
கரும்புலி,
சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்
கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம்
வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம்
உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்
அடிமுடியை அறியமுடியாத அற்புதம்
தென்றலும், புயலும் சேர்ந்த கலவை
இவர்களை எழுதத் தொடங்கினால்…
எந்தமொழியும் தோற்றுப் போகும்
வார்த்தைகள் வறுமை அடையும்
உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும்
வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்
கற்பனைக் கவிஞர்கள் கவிதை எழுதினால்
அற்புதம் என்பார்கள்
அடுத்த வார்த்தை வராது
சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்
பக்கத்திருந்து பழகியவர்கள்கூட குறிப்புகள் மட்டும்தான் கூறமுடியும் ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது
சமுத்திரநீரை அகப்பையால் அள்ளி அடக்கமுடியுமா?
ஓடும் முகிலை ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா?
எதிரியின் எந்த வலுவும் இறுதியில் இவர்களிடம் சரணடையும்
கடைசிநொடிவரை சிரித்தபடி திரிவர் – வேறுபட்டது
உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள்
மறுநாள் வெடித்த செய்தி வெளிவரும்போது
ஜாதகமும் சோதிடமும் தங்களுக்குத் தாங்களே தீ மூட்டிக் கொள்ளும்
காலால் நடந்து,
வாயால் மொழிந்து,
கையால் தலைவாரிக் கொண்டு, எல்லோரையும் போலவேதான் இவர்களும்
உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்
கிட்டநெருங்க முடியாத இலக்குகளைக்கூட
தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர்
முதுகில் வேர்க்குரு போட்டாலே….
சாவைத் தம் தோள்களில் சுமந்து நொடிகளை
கணக்கிட்டு நகரும் நூதனங்கள்
காற்றிலும், நீரிலும் இவர்கள் கலக்கும்போது
காற்றுக்கு வேர்க்கும்
நீர் நெருப்பாகிவிடும்
இவர்களுக்கு,
சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான்
பசிபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
கரும்புலிகள்; தலைவன் தலைவாரிவிடும் புயல்கள்
தாயை நேசிக்கும் அளவுக்கு தலைவனையும் நேசிப்பவர்கள்
தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள்
ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம்
இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை
கருமைக்கும் பெருமைவந்த நாள்
புலியொன்று முதல் கரும்புலியான தினம்
ஜூலை 05.1987
நெல்லியடியில் “மில்லர்” புதிய வரலாற்றைத் தொடக்கிய நாள்
“எல்லாம் சரி வடமராட்சி எமது கட்டுப்பாட்டில்”
கொழும்புக்குச் செய்தி அனுப்பியவரின் வாய் மூடமுன்னர் செவிப்பறைகள் கிழிந்தன
சாவு நேரே ஓடிவந்து முகத்தில்
சந்திக்குமென்று எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்
“உயிராயுதம்” வலுவானது.
கரும்புலிகள்,
– உலைக்களம்
புதுவை இரத்தினதுரை