
அது தென் ஈழத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ்க் கிராமம்.
இப்போது செத்துக் கிடந்தது. கல்முனை என்ற வியாபார நகரத்திற்கு அண்மையில் பாரம்பரியமாய் தமிழர் வாழ்ந்து வந்த அந்தப் பாண்டிருப்புக் கிராமந்தான் இப்போது சாகடிக்கப்பட்டு சிதையுண்டு கிடந்தது. எங்கும் ஒரே நிசப்தம். சில நாய்கள் மட்டும் வீதிகளில் நின்று வேதனையுடன் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. காகங்களும் பலமாகக் கரைந்து தன் சகாக்களை விருந்துக்கு அழைத்தன. வழமையாக புழுக்களும், பூச்சிகளும் அழுக்குகளுமே விருந்தாகிப் போகும் அந்தப் பறவைகளுக்கு கண்ணில் பட்டு விட்ட புதிதான விருந்தொன்று புசிப்பதற்கு புதிய சுவையைக் கொடுத்தது. ஆம்; அந்தத் தெருவோரத் தில் ரயர் போட்டு எரிக்கப்பட்ட தமிழ் மகன் ஒருவரின் உடல் முழுமையாய் எரியாமல் சிதைந்துபோய் கிடந்தது.
எரிந்துபோன வீடுகள்.. உடைந்துபோன கட்டிடங்கள்… கருகிப்போன பயிர்ச்செடிகள்…. பாண்டிருப்புக் கிராமம் முழுமையாகவே உயிர்ப்பற்றுக் கிடந்தது.
“ஏம்மா நாங்கள் இங்க வந்திருக்கிறம்” தன் தாயின் கரங்களை இறுகப்பற்றிய படி அந்தப் பத்து வயதுச் சிறுவன் தவராசா கேட்கிறான்.
“இது அகதி முகாமடா ராசா. எங்கட வீட்டை அந்தப் பாவிப்பசங்க எரிச்சுப் போட்டாங்களெல்ல. இப்ப எங்களுக்கு இருக்க இடமில்லை. அதுதான்டா இங்க வந்திருக்கிறம்”
சிவகாமியின் வாயிலிருந்து வார்த்தைகள் வதங்கிப் போய் வெளியே வந்தன.
“அவங்களெல்லாம் திரும்பவும் இங்க வராங்களேம்மா” திரும்பவும் தவராசா கேட்கிறான்.
அவங்கள்… அவங்கள்… ஓ; அந்தப் பிஞ்சு உள்ளத்தின் மனதை இன்னும் அந்தப் பயங்கரம் விட்டு விலகவில்லை. சிவகாமிக்கு கதறி அழவேண்டும் போல இருந்தது. ஆனாலும், அவள் அழவில்லை. திடப்படுத்திக்கொண்டு அமைதியாகச் சொன்னாள்.
“இல்லடா மோனே, அவங்கள் இஞ்ச வராங்கள். வரவேமாட்டாங்கள். நீ ஒன்றுக்கும் பயப்படாதையடா ராசா. இஞ்ச நாங்கள் பயமில்லாமல் இருக்கலாம்.”
தளதளத்த குரலில் தாய் கூறி முடித்த போது தாயை வாஞ்சையோடு நோக்கியபடி தவராசா சொன்னான்.
‘இல்லேம்மா நான் பயப்படேல்ல” தன் மகனின் தலையைக் கோதிவிட்டபடி சிந்தனையில் மூழ்கினாள் சிவகாமி. சில தினங்களுக்கு முன் நடந்த அந்தப் பயங்கர நிகழ்வுகள், நினைவுகளாக அவள் முன் நிழலாடியது.
எங்கும் ஒரே இருள். இருளைக் கிழித்துக் கொண்டு திடீரென எழுந்த அவல ஒலிகள் பாண்டிருப்புக் கிராமம் முழுவதுமாக சேர்ந்து ஒலிக்கின்றது. ஊர் ஒழுங்கைகள் எங்கும் றக் வண்டிகளின் உறுமல்கள்… ஐயோ… அம்மா… கடவுளே எங்களைக் காப்பாற்று…. எங்கும் ஒரே அபயக் குரல்கள். சிவகாமியின் வீட்டையும் அந்தக் கூட்டம் நெருங்குகிறது. சிவகாமியின் புருஷன் செல்லமுத்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். தப்பியோட வழியில்லை. வீட்டின் முன்புறமும் பின் புறமும் எங்குமே அந்தக் கூட்டத்தின் காட்டுக் கூச்சல்கள். உள்வீட்டின் படுக்கையறையில் அலுமாரி ஒன்றின் பின்னால் பதுங்கிக் கொள்கிறாள் சிவகாமி. தாயைக் கட்டியணைத்தபடி வலதுபுறமிருந்து நடுங்கிக் கொண்டிருந்தாள் சிவகாமியின் வயதான மகள் கயல்விழி. தாயின் சேலைக்குள் புகுந்து கொண்டு ஒன்றும் புரியாமல் தாயைக் கட்டியணைத்தபடி அழத் தொடங்கினான் தவராசா. தன் மூத்த மகன் குமாரவேலுவை குசினியில் வைத்துப் பூட்டிவிட்டு மரணத்தை எதிர்நோக்கி நின்றான் செல்லமுத்து. அந்தக் கூட்டம் வீட்டை நெருங்கிவிட்டது. கதவை உடைக்கும் சத்தம் பலமாகக் கேட்கிறது. கொலைவெறியுடன் பலமாக ஒலிக்கும் சிங்களக் குரல்கள் இடையிடையே சில தமிழ்க் குரல்கள்… சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவற் படையும் தங்களை அழிக்க வந்திருப்பதை செல்லமுத்து புரிந்து கொண்டான்.
அந்தோ! கதவை உடைத்துக் கொண்டு கொலைவெறியுடன் நுழைகிறது அந்தக் காடையர் கூட்டம். ஒவ்வொருவருடைய கையிலும் பளபளக்கும் கூரிய ஆயுதங்கள்…. மறுகணம் காடையன் ஒருவனின் கையில் இருந்த கோடாரி போன்ற கூரிய ஆயுதம் செல்லமுத்துவின் தலையில் விழுந்த போது அவன் பலத்த கத்தலுடன் கீழே விழுகிறான். தலையில் இருந்து பீறிட்ட இரத்தம் அந்த வீட்டு மண்டபம் எங்கும் சிதறிய போது குசினிக்குள் இருந்து ஓடிவந்த குமாரவேலுவின் முதுகில் இன்னொரு காடையன் கூரிய ஆயுதத்தால் ஓங்கி வெட்டுகிறான். வேதனையால் அவன் போட்ட கூச்சல் வீடு முழுவதும் எதிரொலிக்கிறது. இதற்கிடையே படுக்கையறைக்குள் சென்ற இன்னொரு கூட்டம் கயல்விழியை இழுத்துக் கொண்டு வெளியே செல்கிறது. அதைத் தடுக்க முற்பட்ட சிவகாமியின் முதுகில் பொல்லால் ஒருவன் ஓங்கி அடிக்கிறான்.
இரண்டு நாட்களுக்குப் பின் சிவகாமிக்கு சுயநினைவு வந்தபோது தவராசா மட்டும் அவளருகே இருந்து முனகிக் கொண்டிருந்தான். பாண்டிருப்புக் கிராமப் பாடசாலையில் தாம் அகதியாகக் கொண்டுவரப்பட்டது அப்போதுதான் சிவகாமிக்குப் புரிந்தது. அன்று நடந்த அந்தச் சம்பவத்தில் செல்லமுத்துவும், குமாரவேலுவும் கொல்லப்பட்டதையும், கயல்விழி காடையர்களால் கெடுக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதையும், வீடு சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டதையும் அப்போதுதான் அவள் தெரிந்து கொண்டாள். தானும், தவராசாவும் தற்செயலாக உயிர் தப்பிக் கொண்டதையும் அவள் புரிந்து கொண்டாள்.
இப்போது அந்த அகதி முகாம் சோபையிழந்து மயானம் போலக் காட்சியளித்தது. அந்தக் கோர இரவில் தப்பிப்பிழைத்த சில நூறு தமிழர்களே அந்த முகாமில் குழுமியிருந்தனர். இன்னும் சிலர் அழுது கொண்டேயிருந்தார்கள். ஒவ்வொருவருடைய முகத்தையும் மரணபீதி கவ்வியிருந்தது.
அந்தப் பாடசாலை வளவுக்குள்hj ஓங்கி வளர்ந்து நின்ற ஒரு வாகை மரத்துக்குக் கீழ் இருந்தபடி எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவகாமி. தாயின் மடியில் படுத்திருந்தபடி பூத்துக்குலுங்கும் அந்த மஞ்சள் நிற வாகைப் பூக்களை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் தவராசா. இந்த வாகை … இந்த வாகைத் தடிகளின் கொடுமை…. சில நாட்களுக்கு முன்புவரை தான் ஓடி ஆடி கல்வி பயின்ற பாடசாலை. சில கணங்கள் தன் பாடசாலை நாட்களை மனதுக்குள் சுற்றி வந்தான் தவராசா.
ஒரு நாள் பாடசாலை இடைவேளை நேரத்தின் போது தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆமியும் புலியும் விளையாடப் புறப்பட்டபோது புலிப்படையின் பக்கம் தான் தான் நிக்கவேண்டுமென பிடிவாதமாக நின்று இறுதியாக ஆமியின் சார்பாக ரோந்து வந்த தன் நண்பர்களை மறைந்திருந்து தாக்கி வெற்றிகொண்டு ஆர்ப்பரித்தபோது தற்செயலாக அங்கு வந்த வாத்தியார் அனைவரையும் அழைத்து வாகைத் தடியினால் விளாசு விளாசென்று விளாசியதெல்லாம் ஒரு கனவாக அந்தச் சிறுவனின் உள்ளத்தில் தோன்றி மறைகிறது.
சிவகாமியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் தவராசாவின் கைகளில் பட்டு வழிந்தபோது ஏக்கமுடன் தன் தாயைப் பார்த்தான்.
“ஏனம்மா அழுகிறாய். அண்ணாவையும், அக்காவையும் அப்பாவையும் அவங்கள் சாக்கொண்டு போட்டாங்கள் எண்டுதானே.” சிவகாமி தாங்கமுடியாமல் மகனைக் கட்டியணைத்தபடி தேம்பித் தேம்பி அழத்தொடங்கினாள்.
“அழாதேம்மா” கண்ணீரைத் துடைத்துவிட்டபடி தாயைத் தேற்ற முற்பட்டான் தவராசா.
ஓ; எவ்வளவு அமைதியான குடும்பம். ஒரு புழுவுக்குக்கூட தீங்கு நினைக்காத புருஷன். எந்தப் பாவமும் அறியாத மகனும், மகளும்…..
ஏதோ யோசித்தபடி இருந்த தவராசா திடீரெனச் சொன்னான். “அம்மா”, அன்றைக்கு நிசார் மாமாவும் கையில துவக்கோட வந்தவரம்மா. நான் கண்டன் அம்மா!
தாய் அமைதியாக இருப்பதைப்பார்த்த தவராசா தொடர்ந்து கேட்டான். “ஏனம்மா நிசார் மாமாவும் அவங்களோட சேர்ந்து வந்தவர்? அண்ணாவோடதானம்மா சேர்ந்து திரியிறவர்” நெடுகலும்
குழப்பமாயிருந்த அந்த நிகழ்வு பற்றி விளங்கிக்கொள்ளத் துடித்தது அந்தச் சிறுவனின் மனது. தென் ஈழத்தில் வாழும் முஸ்லீம்களும், தமிழர்களும் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்தார்கள் என்பதை அங்கு சென்று பார்த்தவருக்குத்தான் தெரியும். தவராசா குறிப்பிட்ட நிசார் சிவகாமியின் இறந்து போன மகனின் உற்ற நண்பன். தவராசா கூறியது உண்மைதான். சிவகாமிக்கு அது தெரியும். சிங்கள அரசினால் பகடைக்காய்களாக்கப்பட்டு முஸ்லீம் தலைவர்கள் விரித்த வலையில் வீழ்ந்தவர்களில் நிசாரும் ஒருவராகிவிட்டான். தன் மகனின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாக்கினாள் சிவகாமி.
நாட்கள் மெல்லென நகர்ந்தன. அந்தப் பாடசாலை அகதி முகாமில் முடங்கிக் கிடப்பவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி சித்தப்பிரமை பிடித்தவர்களாக இருந்தார்கள். சரியான பராமரிப்பின்றி அந்த முகாமில் உள்ளவர்கள் அநாதரவாகவே விடப்பட்டிருந்தார்கள். பொதுத் தாபனமென்று வருவோரும் அகதிகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் திரும்பி விடுவார்கள்.
அந்த வானத்தை இருள் கவ்வத் தொடங்கியது. இருள் சூழும் வேளையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாண்டிருப்புக் கிராமம் சுடுகாடாகவே காட்சியளித்தது. தன்மடியில் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் தவராசாவின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள் சிவகாமி. ஓடியாடித் திரியவேண்டிய வயதில் அகதியாய் ஆகிவிட்ட தன்மகனின் நிலையை எண்ணும் போது இதயம் வெடித்துவிடும் போல இருந்தது அவளுக்கு.
மயான காட்டு நரிகளின் ஊளைச் சத்தம் இருளை வரவேற்பது போல இருந்தது. எங்கும் அமைதி… அமைதி… அந்தோ ….! அந்தக் கொடிய மிருகங்கள் மீண்டும் அகதி முகாமுக்குள்ளும். தூங்கிய அகதி முகாம் விழித்துக் கொள்கிறது. அகதி முகாமைச்சுற்றி வளைத்த அந்தக் கொடியவர்கள் கூச்சலிட்டபடி உள்ளே நுழைகிறார்கள். தாயின் மடியில் படுத்திருந்த தவராசா திடுக்கிட்டெழுந்து தாயைக் கட்டியணைத்தபடி கதறியழுகிறான்.
“அவங்கள் வந்திட்டாங்களாம்மா? அவங்கள் வந்திட்டாங்களாம்மா?” தவராசாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகளே திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன.
அந்தக் காட்டுமிராண்டிகளின் கைகளில் கூரிய ஆயுதங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
எங்கும் மரண ஓலங்கள்…. கூக்குரல்கள்…. ஐயோ….
பலர் கோரமாகத் தாக்கப்படுகிறார்கள். அகதிமுகாமுக்குள்ளும் இரத்தக் கறை படிகிறது. பல இளைஞர்களும் யுவதிகளும் வெளியே இழுத்துச் செல்லப் படுகின்றார்கள். அவர்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. அகதிமுகாமிலும் அந்தக் கொடியவர்களின் அகோரத்தனங்கள்; அந்த அப்பாவி மக்களின் இதயங்களை நிலை குலைய வைக்கின்றன. அந்தப் பாடசாலை அகதி முகாமின் நிலம் கண்ணீரிலும் இரத்தத்திலும் தோய்ந்துபோய் இருந்தது. சிலர் அரை குறைக் காயங்களுடன் இன்னும் முனகிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் அழுதழுது சோர்வடைந்திருந்தனர். அந்த அகதி முகாம் விழித்திருக்க அந்தக் கொடிய இரவும் மெல்லென நகர்ந்து கொண்டிருந்தது.
தாயின் மடியில் படுத்திருந்த தவராசா தாயின் கைகளை இறுகப்பற்றியபடி சொன்னான். “அம்மா பயமாயிருக்குதம்மா”
“என்ன ராசா பயப்படதாயணை. நான் பக்கத்தில் இருக்கிறன்” மகனை மார்புடன் அணைத்தபடி சிவகாமி கூறினாள். “அவங்கள் திரும்பவும் இங்க வருவாங்களாம்மா?” தவராசா வேதனை கலந்த பயஉணர்வுடன் கூறினான். “இல்லடா ராசா” அவளால் தொடர்ந்து பேசமுடிய வில்லை இல்லம்மா… இஞ்ச ஒருத்தரும் எங்களை காப்பாத்த மாட்டினம் அம்மா. அவங்கள் திரும்பவும் எங்களை கொல்ல வருவாங்கள்.”
சிவகாமியால் எதுவும் பேசமுடியவில்லை. எப்போதும் துடுதுடுப்பாய் இருக்கும் தவராசா மிகவும் புத்திசாலியாகவும் இருந்தான். வெளியே ஓங்கி வளர்ந்து நின்ற அந்த வாகை மரக்கிளையை உற்றுநோக்கியபடி இருந்த தவராசா திடீரெனச் சொன்னான் இஞ்ச இருந்தால் நாங்கள் எப்படியோ சாகிறனாங்கள் தானேம்மா?”
இந்த வார்த்தைகளை சிவகாமியால் ஜீரணிக்கமுடியவில்லை. தன் மகனை மார்போடணைத்தபடி “அப்படிச் சொல்லாதயணை ராசா….” என்றவள் தன்மகனை ஆறுதற்படுத்த சக்திவாய்ந்த வார்த்தைகள் ஏதும் கிடைக்காதோ எனத் தவித்தாள். ஆனால்….
“அம்மா, நாங்கள் காட்டுக்குப் போவமேம்மா? அங்க புலியண்ணாவைகள் எங்களைக் காப்பாற்றுவினம்.” திடீரென தவராசா கூறியபோது சிவகாமி தடுமாறிப் போனாள். சில கணங்கள்தான்… அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு நடந்து முடிந்தவைகளை மனக்கண்ணில் நிறுத்தியபோது அந்தத் துயர் தோய்ந்த முகத்திலும் ஒரு பிரகாசம்…..
அன்றைய இரவுப் பொழுதில் பாண்டிருப்புக் கிராமப் பகுதியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி சிவகாமி வேகமாக நடந்துகொண்டிருந்தாள். தாயின் கைகளை இறுகப்பற்றியபடி புது வேகத்துடன் நடந்துகொண்டிருந்தான் தவராசா.
பாடசாலை நாட்களில் இராணுவ அணியென வந்த தன் நண்பர்கள் மீது மறைந்திருந்து தாக்கிய காட்சிகள் தவராசாவின் மனதில் இப்போது அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருந்தன.
– மாணி நாகேஷ்
– எரிமலை ஏப்ரல் 1991.
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்