
ஊர் நோக்கி – கந்தரோடையை
எமது ஊரான கந்தரோடையைப் பற்றி எழுதும் போது இங்கு காணப்படும் பௌத்த மதம் சார்ந்த சின்னங்கள் பற்றிக் குறிப்பிடாவிட்டால் அது முழுமை பெற்றதாக அமையாது போய்விடும்.
கந்தரோடையில் கயக்கேணி என்று அழைக்கப்படும் இடத்தில் கணிசமான அளவில் சிறியதும் பெரியதுமான பௌத்த துாபிகள் காணப்படுகின்றன. இங்கு முற்காலத்தில் பெளத்தம் பரவியிருந்தமைக்குச் சான்றாக அவற்றை வர லாற்றாசிரியர் சிலர் எடுத்துக்காட்டுகின்றனர்.
கி.பி.14 ஆம் நூற்றாண்டளவில் இயற்றப்பட்ட நம்பொத்த என்ற பெளத்த பாளி நூலில் பௌத்தரின் மத வழிபாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் ஒன்றாகக் ‘கதுறு கொட’வும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இராசநாயகம் 2003 : 233,234) ஆயினும் இங்கு பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் சிங்களவரா அல்லது தமிழரா என்பதில் வரலாற்றாசிரியர்கள் முரண்பட்டு நிற்கின்றனர்.
“கந்தரோடையில் பெளத்த சமய சின்னங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் அடங்கிய படைகளுக்கு மேலாக உள்ளன” என்று கூறும் சி. பத்மநாதன் அவர்கள் தொடர்ந்து, “கந்தரோடையிலுள்ள பௌத்த சின்னங்கள் தனியான பண்புகளைக் கொண்டவை: அவை அனுராதபுரம், மிகுந்தலை, மாகமை முதலான இடங்களில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டவை. அங்கு சிறிய அளவிலான தூபிகள் பல நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அவை உயிர் நீத்த சங்கத்தாரின் (பௌத்த துறவிகள்) பள்ளிப்படைகளாக அமைக்கப்பட்டவை. இவை போன்ற அண்டவடிவமான கட்டுமானங்கள் ஆந்திர தேசத்து அமராவதி, நாகார்ஜூன்கொண்ட போன்ற இடங்களிற் காணப்படுகின்றன. அங்குள்ளவை உயிர் நீத்த சங்கத்தாரின் சடலங்களைப் புதைத்த குழிகள் மேல் அமைந்தவை” என்றுங் குறிப்பிட்டுள்ளார். (2011 : 55)
“இச்சின்னங்கள் ஒரு வகையில் ஒருவித ஈமைச் சின்னங்களேயாகும். இத்து பிகளில் இறந்த பௌத்த பிக்குமாரின் சாம்பல் முருகைக்கற்களிலமைந்த பேழைகளில் அடக்கஞ் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது” என்று சி.க.சிற்றம்பலம் எடுத்துக்கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது ( 1993 : 15)
கந்தரோடையில் பௌத்த விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்குரிய அமைப்புகள் காணப்படவில்லை என்பது பல வரலாற்றாய்வாளர்களின் கருத்தாகவுள்ளது. ஆயினும், கயக்கேணியில் நடைபெற்ற ஆய்வின்போது புத்தர் சிலைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. அது தொடர்பாகச் சிலர் பின்வருமாறு கூறுகின்றனர்.

முற்காலத்தில் இந்தியாவிற்கும் தென்னிலங்கை அரசாங்கத்துக்கும் (அனுராதபுர அரசு) இடையிலான போக்கு வரத்து பெருமளவில் ஜம்புகோளத்துறை (மாதகல்) ஊடாகவே நடைபெற்றது. ஜம்பு கோளத்திலிருந்து அனுராதபுரத்திற்குச் செல்லும் மார்க்கத்தில் கந்தரோடை ஒரு முக்கியகேந்திர நிலையமாக விளங்கியது. (யா.வை.வி. 27) கந்தரோடையில் யாத்திரீகர்கள் தங்குவதற்கான மடம் (யாத்திரீகர் விடுதி) அமைந்திருந்தது. அவ்விடம் தற்போதும் மடத்தடி என்று அழைக்கப்படுகிறது. கயவாகு மன்னனும் சேரநாட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் ஜம்புகோளத்துறையில் இறங்கி கந்தரோடையில் தங்கியிருந்தபோதே அங்கணம் மைக்கடவையில் கண்ணகிக்குக் கோவில் அமைத்திருக்கிறான்.
எனவே, அனுராதபுரம் செல்லும் நோக்குடனோ அல்லது பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்குடனோ இந்தியாவிலிருந்து அறுபது பௌத்த சன்னியாசிகள் ஜம்புகோளத்துறைமுகத்திலிறங்கி கந்தரோடைக்கு வந்து தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்கள் தம்முடன் சில புத்தர் சிலைகளையும் எடுத்து வந்திருக்கலாம். அங்ஙனம் அவர்கள் கந்தரோடையில் தங்கியிருந்தபோது வேலணைக்கு மதபோதனையின் பொருட்டோ அல்லது வேறு காரணத்திற்காகவோ சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் உண்ட உணவு நஞ்சான காரணத்தினால் அவர்கள் அனைவரும் உயிர் துறக்க நேர்ந்தது. அவர்கள் மீது மதிப்பு வைத்திருந்த கந்தரோடை மக்கள் அவர்களின் உடல்களை எடுத்து வந்து கந்தரோடையில் தகனம் செய்து துாபிகளை எழுப்பியிருக்க வேண்டும்.
ஏற்கெனவே கூறியது போல கந்தரோடையில் ஆந்திர மொழி பேசுபவர்கள் (வடுகர்) ஒட்டங்கட்டுப் போன்ற இடங்களில் தொழில் நிமித்தம் குடியேறியிருந்ததால் அவர்களே (அவர்களும் பௌத்தராக இருந்திருக்கலாம்) இங்கு காணப்படும் தூபிகளை அமைத்திருக்க வேண்டும். அதனாற்றான் ஆந்திர தேசத்துக் கட்டுமானத்தை ஒத்ததாக இத்துாபிகள் அமைந்துள்ளன.“ஆனால் இங்கு எல்லாமாக இருபத்திரண்டு துாபிகள் இனங்காணப்பட்டுள்ளன என்று கூறும் சி.க. சிற்றம்பலம் அவர்கள் அவை வெவ்வேறு காலத்திற்குரியன என்றும் கூறியுள்ளமை மேற்படி கதையின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. (1993 : 15, 582)
இன்னொரு விடயத்தையும் இங்கு கருதல் பொருத்தமுடையது. பொதுவாக ஒரு பிரதேசத்தை வேற்று மதத்தினர் அல்லது வேற்று மொழியினர் ஆக்கிரமித்து, அதிகாரம் செலுத்தும்போது அவ்விடங்களில் தமது மதம் சம்பந்தமான ஆலயங்கள், நினைவுச்சின்னங்களை அமைப்பதும் சகஜம். அனுராதபுரம், பொலனறுவை போன்ற இடங்களில் சைவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளமை போன்று கந்தரோடையிலும் தென்னிலங்கை அரசரின் அதிகாரம் மேலோங்கியிருந்த காலத்தில் பௌத்த மதச்சின்னங்கள் இங்கு அமைக்கப்பட்டிருத்தல் சாத்தியமே. கந்தரோடையில் வடபிராமியுடன் தமிழ்ப்பிராமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பண்டைக்காலத்தில் தமிழருக்கும், பௌத்த மதத்திற்கும் இடையேயுள்ள தொடர்புக்குச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது’ என்ற புஷ்பரட்ணம் அவர்களின் கருத்தும் கவனிக்கற்பாலது( 29) அதற்காக இங்கு பெளத்தம் வேரூன்றியிருந்தது என்று கொள்வதும் பொருத்தமாக இராது. வரலாற்று ஆய்வாளர்கள் நடுநிலையில் நின்று கந்தரோடையிலும் அதன் சுற்றுப்புறங்களான அங்கணம்மைக்கடவை, கதிரமலை(சுன்னாகம்)போன்ற இடங்களிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, முடிவுகளை வெளிப்படுத்தும் போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதுவரை பொறுத்திருப்போம்.
சே. சிவசண்முகராஜா M.D.(S) – ‘காலத்தை வென்று நிற்கும் கந்தரோடை’ எனும் நூலிலிருந்து.