
லெப்.சபா
(ஆ.க.வெ.)
(மாரிமுத்து பத்மநாதன்)
பள்ளக்கால், குண்டசாலை, கண்டி.
வீரச்சாவு.17.07.1991
சிங்களத்தின் தலைநகரமான கொழும்பு, சபாவுக்கு தண்ணி பட்ட பாடம். காலை விடிந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை, அவனது முதுகு மூடைகளைச் சுமந்து கொண்டேயிருக்கும். சபாவின் முதுகு ஒரு சுமைதாங்கி. கொழும்பு நாகரிகத்தில் சொன்னால், அவனொரு ‘நாட்டாமை.’ புதுமையாகவும் கேள்விக் குறியாகவும் இருக்கலாம் சபாவின் உண்மை வாழ்வு அதுதான். திருமண மாகியதால், பிறரிடம் பல்லிளித்து வாழ்க்கையைக் கொண்டு நடத்தாமல், மூடை தூக்கியாவது கௌரவமாக வாழத்தலைப்பட்டவன். நித்திரையின்றி மூடை அடித்த நாட்கள் பல, அவன் வாழ்வில் உண்டு.
சபாவின் இல்லறவாழ்வு பாதியில் முடிந்து போனது மனைவி பாதி வழியில் இவ்வுலக வாழ்வை நீத்துக்கொண்டாள்; சபாவின் வாழ்க்கையில் பாதிப் பகுதி முடிந்துபோனது. மீதிப் பகுதியை நாட்டுக்காகக் கழிக்க நினைத்தான்; அதனால், வேறு திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. தனது கடந்து போன வாழ்க்கை இருண்ட கனவாகத் தெரிந்தது. அந்தக் கனவு அத்தியாயங்களைப் புரட்டிப்பார்க்க விரும்பவில்லை. தொடர்ந்து அடிமை வேலை செய்வதும் அவனை மனவிரக்திக்குத் தள்ளியது. முடிவு….?
பிறந்த மண்ணுக்குப் பணிசெய்து பாதிவாழ்வை முடித்துக்கொள்ள விரும்பி, விடுதலைப் போரில் தன்னை இணைத்துக்கொண்டான். நகரத்தில் நின்றவன், நடுக்காட்டில் விடுதலை வாழ்வினைத் தொடங்கினான். கொழும்பு நகரை விட மணலாற்றுக்காடு அவனுக்குப் புனித பூமியாய்த் தெரிந்தது.
முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்-சாம்பன் குளம் மினிமுகாம் தகர்ப்பு இவை இரண்டும் சபாவின் திறமைகளை அளவிட்ட சண்டைகள். ‘டாஸ்-1’ துப்பாக்கியுடன் முதலில் சண்டைக்குச் சென்று. பின் ஜி 3 துப்பாக்கிதான் வேண்டுமென்று கூறி அதனைப்பெற்று, சிலகாலங்களின் பின் எல்.எம்.ஜி. துப்பாக்கியே வேணும் என்று கேட்டு, அதனையும் பெற்றுக்கொண்டான்.
கொழும்பு நகரில் நின்றதனால் சிங்களம் அவனுக்கு அத்துபடி. ஓய்வு நேரங்களில், நாயாற்றுக் கடலில் கட்டுமரம் வலித்துச்சென்று வலை வீசி விட்டு மீன்பிடித்து வருவான். காற்றும் கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், துணிந்து கட்டுமரத்தை வலித்துக்கொண்டு, கடல்மேல் சென்றுவிடுவான். ஆபத்து நிறைந்த இத்தொழில் அவனுக்கு விளையாட்டாக இருந்தது. நாயாற்றுக்கடலுக்கும் கடல் நீரேரிக்கும் கதை சொல்லும் வலுவிருந்தால், இவனது வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
வாகன அதிரடி ‘கொமாண்டோ’ பயிற்சி முடித்த சபா, ஆனையிறவு முகாம் தகர்ப்புக்காய்ப் புறப்பட்டான்; ஆனால் மீண்டு வரவில்லை. அவனுக்காய் அடித்து ஓயும் நாயாற்றுக் கடலலைகள், அவன் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன!
வீரவணக்கம்
– வணங்காமண்