
கனபதி ஐயர் வீட்டு விறாந்தையில் படுத்திருந்தார்
கனபதி ஐயர் வீட்டு விறாந்தையில் படுத்திருந்தார். நேரம் இரவு ஒன்பது மணிக்கு மேலிருக்கும். பிள்ளையார் கோயிலை ஓட்டினாற் போலவே அவருடைய வீடும் இருந்தது.
கோயிலில் மாலைக் காலப் பூசை முடிந்து, இரவு ஏழு மணிக்கே கதவுகளும் பூட்டியாயிற்று. வைகாசி மாதம். மெல்லிய இளங் காற்று, பக்கத்தில் நின்ற பெரிய வேப்பமரத்தின் இலைகளுக்கூடாக வீசியது சுகமாக இருந்தது. விறாந்தையில் படுத்தால்தான் அந்தக் காற்றின் சுகத்தை அனுபவிக்க முடியுமென்பது ஐயருக்குத் தெரியும்.
எங்கேயோ நாலைந்து துவக்குச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. மிகத் தூரத்தில் ஷெல் அடிக்கும் சத்தங்களும் இடைக்கிடை கேட்டன.
இப்போதெல்லாம் இந்தச் சத்தங்கள் சர்வ சாதாரணம் இவற்றைப் பொருட் படுத்தாமல் ஐயர் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். ஐயருக்கு இன்னமும் நித்திரை வரவில்லை. அன்று பினனேரம் மூர்த்தி மாஸ்ரர் வீட்டுக்கு அவர் போயிருந்த சமயம் இளங்கோவும், அவன் மனைவி வடிவழகியும் அங்கே வந்திருந்தார்கள்.
அங்கே கதைத்த பல வித விஷயங்களையும் ஐயர் மீட்டெடுத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவற்றுக்கிடையில் ‘ஆமி’ க்காரர் சில நாட்களாகச் செய்து வரும் அட்டூழியங்களும் ஐயரின் சிந்தனையில் வந்து போயின. “பிள்ளையாரே, இதுகளுக்கெல்லாம் நீதான் ஒரு முடிவு செய்ய வேணும்’ என்று நினைத்துக் கொண்ட ஐயரின் கண்களை மயக்கிக் கொண்டு, நித்திரை வந்தது.
ஐயர் சற்றே கண்ணயரவும், ‘தடதட’ என்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. திடுக்கிட்டவராய் ஐயர் எழுந்து படுக்கையிலேயே உட்கார்ந்தார். நெஞ்சு படபடத்தது.
நல்ல இருட்டு பக்கத்திலிருந்த ‘ரோச் லயிற்றை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார் ஆனால் அதை அடிக்கவில்லை. நெஞ்சின
படபடப்பு சறறே அமைதியானதும், ‘ஆரது?’ என்று குரல் கொடுத்தார் ஐயர்.
இருட்டினூடாக இரண்டு உருவங்கள் சமீபத்தில் நிழலாடின. ஐயருக்கு நெஞ்சில் பயம் நிறைந்து விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு ‘ஆரது?” என்று மீண்டும் கேட்டுக் கொண்டே லயிற்றை அடித்தார்.
இரண்டு உருவங்கள் பக்கத்தில் வந்து நின்றன. நீளக் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தார்கள். “ஐயா லயிற் அடிக்க வேண்டாம். அது நாங்கள்தான். பயப்பட வேண்டாம்” என்றான் ஒரு இளைஞன்.
ஐயர் உடனே லயிற்றை நிறுத்தி விட்டு, “ஆர் தம்பியவை? தெரியேல்லை என்றார்.
“ஐயா நாங்கள் இயக்கம். என்னை உங்களுக்கும் தெரியும். நான் முத்தையா செல்லையாவின்ரை மகன். இவன் சுந்தரம்.இவனும் இயக்கந்தான் …. ஐயா. ஆமிக்காரர் எங்களைத் துரத்திக் கொண்டு வாறாங்கள். நாங்கள் வளவுகளுக் குள்ளாலை இறங்கி ஓடி வாறம்… இங்கையும் இக்கணம் வந்து விடுவார்கள். கோயிலைத் திறந்து விட்டால் நாங்கள் உள் வீதியிலே வாகன சாலைக்குள்ளை போய் ஒளிஞ்சு கொள்ளலாம்…”
Part 2
ஐயர் ஒரு கணம் ஒன்றும் பேசாமல் இருந்தார். பிறகு, தலைமாட்டிலிருந்த திறப்புக் கோர்வையைக் கையிலெடுத்துக் கொண்டு வாருங்கோ என்று சொல்லிக் கொண்டே கோயில் வாயிலை நோக்கி நடந்தார். முன் கதவைத் திறந்து கொண்டு மூவரும் உள்ளே போனார்கள். முத்தையாவும் சுந்தரமும் தெற்கு வீதியிலிருந்து வாகன சாலையை நோக்கி நடக்க…… “இஞ்சை வாருங்கோ தம்பியவை! அவங்கள் வந்து தேடினா உது வழியை நீங்கள் அகப்பட்டு போவியள்.
