
மணலாற்றில் புலிகள் – இந்திய யுத்தம்
செக்மேற்-01
ஒழுக்கம், கட்டுப்பாடு, உண்மை, வேகம், விவேகம், சுதந்திரப்பற்று, மானம் அனைத்தும் ஒருங்கே பெற்ற எமது தலைவர், காலத்தின் தேவை கருதி மணலாற்றுக் காட்டிற்கு வந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் போர் தொடங்கிய பின்னர் மணலாற்றுக் காடுகள், தலைவரையும் அவர் வளர்ப்புக்களையும் வரவேற்று நின்றன.
ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட இந்தியப் படைகளை எதிர்த்துச் சண்டை செய்ய எம்மிடம் ஆட்பலமோ ஆயுதபலமோ இல்லையென்றாலும்,தளராத மனஉறுதி இருந்தது. இந்த மனப் பலத்தினால் இந்தியப் படையினை நிலை கலங்கவைக்க முடியுமென்பதை, எம் தலைவர் உணர்த்தினார். புதிய இடம், திசைதெரியாத காடு; ஆனாலும், தன் புதல்வர்களை மறைத்துக் காத்த பெருமையில் உயர்ந்து நின்றது மணலாறு.
புலித்தலைவனும், அணியும் மணலாற்றுக் காட்டிற்குச் சென்றுவிட்டதை இந்தியப் படை தெரிந்துகொண்டது. மிகவேகத்தில், மணலாற்றுக் காட்டினைச் சுற்றி ஏழு இந்தியப் படை முகாங்கள் – வான்படை இறங்கு தளவசதிகளுடன்-அமைக்கப்பட்டன. சிறப்புக் கட்டளைத் தலைமைத்தளம் நித்திகைக்குளப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட துருப்புக்கள் இம் முகாங்களில் குவிக்கப்பட்டன.
தாக்குதலுக்கான முற்றுகை ஆரம்பமாவதனைத் தலைவர் கணித்துக் கொண்டார். அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கைமிக்க யுத்ததந்திர முறைகளைத் தெளிவுபடுத்தினார். “இக்காடுதான் எங்களின் இறுதித் தளம்; இங்கிருந்து வெளியேறும் எண்ணம் இருக்கக்கூடாது; வாழ்வாயினும் சாவாயினும் இங்குதான் முடிவு எழுதப்படும்” என்ற உறுதியான முடிவை வீரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.தலைவன் தாரக மந்திரம் எம்வீரர்களைப் பம்பரமாக்கியது; எந்த வல்லரசையும் எதிர்கொள்ளும் மனவலிமையைக் கொடுத்தது.
1988ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் யுத்தமேகங்கள் கருக்கொண்டன மணலாற்றுக் கிராமங்களில் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மணலாற்றுக் கிராமங்களையும் காட்டினையும் இருவலயங்களாக இந்தியத் துருப்புக்கள் சுற்றிவளைத்தன. காட்டிற்குள் நுழையும் நோக்கில் வேறோர் படைப் பிரிவு நகர்ந்தது.
எண்ணிக்கையில் எமது வீரர்கள் குறைவாக இருந்தாலும், அளவற்ற மனபலம் அவர்களிடமிருந்தது. அந்தப் பலத்தோடு முற்காப்பு காவலரணில் சண்டையைத் தொடக்கினர். சண்டையின் தொடக்கமே மூர்க்கத்தனமாக இருந்தது. சுதந்திர தாகம் எம் வீரர்களின் நெஞ்சில் ஊறியது. தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இந்திய ஜவான்கள் பின்வாங்கி ஓடினர்.
மணலாற்றுக் காட்டில் விடுதலைக்கான முதல் உயிர் அர்ப்பணமாகியது. 2ஆம் லெப். ஜீவன், தான் நிலையெடுத்துக் கிடந்த இடத்திலிருந்து சற்றும் பின்வாங்காது – எதிரியை விரட்டிவிட்ட பெருமையில் – கண்மூடிக் கிடந்தான். அன்று மாலை இந்திய வானொலி, “பருப்பு பொறுக்கி என்ற இடத்தில் புலிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கையில், 17 படைவீரர் – உயிர்இழந்தனர்; முப்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர்” எனச் செய்தி வெளியிட்டது.
23ஆம் திகதி நடைபெற்ற சண்டையில் சற்றுப் பின்வாங்கிய துருப்புக்கள், அந்த இடத்திலேயே நிலையெடுத்துக்கொண்டனர். 24ஆம் திகதி காலை மீண்டும் சண்டை தொடங்கியது. இந்திய வான்படைக் ‘கெலிக்கொப்டர்’கள் வானில் சுற்றிப் பறந்தவண்ணமிருந்தன. காட்டிற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின், ‘சந்தனம் சுட்ட பரவை’ வெட்டையினைக் கடக்க வேண்டும். காட்டுக் கரையில் நிலையெடுத்துக் கிடந்த குட்டி, நூற்றுக்கு மேற்பட்ட இந்தியத் துருப்புக்களின் முன்னேற்றத்தை, தனது துப்பாக்கியால் தடுத்து நிறுத்தியிருந்தான். வெளியான அந்தப் பிரதேசத்தில் எழுந்து ஓடிவர நினைக்கும் ஒவ்வொரு துருப்பினரும்; குட்டியின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகினர்.
சண்டை நடக்கும் இடத்துக்கு எமது வீரர்கள் விரைந்தனர். குட்டியின் “துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்துவிட்டன. கடைசி ஒரு ரவை மட்டும் எஞ்சியிருந்தது. தான் உயிருடன் பிடிபட்டால் விளைவு எந்தளவு பாரதூரமானதாக இருக்குமென்பதை அவன் உணர்வான். இதனால் அந்தக் கடைசி ரவையில் தன் முடிவைத் தீர்மானித்துக் கொண்டான். துப்பாக்கியின் சுடுகுழலைத் தன் தலைக்கு நேரே திருப்பிக்கொண்டான். சிந்தனைக்கு எட்டாத தியாகத்தை –அந்தக் கடைசி ரவையினால் எழுதிக்கொண்டான். உதவிக்கு விரைந்த எம் வீரர்கள் வந்தடையும்போது, குட்டி இரத்த வெள்ளத்துள் கிடந்தான். படையினர் பலரை இழந்தநிலையில் இராணுவமும் பின்வாங்கிக்கொண்டது. குட்டி யின் முடிவோடு, ‘செக்மேற் – 01’ என்ற, காட்டின் முதற் தாக்குதல் முடிவுக்கு வந்தது.
செக்மேற் – 02
காட்டில் தமது முதல் நடவடிக்கை பற்றியும், அதன் தோல்விக்கான காரணங்கள் பற்றியும் இந்தியப் படைத் தளபதிகள் ஆராய்ந்து கணித்தனர். காட்டில் புலிகள் பலமாக இருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். “இதனால், மேலதிக படைப்பிரிவுகள் மணலாற்றுக்கு வருவிக்கப்பட்டன. அத்துடன் காட்டிற்கும் – கிராமங்களுக்கும் வெளிக்கிராமங்களுக்குமான இணைப்புப் பாதைகளில் போக்குவரத்துக்குத் தடையும் விதிக்கப்பட்டது; சிறிய வீதிகள், சந்துபொந்துகள் அனைத்தும் தடுக்கப்பட்டன. பட்டினி போட்டுப் புலிகளைப் பணியவைக்கலாமென்ற தவறான கணிப்பீட்டையும் அவர்கள் எடுத்திருந்தனர். தமது தடைகளையும் மீறி, மணலாற்றுக் கிராம மக்கள் புலிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுசென்று கொடுப்பதாகக் கருதினர். இதனால் மாட்டு வண்டி, சைக்கிள் வண்டிகள் கூட போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டன. 1 கிலோ அரிசிக்கு மேல் ஒருவர் கொண்டுசெல்வதும் தடைசெய்யப்பட்டது. மணலாற்றுக் கிராமங்களில் இருந்த சிறிய கடைகளில், பொருட்கள் ஒவ்வொரு நாளும் இந்தியப் படையால் கணக்கிடப்பட்டன. பலமாதங்களாக இத்தடைகள் இறுக்கமாக மேற்கொள்ளப்பட்டன.
1989ஆம் ஆண்டு பங்குனித் திங்களில், இரண்டாவது முற்றுகை ஆரம்பமானது. இம்முற்றுகைக்கு முந்திய இடைக்காலத்தில், குமுழமுனை கொட்டுக் கிணற்றுப் பிள்ளையார் கோயில் மலையில் இருந்த படை முகாமிலிருந்து, காட்டின்மீது தொடர்ச்சியான ‘ஆட்லறி’வீச்சு இடம்பெற்றது. பெரும் யுத்த முனைகளில் வீசப்பட்டதுபோல், மணித்தியாலமொன்றிற்கு 260 ற்கு மேற்பட்ட ‘ஆட்லறி’ எறிகணைகள் வீசப்பட்டன. இந்திய விமானப்படை ‘கெலிக் கொப்டர்’கள், 250 கிலோ எடைகொண்ட குண்டுகளை நாள் தப்பாது வீசின. இவற்றினைத் தொடர்ந்து காட்டின் வெளியே சுற்றிவர – பல ஆயிரக் கணக்கான படைகள் சங்கிலித் தொடராய் நிலையெடுத்துக் கொண்டன. காட்டினைச் சூழ்ந்த கிராமங்களிலும் இத்தகைய முறையில் படைகள் நிலையெடுத்துக் கிடந்தன.
பங்குனித் திங்கள் 2ஆம் நாள், காடுநோக்கித் துருப்புக்கள் நகரத் தொடங்கின. காட்டிலிருந்து உணவுப் பொருட்களைச் சுமந்துசெல்ல ஆற்றங்கரைக்கு வரும் எமது வீரர்கள், அன்று வருவதற்குச் சற்றுத் தாமதமாகியிருந்தனர்.
மாலை ஐந்து முப்பது மணியளவில், ஆற்றங்கரையின் மறுபுறத்தில், நீண்ட வரிசையில் படைகள் நகர்வதை, காட்டுக்கரையில் அமைந்திருந்த முற்காப்பு அரணில் நின்று எம்வீரர்கள் அவதானிக்க முடிந்தது. மெதுவாக இருள் சூழும் நேரம், உணவுப் பொருட்களைச் சுமக்கச் சென்ற எமது அணியுடன் சண்டை ஆரம்பமாகியது. எதிர்பார்த்த இடத்துக்கு முன்பாகவே தொடங்கியதால், இந்தியத் துருப்புக்கள் சிதறி ஓடின; இவ்வாறு சிதறிய படை யினரை ஓன்றிணைப்பதில் இந்தியப் படைத் தளபதிகள் சிரமத்துக்குள்ளாயினர். இதனால், அன்று இரவு முழுவதும் வெளிச்சக் குண்டுகளை வானத்தில் வீசி, தாம் நிற்கும் இடங்களைக் காட்டவேண்டியதாயிற்று.
ஒன்றன்பின் ஒன்றாக வந்த தமது ‘ஆட்லறி ‘ எறிகணைகளுக்கு, தாமே தப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியமேற்பட்டது. தொடர்பு சாதனங்கள் தொடர்பற்றுப் போனதால், இரவிரவாக எங்கும் அவர்களின் குரலாகவேயிருந்தது. விடியுமுன் எப்படியோ ஒன்றுசேர்ந்தனர். மேலும் சில படைப் பிரிவுகள் உதவிக்கு வந்ததால், புதிய சண்டை ஆரம்பமாயிற்று. பகல் முழுவதும் சண்டை நடைபெற்றும் காட்டிற்குள் பிரவேசிக்கும் முயற்சி கைகூடாமையினால் ‘செக்மேற் -02’ என்ற தமது இரண்டாவது நடவடிக்கையினை முடித்துக் கொண்டனர். ஆனால் ‘ஆட்லறி வீச்சும், வான்தாக்குதலும் நிறுத்தப்படவேயில்லை. நாற்பதுக்கு மேற்பட்ட துருப்புக்களை இந்த நடவடிக்கையில் இந்தியப் படை இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செக்மேற் – 03
பெரும் எண்ணிக்கையில் தமது துருப்புக்கள் பலியாகியமை இந்தியத் தளபதிகளுக்குச் சினத்தை ஊட்டியது. இதனால், மிகவிரைவாக தமது அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிட்டனர். மணலாற்று படைத்தளங்களிலிருந்த துருப் புக்கள் மாற்றப்பட்டு, ‘குர்க்காஸ் ‘ படையினர் வருவிக்கப்பட்டனர். இவர்கள், “எடுத்த கத்தியை ரத்தம் காணாது உறையில் இடாத குர்க்காஸ் படையினர்” என்ற புகழ்பெற்றவர்கள்.
பங்குனித் திங்கள் 22 ஆம் நாள் கேணல் பஸ்கி தலைமையில், குர்க்காஸ் படைப்பிரிவு தாக்குதலில் இறங்கியது. வரிந்து கட்டிக்கொண்டு வந்த வேகத்தில் காட்டில் புகுந்தனர்; அதே வேகத்தில் வாங்கிக் கட்டினர். இறந்த வீரர்களைப் புதைக்க நேரமின்றி விழுந்த துப்பாக்கிகளையும், எறிந்த கத்திகளையும் எடுக்க மறந்து, கால்போன போக்கில் திசைமாறி ஓடினர். ஓடிய திசையெல்லாம் மிதிவெடிகள் வெடித்தன. பிடித்த மரம் எல்லாம் வெடித்துப் பிளந்தது; படுத்த புற்றெல்லாம் நெஞ்சை சிதைத்தது. எங்கு போகிறோம் என்பதை மறந்து ஓடியது குர்க்காஸ் படை..
கேணல் பஸ்கியையும் பறிகொடுத்து, நாற்பதுக்கு மேற்பட்ட கத்திகளையும் பறிகொடுத்து, இறந்த தம் சகாக்களை ஒரு அடி ஆழத்தில் கூட கிண்டிப் புதைக்க நேரமின்றி, பத்துப் பன்னிரண்டு சிப்பாய்கள் மட்டுமே தப்பியோடினர். பஸ்கியின் உடலையும் ஒன்பது சிப்பாய்களின் உடலையும் எமது வீரர்கள், இராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்தனர், இன்னும் அந்த.இடத்தில் அழியாத சுவடுகள் சில இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.
-வணங்காமண்
-மணலாறு விஜயன்
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்