×

லெப்.கேணல் மதனா

லெப்.கேணல் மதனா

வீதியின் இருமருங்கிலும் நீண்டு வளர்ந்த மரங்களுடாகவே அடர்ந்த பற்றைக்குள் இருந்து விழிகளை மட்டும் உயர்த்தி எதிரியவன் படையை எட்டிப்பார்த்து அவனின் அசைவில் காத்திருக்கும் திடம் கொண்ட போராளிகளுள் ஒருத்தியாய் லெப்.கேணல் மதனாவும். 1991ம் ஆண்டு வாகனேரியில் இருந்து வெலிக்கடை நோக்கி வந்த பொலிஸ் ஜீப்வண்டி மீது புலிகளின் அதிரடித்தாக்குதல் நடைபெற்றது. இது அவளுக்கு முதல் களமாக இருந்த போதும்> மிகவும் திறமையாக சண்டையிட்டு பல இராணுவத்தினரின் இறப்புக்குக் காரணமாக இருந்தாள். அன்றிலிருந்து இவள் கண்ட களங்கள் ஏராளம். கிழக்கில் நடைபெறும் ஒவ்வொரு தாக்குதல்களிலும் பங்கெடுத்து சிங்கள அரசபடைகளின் அழிவுக்கும் வழிசமைத்தாள். இவளது துணிவையும் சுறுசுறுப்பையும் எமது விடுதலைப்போராட்டத்தை முழுமையாக புரிந்தும், தெளிவான சிந்தனையுடனும் செயலாற்றிய மதனாவை வயதில் சிறியவளாய் இருந்த போதும் எமது மட்டு. அம்பாறை சிறப்புத்தளபதி அவர்கள் அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார். அன்போடு கிள்ளைமொழி பேசி  தன் பிள்ளைகளை மகிழ்விப்பதில் மதனாவுக்கு நிகர் வேறு யாருமில்லை.. தாய்க்குத் தாயாகவும் சகதோழியாகவும் களத்தில் இவள் படைநடத்தும் தளபதியாகவும் நின்று பிள்ளைகளை வழிநடாத்திக் கொண்டிருந்தாள். இவளுக்கு சகதோழியருடன் சேர்ந்து விளையாடுவதென்றாலே அலாதிபிரியம். பின்னேரம் நான்கு மணியாகி விட்டால் தனது படையினரை முகாமில் தங்கவே விடமாட்டாள். புற்போல் லிபோல் கிரிக்கட் ஆகிய விளையாட்டுக்களில் சகதோழியர் அனைவரையும் ஊக்கப்படுத்தி தானும் சேர்ந்து விளையாடுவாள். இதனால் சண்டையில் இழப்புக்களினால் ஏற்பட்ட மனக்கவலையை  எல்லோருக்கும் சமநிலைப்படுத்தி விடுவாள்.

கிழக்கு மாகாணத்தின் கரையோரமாக அமைந்திருக்கும் வாகரை இதுதான் அவள் பிறந்த இடம். ஓங்கி அடித்து அலை உயர அதனுள் நின்று கரையோர மணலை எல்லாம் கையால் கிண்டி விளையாடும் இவள்> நாகேந்திரம் பூமணி தம்பதிகளின் ஏழு பிள்ளைகளுள் நான்காவது பிள்ளையாகப் பிறந்து மிகவும் செல்லமாக வளர்ந்தாள்.

எட்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எங்கு பார்த்தாலும் சுயநலப் பேய்களின் அட்டூழியம் கண்டு தாங்க முடியாதவளாய் 1990ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து  மட்டக்களப்பு முதலாவது பயிற்சிப்பாசறையில் பயிற்சியும் பெற்றாள். 1993 இறுதியிலிருந்து 1994 வரை புலிகளின் பலத்தைச் சிதைக்கும் நோக்குடன் சிறீலங்காப் படைகளின் அட்டகாசம் கிழக்குக் காடுகளில் அதிகரித்தன. புலிகளின் உணவு விநியோகப் பாதைகள் மறிக்கப்பட்ட போது உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு மூன்று நாளுக்கு ஒரு கஞ்சி என்ற நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. ஒரு வருடமாக இந்நிலை நீடிக்கப்பட்ட போது போராளிகள் எழுந்து நிற்கவும் சக்தியற்றவர்களாக வந்து விட்டனர். அப்போது மதனா மட்டும் அன்பு வார்த்தை கூறி பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் அளிப்பாள். ‘நாம் செயலிழந்தால் எதிரியின் பலம் அதிகரிக்கும்’ என்பதே அவளின் கருத்து. அவளும் பசி அறியாதவளல்ல. இதைப் பொருட்படுத்தாதவளாய் பிள்ளைகளுடன் கூடியிருந்து தாளம் போட்டு பாட்டுக்கள் பாடி அனைவரையும் மகிழ்விப்பாள். பல தடவைகள் எதிரியினால் எமது முகாம்கள் சுற்றி வளைக்கப்பட்ட போது தளபதிகளின் உதவியுடன் வீரமாக நின்று போரிட்டு முற்றுகையை முறியடித்தவள்.

 ‘இன்றோ நாளையோ நான் வீரச்சாவடையலாம் அதற்கிடையில் ஒருதடவையாவது தலைவரை நேரில் பார்த்து விடவேண்டும்;’ என்பது அவளுடைய நீண்டநாள் அவா. எப்படி சந்தோசமாக பழகியபோதும் இந்த வேதனை மட்டும் அவள் மனதை விட்டு அகலவில்லை கிழக்கில் ஒரளவு நிலமைகள் சீரடைந்ததும் கட்டுமுறிவு இராணுவ முகாம் அழிப்பு> தரவை இராணுவமுகாம் அழிப்பு எனப் பல இராணுவ முகாம் தாக்குதல்கள் இடம்பெற்றன. எல்லாவற்றிலும் முழுமையான பங்கெடுத்து எதிரியை முற்றுமுழுதாக விரட்டியடித்த சந்தோசம் அவளுக்கு. அப்படி இருக்கும் போது தான் 1996 நடுப்பகுதியில் வட தமிழீழம் வந்தபோது அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஒன்று காத்திருந்தது.

அவள் தலைவரை நேரில் கண்டு தலைவரின் மனதிலும் இடம் பிடித்துக்கொண்டாள். ‘இனி நான் வீரச்சாவடைந்தாலும் பிரச்சினையில்லை’ என்று அடிக்கடி கூறுவாள். கிழக்கில் எததனையோ போராளிகள் தலைவரை காணாமலே வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களின் இறுதி ஆசை கூட ஒருமுறையாவது தலைவரை காணவேண்டும் என்பதுதான் இந்த விதத்தில் மதனா கொடுத்து வைத்தவள். தன்னைப்போல் தன் பிள்ளைகளும் தலைவரை சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டவள் மீண்டும் கிழக்கிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது புலுகுணாவ முகாம் அழிப்பிற்கான பயிற்சிகள் நடைபெற்றன. புலுகுணாவ வெற்றிச் சமரில் புலிகளின் வீரம் கண்டு எதிரி அதிர்ந்தான். படைபலம் முழுவதும் புலிகளிடம் வீழ்ந்தன. அதில் மதனாவும் தனது படையணியுடன் பெரும் பங்காற்றியவள். அதன் பின்> பல பதுங்கித்தாக்குதல்களில் மதனா பங்கு கொண்டாள். கிழக்கு மாகாணத்திலே இவள் பாதம் படாத இடமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்தளவிற்கு நேருக்கு நேர் நின்று களத்தில் எதிரியை ஓட ஓட விரட்டியடிப்பாள் மதனா.

05.03.97 அன்று 350ற்கு மேற்பட்ட கஜபாகு விசேட படையினர் நிலைகொண்டிருந்த வவுணதீவு ஆக்கிரமிப்பு இராணுவத்தளம் மீதான தாக்குதலில் இவளுக்கும் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. அதிகாலை 01.45மணிக்கு சண்டை ஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து 6மணி நேர உக்கிர சண்டை. நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் திகிலடைந்த எதிரி பரவலாக ஓடுகின்றான். துரத்தி அடித்து மதனா தன்னுடைய பகுதியை கிளியர் பண்ணி முன்னேறிவிட்டாள். ‘அம்மான் என்ர பகுதி பிடித்தாச்சு’ வோக்கியில் உற்சாகத்துடன் அவள் குரல் ஒலித்தது. அந்த நேரத்தில்தான் அந்த சோகநிகழ்வு ஒன்று நடந்தது. கூவிச்சென்று வெடித்த ஷெல் ஒன்று மதனாவின் உயிரையும் பறித்துக்கொண்டது. சிறிது நேரத்தில் வோக்கியில் மதனாவின் தொடர்பு அற்றதும் அந்த பேரிடி எல்லோர் மத்தியிலும் பரபரப்பானது. மதனா வீரச்சாவடைந்து விட்டாள். ஓடிச்சென்று பார்த்த போது அவளது உயிரற்ற உடலை சுமந்தபடி இன்னும் ஒரு தோழி வந்து கொண்டிருந்தாள். ஆம். தான் தன் அன்பரசி படையணிக்கு ஒரு பகுதி தரவேண்டும் என்று அடம் பிடித்து அதைப்போலவே சாதனையையும் நிலை நாட்டிய பெருமையுடன் அன்னை மடியில் துயில்கின்றாள். ஆம்.

நாலாம் முற்சந்தி இராணுவமுகாம் தகர்ப்பில் வீரச்சாவடைந்த கப்டன். அன்பரசி இவளும் ஒரு சுறுசுறுப்பான போராளி. கிழக்கில் மகளிர் படையணியை வளர்;ப்பதற்கு மதனாவின் தோளோடு தோள்நின்று உதவியவள். அன்பரசியின் அந்த அயராத சேவையின் நிமித்தமாகவே மதனா தன் படையணிக்கு அன்பரசி படையணி என பெயரிட்டு தன் வீரத்தை செயலில் காட்டி தன்னையும் இம்மண்ணிற்கு அர்ப்பணித்து விட்டாள்.

புன்னகைமாறா புரட்சி தீபம் எம்மைவிட்டு மறைந்து விட்டது. ஒருவராலும் அவளது வீரமரணச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் தியாக தீபங்கள் மண்ணில் விதைபட> விடுதலை வித்துக்களாய் அது நாளை விருட்சமாகும் என்ற நம்பிக்கையில் தோழியர் அவளின் தடம் பதித்து செல்கின்றனர். இவளோடு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 92 வேங்கைகளையும் இந்நாளில் நினைவு கூர்ந்து கொள்கின்றோம்.

போராளி – செ.சக்தி

 

 

Lieutenant Colonel Mathana

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments