×

முன்னுரை

விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழரது சுயநிர்ணயப் போராட்டத்திற்கு உயிர் மூச்சாகவும் உந்து சக்தியாகவும் அது செயற்பட்டு வருகிறது. ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில், ஒரு அரசியல் சக்தியாகவும் அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும் புலிகள் இயக்கம் விடுதலைப் போரை முன்னெடுத்து வருகிறது. ஒரு உறுதியான, கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான, நீதியான அரசியல் இலட்சியம், நீண்ட கால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொதுசனத்தின் பலம் மிக்க ஆதரவு – இத்தனை பண்புகளையும் உடைய எமது விடுதலை இயக்கம், தமிழர் தாயகத்தின் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அங்கு ஒரு நிழல் அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறது.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு நீண்டது, தனித்துவமானது, புரட்சிகரமானது. முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீட்சிபெற்ற படிநிலை வளர்ச்சியைக் கொண்டது. எழுபதுகளின் ஆரம்பத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களால், ஒரு தலைமறைவுக் கெரில்லா அணியாக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம், காலப் போக்கில் படிப்படியாக வளர்ச்சி பெற்று, வலுவடைந்து விரிவடைந்து, தமிழ் மக்களின் நல்லாதரவு பெற்று, ஒரு தேசிய விடுதலை இயக்கமாக உருவாக்கம் எடுத்தது. இந்த நீண்ட பரிணாம வளர்ச்சிப் போக்கில், விடுதலைப் புலிகள் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டனர். தமிழின அழிப்பை நோக்காகக் கொண்ட எதிரியை ஒரு புறத்திலும், தமிழரின் சுதந்திர எழுச்சியை நசுக்கிவிட முனைந்த வல்லாதிக்க சக்திகளை மறுபுறத்திலும், தமிழினத்தின் விடுதலைப் போருக்கு வஞ்சகம் புரிந்த துரோகிகளை இன்னொரு புறத்திலுமாக, எமது இயக்கம் பல முனைகளில் பல சக்திகளுக்கு எதிராகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. இப் போராட்டங்கள் பெரும் சமர்களாகவும் வெடித்தன. வன்முறைப் புயல்களாக எழுந்து ரண களங்களை ஏற்படுத்தின. இந்த நெருப்பு நதிகளை எல்லாம் எமது இயக்கம் நெஞ்சுறுதியுடன் நீந்திக் கடந்தது.

நீண்டதும் நெருக்கடிகள் நிறைந்ததுமான இக் கொந்தளிப்பான வரலாற்றுப் பாதையில் தொடர்ச்சியாகக் கொடும் போரை நாம் எதிர்கொண்ட போதும், காலத்திற்குக் காலம், பல்வேறு வரலாற்றுச் சூழ்நிலைகளில் அரங்கேறிய சமாதானச் சமரச முயற்சிகளிலும் எமது இயக்கம் பங்குகொள்ளத் தவறவில்லை. ஒட்டுமொத்தத்தில் எமது போராட்ட வரலாறானது யுத்த முன்னெடுப்புகளாகவும் சமாதான முயற்சிகளாகவும் இரு பரிமாண அம்சங்களைக் கொண்டதாக அமையப் பெற்றிருக்கிறது. போர் அரங்குகளில், எமது இயக்கம் பிரமிப்பூட்டும் சாதனைகளைப் படைத்தது. உலகின் தலைசிறந்த ஒரு இராணுவக் கட்டமைப்பு என்ற சர்வதேசப் புகழையும் ஈட்டியது. தாயக மண்ணின் விடுதலைக்காக வரலாறு காணாத ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்தது. அதேவேளை, எமது விடுதலை இயக்கம் சமாதான அரங்கிலும் பங்குகொண்டு, நீதியான, நியாயமான அரசியல் தீர்வு காண முயன்றது. ஆனால் சிங்கள அதிகார வர்க்கம் எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்து, நேர்மையற்று நடந்து கொண்டதால் அமைதி வழியில் இணக்கப்பாடு காண்பது முடியாத காரியமாகியது.

போர் அரங்கில் நாம் ஈட்டிய வெற்றிகள் போலச் சமாதான அரங்கில் எம்மால் சாதனைகள் புரிய முடியவில்லை. சிங்கள அரசியல் தலைமைகளின் விட்டுக் கொடாத கடும்போக்குக் காரணமாக, பேச்சுக்கள் சிக்கலடைந்து முன்னேற்றம் காணாது முடங்கிப் போயின. திம்புப் பேச்சுக்களிலிருந்து, சமீபத்தில் நோர்வேயின் அனுசரணையின் கீழ் நடைபெற்ற பேச்சுக்கள் வரை, சகல சமாதான முயற்சிகளிலும் நாம் பங்கு கொண்டு, ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நேர்மையாக முயன்றோம். ஆனால் இப் பேச்சுக்கள் எவையுமே வெற்றியளிக்கவில்லை. இப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரண கர்த்தாவாக விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்திய கொழும்பு ஊடகங்கள், எமது இயக்கத்தைச் சமாதானத்தின் விரோதியாகச் சித்தரித்தன. சிங்கள மேலாண்மைவாத அரசுகளின் தூண்டுதலுடன், எமது இயக்கத்தை சர்வதேச உலகில் களங்கப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த விசமப் பிரச்சாரத்தில் இந்தியாவிலுள்ள சில சக்திகளும் துணை போயின. பொய்களால் உண்மைக்குச் சமாதி கட்டி, விடுதலைப் புலிகளுக்கு இகழ்ச்சி ஏற்படுத்த, திட்டமிட்டு முடுக்கிவிடப்பட்ட பரப்புரைகளை முறியடிக்கும் நோக்குடனேயே நான் இந்த நூலை எழுதினேன். பயங்கரவாதிகள் என்றும், சமாதானத்தின் விரோதிகள் என்றும், வன்முறைக் கலாச்சாரத்தின் வழிகாட்டிகள் என்றும், மனிதத்துவத்தை மதிக்காதவர்கள் என்றும் பொய்யான கருத்துகளை விதைத்து, ஈழத் தமிழரின் சுதந்திர இயக்கத்தை பேயுருவமாக வரைந்து காட்ட எத்தனையோ சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இப் பொய்யான, தீங்கான, கெடு நோக்குடைய கருத்தியலை மறுத்துரைத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மெய்யான, உண்மையான கதையை, வரலாற்று நிகழ்வுகளாகக் கால வரிசையில் பதிவு செய்து ஒரு நீண்ட அரசியல் – வரலாற்று நூலாக உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

‘போரும் சமாதானமும்’ என்ற தலைப்பைத் தாங்கி வரும் இந் நூல், விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரியல் வரலாற்றையும், சமாதான வழிமுறையில் நேர்மைத் திறனுடன் அவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகளையும் உண்மை வழுவாது, விபரித்துக் கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல போர் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக, முழுமையான போராட்ட வரலாற்றையும் பதிவு செய்வதானால் அது ஒரு பெரிய, கனதியான போரியற் களஞ்சியமாக, பல்வேறு காலப் பிரிவுகளாக வகுக்கப்பட்ட, பல பாகங்களைக் (Volumes) கொண்டதாகத் தொகுக்கப்படுதல் வேண்டும். இந்நூலில் அதனைச் சாதிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் நீண்ட வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான போர் நடவடிக்கைகளையும், அரசியல், இராஜதந்திர நிகழ்வுகளையும் சுருக்கமாகப் பதிவு செய்தும் இந் நூல் எழுநூறு பக்கங்களைத் தாண்டிக் கனதி பெற்றுவிட்டது. எனினும், எமது போராட்ட காலகட்டத்தில் கட்டவிழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் நிகழ்ச்சிப் போக்குகளையும் சுயானுபவ தரிசனத்துடன் பதிவு செய்துள்ளதால் இதுவொரு பயனுள்ள அரசியல் – வரலாற்றுப் படைப்பாக நிலைத்து நிற்கும் என்பது எனது நம்பிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், தத்துவாசிரியராகவும், தமிழ்ப் புலிகளுடனும் தலைவர் பிரபாகரனுடனும் கடந்த இருபத்தேழு வருடங்களாக நெருங்கிப் பழகி, பணியாற்றி வந்திருக்கிறேன். எமது இயக்கம் பங்கு கொண்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளில் நான் பங்கு கொண்டிருக்கிறேன். அனேகமானவற்றில் இயக்கத்தின் பேச்சுக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். இந்தியத் தலையீடு நிகழ்ந்த கால கட்டத்தில், இந்தியத் தலைவர்களுடனும் இந்திய உயர் அதிகாரிகளுடனும் நிகழ்ந்த முக்கியமான சந்திப்புகளின் போது தலைவர் பிரபாகரனோடு உடனிருந்தேன். இவ்விதம் விடுதலைப் புலிகளுடனும் புலிகளின் தலைமையுடனும் நெருக்கமான உறவு வைத்து அவர்களது போராட்ட வாழ்விலும் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளிலும் பங்கு கொண்டு, அவர்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த வரலாற்று நூலை எழுதியுள்ளேன்.

இந்த நூல் ஐந்து அத்தியாயங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயம், தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சினையின் மூல வரலாற்றையும், அவர்களது போராட்ட வடிவங்களையும் ஆய்வு செய்கிறது. இலங்கைக்குச் ‘சுதந்திரம்’ வழங்கப்பட்டதை அடுத்து தொடுக்கப்பட்ட சாத்வீக வழி அரசியல் போராட்டங்களையும், அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கத்தையும் (Armed Resistance Movement) இப் பகுதியில் விபரமாக விபரிக்கிறோம்.

சுயநிர்ணயத்திற்கான தமிழரின் அரசியற் போராட்ட வரலாறு 55 ஆண்டுகளுக்கு மேலாக நீண்டு செல்கிறது. இப் படிநிலை வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில், ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும், எமது அரசியல் போராட்டம் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயகப் பாராளுமன்ற வழிமுறைகளில் நடத்தப்பட்டது. பழைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள் எல்லோருமே காந்தியவாதிகள். மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், தத்துவத்தையும், ஆன்மீக தரிசனத்தையும் அவர்கள் வழிபட்டனர். காந்தியின் சாத்வீகத் தத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அமைதி வழிப் போராட்டங்கள் தமிழ் மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டி விட்டு, அவர்களை ஒன்றுபட்ட மக்களாக, ஒரே தேசமாக எழுச்சி கொள்ளச் செய்தது. சாதியத்தால் பிளவு கண்டு, முரண்பட்டு நின்ற சமூகம், தேசியப் பற்றுணர்வால் ஒன்றிணைந்து, ஒரே சக்தியாக அணிதிரண்டு, தமது வரலாற்றுத் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமை வேண்டிப் போராட்டத்தில் குதித்தது.

அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த அமைதி வழிப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. ஈற்றில் அமைதிப் போராட்ட வடிவங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. தமிழரின் எழுச்சிப் போராட்டங்கள் இராணுவ பலத்தால் நசுக்கப்பட்டதும், அரச ஒடுக்குமுறை தீவிரம் அடைந்தது. பல முனைகளில் ஏவிவிடப்பட்ட இந்த அடக்குமுறையானது, தமிழரின் சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மொழியுரிமை, உயர்கல்வியுரிமை, வேலை வாயப்புரிமை ஆகிய அத்தியாவசிய உரிமைகள் மறுக்கப்பட்டு, விரக்திக்குத் தள்ளப்பட்ட புரட்சிகரத் தமிழ் இளம் சமூகம், அரசியல் வன்முறையில் குதித்தது. இதனால் கிளர்ச்சி செய்த தமிழ் இளைஞர்களுக்கு எதிராக, அரச ஒடுக்குமுறை தீவிரம் பெற்றது. அரச ஒடுக்குமுறையும் அதற்கு முகம் கொடுத்த எதிர்ப்பு முறையாகவும் தமிழர் தாயகத்தில் வன்முறைப் புயல் வீசியது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கு அடங்காமல் உக்கிரம் அடைந்தபோது தமிழ் இளைஞரின் வன்முறை எழுச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதப் போராட்ட வடிவமாகத் தோற்றம் எடுத்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில், இந்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த விடுதலைப் புலிகள் இயக்கம், படிப்படியாக வளர்ச்சி பெற்றுப் போராற்றல் மிகுந்த கெரில்லா இயக்கமாகப் பரிணமித்தது. பல் பரிமாண அரச ஒடுக்குமுறையினதும், அதற்குச் சவாலாகக் கிளர்ந்த ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கத்தினதும் வரலாற்றுப் பின்னணி முதலாவது அத்தியாயத்தில் விபரமாகத் தரப்படுகிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட மிகக் கொந்தளிப்பான வரலாற்றுக் கால கட்டத்தை இரண்டாவது அத்தியாயம் விபரிக்கிறது. 1983ஆம் ஆண்டு ஜுலையில் தமிழருக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இனக் கலவரங்களுடன் ஆரம்பமாகிய இந்தியத் தலையீடு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய அமைதி காக்கும் படைகளின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. அரசியல், இராணுவ, கேந்திரப் பரிமாணங்களைக் கொண்ட இந்தியத் தலையீடானது, இந்திய – இலங்கை உறவுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய, நெருக்கடியான கால கட்டத்தைக் குறித்துக் காட்டுகிறது. வெளிப்படையான இராஜரீகத் தலையீடாகவும், மறைமுகமான இராணுவ நெருக்குவாரமாகவும் இரு பரிமாணங்களில் இந்தியாவின் நடவடிக்கை அமையப் பெற்றது. மேற்குலகின் சிலந்தி வலைக்குள் சிறைபட்டிருந்த ஜெயவர்த்தனா அரசை இந்திய ஆதிக்க வியூகத்திற்குள் கொண்டு வருவதே இந்தியத் தலையீட்டின் மூலோபாயக் குறிக்கோளாகும். இத் தலையீடானது காலப் போக்கில் ஒரு நீண்ட இராஜரீக மத்தியஸ்துவ முயற்சியாக வடிவம் எடுத்தது. 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுக்களோடு தொடங்கிய இந்திய மத்தியஸ்துவம், 1987, ஜுலை மாதத்தில் கைச்சாத்தாகிய இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் முடிவடைந்தது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதை அடுத்து நிகழ்ந்த துன்பியல் சம்பவங்களின் விளைவாக, இந்திய – புலிகள் உறவில் முரண்பாடுகள் தோன்றி, அவை பகையுணர்வாகப் பரிணமித்து ஈற்றில் போராக வெடித்தது. இந்தக் கொடும் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது.

தலைமறைவு நடவடிக்கையாக இந்திய அரசு ஒழுங்கு செய்த இராணுவப் பயிற்சித் திட்டத்திலும், பின்பு நிகழ்ந்த இராஜரீக மத்தியஸ்துவ சமரச முயற்சிகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் முக்கிய பங்கை வகித்தது. இறுதியாக, இந்தியாவுடன் நிகழ்ந்த யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கமே பிரதான பாத்திரத்தில் செயற்பட்டது. இவ்விதம், மிகவும் சிக்கலான, நெருக்கடி நிறைந்த இந்தியத் தலையீட்டில், வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு காத்திரமான பாத்திரங்களை வகித்த விடுதலைப் புலிகளின் சுவாரஸ்சியமான வரலாற்றை இந்த அத்தியாயத்தில் விபரமாகப் பதிவு செய்துள்ளேன். ஏழு ஆண்டுகள் வரை நீடித்த இத் தலையீட்டு நடவடிக்கையில், அரசியல் இராஜதந்திர, இராணுவ ரீதியாக, இந்தியா அவமானத்திற்குரிய பின்னடைவுகளைச் சந்தித்தது. இப் பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகளையே காரணமாகக் கற்பித்து, இந்திய பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும், இராஜதந்திரிகளும் எமது இயக்கத்தை வன்மையாகக் கண்டித்தனர். இந்தக் கண்டன விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானவை என்றும் உண்மைக்கு முரணானவை என்றும் வாதாடும் நான், இந்தக் கொந்தளிப்பான கால கட்டத்தில் எமது விடுதலை இயக்கம் எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள், அழுத்தங்கள் பற்றிய உண்மை வரலாற்றை, சுய அனுபவச் சம்பவங்களாகத் தொகுத்து இந்த அத்தியாயத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். இந்த அத்தியாயத்தில் கூறப்படும் விபரங்கள், இலங்கை அரசியல் அவதானிகளுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் பயனாக அமையும். ஏனென்றால், இதுவே முதற் தடவையாக தமிழர் தரப்பிலிருந்து இந்தியத் தலையீடு பற்றி நிதர்சனமான புறநிலை ஆய்வு (Objective Analysis) முன்வைக்கப்படுகிறது.

