
காடுகளைக் கட்டுப் படுத்திய காளிகள் நர்மதா (கொழும்பு)
விழுதாகி வேருமாகி என்ற இலட்சியம் நோக்கிய உங்கள் பயணத்தின் பதிவினைப்படித்தேன்.
எப்படி முடிந்தது? உங்களால் எப்படி முடிந்தது? என்றிருந்தது.
‘பேயு‘லாவும் நேரத்தில், நாய்களின் ஊளை ஒலியில் உலவித்திரிய உங்களால் எப்படி முடிந்தது?
காடுகளுக்குள் விலங்குகளின் அரவ ஒலியினைக் கேட்டுக்கொண்டு சிறிது கண்ணயர உங்களால் எப்படி முடிந்தது?
நடுச்சாமங்களில் வேவுக்கெனத் தனியே காடுகளில் திரிந்து வர உங்களால் எப்படி முடிந்தது?
மாரிகால மழைக்குள் உடல் விறைத்துப்போய், இரவுகளை அணைத்துக்கொள்ள உங்களால் எப்படி முடிந்தது?
எமது நடுச்சாமங்களெல்லாம் உங்களுக்கு எப்படி பட்டப்பகலாகியது.?
காட்டைக்கட்டுப்படுத்தினீர்கள்ளூ கடலுக்கு இயைபாயினீர்கள். இரண்டுமே வெற்றியின் வழிகளா?
நாம் அமைதியாய் உறங்கும் பொழுதுகளை நீங்கள் எப்படி இத்தனை பெறுமதியாக்கினீர்கள்?
பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். நீங்கள் எப்படி பெரும்பேய்களையெல்லாம் பொடியாக்கினீர்கள்?
வெளித்தள்ளிப்போன உங்கள் தோழியின் மூளையை உள்ளே தள்ளி தையல்போட உங்களால் எப்படி முடிந்தது? மற்றவளின் உடலிலிருந்து சிந்திய இரத்தக்கறைகளை சலனமின்றி காவித்திரிய உங்களால் எப்படி முடிந்தது?. உயிர்போன அடுத்தவளின் வித்துடலை எடுக்கப்போய் உங்கள் உயிரினை நீத்துக்கொள்ள எப்படி முடிந்தது? எல்லாமே புரியாத புதிராய் தெரிகிறது.
ஊர்களில், வேலிச்சண்டையில் மற்றவர்களுக்கு காயம் வந்தாலோ, சண்டை வந்தாலோ குய்யோ முறையோ என்று கூச்சலிடும் இனத்தவர்கள் தானே பெண்கள். சாவு என்றால் ஒப்பாரிக்கு கூடுபவர்களும், மார்படிச்சு குழறுபவர்களும் நீங்கள் தானே.
எங்களின் அவல ஓலத்தினைக் கேட்டுத்தானே ஆம்பிளையள் வெளியே நின்று கண்கலங்குவார்கள்ளூ ஆவேசம் கொள்ளுவார்கள். இதைத்தானே எல்லாமே சொல்லித்தந்தன. திரௌபதைகூட தலைமுடியைத் தானே அவிழ்த்து விட்டாள், ஆவேசத்துடன் சபதம் செய்து பாண்டவர்களை உலுப்பிவிட்டாள்.
ஆனால் நீங்கள் கொண்ட ஆவேசத்தில், சூலம் கொண்டெழுந்த மாரிகளாய் நீங்களே சங்காரம் செய்தீர்கள். ‘அவலத்தை தந்தவர்களுக்கே அதனை திருப்பிக்கொடு‘ என்று ஆவேசத்துணிவில் சூளுரைத்தீர்கள். அந்தக்கணங்களில் உங்களைப் பார்த்திருக்கவேண்டும். உங்கள் கண்களில் அனல் கக்கியிருக்கும், உடல் கொதித்து நடுங்கியிருக்கும். நெஞ்சு படபடத்திருக்கும். கைகளும் கால்களும் பழிவாங்கத் துடித்திருக்கும்.
உங்களின் ஆவேசத்தில் எதிரியின் வியூகம் அனைத்தும் தவிடுபொடியானது. உங்களுக்குள் இருந்த இந்த அபாரசக்தி – தேசியத் தலைவர் அவர்களால் கண்டறிந்து, வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நீங்கள் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கும் எங்கள் சக்தியை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
போராட்ட வாழ்வில் எதிர்கொண்ட வாழ்வியற் பிரச்சினைகளை ஒரு துரும்பாகத் தட்டியுள்ளீர்கள். நாம் இவற்றுக்காக வாழ்வு முழுவதும் போராடுகிறோம். உங்கள் முன்னிலையில் எங்கள் இலக்குகள் எல்லாம் வெறும் துரும்பாயிற்று.