இஞ்சைவாருங்கோ”என்று சொல்லியபடி ஐயர் கோயிலுக்குள் நடந்தார். இளைஞர்களும் திரும்பி ஐயரின் பின்னால் போனார்கள்.
ஐயர் மூலத்தானக் கதவைக் திறந்து, ” தம்பியவை, நீங்கள் இதுக்குள்ளே போயிருங்கோ. தற்செயலாய் வாசல் கதவு திறக்கிற சத்தம் கேட்டால் சாமிக்குப் பக்கத்திலை போய் இரண்டு பக்கத்திலையும் மறைவாய் நிண்டு கொள்ளுங்கோ… பிள்ளையார் இருக்கிறார். பயமில்லை” என்றார்.
முத்தையா’ உள்ளே போகக் காலை எடுத்துவைத்தான். சுந்தரம் அவன் கையைப் பிடித்து நிறுத்தி, அவன் காதுக்குள் ஏதோ குசுகுசுத் தான். முத்தையா ‘சீ வாடா’ என்று இழுத்துக் கொண்டு உள்ளே போனான்.
“சரியான இருட்டு. இந்தா தம்பி, இந்த லயிற்றையும் வைச்சுக் கொள்ளுங்கோ.இருட்டிலை எதையும் தட்டிக்கிட்டிச் சத்தம் போட வேண்டாம்… நான் வாறன் ” என்று கூறிய ஐயர் கதவைச் சாத்திப் பூட்டிக் கொண்டு வெளியே வந்து முன்பு படுத்திருந்த விறாந்தைக்குப் போய் திரும்பவும் படுத்துக்கொண்டார். நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது இனி நித்திரை வராது. நித்திரையாய்க் கிடப்பது போலக் கிடக்க முயற்சித்தார் ஐயர்.
கோயிலுக்குள் பூட்டப்பட்ட முத்தையாவுக்கும் சுந்தரத்துக்கும் “முதலில் ஒன்றுமே தெரியவில்லை. ரோச் லயிற்றை ஒரு தரம் அடித்து இடத்தை நிதானித்துக் கொண்டார்கள். சுந்தரம் மெதுவான குரலில் சொன்னான்: ‘ ‘ எனக்கென்னவோ யோசினையாய்க் கிடக்கு “
“எதுக்கு? “
” கொஞ்ச நாளைக்கு முந்தி இந்த ஐயரோட வாக்குவாதப் பட்டனாங்களெல்லே?..
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அப்போது அந்தப் பிள்ளையார் கோயிலில் திருவிழாக் காலம்.
ஐயர் திருவிழாவுக்கு ஒவ்வொரு நாளும் பிரசங்கம் நடக்கப்போகுது போலை…..” என்றான் முத்தையா
“ஓமோம். இராமாயணக்கதை. தொடர்ச்சியாகப் பேசப் போறார் சிவகுமாரன். நல்லாய்ப் பேசுவார்” என்றார் ஐயர். ஆர் பேசினா
ராமாயணக்கதைதானே?” மனிசன் எப்படி வாழ வேண்டுமென்பதை கம்பர் வடிவாய்ச் சொல்லியிருக்கிறாரெல்லோ?”
“நல்ல கதை. இல்லையெண்டு நான் சொல்ல வரவில்லை ஐயா. ஆனால் அது வடஇந்தியாவிலிருந்து வந்த ஆரியன், இலங்கையிலிருந்த திராவிட அரசன் இராவணனை அழித்ததைப் பற்றி சொல்கிற கதையெல்லோ?”
ஐயா சிரித்தார். பிறகு நான் பிராமணன் எண்டதால் ஆரியன் வெண்ட கதையை …. என்று சொல்லத் தொடங்க, முத்தையா குறுக்கிட்டான்.
