
இலண்டன் தீர்மானம்
தமிழீழநாட்டின் விடுதலைப் போராளிகளினதும், தமிழீழ விடுதலை விரும்பிகளினதும் இதயங்களைக் குளிர வைத்திடும் வரலாற்றுப் பெருமைமிக்க தீர்மானமொன்றை லண்டனில் இயங்கும் தமிழீழ தேச பக்தர்கள் தீர்க்கமான ஆலோசனையின் பின்னர் நிறைவேற்றி, அதை அகில உலகமும் அறியப் பிரகடனப்படுத்தியுள்ளனர். அவர்கள் எடுத்துள்ள முடிவு நமது காதிலே தேன்பாய்ச்சுகிறது; நாடி நரம்புகளிலே முறுக்கேற்றுகிறது; புதிய தன்னம்பிக்கையை தமிழினத்துக்குக் கொடுக்கிறது. வீழ்ச்சியுற்ற நாட்டில் எழுச்சியை ஏற்படுத்துகிறது; விசையொடிந்த தேகத்தில் புதிய வேகத்தைத் தோற்றுவிக்கிறது.
ஆம். 1619ஆம் ஆண்டு படையெடுத்து வந்த அந்நியனிடம் யுத்தமுனையில் பறிகொடுத்ததும்-மீண்டும் 1972 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீளப்பெற்றதுமான இறைமை உயிர் பெறப்போகிறது.
உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவையும், உதவிகளையும் திரட்டிவரும் வெளிநாட்டு ஈழ விடுதலை இயக் கங்களின் ஒருங்கிணைப்பாக லண்டனில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழீழ சுதந்திரப் பிரகடனத்துக்கு நாள் குறித்துவிட்டது.
உலகின் முதலாவது சுதந்திரத் தமிழ் நாடாக மலரப் போகும் புதிய தமிழீழ அரசு உருவாகும் நாள் பகிரங்கப் படுத்தப்பட்டுவிட்டது.
ஆம், 1982ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று சுதந்திரத் தமிழீழத்தின் புதிய அரசு உருவாகும் என்று லண்டன் தமிழர் இணைப்புக்குழு, பொறுப்போடு தீர்மானித்து, உலகநாடுகளுக்கு முன்னறிவித்தல் கொடுத்துள்ளது.
உலகின் ஆறுகோடித் தமிழர்களின் உள்ளங்களையும் இத் தீர்மானம் ஆர்த்தெழ வைத்திடும் என்பதில் ஐயமில்லை.
தமிழீழ சிறீலங்கா அரசின் அபிவிருத்திச் சபைகள் மக்களை மேலும் மேலும் அடிமைச் சங்கிலிக்குள் பிணைக்கும் ஆபத்து நிறைந்தது என்றும் அத்தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை, சர்வஜன வாக் கெடுப்பாகத் தமிழீழ மக்கள் பயன்படுத்தி, சுதந்திர இறைமையுள்ள மதசார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசை நிறுவுவதற்கு எடுத்த உறுதியான முடிவு, 1982 பொங்கல் திருநாளன்று செயல் வடிவம் பெறவிருக்கிறது. தமிழீழத் தேசீயமன்றம் தோன்றவிருக்கிறது.
விடுதலையென்பது தந்தை செல்வா கூறியதுபோல வில்லங்கமானதுதான் என்றாலும் இதைவிட வேறு வழியில்லை. இரத்தம்,வியர்வை, கண்ணீர், பசி,துன்பம்,வறுமை,சாக்காடு ஆகிய இவற்றினூடாகத்தான் சுதந்திரத் தாயின் கோவிலுக்கு நாம் செல்லமுடியும். தற்காலிக சுகங்களில் தமது கவனத்தைத் திருப்புவது, அடிப்படை இலட்சியத்தைப் பின் தள்ளிவிடும்.
லண்டன் தீர்மானம், மிகவும் காத்திரமானது; பொறுப் புணர்வுடன் கூடியது; மிகவும் புனிதமானது. தமிழ்ஈழ மக்க ளிட்ட ஆணைக்கு அமைவானது; 400 ஆண்டுகால அடிமை வாழ்வுக்கு முடிவு கட்டும் தெய்வீகத் தீர்மானம் அது!
இத்தீர்மானம் நடைமுறைக்கு வர இன்னும் 15 திங்களே எஞ்சி உள்ளன; இதற்கிடையில் செய்ய வேண்டிய பணிகளோ ஏராளம் உள்ளன. தமிழீழத்திலும் வெளிநாடுகளிலுமுள்ள
விடுதலை இயக்கங்கள் விடுதலை நாளை நோக்கி வேகமுடனும் விரைவாகவும் இன்றிலிருந்து செயற்பட வேண்டும்.
“ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பே நம்பிக்கையோடு புரட்சிக் கீதமிசைத்தான் பாரதி. அவன் எண்ணத்தைச் செய லாக்க இலட்சோபஇலட்சம் தியாகிகள் தம்மை அர்ப்பணித்துப் பாரதத் தாயின் அடிமை விலங்கை ஒடித்தெறிந்தனர். தமிழீழ மக்களும், அதே நம்பிக்கையுடன் தியாகச் சிந்தையுடன், விடுதலை வேள்விக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்வார் களாக.
நன்றி: சுதந்திரன் 21-09-1980
தமிழ்நாடு வரவேற்கிறது
தமிழீழ விடுதலைப் பிரகடனத்தை லண்டன் மாநகரில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிறைவேற்றியவுடன், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்தியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில். மதுரைமாநகரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை விழாவில் திரு. வைகுந்தவாசன் கலந்துகொண்டு பேசினார். அவருக்கு இந்திய நாடாளுமன்றத் துணைச்சபாநாயகர் திரு. ஜி. இலட்சுமணன் பொன்னாடை அணிவித்தார்.
மதுரைத் தீர்மானம்
தமிழ் ஈழ விடுதலை
இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் திரு. கிருட்டிணா வைகுந்தவாசன் அவர்களைப் பாராட்டி, உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க இந்தியக் கிளையின் சார்பில் 12-10-80 ஞாயிறன்று காலை 10 மணி அளவில், மதுரை தல்லாகுளம் இலட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு இந்தியக் கிளைச்செயலாளர் திரு. கவிஞர் மதுரைக் கூத்தன் தலைமை தாங்கினார்.
இந்தியப் பாராளுமன்றத் துணைத் தலைவர் திரு ஜி. இலட்சுமணன், தொழிற்சங்கத் தலைவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் காப்பாளருமான திரு. க.சுப்பு, மதுரை அர்பன் மாவட்ட இந்திரா காங்கிரஸ் தலைவர் ஆ. இரத்தினம் ஆகியோர் முன்னிலையில், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளர் திரு. கு. தமிழ்மன்னன் முன்மொழிய, “அனல்” மு. விவேகானந்தன், சிவகெங்கை அ.க.இராமச்சந் திரன்ஆகியோர் வழிமொழிய பல்லாயிரக்கணக்கான மக்களின் கரவொலிக்கிடையே ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
“தமிழ் மன்னர்களாம் எல்லாளன் முதல் சங்கிலியன் வரை செங்கோலோச்சிய தமிழ்ஈழம் என்னும் திருநாடு கொடுங்கோலர்களாம் அன்னியர்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையினைத் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழராட்சி நிறுவிட, இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 31-8-80 அன்று இலண்டன் மாநகரில் கூடி 1982-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளன்று தமிழ்ஈழ அரசு நிறுவுவதென்றும் விடுதலைப் பிரகடனம் செய்வதென்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இலண்டன் தீர்மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்று இம்மக்கள் மாமன்றம் முடிவெடுக்கிறது.
1982ல் அமையவிருக்கும் தமிழ் ஈழ அரசிற்கு இந்தியப் பேரரசு முதல் முதலில் அங்கீகாரம் வழங்கிட வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை இம்மாமன்றம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்தியக் கிளை
12-10-1980
70, மூர் தெரு, சென்னை-1, தமிழ்நாடு
தலைவர்:
வழக்கறிஞர் அ.மு. சம்பந்தம் B. A., B.L. திருச்சி
துணைத்தலைவர்கள்
வழக்கறிஞர் K. P. பெரியசாமி B. A., B. L., மதுரை.
P. V. சுப்பிரமணியன், B. E., சென்னை
களந்தை வேலன், B. A., பம்பாய்
V. தேவராசன், B. E., டெல்லி
K. K. சாமிநாதன், M. Sc., கல்கத்தா
செயலாளர்:
கவிஞர் மதுரைக் கூத்தன், மதுரை
துணைச் செயலாளர்கள்
‘அனல்’ மு. விவேகானந்தன், மதுரை
நெடுமிடல் B.Sc., தகடூர்
வேங்கட வீரமணி B. E., சென்னை
பாலஜனாதிபதி, B. Sc., B. L., குமரி
புலவர் ம. செ. இராவணன், கோவை
பொருளாளர் :
அ. கு. மதிவாணன், Ex. M. C. மதுரை.
![]()