நீங்கள் பட்ட உடல் வலிகள், வதைகள், தியாகங்களில், சகிப்புக்களில் இன்று நாட்டில் அமைதி நிலவுகிறது. தமிழர் என்று நாம் திரிகையில் ஒருவரும் எம்மைச் சீண்டுவதில்லை. எங்கள் இனத்தினைப் பிரதிபலிக்கும் அடையாளங்களுடன் நாம் விரும்பிய போது, விரும்பிய நேரத்தில் பல்லினத்தவரும் வாழும் சமூகத்திலும் நடமாடலாம். எமது இளைய ஆண்பிள்ளைகள் யாரையும் கண்டு கூனிக்குறுகாமல் நிமிர்ந்து நடக்கலாம், எமது பெண் பிள்ளைகள் சோதனையென்ற பெயரில் மானபங்கப்படாமல் நிம்மதியாய் வாழலாம். யாரும் பொது மேடைகளில் துணிந்து எழுந்து நின்று எமது பிரச்சினைகளைப் பேசலாம். எமது பேச்சையும் பலர் பொறுமையாகச் செவிசாய்க்கின்றனர்.
இவையெல்லாம் எமக்கு கிடைத்த வெகுமதிகள் அல்ல, நீங்கள் கொடுத்த உயிரினும் மேலான விலைகள் உங்கள் கண்களை எங்கள் முன்னிலையில் பறித்து எறிந்தீர்கள் – பார்த்திருந்தோம் நாம்.
உங்கள் கனவுகளை குழி தோண்டிப் புதைத்தீர்கள். உங்கள் உடல்களைச் சிதைத்துக் கொண்டீர்கள். உங்கள் கண்களை விற்றதனால் எமக்கு ஒரு சித்திரம் கிடைத்துள்ளது. அதனை நாம் இரசிக்கின்றோம். நேசிக்கின்றோம்.
ஏனெனில், எமது உலகம் வேறு வகைப்பட்டிருந்தது. ஆனால் எமது வேறு உலகத்தில் நேர்ந்த சில கொடூரங்களுக்காக நீங்கள் உங்களை தீயிட்டுக் கொளுத்தினீர்கள். அந்தத்தீயில் எல்லாம் கதிகலங்கிப்போனது. நீங்கள் இரத்தம் சிந்தி ஒவ்வொரு அடியாய் மீட்டெடுத்த தேசத்தில் இந்தச் சுதந்திர பூமியில், அந்த சுதந்திரக்காற்றினை சுவாசிக்க எங்கள் மனம் பூரிக்கிறது. மனம் நிறைகிறது. நீங்கள் வேண்டியதும் அதுவே.
நீங்கள் நிலைநாட்டிய பெரும் சாதனைகளை, எதிர்கொண்ட பெரும் துயரங்களை மிகவும் சாதாரணமாய் எழுதியுள்ளீர்கள். இவை வெறும் வரலாற்றுத் தகவல்களல்ல. பெரும் யுத்தத்தின் காப்பியங்கள். இதில் கூறியதை விட கூறாது விட்ட பல விடயங்கள் உங்களுக்குள் இருக்கும். அதனை கூறாது போனமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். உடனடிச் சாத்தியங்கள் இல்லாதிருக்கலாம்.
இந்த மண்ணுக்கு வித்தாகிப்போனவர்களிடம் நிறையக் கதைகள் இருந்திருக்கும், இருக்கும். விடுதலைப்போராட்ட வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களிடம் இருக்கும். போராட்ட சூழலில் வாழும் ஒவ்வொருவரிடமும் இருக்கும்.
எழுதப்படும் காலத்தின் வரலாறுகள் சிலவற்றை மட்டும் கூர்மைப்படுத்தும். ஏனையவை கிளைக்கதையாகவோ, அல்லது மறைந்தோ போய்விடும். ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பெண்புலிகளாகிய உங்களது வரலாறு மறைத்துவிடாதபடி, மறைந்து போகாதபடி பெரும் பிரசன்னமாய் எழுந்து நிற்கிறது.