“இல்லை ஐயா? உங்களை நான் இதுக்குள்ளே இழுக்கேல்ல … எங்கடை ஊரிலே இருக்கிற பிராமணரெல்லாம் ஆயிரக்கணக்கான வரியமாய் திராவிடராய்த்தான் இருக்கினம். அதிலையும் நீங்கள் ……”
Part 3
மீண்டும் முத்தையா ஏதோ சொல்ல முனைய,சுந்தரம் இடைமறித்து ” முத்தையா, உந்தக் கதையெல்லாம் இப்ப கோயிலடியிலை என்னத்துக்கு?…… உதுகளை வேறை எங்கையாலும் மேடையளிலே பேசலாம்.வாடா!” என்று முத்தையாவை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
வெளியே வந்ததும் “என்னடா ஐயரோட போய் உந்தக் கதையெல்லாம் கதைக்கிறாய்? அவர் ஏதும் பிழையாய் நினைக்கப் போறார்” என்றான் சுந்தரம்.
“போடா, உனக்கு ஐயரைப் பற்றி ஒண்டும் தெரியாது. அவர் ஒண்டும் பிழையாய் நினைக்க மாட்டார்” என்றான் முத்தையா.
பூட்டப்பட்ட மூலத்தான அறைக்குள்ளிருந்த முத்தையாவுக்கு ஐயரோடு அன்று ஏற்பட்ட வாக்கு வாதம் நினைவுக்கு வர”சுந்தரம், நீ சும்மா தேவையில்லாமல் யோசிக்காதை. இதுகளொண்டையும் ஐயர் பெரிசா எடுக்க மாட்டார்” என்றான்
“நீ என்ன சொன்னாலும் ஐயருக்கு அடிமனசுக்குள்ளை எங்களோடை கறள் இருக்கும். அது மட்டுமில்லை. என்னையும் அவருக்கு இன்னா ரெண்டு தெரிஞ்சிருக்கு மெண்டு நினைக்கிறன். கோயிலுக்குள்ளை நுழையக் கூடாத சாதியில் பிறந்தவன், இப்ப மூலத்தானத் துக்குள்ளை போய் நிக்கிறானே, எண்ட காய்வும் இருக்கும். இதுதான் சமய மெண்டு ஐயர் காட்டிக் குடுத்தா.
“சீ விசரா, உனக்கு எப்பவும் தாழ்வு மனப்பான்மை …… விசர்க்கதை கதைக்காதை. ஐயர் அப்படியான ஆளில்லை யெண்டு உனக்கு எத்தினை தரம் சொல்கிறது.?”
“அது மட்டுமில்லையடா, அவங்கள் வந்து ஐயருக்கு இரண்டு தட்டுத் தட்டினா. ஐயர் அவிட்டு விட்டுவிடுவார்…… நாங்களும் பூட்டின அறைக் குள்ளே ஆப்பிட்டுக் கொண்டம் .”
“சுந்தரம் நான் கரண்டி. சும்மா யோசிக் காதை. ஐயராலை ஒரு ஆபத்தும் வராது. ஐயரை அவங்கள் அடிச்சுக் கொண்டாலும் ஐயர் எங்களைக் காட்டிக் குடுக்க மாட்டார்…… எனக்கு ஐயரை நல்லாய்த் தெரியும் ” என்றான் முத்தையா.
தமது பாயில் நீட்டி நிமிர்ந்து நித்திரையாய்க் கிடந்த கணபதி ஐயர் எதையோ நினைத்தவராய் திடுக்கிட்டு எழுந்தார். கோயில் வாசலை நோக்கிப் போய் எதையோ காலால் தடவிப் பார்த்தார். பிறகு மோட்டுப் பொடியள் ‘ என்று மனதுக் குள் சொல்லிக் கொண்டு அங்கே கிடந்த இரண்டு சோடிச் சப்பாத்துக்களையும் எடுத்துக் கொண்டு போய்த் தேருக்கும், தேர் முட்டிக்குமிடையில் மறைவாய்ப் போட்டு விட்டு வந்தார். மீண்டும் ஐயர் படுக்கையில் படுத்துக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் தூரத்தே வாகனம் வரும் சத்தம் கேட்டது. ஐயருக்கு உடம்பு லேசாகப் பதறத் தொடங்கியது. பிள்ளையாரே’ என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டார். ஏதோ வாறது வரட்டும்’ என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டார்.
Part 4 – Final
வாகனத்தின் இரைச்சல் கிட்டக்கேட்டது.சிறிது நேரத்துக்கெல்லாம் வாகனத்தின் பிரகாசமான வெளிச்சம் பிள்ளையார் கோயிலின் முன் பக்கத்தில் விழுந்தது. வாகனததை நிறுத்திவிட்டு நாலைந்து பேர் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருவன் துப்பாக்கியை உயர்த்தி கோயிலை நோக்கிக் குறி வைத்தபடி வந்தான். வாகன வெளிச்சத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஐயர் அவர்கள் கிட்ட வருவதைக் கண்டதும், கண்களை மூடிக்கொண்டு ‘நித்திரை’யாய்க்கிடந்தார்
ஐயர் நித்திரை.’ ஓய் …
ஐயர் நல்ல நித்திரை.
ஒருவன் துப்பாக்கி முனையினால் ஐயரின் தோளில் லேசாகத் தட்டி “ஒய் ஓய், எழும்பு ஓய் என்று மீண்டும் எழுப்பினான்.
ஐயர் ‘நல்ல நித்திரை’ யிலிருந்து எழும்பி மிரள, மிரள விழித்தார்.
இந்தப்பக்கம் இரண்டு பேர் வந்தாங்களே, அவங்கள் எங்கே ஓய்’?
ஐயர் அப்பாவித்தனமான முகபாவத்தோடு ‘நான் ஒருத்தரையும் பாக்கெல்லை. நித்திரையாய்க் கிடந்தன்” என்றார்.
ஒருவன் ரோச் லயிற்றை அடித்துக் கோயிலின் அந்தப் பக்கத்தையும இந்தப்பக்கத்தையும் பார்த்தான் கோயிலின் முன் வாசற் கதவு பூட்டி பெரிய ஆமைப்பூட்டும் போடப் பட்டிருந்தது.
வீட்டுக்குள்ளே ஆர் இருக்கிறது? ”
“என்ரை மனைவி மட்டுந்தான்.
“நாங்கள் வீட்டுக்குள்ளை பார்க்க வேணும். எழும்பும் ஓய்!”
ஐயர் எழும்பி வீட்டுக் கதவைத் திறந்தார். வெளியில் சத்தம் கேட்டு சற்று முன்னர் எழுந்திருந்த ஐயரின் மனைவி லாம்பை ஏற்றிக் கொண்டு
கதவுக்குப் பின்னால் நின்றார் மனைவியிடம் லாம்பை வாங்கிக்கொண்டு ஐயர் முன்னே போக, ஒரு இராணுவத்தானும் பின்னே போனான். அறையைக் திறக்கச் சொல்லி லயிற்றை அடித்துப்பார்த்தான். குசினிக்குள்ளும் போனான். அவனுடைய சப்பாத்துக் கால் படாத இடமே வீட்டில் இல்லை.
அடுத்தநாள் வீடு முழுக்கக் கழுவித் துடைக்க வேண்டுமே’ என்று நினைத்து ஐயரின் மனைவி கவலைப்பட்டார்.
சோதனையை முடித்துக் கொண்டு இராணுவத்தானும் ஐயரும் வெளியே வந்தனர்.
தாங்கள் தேடும் ஆட்கள் அங்கே இல்லையென்பதில் இராணுவத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ” சரி, சரி நீ போய் படும் ஓய்!” என்று ஐயருக்குச் சொல்லிவிட்டு இராணுவத்தினர் தமது வாகனத்தை நோக்கிச் சென்றனர். சிறிது நேரத்துக் கெல்லாம் வாகனம் இரையும் சத்தம் கேட்டது. கோயிலை நோக்கியிருந்த லயிற் வெளிச்சம் மறுபுறம் திரும்பிற்று. வாகனம் வடக்குப் பக்கமாக வேகமாக சென்று மறைந்தது.
ஐயர் ஒரு சில நிமிடங்கள் படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.
வாகனத்தின் சத்தம் முற்றாக மறைந்து விட்டது.
ஒரு வேளை வாகனத்தை அனுப்பி விட்டு யாராவது ஒருவன் இங்கே நிற்கிறானா? என்று ஒரு சந்தேகம் ஐயர் மனதில் எழுந்தது.மேலும் சில நிமிடம் படுக்கையில் உட்கார்ந்து இருந்து வாகனம் நின்ற இடத்தை இருட்டில் கண்களால் துளாவினார்.
ஒன்றும் தெரியவில்லை சே அப்படி நிற்கமாட்டாங்கள். அவங்களுக்கும் பயம் இருக்கும்’ என்று தெளிந்தவராய் கோயிலின் திறப்புக்களை எடுத்துக் கொண்டு போய் வெளிக் கதவைத் திறந்தார்.
உள்ளே போய் மூலத்தானக் கதவையும் திறந்து “தம்பியவை ” என்று கூப்பிட்டார்.
ஒரு சத்தமும் இல்லை.
அவங்கள் போய் விட்டாங்கள், இனி நீங்கள் வாருங்கோ.’ என்றார் ஐயர்.
முதலில் ரோச் லயிற் வெளிச்சம் வந்தது. தமது கண்களைக் கையினால் மறைத்துக் கொண்டே “சரி சரி வாருங்கோ” என்றார்.
முத்தையாவும் சுந்தரமும் ஐயருக்குக் கிட்ட வந்தார்கள்
“பிள்ளையார் இண்டைக்கு உங்களைக் காப்பாத்திப் போட்டார்” என்றார் ஐயர்.
“ஐயா! நீங்கதான் எங்களைக் காப்பாத்தினீங்கள்” என்று சொல்லிக் கொண்டே இருவரும் ஐயரை வணங்கினார்கள். சீ இதென்ன இது! வாருங்கோ போவம்” என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு ஐயர் வெளியில் வந்தார்.
நடந்த நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்லி விட்டு “உங்கடை சப்பாத்துக்களை கோயில் வாசலில் கழட்டி விட்டுப் போயிட்டியள். அவங்கடை கண்ணிலை பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?… நல்ல வேளை நான் கண்டெடுத்துக் கொண்டுபோய் தேர் முட்டிக்குப் பக்கத்திலை போட்டிருக்கிறன். போய் எடுத்துக் கொண்டு வாருங்கோ’, என்று ஐயர் சொல்லவும், இருவரும் திடுக்கிட்டவர்களாய் ‘அய்யய்யோ… நல்ல வேளை ஐயா. அவசரத்திலை எங்களுக்குப் புத்தி கெட்டுப் போச்சு” என்றார்கள். பிறகு இரண்டு பேரும் ரோச் லயிற் வெளிச்சத்தில் போய் சப்பாத்துக்களை எடுத்து வந்தார்கள்.
நல்லாய் களைச்சுப் போனியள் இளனி கிடக்கு. ஆளுக்கொரு இளனி குடிச்சிட்டுப் போகலாம். வாருங்கோ” என்ற ஐயர் அவர்களை விறாந்தையில் இருத்திவிட்டு வீட்டுக்குள் போய் இரண்டு நல்ல செவ்விளநீர்க் குரும்பைகளையும் கத்தியையும் எடுத்து வந்தார்.
இளநீரைக் குடித்துக் கொண்டே முத்தையா சொன்னான் ; ஐயா இவன் இஞ்சை வர முதலிலை பயப்பிட்டவன். எனக்கு ஐயா கைவிட
மாட்டாரென்ற நம்பிக்கை இருந்தது. என்ரை நம்பிக்கையைக் காப்பாத்திப் போட்டியள், ஐயா. உங்களுக்கு எப்படி நன்றி சொல்கிறதென்றே தெரியேல்லை என்றான் சுந்தரம்.
“ஐயா என்னை மன்னிக்கவேணும். உண்மையா நான் உங்களைப் பிழையாய் விளங்கிப் போட்டன். இருந்தாலும் என்னை நீங்கள் சரியாத் தெரிஞ்சிருந்தால்… நான் ஆர், என்ன சாதி எண்டு தெரிஞ்சிருந்தா”
“தெரிஞ்சிருந்தா என்ன தம்பி… எனக்கு உம்மைத் தெரியும். நீர் ஆரெண்டும் தெரியும், சின்னவியின்ரை பேரனெல்லே நீர்?”
”அய்யய்யா., – நல்லாத் தெரிஞ்சுமா . மூலத்தானத்துக்குள் என்னை போக விட்டனீங்கள்?”
“ஓமோம்.எல்லா ஆசாரத்துக்கும் மேலானது மனித நேயம்.நானும் கடவுளின்ரை பிள்ளை, நீரும் கடவுளின்ரை பிள்ளை. ஆபத்து வேளையில் ஆசாரத்தை விட மனித நேயம்தான் முக்கியம். பிள்ளையாரும் இதுக்கு மாறாயிருக்க மாட்டார். என்ன முத்தையா?” என்று ஐயர் முத்தையாவின் பக்கம் பார்த்தார்.
– வரதர்
– வெளிச்சம் 1995.
– தொகுப்ப: தமிழரசன்அப்துல்காதர்