
இன்றாகவும் நாளையாகவும் இருக்கலாம்.
இல்லையெனில் இன்னும் சில நாட்களின் பின்னராவது இது நடக்கும்.
அன்று மூச்சைத் துறந்து முடங்கிப் போவேன். கட்டிலில் வளர்த்திக் கதறி சுற்றம் அழும்.
தெரிந்த சிலர் கூடியிருந்து கற்பனைக்குத் தக்கபடி கதைப்பர்
கோயிற் கொலுதுறந்து வந்து
என்சீமாட்டி சூலில் உருவெடுத்த ‘சூட்டி’ மகள் துடிப்பாள்.
அடைவைப்பின் கடைக்குஞ்சு அப்பா எனக் கத்தும்.
கொள்ளிக்கு நான் வளர்க்கும்பிள்ளை ஊருருகி ஒழுக அழுதபடி
என் சிதைக்கு தீயிடுவான்
அந்தரித்துப் போவாள் மனைவி அவள் பாவம்…..
எந்த நிழலும் இளைப்பாற இருக்காது.
அஞ்சாறு நாள் வரைக்கும் ஆரேனும் பேசுவர்.
பின்னர் பெஞ்சாதிவாய்மட்டும் பேசும்.
அதுவும் கொஞ்சநாள் வரையும்தான் அதன்பிறகு என்ன நடக்கும்?
எதுவும் நடக்காது. கால மழையிற் கரைந்து என் நாமம் அழிந்து மெல்ல, மெல்ல இல்லாது போவேன்.
மாரி வரும் பொன்னாவரசும், என்வீட்டுப் பூவரசும் பூத்துச் சொரியும்.
கோடைவரும் எல்லாம் ஆடையிழந்து அலங்கோலமாகும்.
முதிர்ந்தவை உதிரும்
புதிய தளிர்கள் பிறந்து பேசும். சிரிக்கும் என்னையெவரும் நினைவிருத்த மாட்டார்கள்.
வந்ததுக்கும் இருந்ததுக்கும் போனதுக்கும் கூட எந்தச் சுவடுமின்றி ‘இவன் வாழ்வு’ முடியும்.
எனக்குத் தெரியும், இந்தளவேதான் நான்.
– புதுவை இரத்தினதுரை.