இந்த நூலின் மூன்றாவது அத்தியாயம், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் பிரேமதாசா அரசிற்கும் மத்தியில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களை ஆய்வு செய்கிறது. எனது மனைவி அடேல் பாலசிங்கத்தினால் எழுதப்பட்ட இந்த ஆய்வு, சுதந்திர வேட்கை என்ற அவரது நூலிலிருந்து, அவரது அனுமதியுடன் பெறப்பட்டது. பிரேமதாசா – விடுதலைப் புலிகள் பேச்சுக் குறித்து, தமிழர் தரப்பாக எழுதப்பட்ட விபரமான புறநிலை ஆய்வு என்பதால் இதனை இந் நூலில் சேர்த்துக் கொள்ள விரும்பினேன். கொழும்பில் நிகழ்ந்த இப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவுக்கு அதிகாரபூர்வமான செயலராகப் பணி புரிந்த அடேல், பேச்சுக் குழுத் தலைவர் என்ற ரீதியில் எனக்கும் உதவியாகச் செயற்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் பங்குபற்றிய சகல பேச்சுக்களின் ஆய்வுகளையும் ஒரே நூலில் தொகுப்பது அரசியல் ஆய்வாளருக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் பயனுடையதாக அமையும் என்பதாலும், எனது நூலுக்கும் அது புலமை சேர்க்கும் என்பதாலும் அடேலின் ஆய்வுக் கட்டுரையை மூன்றாவது அத்தியாயமாக இணைத்துள்ளேன். இரண்டாவது அத்தியாயத்தில் நான் விபரமாக ஆய்வு செய்த இந்தியத் தலையீட்டு விவகாரத்துடன் சம்பந்தப்பட்டதாக பிரேமதாசா – விடுதலைப் புலிகள் பேச்சுகள் அமைந்தன. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற இந்திய இராணுவத்தினரை விலகச் செய்யும் நோக்குடனேயே விடுதலைப் புலிகள் பிரேமதாசா அரசுடன் பேசுவதற்கு இணங்கினர். இந்தக் குறிக்கோளில் பிரேமதாசாவுக்கும் பிரபாகரனுக்கும் ஒத்திசைவான இணக்கப்பாடு இருந்ததால் இந்த அரசியல் – இராஜதந்திர முயற்சி இறுதியில் வெற்றியளித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சந்திரிகா குமாரதுங்கா அரசுக்கும் மத்தியில், 1994 – 95 ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேச்சுக்களை ஆய்வு செய்கிறது நான்காவது அத்தியாயம். சந்திரிகா அரசின் இன்றைய சமாதான நகர்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்வதாயின், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அன்று என்ன நடந்தது என்பதனைப் படித்தறிவது அவசியமாகிறது. Politics of Duplicity என்ற தலைப்பில், பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஆங்கில நூலில் தரப்பட்ட விடயங்கள் இந்த அத்தியாயத்தில் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன. அத்துடன் தலைவர் பிரபாகரனுக்கும் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் மத்தியில் பரிமாறப்பட்ட சகல கடிதப் பரிமாற்றங்களும் இந் நூலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்ட இந்தச் சமாதான முயற்சியானது, விடுதலைப் புலிகளைத் திசை