×

தற்போது தாயகம் திரும்ப இருக்கும் ஆனைமங்கலம் செப்பேட்டில் உள்ள தகவல்கள் 

தற்போது தாயகம் திரும்ப இருக்கும் ஆனைமங்கலம் செப்பேட்டில் உள்ள தகவல்கள் 

தற்சமயம் நெதர்லாந்து நாட்டில் உள்ள இந்தச் செப்பேட்டிற்கு பெரிய லெய்டன் செப்பேடு என மற்றொரு பெயர் உண்டு. சோழர் காலத்திய வரலாறு பற்றி தெரிந்து கொள்ள உதவிய முதல் செப்பேடு இதுதான்.இந்தச்செப்பேடு 1886 ல் படிக்கப்பட்ட பின்பு 1906 ஆம் ஆண்டு திருவலங்காடு செப்பேடு படிக்கப்பட்டது.இவ்விரண்டு செப்பேடுகளும் கிடைக்கப்பட்ட பின்னர் தான் சோழ வரலாறு கணிக்கப்பட்டது.ஆனைமங்கலம் செப்பேட்டில் சோழர்களின் குடும்ப வம்சாவளி வடமொழியில் சொல்லப்பட்டுள்ளது.

ஶ்ரீவிஜய அரசன் மார விஜயதுங்கவர்மன்,தனது தந்தை சூளாமணி வர்மன் நினைவாக ஒரு பெளத்த விகாரம் கட்ட விரும்பி இராஜராஜரிடம் அனுமதி கேட்கிறார்.சத்திரியசிகாமணி வளநாட்டு பட்டண கூற்றம் பகுதியில் நாகப்பட்டினம் நகரில் புத்த விகாரம் கட்ட இராஜராஜர் அனுமதி தருகிறார்.(இதனை இராஜராஜர் காலத்திற்கு பின்பு இராஜேந்திரர் தனது ஆட்சியில் செப்பேட்டில் பொறிக்க உத்தரவிட்டார்).இந்தச் செப்பேட்டின் தமிழ்ப்பகுதியில் இராஜராஜர் தனது 29 ஆம் ஆட்சியாண்டு முடிந்து 92 ம்நாள் தஞ்சாவூர் அரண்மனைக்கு தெற்கு பக்கம் இருந்த இராஜாசிரியன் என்ற பந்தலில் இருந்த போது இந்த நிலக்கொடையை வழங்கியதாக உள்ளது.

(பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் இந்த சூடாமணி விகாரம் தெரிந்து இருக்கும்,ஆனால் அந்தக் கதை நடைபெறும் காலகட்டத்தில் சூடாமணி விகாரம் கிடையாது,இராஜராஜர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் தான் இந்த விகாரம் கட்டப்பட்டது)

விகாரத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள்:
இந்த சூளாமணி விகாரத்திற்கு 97 வேலி,2 மா,ஒன்றை காணி,ஒரு முந்திரிகை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேற்படி நிலங்களுக்கு இதுவரை வரியாக தரப்பட்ட 8943 கலம்,2 தூணி,1 குறுணி,1 நாழி நெல் இனி கட்ட தேவையில்லை. பள்ளிகள்(பெளத்த,சமண கோவில்) அரசுக்கு செலுத்த வேண்டிய வரியான பள்ளிச்சந்தம் கட்ட தேவையில்லை.

நிலதானம் வழங்கப்பட்ட நிலங்களில் புதிதாக கால்வாய் வெட்டிக் கொள்ளலாம். ஊர் பொதுமக்கள் கல்வாயில் வரும் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏற்கனவே இந்த நிலங்களில் கிராம மக்களின் பாசனத்திற்காக பயன்படுத்தும் பழைய கால்வாய்களே அப்படியே அனுமதிக்க வேண்டும். உபரித்தண்ணீர் இதுவரை எந்த முறையில் அப்புறப்படுத்தப்பட்டதோ அதே முறையே இனியும் தொடரவேண்டும்.பழைய கல்வாய்த் தண்ணீரை தேக்கி வைக்க கூடாது, தண்ணீரை அதன் போக்கிலே பயன்படுத்த வேண்டும்

சுட்ட செங்கலினால் மாடி வீடுகள் கட்டிக் கொள்ளலாம் பெருங்கிணறுகள்(புரவு) வெட்டிக் கொள்ளலாம் தென்னந்தோப்புகள் உருவாக்கிக் கொள்ளாலாம் எண்ணெய் செக்கு வைத்து எண்ணெய் ஆட்டிக் கொள்ளலாம் இந்த நிலத்திலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் கால்வாயை தடுக்கக் கூடாது மற்ற ஊர்களில் இருந்து இந்த நிலங்களுக்கு வரும் கால்வாயை பொதுமக்கள் தடுக்கக் கூடாது இப்பகுதி ஈழவர்கள் இந்த நிலங்களில் உள்ள பனை,தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கக்கூடாது(இது பெளத்த வழிபாட்டுத்தலம் என்பதால்,இப்பகுதியில் கள் இறக்க தடை) விகாரத்திற்கு செல்லும் வழியில் அலங்கார தோரணமும்,விகாரத்திற்கு உள்ளே பெரிய முரசுகளும் பயன்படுத்த அனுமதி.

இதைத் தவிர கீழ்க்கண்ட வரிகளை விகாரத்திலிருந்து கட்டத் தேவையில்லை நாடாட்சி வரி,ஊராட்சி வரி,வட்டி நாழி,பிட நாழி,கண்ணால காணம்,வண்ணாரப் பாறை,குசக் காணம்,நீர்குழி,இலைக்கூலம்,தறிப்புடவை,தரகு,தட்டார்ப் பாட்டம்,இடைப் பாட்டம்,மன்று பாடு,மாவிரை,தீயெறி,இளம்புட்சி,கூத்திக்கால் சாசனத்தின் இறுதியில் இராஜேந்திர சோழரின் 5 உயர் அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்

1.அரையன் அருள்மொழி
2.கிருஷ்ணன் இராமன்
3.ஈராயிரவன் பல்லவராயன்
4.தேவதை கோமபுரத்து தாமோதரபட்டன்
5.அரையன் ஸ்கந்தன்.

சோழர் காலச் செப்பேடு கள்/முனைவர் மு.இராஜேந்திரன் இ.ஆ.ப

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments