×

தமிழீழ நடைமுறை அரசாங்கத்தின் நீதி நிர்வாகத்துறை

தமிழீழ நடைமுறை அரசாங்கத்தின் நீதி நிர்வாகத்துறையின்
எட்டாண்டுகால செயற்பாடுகள் -ஒரு கண்ணோட்டம்.

நவீன உலகில் மக்கள் வாழ்வின் இயங்கியலில் நீதிசெலுத்தப்படுவதன் பங்கு அவசியமானது, நீதி செலுத்தும்முறை எமது பண்டைய சமூக முறைகளிலிருந்து பேணப்பட்டு வந்த ஓர் அவசியமான அலகாகும்.

அந்தவகையில் இன்று தமிழீழத்திலும் நீதிசெலுத்துதலை செம்மையாகச் செயற்படுத்த தமிழீழ நீதிநிர்வாகத்துறை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களால் நெறிப்படுத்தப்படுகின்றது.

தமிழீழ நீதிநிர்வாகத்துறைச் செயற்பாடானது 1993 – 08- 19ம் திகதி சட்டக்கற்கையை பூர்த்தி செய்த போராளிகளின் அணி ஒன்றுடன் ஆரம்பமானது. நீதி செலுத்துதலில் பக்கச்சார்புகள் செல்வாக்குகள், தாமதங்கள் என்பவைகள் ஏற்படாதவாறு செயற்படுத்தும் பொருட்டு, தம்மை நாட்டின் விடுதலைக்காகப் போராட இணைத்துக் கொண்ட போராளிகளின் ஓரு தொகுதியினர் தலைவர் அவர்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சட்டக்கல்லூரியில் கற்கை நெறியினைப் புகட்டி அவர்களிலிருந்து நீதியாளர்கள், சட்டவாளர்களைத் தெரிவு செய்து தமிழீழ நீதிமன்றங்கள் ஆர்ம்பிக்கப்பட்டன.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நீதி நிர்வாகத்துறைச் செயற்பாடானது, நீதிமன்றுகள் செயற்படுத்தல், சட்டக்கல்லூரி, சட்டவாக்கச் செயற்பாடுகள் ஆகிய மூன்று பிரதான செயற்பாடுகளை இன்று வரையான எட்டு ஆண்டுகளில் செயற்படுத்தி வருகின்றது. நீதியாளர்கள் யாவரும் சட்டக் கல்வியைப் பூர்த்திசெய்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் முன்னிலையில் நீதியாளருக்கான உறுதியுரையினை மேற்கொண்டவர்களாவர்.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் நீதித்துறை தொடர்பில் நீதியாளர்களின் உறுதியுரையை ஏற்று நீதியாளர்களை செயற்பட அனுமதிப்பதுடன், குற்றவாளிகளின் தண்டனைகளைக் குறைத்தல், குற்றவாளிகட்கு மன்னிப்பு வழங்கல், ஆகியவற்றையும் செயற்படுத்துவதுடன், நிகழ்வுத்தவறு, அல்லது சட்டத்தவறு ஒன்று காணப்படுகின்றதான விடயங்கள் தொடர்பில் நியாய விளக்கமொன்றிற்குப் பணிப்புரைகளையும் விடுக்கலாம்.

தமிழீழத்தில் செயற்படுத்தப்படும் நீதிமன்றுகள் ஆறு வகைப்படும். அவற்றின் நியாயாதிக்கத்திற்கு ஏற்ப உச்சநீதிமன்றே அதியுயர் நீதிமன்றாகத் திகழ்கிறது.இது மூன்று  நீதியாளர்களைக் கொண்ட அமைப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நீதிமன்று சகல வழக்குகளினதும் இறுதி மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளது. பார்வையிடல் ஆலோசனை வழங்குதல் ஆகியனவும் இதன் அதிகாரங்களாகும்.

-இதற்கு அடுத்தபடியாக மேன் முறையீட்டு நீதிமன்று காணப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்று மாவட்ட மன்றுகளினதும், மேல் நீதிமன்றினதும், சிறப்பு நீதி வழக்குகளின் மன்றுகளினதும் மீதான மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தினைக் கொண்டுள்ளது. இது மூன்று நீதியாளர்களைக் கொண்ட தவிசினால் மேற்கொள்ளப் படுகின்றது. தற்போது 6 நீதியாளர்கள் மேன்முறையீட்டு நீதியாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

-இதற்கு அடுத்த கீழ்நிலை நீதிமன்றாக மேல்நீதிமன்று, காணப்படுகின்றது. மேல் நீதிமன்றானது, குற்றவியல் வழக்குகள் தொடர்பான நியாயாக்கத்தைக் கொண்டுள்ளது. இந்நீதிமன்றானது மேல் நீதிமன்ற நீதியாளர் ஒருவரால் மேற்கொள்ளப்படுகிறது. மரண தண்டனைக்குரியனவும், 10 ஆண்டுகட்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடியதுமான தவறு தொடர்பில் இது நியாயாதிக்கமுடையது ஆகும்.

சிறப்பு நீதிமன்றானது, சிற்சில குறிப்பிட்ட குற்றவியல்களின் வழக்கு நிகழ்வுகள் தொடர்பில் அவற்றின் பாரதூரத்தன்மை, அதில் ஆராயப்படவேண்டிய விடையத்தின் முக்கியத்துவம் போன்றவைகளைக் கருத்திற்கொண்டு மூன்று நீதியாளர்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்படும் ஒரு நீதிமன்றத் தவிசாகும். சிறப்பு நீதிமன்றத் தவிசானது, அது ஏற்பாடு செய்யப்பட்ட நோக்கம் நிறைவடைந்ததும் கலைந்துவிடும்.

அடுத்த ஆரம்பநிலை நியாயாதிக்கமுடைய மன்றுகளாக மாவட்ட குடியியல் நீதிமன்றுகளும், மாவட்ட குற்றவியல் நீதிமன்றுகளும் காணப்படுகின்றன. குடியியல் மன்றுகள் சகல குடியியல் வழக்குகளையும் பெற்று ஆராய்ந்து ஆரம்பத் தீப்புக்களை வழங்குகின்றன. இவ்வறே குற்றவியல் வழக்குகளை குற்றவியல் மாவட்ட நீதிமன்றுகள் குற்றவியல் சிக்கல்களில் மேல் நீதிமன்றிற்குரியவை தொடர்பில் சுருக்கமுறை விளக்கத்தினையும், தான் விளங்கக்கூடிய வழக்குகளை பூர்வாங்கமாக விளங்கியும் வருகின்றன. இற்றைவரை 10 குற்றவியல் மாவட்ட நீதிமன்றுகளும். 10 குடியியல் மாவட்ட நீதிமன்றுகளும் ஆரம்பிக்கப்பட்டு இன்று தலா மூன்று மூன்று மாவட்டமன்றுகள் நீதி செலுத்தும் பணியில் ஈடு பட்டுள்ளன. இது வரை 7459 குற்றவியல் வழக்குகளையும், 5790 குடியியல் வழக்குகளையும் மாவட்ட மன்றுகள் தீர்த்துள்ளன. மொத்தமாக இன்றுவரை 19776 வழக்குகளை மாவட்ட மன்றுகள் சந்தித்துள்ளன.

இவற்றில் மொத்தமாக 806 வழக்குகள் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 656 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.

தமிழீழ நீதிநிர்வாகத்துறைச் செயற்பாட்டில் மற்றுமோர் அலகான சட்டக் கல்லூரியானது, இன்றுவரை மூன்று தொகுதி மாணவர்களுக்கான சட்டக் கல்வியை நிறைவேற்றியுள்ளதுடன், 4வது அணிக்கான கல்வி யூட்டலையும், மேற்கொள் கின்றது. அத்தோடு 2000 ஆம் ஆண்டில் தமிழீழ சட்டக்கல்லூரியால் வெளிவாரி சட்டக் கற்கை நெறியொன்றும், ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது.

சட்டக்கல்லூரியின் உள்ளகக் கற்கை நெறியானது. 22 முழுமையான சட்டப்பாட நெறிகளையும, ஏனைய 4 உப பாட நெறிகளையும கொண்டுள்ளது. வெளிவாரிக் கற்கை நெறி 18 சட்ட கற்கை நெறிகளையும் ஒரு உப கற்கை நெறியையும் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகள் வரையான கற்கை நெறியாக சட்டக் கற்கை நெறி காணப்படுகின்றது.

முதலாவது அணியில் 34 மாணவரும், 2 வது அணியில் 25 மாணவரும். மூன்றாவது அணியில் 28 மாணவரும் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து வெளியேறியுள்ளனர்.

சட்டவாக்கச் செயற்பாடுகள்
சட்டசபைக்கு உடையவையாயினும், தற்போது நீதித்துறைச் செயற்பாட்டிற்காகவும்,சட்ட அறிவுடையவர்கள் அவற்றை கையாள வேண்டும் என்பதற்காகவும், நீதி நிர்வாகத்துறையின் சட்டமாக்கற் பிரிவினரால் சட்டங்கள் வரையப்படுகின்றன. அவ்வாறு வரையப்படும் சட்டங்கள் சட்டப்பரிசீலனைக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு பின்பு தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் ஒப்புகையைப் பெற்று சட்டமாக வெளியிடப்படுகின்றன.

இன்று இயற்றப்படும் சட்டங்கள் யாவும் தூய நீதியை நிலைநாட்டுவதற்காகவும், மக்கள் வாழ்வினை சீராக அனுபவிப்பதற்கும் வசதி செய்து கொடுப்பதற்குமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுகின்றன.

இவ்வாறு இயற்றப்படும் சட்டங்களில் மக்களின் இறைமை. நீதித்துறைச் சுதந்திரம். ஐ நா சபையின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கமைவாக, மக்களின் உரிமைகளைப் பேணும் நோக்கு ஆகியவைகளை அடிப்படையாகத் கொண்டே சட்டங்கள் இயற்றப் படுகின்றன. சிறப்பாக குடியிருக்கும், கருத்து வெளியிடும். மதத்தைப் பின்பற்றும், தொழில் புரியும் சுதந்திரம். சட்டத்தின்முன்பு எதிர்வாதம் செய்யவும், நபர் ஒருவர் குற்றத்தீர்ப்பு ஒன்றிற்கு பின்னர் குற்றவாளியாகக் காணப்படு வதற்குமான சுதந்திரம். நியாயமாக விசாரிக்கப்படாமல் தண்டிக்கப்படாமை ஆகியவைகளையும் உள்ளடக்கிச் சட்டங்கள் வரையப் படுகின்றன.

இதுவரை பல பிரதான சட்டங்களும். திருத்தச் சட்டங்களுமாக மொத்தம் 19 வெளியிடப்பட்டுள்ளன. அவைகளில் குற்றவியற் சட்டம், சான்றியற் சட்டம், தமிழீழச் சட்டக்கோவை, தேச வழமைச் சட்டம். உணவுச் சட்டம், மோட்டார் ஊர்திகள் பதிவுச்சட்டம், சீதனத் தடைச்சட்டம், சீட்டுச் சட்டம் போன்றவை பிரதான சட்டங்களாகும்.

இவைகளில் தமிழீழ தேச வழ மைச் சட்டம் நியாயமான வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர்ச்சட்டத்தின் திருத்திய வடிவமாகும். குற்றவியற் சட்டம், அனைத்து நாடுகளும் பின்பற்றும் பொதுவான குற்றச்சட்ட ஏற்பாடுகளின் விதிகளைத் தழுவி எமது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறான விதிகளையும் உட்செலுத்தி உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

அவ்வாறே சான்றுச்சட்டமும் விசாரணைகளின் போது கட்சியினரின் சுதந்திரத்தை வலியுறுத்துவதை பிரதானமாகக் கொண்டுள்ளது. இதன்படி நியாயமான சந்தேகத்திற்கப்பால் குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதுவும், ஒவ்வொரு சாட்சியை எதிர்தரப்பு விரும்பினால் குறுக்கு விசாரணை செய்யலாம் எனும் விதியும், பொலிஸாருக்குச் செய்த குற்ற வொறுப்புதல்களை சான்றாகக் கொள்ளக்கூடாது என்கிற ஒர் அனைத்துலக விதியையும் குறிப்பிட்டு உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொதுவாக இன்று இயற்றப் படும் சட்டங்கள்’ நாகரிக விருத்தி,
மனித உரிமைகள் பேணல், மக்களின் இயல்பான சமூக வாழ்வை அனுபவிக்க வாய்ப்பளித்தல், நீதித்துறைச் சுதந்திரம், ஆகிய பிரதான விதிகளை அடியொற்றியே மேற்கொள்ளப் படுகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக நீதி நிர்வாகத்துறை ஒரு அரசாங்கத்தின் பிரதான கட்டமைப்பாக தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதுடன், செம்மையான பணியையும் ஆற்றி வருகின்றது. நீதித்து றையின் இன்றைய செயற் பாடுகள் நாளைய அரச நிரு வாகத்திற்கான ஓர் அலகாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்கின்றன.

தமிழீழத்தில் செயற்படுத்தப் படும் நீதிமன்றுகளில் மேற்கொள்ளப்படும் விளக்கங்கள் பகிரங்க மன்றிலும் இரு பகுதியினரும் சமூகமாய் இருக்கும் போதும் மேற்கொள்ளப்படுவதுடன். குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர் “நியாயமான சந்தேகத்திற்கப்பால்”” குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் “சுத்தவாளியாகவே” கொள்ளப்படுதல் ஆகியவையும் பிரதான மானவையாகும்.

சட்டவாளர்கள்: அரசு சட்டவாளர்களையும், பிரத்தியேகச் சட்டவாளர்களையும் கொண்டு செயற்படுகின்றன. வேறு நாடுகளில் சட்டக்கல்வி பயின்ற சட்டவாளர்களும் நிலைமைக்கு ஏற்ப தமிழீழச் சட்டக் கல்லூரியின் பரீட்சை எடுத்து சித்தியெய்துவதன் ஊடாக தெரிவாகிய பின்னர் அல்லது நிலமைகளுக்கேற்ப அவ்வாறு வராமலும் ,
உச்ச நீதிமன்ற நீதியாளர் முன்னிலையில் உறுதியுரையினை செய்த பின்பு சட்டவாளராகப் பணியாற்ற முடியும்.

எட்டு ஆண்டுகாலம் நீதி வழங்கல் பணியை செவ்வனே மக்களுக்குச் செய்து வரும் தமிழீழ நீதிநிர்வாகத்துறை தொடர்ந்தும் தனது நீதியானதும் நெறிப்படுத்தப்பட்டதும். முன்னோடியானதுமான பணிக்கமைய சமுதாய அநீதிகள் களையப்பட்ட ஒரு புதிய நேரிய தமிழீழ மக்கள் சமூகத்தின் உருவாக்கத்திற்கு வழி செய்ய முயன்று நிற்கும்.

– ந. மதிவர்மன்

-விடுதலைப்புலிகள் இதழ்
– ஆவணி-புரட்டாதி 2001 (நூறாவது இதழ்)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments