×

லெப் கேணல் தவம்

லெப் கேணல் தவம்
பிறப்பு: 08.04.1966
வீரச்சாவு 17. 02.2008.

அந்தச் சந்தர்ப்பம்தான் வன்னி எங்கிலும் வீடியோக் கடைக்காரர்களையும் மக்களையும் தவாவிடம் நெருங்கவைத்தது. தவாவிற்குத் தெரியாத வீடியோ. நிழற்படக் கடைக்காரர்கள் இல்லை என்னும் அளவிற்கு அந்த உறவு வலுப்பட்டது. தவாவிற்குத் தெரியாத ஊர்களும் இல்லை. அவரை அறியாத மக்களும் இல்லை.
“கானகத்தில் ஒரு நாள்” சிலநூற்றுக்கணக்கான போராளிகளின் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை எடுத்துக் காட்டிய படம். தவாதான் இதற்கும் படப்பிடிப்பு. இந்தக்காலத்தில்தான் ஒட்டுசுட்டான் கோயில் திருவிழாவில் ஒரு அருமையான பாடகரை ஒரு வீடியோ ஒளிநாடா மூலம் தவா இனம் கண்டார்.

உடனே புதுவை அண்ணரிடம் உங்களுக்கேற்ற பாடகர் ஒருவர் இருக்கிறார் எனச்சொல்லி வைத்தார். இந்தியப் படைகள் புறப்பட்ட கையோடு கண்ணாடிச் சந்திரனும் தவாவும் சென்று அந்தப் பாடகரிடம் தொடர்புபட்டு கலை, பண்பாட்டுக் கழகத்துடன் இணைக்கின்றனர். அவர் பாடகர் “சாந்தனாக “தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாகக் காரணமானதும் தவாதான். இந்தியப் படைகள் தமிழீழத்தில் இருந்து தோல்வியுடன் புறப்பட புலிகள் கானகத்தில் இருந்து வெளிவருகின்றனர். அந்தக் காலப்பகுதியில் தேனிசை செல்லப்பா குழுவினர் தமிழகத்தில் இருந்து ஈழம் வருகின்றனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இருந்த கவின் கலைக் கல்லூரியில் இருந்து தவா உட்பட பல போராளிகள் தேனிசை செல்லப்பா குழுவினரோடு புறப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை வரை 21 இடங்களில் தேனிசை செல்லப்பாவின் தாயகப்பாடல்கள் மேடை நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. அந்த நிகழ்ச்சிக்கான மேடையமைப்பு ஒளியமைப்பு, படப்பிடிப்பு, உணவு உபசரிப்பு, பாதுகாப்பு உட்படப் பலவேலைகளின் பின்னணியாகத் தவா உள்ளிட்ட ஒருசிலர்தான் பணியாற்றினார்கள். இன்னவேலையென்றில்லாமல் எல்லாவற்றையுமே இழுத்துப் போட்டுக் கொண்டு இடைவெளி நிரப்பி, ஆளில்லை என்று திக்கு முக்காடும் நேரங்களில் அந்த இடைவெளிகளை நிரப்பி, கடின உழைப்பின் போதும் கலகலப்போடு உலவி தவா இந்த விடுதலைப் பயணத்தோடு இரண்டறக் கலந்திருந்தார்.

தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி திரியாயில் நடந்த போதுதான் தவாவின் தாயார் தவாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்கிறார். அதுவரை இது தனது சொந்த ஊரென்று தவா மூச்சுக்கூட விடவில்லை. தாயைக் கண்ட நிறைவோடு அவரது பயணம் தொடங்குகின்றது. 1990 இற்குப் பிறகு சிங்களப் படைகளின் வல்வளைப்பு தவாவின் உறவுகளை ஊரைவிட்டே ஏதிலிகளாக்கி அனுப்புகின்றது. 1990-1991 வரை தவா கலை, பண்பாட்டுக் கழகப் பணிகளோடு இணைந்திருந்தார். அக்காலத்தில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” , “வேங்கைகளின் விடுதலை வேதம்” “யாகராகம்,” “நெய்தல்” உட்பட ஆறு பாடல் ஒலிநாடாக்கள் தமிழோசை கலையகத்தால் கலைபண்பாட்டுக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.

இந்தப் பாடல் ஒலி நாடக்களின் தயாரிப்பில் பல்வேறுபட்ட வேலைகளோடு தவா இணைந்திருந்தார். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்து நாட்கள் முத்தமிழ்விழா நடத்தப்பட்டது. அதன் சிறப்பான ஆற்றுகைக்கும் தவாவினது உழைப்பு பலம் சேர்த்தது. மின் பிறப்பாக்கியிலிருந்து மேடைகட்டுதல், கலைஞர்களை ஏற்றியிறக்குதல், மக்கள் தொடர்பு, வரவேற்பு என்று தவா அனைத்து வேலைகளின் முதுகெலும்பாக நின்றார். கலை, பண்பாட்டுக் கழகத்துடனான அவரது தொடர்பு வெளிச்சம் இதழின் நூறாவது இதழ் வெளியீட்டு விழாவரை தொடர்ந்தது. எந்தப் பணி என்றாலும் களமுனைப் படப்பிடிப்புக்களைச் செய்ய அவர் தவறவேயில்லை.

1990 களில் நடந்த பல சண்டைகளுக்குத் தவாதான் படப்பிடிப்பு.

கோட்டை, மாங்குளம், கொக்காவில் போன்றவை மிகமுக்கியமானவை. 1991 இன் பின்னர் நிதர்சனத்தோடு மீண்டும் இணைந்த தவா வன்னிப்பகுதிப் படப்பிடிப்புக்குப் பொறுப்பாகத் தனது பணியைத் தொடர்ந்தார். வன்னியில் தொடக்கத்தில் தவாவுக்கென்றொரு முகாம் இருந்ததில்லை ஆனால் தவாவைத் தெரியாத வீடுகளே இல்லை. சொந்த ஊர்ப் போராளிகளுக்கே தெரியாத இடங்கள் தவாவிற்கு நன்கு அறிமுகமாகியிருந்தன. வன்னி வாழ்க்கையில் மக்களின் எழுச்சி நிகழ்வுகள், குண்டு வீச்சுக்கள். போராளிகளின் பயிற்சி முகாம் படப்பிடிப்புக்கள், அடையாள அட்டைப் படம் எடுத்தல், விளையாட்டுக்கள் என்று அனைத்தையுமே தவா படம்பிடித்தார். காலப் போக்கில் அவருக்குதவியாக பல புதிய போராளிகள் வந்திணைய அவர்களையும் பயிற்றுவித்தார்.

வன்னியில் இருந்த காலத்தில்தான் கரும்புலி போர்க் உடனான நட்பு இவருக்குக் கிடைக்கின்றது. போர்க் கொண்டுசென்ற வெடிக்கும் ஊர்திக்குரிய பயிற்சி ஒத்திகை நடக்கின்றது. தவாவும் படப்பிடிப்புச் செய்தபடி அருகில்நிற்கிறார். மாங்குளம் முகாம் மீதான தாக்குதலில் போர்க் வெடிக்கப்போகும் நேரத்திற்குச் சற்று முன்னர் போர்க்குடன் அமர்ந்திருந்து ஒன்றாகப் பகிடிவிட்டு, ஒன்றாகச் சாப்பிட்டு, அவர் போய் வெடித்த பிறகு அந்தத் தாக்குதலின் பதிவுகளைச் செய்து, விமானக் குண்டுவீச்சுக்களில் மாட்டுப்பட்டுத் தப்பிவந்து, வீரச்சாவுகளுக்குச் சென்று என்று ஓடியோடி உழைத்தார்.

மாங்குளம் சண்டைமுடிய அத்தாக்குதலின் வரைபடத்தையும் சிலமுக்கிய குறிப்புக்களையும் அன்றிரவே யாழ்ப்பாணத்திலமைந்திருந்த தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்றகட்டளை கிடைக்கிறது. கூடநின்ற தவாவின் தோழன் நாளை விடியக் கொண்டுசெல்வோம் என்று கூறுகின்றார். ஏற்கனவே மூன்று நாட்கள் தூக்கமில்லை. ஆனாலும் தவா “இல்லையில்லை இன்றிரவே அனுப்ப வேண்டும்”; எனச்சொல்லி கடின பாதைகளால் உந்துருளியில் சென்று கடல் கடந்து யாழ். சென்று உரிய பணியை நிறைவேற்றினார். அலுப்புச் சலிப்பில்லாமல் பணியாற்ற அவருக்கு நிகர் எவரும் இருந்ததில்லை. யார் எது கேட்டாலும் தவா இல்லை என்று சொன்னதில்லை.

– எரிமலை
தொகுப்பு,படம் தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments