்த்தனா, இந்திய ஆதிக்கத்திற்கு அடிபணிய முடிவு செய்தார். 1987 யூலை 29ஆம் திகதி ராஜீவ் – ஜே.ஆர். ஒப்பந்தம் கைச்சாத்தியது.
இந்தியாவின் பூகோள நலன்களையே பிரதான நோக்காகக் கொண்ட இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க, ரஸ்ய வல்லரசுகளின் ஆசீர்வாதமும் கிடைத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திர வெற்றி என இந்தியப் பாராளுமன்றமும், இந்தியப் பத்திரிகை உலகமும் ஒப்பந்தத்தைப் புகழ்ந்தன. கூட்டணி தொடக்கம் தமிழ் அமைப்புக்கள் எல்லாமே ஒப்பந்தத்திற்குப் புகழாரம் சூட்டின. தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே ஒப்பந்தத்தை எதிர்த்தனர். தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்காக, தமிழ் மக்களின் கௌரவத்திற்காக இந்திய வல்லரசுடன் முரண்பட்டு நிற்கத் துணிந்தனர்.