
நேசிப்பு.
~~~~~~~~~
ஐந்து வயதிலேயே அவன் காணாமல் போவது வழமையாயிருந்தது. அருகில் படுக்கையில் அவனைக் கைகளால் துழாவி காணாமல் திடுக்கிட்டு எழும்பி வெளியே வரும் அம்மா, வாசல் படியில் அவனிருப்பது கண்டு மெல்லப் பின்னடைவாள்.
கால்களில் கைகளையூன்றிக் கைகளில் நாடியைத் தாங்கி அண்ணாந்து பார்த்தவாறு இருக்கும் அவன் விழிகளில் பிரமிப்பு, கற்பனை, ஆசை, ஏக்கம் என அனைத்தின் கலவையாய் ஒன்று வெளிப்படும். மினுமினுக்கும் அவன் பெரிய கண்களைப் பார்த்தவாறே சிறிது நேரம் நின்று விட்டு அம்மா ‘தம்பி! என்று கூப்பிடுவாள். திடுக்கிட்டு மோனம் கலைந்து அவன் எழும் போதும் உணர்ச்சிகளின் கலவைகள் அந்தக் கண்களில் மிஞ்சியிருக்கும்
‘என்னப்பன் வானத்தைப் பார்க்கிறீங்கள்’
‘மேகம் பார்கிறனம்மா’
‘மேகமோ !’ முதலில் அம்மாவிற்கு அது ஆச்சரியமாய்த்தான் இருந்தது.
‘ஓமம்மா … மேகம் கொஞ்ச நேரத்துக்கொருக்கா உருவம் மாறுதம்மா.
முதல்லை மான் போல இருந்தது. பிறகு குதிரை போல இருந்தது. இப்ப முயல் போலை இருக்குதம்மா,
தன்னியல்பாக மனிதர் களைப்போலேயோ…” என்ற எண்ணம் தோன்றிய போதும் அம்மா அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். வானத்தில் மேகங்கள் வழமைபோல சாதாரண வெண்பஞ்சு மேகமாய்.. காற்றோடு போய்க்கொண்டிருந்தன . அம்மா புரிந்தும் புரியாதவளாய் மகனைப்பார்த்தாள். அவன் மின்னும் விழிகளோடு மேகத்தைப் பார்த்தவாறே இருந்தான்.
அம்மாவின் வாழ்க்கை நிஜங்களை மட்டுமே பார்க்க அவனைப்பழக்கியிருந்தது.
கனவுகளும் கற்பனைகளும் அவை தரும் உணர்வுகளும் அவளுக்கு அப்பாற்பட்டவை. புரியாதவை. எனினும் சின்னமகனை நோகடிக்க விரும்பாது ‘சரிவாங்கோ மகன் உன்ளை’ என்றவறே உள்ளே போனாள். அவன் கண்களில் சலனம் ‘நான் சொன்னது விளங்கேல்லையோ, அம்மாவுக்குக் கண் தெரியேல்லையோ’ என்று எண்ணியவாறே அம்மாவின் சட்டையைப் பிடித்தவாறே உள்ளே போனான். இதுவே வழமையாகிப் போனது ;
காணாமல் போவதும் அம்மா தேடுவதும் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் வழமையாகிப் போனது.
அம்மா அவனைக் கூப்பிடாமலேயே திரும்பிப்போய் விடுவாள், அவன் பாதுகாப்பாக இருப்பதொன்றே அவளுக்கும் போதுமானதாயிருந்தது.
மேகங்களிலான அவன் நேசிப்பு, காகங்கள், கோழிகள், குருவிக்கூடுகள், இலைகள் தளைகள்,மழைத்துளிகள் என்று கூடிக்கொண்டே போனது.
மழை அடித்தூற்றும் ஒரு நாளில் கடதாசிப்படகு விட்டுக் கொண்டிருப்பான். முட்டி மோதித் தடுமாறிப் படகு நகரும் போதே அவன் கண்களும் அலைபாயத்தொடங்கும். பிரமிப்பு… கற்பனை… ஆசை… ஏக்கம்… பெருமூச்சாய் வரும். அம்மா உள்ளிருந்து கத்துவாள்.
‘தம்பி உள்ளை வா தூவாணமடிக்கும் ,,
வாறனம்மா’ என்றகுரல் மட்டும் உள்ளே போகும். கூப்பிட்டுக் கூப்பிட்டு அலுத்து அம்மா அவனைத் தரதரவென உள்ளே இழுத்துப்போவாள். யன்னலூட வெளியே நோக்கியபடி அவனிருப்பான் மழை ஓயும் போது இலைகளிலிருந்து துளிகள் விழும் ஓசையைக் கேட்டவாறே மணிக்கணக்காக இருப்பான். ” எங்கே இவன்’ என எழும்பி வந்து பார்க்கும் அம்மாவிற்கு ஆச்சரியம், பயம் எல்லாம் வரும். இவன் மற்ற பிள்ளையள் போல இல்லையே. மற்றதுகள் செய்யிற குழப்படியும் தாய்மார் படும்பாடும். இவன் ஏன் அப்பிடியில்லை. என்னை விட்டுத் தூரப் போய்க் கொண்டிருக்கிறானோ? அமமா பாவம். அவளுக்குத்தன்னுள்ளே பெருகிக்கிடந்த அன்பைக் காட்டும் வழிதெரியாது. கண்டிப்பு மட்டும் தெரியும். வாழ்க்கை அவளுக்கு அதைத்தான் கற்றுத் தந்திருந்தது.
அவன் அறையின் யன்னலோரம் அவன் மேசை இருந்தது. அவனது உலகத்தின் பாதி அந்த மேசையிலும் அந்த யன்னலிலுமே இருந்தது. அந்த யன்னலினூடு மாமரமும் அம்மாவின் சிறுகோட்டமும் தெரியும். அம்மாவின் தோட்டத்தில் மலரும் பல நிறப்பூக்கள் அவன் நேசிக்ககூடியவை. சாதாரண வேளையிலும் அந்த மாமரம் நேசிப்புக்குரியதாக இருந்தாலும் மாப்பூ பூக்குங்காலத்தில் அதை அவன் மிகவும் நேசித்தான். தேனீக்களும் தேன்சிட்டுக்களும் மாமரத்தை வலம் வருவது அவனுக்கு மிகவும் பிடித்தகாட்சி. அந்தப்பெரிய மாமரத்தில் சிட்டுக்குருவிக்கூடு ஒன்றிருந்தது. தாய்க்குருவி மரத்தைச் சுற்றிப் பறந்து வட்டமடித்து புழுபூச்சிகளோடு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும். அந்தத்தாய்க் குருவியை அவன் அம்மாவாகவே கற்பனை செய்து வைத்திருந்தான்.
வளர வளர அவன் நேசிப்புக் கூடிக்கொண்டே போனது. தனக்கு எட்டாததை நேசித்தான் ; தனக்குப்பிரமிப்பூட்டுவதை நேசித்தான்; மனிதர்களை நேசித்தான்; நூல்களை நேசித்தான். சில நேரங்களில் நூல்களே அவனுக்கு மனிதர்களாயினர். மனதை ஆட்டும் குழப்பங்கள் பயங்களைப் போக்க வழியின்றி அவன் தவித்தபோது நூல்களே அவன் நண்பர்களாயினர்.
விளையாட்டில் அவனுக்கு ஆர்வமிருந்தது. ஆனால் மைதானத்தில் அவன் கால்பட்டதே கிடையாது காரணம் அம்மா ‘தம்பி படி’ என்ற அவளது வேத மந்திரம் அவனை மைதானத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தது விளையாட்டின் மேலான ஏக்கம் விளையாடும் மனிதர்கள் மேல் நேசிப்பானது. மதன் நல்லா பற்மின்ரன் விளையாடுவான். அச்சுதன் உதைபந்து விளையாடுவான். சீலன் கிரிக்கெற் விளையாடுவான். இவர்கள் அவன் நேசிப்புக்குரிய மனிதர்களானார்கள்.
இந்த நேசிப்பும் அம்மாவுக்குப் புரியாமலே போனது. ‘உந்த கிரவுண்டே கதியென்று கிடக்கிற பெடியளின்ரை சிநேகிதம் உனக்கு வேண்டாம். நீ படிக்க வேணும்’ அவர்கள் மேலான அவன் பிரமிப்பு அவர்கள் போல் தன்னை எண்ணும் கற்பனை. ஆசை… அவர்கள் போல் ஆராத ஏக்கம் . இது அம்மாவுக்குப் புரியாத வேதனை என்றாலும் அவன் அதை தாங்கிக் கொண்டான். அவனுக்குத் தெரியும். அம்மாவுக்கு எல்லாம் அவன் தான். அம்மாவின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை, வாழ்க்கை, எல்லாமே அவன்தான். அம்மா மேலான நேசிப்பு ஒவ்வொரு
கணத்திலும் இன்னும் ஆழமாய் வேரோடியது . அந்தி நேரத்திலெல்லாம் முற்றத்தில் நிற்கும் ஒற்றைப்பனை அவன் நேசிப்புக்குள்ளானது.
எந்த வயதில் அவன் கடவுளை நேசிக்கத் தொடங்கினான் என அவனுக்கே தெரியாது. ‘கடவுளே! எனக்குப் படிப்புத்தாரும்.’ எனும் சின்ன வயது வேண்டுதலுக்கு மேலாக ஏதோ ஒரு ஆழமான பிரமிப்புக்கலந்த பக்தி… அல்ல… நேசம் அவனுள் எழுந்தது. கடவுள் அவனுக்கு மழை காற்றைப் போல ஏதோவொரு ரசனைக்குரிய இயற்கையாகத் தோன்றினார். கடவுளிடம் மற்ற மனிதர்கள் நிபந்தனையுடன் வேண்டுவது அவனுக்குச் சிரிப்பாய் இருந்தது. நிபந்தனையுடனான நேசிப்பா எனக்கேளவி பிறந்தது. காற்றுக்கு நிபந்தனை போட முடியுமா? கடலுக்கு நிபந்தனை போடமுடியுமா ? கடவுளும் அதுபோல்தானே என்ற எண்ணம் வந்தது.
தெருவில் போகும் சில புன்னகை தோய்ந்த விந்தை முகங்களை அவனுக்குப் பிடித்திருந்தது. அவை இவன் பக்கம் திரும்பாதா என ஆவலோடு பார்ப்பான். திரும்பினால் புன்னகைப்பான் வியர்த்துக் களைத்த முகம்,கனவும் உறுதியும் நிரம்பிய கண்கள், கனமான காலணி, தோளில் தொங்கும் ஆயுதம். இவர்கள் தோற்றம் அவனுக்குப் பிரமிப்பூட்டுவதாய் நேசிப்புக்குரியதாய்.. தெரிந்தது.
ஒரு நாள் பொழுது விடியும் முன்னரேயே தூரத்தில் சத்தங்கள் கேட்டன. விமானங்களின் இரைச்சலும் கேட்டது. அம்மா விழித்துப் பார்த்தபோது அவளது படுக்கையில் அவனில்லை. அம்மா வெளியே வந்து பார்த்தாள். அவன் வானத்தைப் பார்ததவாறு நின்றிருந்தான். அம்மா பேசாமலே திரும்பிப் போய் குசினிக்குள் நுழைந்து விட்டாள்.
வானம் அவனுள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் எழுப்பியிருந்தது. அவனது
வெண்பஞ்சு முயல்களையும் குதிரைகளையும் அவன் காண முடியாதவாறு கரிய புகைக் குவியல்கள் மறைத்திருந்தன. அவன் கீழிருந்து அலை அலையாய் எழும்பிக் கொண்டிருந்தன. சத்தங்கள் கிட்டக்கிட்ட வந்து கொண்டிருந்தன . அவனது மாமரத்துக் குருவிகள் அலமலந்து அங்குமிங்கும் தவித்தவாறு பறந்தன. குஞ்சுகள் கீச்கீச்சென்று அலறின. சூழல் அமைதியிழந்து தவித்தது.
வாசலில் மணிச்சத்தம்
கேட்டது. அச்சுதன் வந்திருந்தான். “மச்சான் குடும்பமா வவுனியா போவம் என்று அப்பா சொல்லுறார். காலமை வெளிக்கிடுறம். சொல்லீற்றுப் போக வந்தனான் போயிற்று வரட்டேடா’ கலங்கிய கண்களுடன் ‘கவனமாயிரு என்று தோளில் தட்டிப் பிரிந்து செல்லும் பிரியமானவனைப் பார்த்தவாறே நின்றான்.
தெருவில் வாகனங்களும் சைக்கிள்களும் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன. அவனை வியக்கவைக்கும் விந்தை மனிதர்களும் வந்தார்கள். ஆனால்லஎவர் முகத்திலும் புன்னகை இல்லை. இவனைப் பாராமலேயே போனார்கள்.
பொழுது சாயும் நேரம். ‘இராணுவம் வந்து கொண்டிருக்குது, மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள், எனும் செய்தி காற்றாய்ப்பரவியது. அம்மா பரபரத்தாள். “தம்பி என்னப்பன் செய்வம் எங்கை போவம்’ அவனுக்கு எங்கே போவதென்றே புரியவில்லை . அவன் போகவும் விரும்ப வில்லை.
விடியட்டும் அம்மா பார்ப்போம்’ என்றான்.
இரவிரவாய் அலைபாயும் மனதுடன் கண்விழித்து விடியும் தறுவாயில் கணணயரும் போது “படார்’ எனக்கேட்ட வெடியொலியில் திடுக்கிட்டு விழித்து இவன் ‘அம்மா. என அலறிய போது, ‘தம்பி’ என அலறியவாறே அம்மா “ஓடி வந்தாள். – இன்னும் ஷெல் வெடிக்குமென் றெண்ணி தரையோடு தரையாகப் படுத்துக் கிடந்தார்கள். இனி ஷெல் வெடிக்காது என்று உறுதிப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவன் ‘ஐயோ அம்மா’ என அலறினான். பதைபதைத்து வெளியே ஓடிவந்தாள் அம்மா. குருவிக்கூட்டோடு அவன் மாமரமும் சரிந்து இருந்தது. தாய்க் குருவி அலறியவாறே பறந்து கொண்டிருந்தது. …. என்ரை மாமரம்’ கண்கள் கலங்கி வாரத்தைகள் தடுமாறி வந்தன.
‘மாமரம் தானேயப்பன், வீட்டுக்கு மேலை விழேல்லையென்று திருப்திபடு .. வாநீ நிற்க நேரமில்லை கெதியிலை வெளிக்கிடுவம்?
அறைக்குள் சென்றவனது கண்கள் மேசையை நோக்கினது நூல்கள் அவனது உற்ற தோழர்கள் இவைகளைக் கொண்டு செல்லவா முடியும்? கலங்கிய கண்களுடன் செய்வதறியாது நின்றான்.
அம்மாவே அவனுக்குத் தேவையான உடுப்புகளையும் சில புத்தகங்களையும் எடுத்து வைத்தாள் வீட்டைப் பூட்டித் தெருவில் கால் வைத்த போது வெறிச்சென்றிருந்தது. ஆளரவமற்று இருந்த கோயிலில் பூவோ பொட்டு விளக்கோ இன்றி தனித்துப் போய் அவன் தோழர் இருந்தார்.
அலையலையாய் அவனுள் எழுந்த உணர்வுகள் அவனை அலைக்கழித்தன .
வெண்முகில்களின் மீதான அவனது நேசிப்பு, மழைத்துளியும் தளிரிலையும் தந்த நேசிப்பு, மாமரமும், குருவிக்குஞ்சும் கிளர்ந்தெழ வைத்த நேசிப்பு, பிரியமான தோழனும், புன்னகை பூத்த மனிதர்களும், தெருவும், ஊரும் அவனுள் தோற்றுவித்த நேசிப்பு. இப்பொழுது பிரிவில் இன்னும் அதிகமாய்,வேகமாய் மேலெழுவதை அவன் உணர்ந்தான்.
அவை ஊற்றாய் கிளம்பி ஏதோ திசையில் அவனை நெட்டித்தள்ளின.
அவனுக்குப் புரிந்தது. அவனது நேசிப்புப்பட்டியலில் இப்பொழுது புதிதாய் . பெரிதாய்… ஒன்று … சுதந்திரம். ஆம் அவன் சுதந்திரத்தை நேசிக்கத் தொடங்கியிருந்தான்.
மக்கள் வெள்ளத்தோடு அள்ளப்பட்டு வந்து ஒதுங்கிய ஒரு வீட்டில் அவ்விரவு நீண்ட இரவாய்க் கனத்தது.
அவன் கண் மூடவில்லை. அம்மா விடிகாலையில் கண்ணயர்ந்த போது மீண்டும் அவன் காணாமல் போனான்.
அதிகாலையில் கண்விழித்து அம்மா அவனைத்தேடினாள். வெளியே வந்தாள். அவனில்லை மற்றவர்களிடம் விசாரித்தாள். அவர்கள் எவருமே அவனைக்காண வில்லை.
அம்மா வாசற்படியில் அமர்ந்து கொண்டாள். கலங்கிய கண்களுடன் வாய்மூடி மௌனியானாள். அம்மா கண்டிப்பானவள். கனவுகளும். கற்பனைகளும் அவை தரும் உணர்வுகளும் அவளுக்கு அப் பாற்பட்டவை. வாழ்க்கை அவளை நிஜங்களை மட்டுமே பார்க்கப்பழக்கியிருந்தது.
அவளுக்கு அனைத்தும் புரியும்…….
-தீபாகுமரேஷ்
வெளிச்சம் பவள இதழ் 2001.
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்