திருப்பி, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நயவஞ்சக முயற்சியாகும். பொருளாதாரத் தடைகளை நீக்கி, தமிழ் மக்களின் அன்றாட, அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ அல்லது இனப் பிரச்சினையையோ தீர்த்து வைக்கும் நேர்மையான குறிக்கோளுடன் இப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவில்லை. சமாதானப் பேச்சுக்கள் என்ற சாக்கில் யாழ்ப்பாணக் குடாநாடு மீது ஒரு பாரிய படையெடுப்புக்கான ஆயத்தங்களைச் செய்தது சந்திரிகா அரசு. விடுதலைப் புலிகளுக்குப் பொய்யாக வாக்குறுதிகளைக் கொடுத்து, பேச்சுக்களை வேண்டுமென்று இழுத்தடித்து, இறுதியில் பேச்சுக்கள் முறிந்தபோது, சமாதானத்தின் விரோதிகளாகப் புலிகள் மீது பழிசுமத்தி, எவ்வாறு யாழ்ப்பாண ஆக்கிரமிப்புக்கு வழிகோலப்பட்டது என்ற முழு விபரங்களும் இந்த அத்தியாயத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

கடைசி அத்தியாயத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமிப்பூட்டும் போரியல் வளர்ச்சியும், நோர்வே அரசின் அனுசரணையில் நடைபெற்ற சமாதான முயற்சியும் விரிவான முறையில் பரிசீலனை செய்யப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாடு சிங்கள இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, தந்திரோபாயப் பின்வாங்கலாகத் தனது படையணிகளை வன்னி மாநிலத்திற்கு நகர்த்திய தலைவர் பிரபாகரன், பிரமாண்டமான அளவில் படைத்துறையை மீளமைத்து, புதிய அணிகளை உருவாக்கி, ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைக் கட்டி எழுப்பினார். யாழ்ப்பாணச் சமருடன் புலிகள் இயக்கம் சிதைந்து விட்டதாக சிங்கள அரசு எண்ணிக் கொண்டிருந்த வேளை, வன்னிக் காடுகளில், மரபு வழிப் போர் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட தரைப் படை அணிகளையும் கடற்படையையும் விரிவுபடுத்தி, வலுப்படுத்தினார் பிரபாகரன். இதனையடுத்து, ‘ஓயாத அலைகள்’ என்ற குறியீட்டுப் பெயருடன், தொடர்ச்சியாக நிகழ்ந்த பெரும் சமர்களும், அவை மூலம் வன்னி மாநிலம் முழுமையாக மீட்கப்பட்டு, ஆனையிறவுப் படைத் தளமும் கைப்பற்றப்பட்ட மகத்தான போரியல் சாதனைகளும் இந்த அத்தியாயத்தில் தரப்படுகின்றன. உலகத்தையே வியப்பூட்டிய இராணுவ வெற்றிகள் மூலம் சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படை வலுச் சம நிலையை எமது இயக்கம் நிலைநாட்டியது. அந்தப் பலமான அத்திவாரத்தில் நிலையெடுத்து நின்றவாறு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்க எமது இயக்கம் முயற்சி எடுத்தது. சிங்கள மக்களிடம் சமாதானத்திற்கான ஆணையைப் பெற்று, 2001ஆம் ஆண்டு இறுதியில், பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்காவின் அரசு, நோர்வேயின் அனுசரணையின் கீழ் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்த முன்வந்தது.

நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிகழ்ந்த ஆறு கட்டச் சுற்றுப் பேச்சுக்கள் பற்றியும் இந்த அத்தியாயத்தில் விபரமாக விளக்கியிருக்கிறேன். 2002, செப்டம்பர் 16ஆம் நாள், தாய்லாந்திலுள்ள சற்ராகீப் கடற்படைத் தளத்தில் ஆரம்பமான பேச்சுக்கள் ஆறு மாதங்கள் வரை நீடித்து, இறுதியில் ஜப்பானிலுள்ள ஹக்கோனில் 2003 மார்ச் 21ஆம் திகதியுடன் முடிவுபெற்றன. சமாதானப் பேச்சுக்களை கட்டம் கட்டமாக முன்னகர்த்திச் செல்வதென்றும் முதற் கட்டப் பேச்சுக்களில் தமிழ் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, போர் நெருக்கடியைத் தணித்து இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதென்றும் நாம் முன்வைத்த பேச்சுக்களுக்கான தந்திரோபாய அணுகுமுறையை அரச தரப்பு ஏற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில் நடந்த பேச்சுக்களின் போது இரு முக்கிய உப – குழுக்கள் நிறுவப்பட்டன. அவசர மனிதாபிமான, புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப – குழு (சிரான்), நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கான உப – குழு, ஆகிய இந்த இரண்டு உப – குழுக்களும், இராணுவத்தின் கடும் போக்கினாலும், அரசாங்கத்தின் அதிகார வறுமையினாலும், செயலிழந்து முடங்கிப் போயின. போர் நிறுத்தக் கடப்பாடுகளுக்கு அமைய பொதுமக்களின் குடியிருப்புகளிலிருந்து விலக இராணுவம் மறுத்தது. ‘உயர் பாதுகாப்பு வலயம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட பிரதேசங்களில் எமது மக்கள் மீள் குடியேற்றும் செய்வதையும் கடுமையாக எதிர்த்தது. ‘உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து’ இராணுவம் விலகுவதானால் விடுதலைப் புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை சரணடைய வேண்டும் என்ற ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனையை விதித்தது. இதனைக் கடுமையாக ஆட்சேபித்து, நெருக்கடியைத் தணிக்கும் உப – குழுவிலிருந்து புலிகள் விலகினர். இதனால் அக் குழு செயலிழந்தது. நிதியின்றி, அதிகாரமின்றி, நிர்வாகத் திறமையின்றிச் செயற்படாது முடங்கியது சிரான் உப – குழு. தமிழரின் பிரச்சினைகளுக்கு இடைக்காலத் தீர்வையோ நிரந்தரத் தீர்வையோ வழங்குவதற்கான அரசியல் அதிகாரம் விக்கிரமசிங்காவின் அரசிடம் இருக்கவில்லை. முழு நிறைவேற்று அதிகாரங்களும் ஜனாதிபதி சந்திரிகாவிடம் குவிக்கப்பட்டிருந்தன. சர்வ அதிகாரமும் படைத்த சந்திரிகாவுடன் விக்கிரமசிங்கா முரண்பட்டு நின்றார். இந்தப் பகையுறவு காரணமாக, ரணிலின் ஆட்சிப் பீடத்தால் எதுவுமே உருப்படியாகச் செய்ய முடியவில்லை. ஜனாதிபதியைப் பிரதம தளகர்த்தாவாகக் கொண்ட சிறீலங்காவின் ஆயுதப் படைகளும் விக்கிரமசிங்காவுக்குக் கட்டுப்பட மறுத்ததுடன் புலிகளுடன் மோதி, முரண்பட்டன. இதனால் சமாதான முயற்சிக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

சிறீலங்காவின் அரசியல் யாப்பும் சமாதான முயற்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்கியது. நெகிழ்வற்ற விதிகளால் மிக இறுக்கமாகக் கட்டப்பட்ட அரசியலமைப்பின் எல்லைக் கோடுகளை மீறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் அஞ்சினர். உருப்படியான அதிகாரங்களுடன் தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை வழங்குவதற்கும் அரசியலமைப்பில் இடைவெளி இல்லையென ரணிலின் அரசாங்கம் கைவிரித்தது. பகையுணர்வுடைய ஜனாதிபதி ஒருபுறமும், கடும்போக்கான இராணுவம் மறுபுறமும், இறுக்கமான அரசியல் யாப்பு இன்னொரு புறமுமாக முக்கோண நெருக்குவாரத்தில் சிக்குப்பட்டுத் திணறிய ரணிலின் நிர்வாகத்தால் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், சர்வதேசப் பாதுகாப்பு வலைப் பின்னல் என்ற ஒரு நாசகாரத் திட்டத்தைச் செயற்படுத்தும் நோக்குடன், உலக நாடுகளின் உதவியை நாடினார் விக்கிரமசிங்கா. அமெரிக்காவின் ஆதிக்க வியூகத்திற்குள் இயங்கிய நாடுகளை, உதவி வழங்கும் மாநாடு என்ற போர்வையில் அணிதிரட்டி, புலிகளுக்கு அழுத்தம் செலுத்திக் கட்டுப் போடும் சர்வதேசச் சதி முயற்சியில் அவர் முனைப்போடு செயற்பட்டார். ஆயினும் விடுதலைப் புலிகள் விழிப்புடன் இருந்ததால் இம் முயற்சியிலும் அவர் வெற்றிக்காண முடியவில்லை. வாசிங்டனில், 2003 ஏப்ரலில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் சர்வதேச மாநாட்டில் பங்குபற்ற அழைக்கப்படாது விடுதலைப் புலிகள் புறந்தள்ளப்பட்டனர். சமத்துவப் பங்காளிகள் என்ற தகைமையுடன் பேச்சுக்களிலும், பேச்சுச் சம்பந்தமான மாநாடுகளிலும் பங்குபற்றுவதென இணக்கம் கண்ட பின்னர், வாசிங்டனில் நிகழ்ந்த முக்கிய மாநாட்டில் எமது இயக்கம் ஓரம் கட்டப்பட்டதை ஆட்சேபித்தும், பேச்சுக்கள் முன்னேற்றம் காணாது முடங்கிப் போன காரணத்தைக் காட்டியும், பேச்சுக்களில் பங்குபற்றுவதை இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது. பேச்சுக்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்ட போதும், ஒரு உருப்படியான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான யோசனைத் திட்டத்தை முன்வைக்குமாறு ரணிலின் அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். சிறீலங்காவின் அரசியலமைப்புச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களால் உருப்படியான ஒரு திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. இறுதியில், ‘இடைக்கால தன்னாட்சி அதிகார சபை’ என்ற ஒரு புதுமையான யோசனைத் திட்டத்தை எமது இயக்கம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. இத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நான்காவது நாள், எமது புதிய யோசனைகளை அரசாங்கம் பரிசீலனை செய்து கொண்டிருந்த வேளையில், சந்திரிகா அம்மையார் இவ் விவகாரத்தில் தலையிட்டு, மூன்று முக்கிய அமைச்சுகளைப் பறித்தெடுத்தார். இதனால் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் செயற்படாது முடங்கியது. இதனையடுத்து ஒரு சில மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தது. அதிகாரப் போட்டியால் எழுந்த அரசியல் நெருக்கடி பற்றியும், நோர்வேயின் அனுசரணையுடன் நிகழ்ந்த பேச்சுக்களின் குறைபாடுகள் பற்றியும் இந்த அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் விரிவாக ஆராயப்படுகிறது.

தமிழ்த் தேசியம் எழுச்சி கொண்டு, வளர்ச்சி பெற்று, சுயநிர்ணயத்திற்கான ஆயுதப் போராட்டமாக வடிவம் எடுத்த தமிழ் மக்களின் புரட்சிகரமான அரசியற் போராட்ட வரலாற்றை இந் நூல் விளக்கிக் கூற முனைகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால ஆயுதப் போராட்ட வரலாற்றுடன் எமது இயக்கம் பங்குகொண்ட சகல சமாதானப் பேச்சுக்களையும் இந் நூலில் செம்மையாக விபரித்துக் கூறுகிறோம். இதுவரை காலமும் வெளிவராத புதிய, சுவையான தகவல்களுடன் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, அதன் ஆழத்திலும் அகலத்திலும் விபரிக்கும் இந் நூல், எமது அரசியல் வரலாற்றிலும் விடுதலைப் போரிலும் ஆர்வமும் பற்றுமுள்ள அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments