
விழுதுகள் மேஜர் சஜயந்தன் 1992ம் ஆண்டு தைமாதம் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை
1992ம் ஆண்டு தைமாதம் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நான் எனது முகாமில் உள்ள அலுவலக அறையில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மன்னாரிலிருந்து வந்து மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போராளி ஒருவர் எமது முகாமிற்கு வந்து என்னுடன் இருக்கும் ஒரு பிள்ளையிடம் ”அக்கா நிற்கிறாவோ?” என்று கேட்டான். அவனின் குரல் அவன் கேட்ட விதம் பதற்றமாக இருந்தது. இது என் மனதில் ஓர் இனம் தெரியாத கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே நான் உடனடியாக அறையில் இருந்து வெளிப்பட்டு அவனருகே வந்து ‘என்ன விசயம் அப்பன்’ என்று கலவரத்துடன் கேட்டேன். அவன் ஏற்கனவே நிறைய அழுது இருந்தான். நான் கேட்டவுடன் ‘அக்கா சயந்தண்ணை வீரச்சாவக்கா’ என்று கூறிவிட்டு மீண்டும் அழத்தொடங்கிவிட்டான். இது…. இது…. எப்படி? ….சீச்சீ…. இருக்காது…. அப்படி இல்லை.. எப்படி இவ்வளவு சீக்கிரம்?? என் நெஞ்சு ஒரு கணம் அப்படியே இறுகிவிட்டது. எனக்கு வாயில் வார்த்தை வரவில்லை. உடல் பதறிக் கொண்டிருந்தது. ஒருவாறு என்னைச் சுதாரித்துக்கொண்டு ‘எப்படியய்யா இப்பதானே இங்கிருந்து போனான். போய் ஐந்து நாள் கூட ஆகவில்லையே’ என்றேன்.
அதற்கு அவன், ‘அக்கா சயந்தண்ணை மட்டுமல்ல, வேணு அண்ணை, குகன் அண்ணை, குட்டிமணியண்ணை மொத்தம் நாலுபேர். நேற்று வெயிக்கிள் மைன்ஸ் வைக்கேக்கை மிஸ் ஆகிட்டுதாம். அதோட சயந்தண்ணையின் பொடி கூடக் கிடைக்கவில்லையாம் என்கிறாங்க’ என்று கூறிமுடித்தான். என்ன கொடுமையிது. ஒன்றாக மன்னாரின் மாமணிகள் நான்கும் இதை எப்படி அவர்கள் தாங்கப்போகிறார்கள். இதில் எங்கட சயந்தனுமா? இனி இவன் தனது புனிதசேவையை தொடரவரமாட்டானா. இது உண்மையா? என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. இச்செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம்.
மருத்துவ சேவையில் என்னவென்ன அபிவிருத்திகள் எதிர்காலத்தில் செய்யவேண்டுமென்று ஐந்து நாட்களுக்கு முன்பு கூட என்னுடன் கலந்தாலோசித்தானே. எதிர் காலத்தில் மன்னாரில் வைத்தே எம் போராளிகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் சில சத்திரசிகிச்சைகள் செய்வதற்கு, அதற்காக அனுபவம் பெறுவதற்கு நான் படிக்கப் போகிறேன். அதற்கு ஒழுங்கு பண்ணுங்க. மீண்டும் விரைவில் வருவேன் என்று கூறிவிட்டுப் போனானே. இவை அனைத்தையும் விட்டுவிட்டு இவ்வளவு விரைவாக போவான் என்று யார்தான் நம்புவார்கள். யாருக்குத் தான் வேதனையிருக்காது. இதனால்தானோ என்னவோ இழப்புக்கள் பலதை தாங்கிய என் இதயம் கூட இவ் இழப்பினால் ஒரு கணம் கனத்தது.
நான் முதல் முதலாக இவனைச் சந்தித்த நிகழ்வு, இன்னும் என் மனதில் பசுமையாக நிழலாடுகின்றது. 1989ம் ஆண்டு ஆவணி மாதம் மதுரையில் நான் தங்கியிருந்த காலத்தில், இவன் மன்னாரில் இருந்து காயமடைந்த போராளிகளை மேலதிக விசேட சிகிச்சைக்காக அங்கு கொண்டு வந்திருந்தான். அப்போது ஒரு நாள் என்னிடம் வந்து, ‘அக்கா நாம கொஞ்ச நாளைக்கு இஞ்சை தங்க வேண்டியிருக்கு. அதுவரையும் சும்மா நிற்காமல் மெடிக்ஸ்சில் ஏதாவது படிக்க விரும்பிறம். என்னோட இன்னொரு மெடிக்ஸ் றங்கனும் கூட வந்திருக்கிறார். நீங்க எங்க இரண்டு பேருக்கும் ஏதாவது படிப்பியுங்களேன்’ என்றான். இதில் ஒரு விடயம் என்னவென்றால் அவர்கள் இருவரும் ஏற்கனவே மருத்துவத்தைப் பற்றி நிறையத் தெரிந்தவர்கள். மன்னாரில் காயமடைந்த போராளிகள் பலருக்கு சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றியவர்கள்.
அப்படிக் களத்தில் நின்று நிறைய அனுபவம் பெற்றவர்கள். அப்படியிருந்தும் என்னிடம் வந்து தங்களுக்கு மருத்துவம் படிப்பிக்குமாறு கேட்டவிதம் இவனை என் மனதில் நன்றாக உயர்த்திவிட்டது. அத்துடன், இவனுடன் ஒரு சில மணித்தியாலங்கள் கதைத்ததில் இவனுக்கு மருத்துவசேவையில் உள்ள பற்றுதலையும், காயமடைந்த போராளிகளைக் காப்பாற்றுவதில் இருந்த அக்கறையையும் அத்துடன் தன் மாவட்டத்தில் மருத்துவத்தை எப்படியெல்லாம் விருத்தியடையச் செய்யவேண்டுமென்ற அவாவையும் எனக்கு எடுத்துக்காட்டியது. இதற்கு நான் உடனடியாக சம்மதித்து ஒவ்வொரு நாளும் ஒரு சில மணித்தியாலங்களுக்கு போர்க்காயங்கள் பற்றியும் அவற்றிற்கான முதலுதவி சிகிச்சை போன்றவற்றையும் என்னால் இயன்றவரை படிப்பிக்கத் தொடங்கினேன். இப்படிப் படிப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் நான் வைத்தியசாலை வேலைப்பளுவின் நிமித்தம் களைத்துவந்து படுத்துவிடுவேன். ஆனால் இவன் விடமாட்டான். நான் வந்து மெதுவாக படுக்கையில் சரியவும் வந்து கதவைத்தட்டி ‘அக்கா வந்திட்டீங்களா. படிக்க வரலாமோ?’ என்று கேட்பான். இவனின் இத்தகைய அதிதீவிர ஆர்வம் என் களைப்பை ஒரு நொடியில் போக்கிவிடும் உடனே நான் எழுந்து வகுப்பு எடுக்க தொடங்கிவிடுவேன்.
இவன் படிப்பிலும்> வேலையிலும் உற்சாகமாகச் செயல் பட்டாலும் ஓய்வு நேரத்தில் அமைதியை விரும்புவான். மௌனமாக ஏதாவது யோசித்துக் கொண்டு இருப்பான். இதை நான் கவனித்து ‘என்ன அப்பன்> யோசனை. ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டால் ‘சீ அப்படி ஒன்றுமில்லை. ஏன் அப்படிக் கேட்டீங்க’ என்று விட்டு புன்னகைப்பான். அப்புன்னகையில் ஒன்றுமே புரியாது. இவன் அதிகம் அலட்டமாட்டான். நான் பாராட்டினாலும் ஓர் புன்னகை தான். நான் ஏசினாலும் அதே புன்னகை தான். சில சமயம் எனக்கு ‘புத்திமதிகள்’ கூறுவான், ஆறுதல் கூறுவான். அவ்வேளையில் எனக்கு இவன் மூத்தசகோதரன் ஆக மாறி விடுவான். இவ்வாறு அக்கறையுடன் படித்து முடித்ததும்> இவனுக்கும் றங்கனுக்கும் மன்னார் திரும்பவேண்டிய காலம் வந்துவிட்டது. உடனே நாம் மன்னார் போய் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ வேலைத்திட்டத்திற்கு என்னுடன் சேர்ந்து தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை இரவிரவாக பட்டியல் தயாரித்து> பின்பு கடை கடையாக ஏறியிறங்கி அவற்றைக் கொள்வனவு செய்து> அவற்றிற்கு எல்லாம் பொலித்தீன் போட்டு கடற்பயணத்திற்கு ஆயத்தமானான்.
இவன் எம்மையெல்லாம் விட்டுப் பிரியப் போகின்றான். என்றவுடன் எனக்கு மட்டுமல்ல> என்னுடன் தங்கியிருந்த மற்றைய போராளிகள் அனைவருக்கும் இனம் தெரியாத வேதனை. இதற்குரிய காரணம் என்னவென்றால் இவன் பழகும் விதம் காட்டும்பரிவு. மரியாதை, பாசம், பண்பு, போன்றவைதான். இவற்றை எந்த காலத்திலும் மறக்கமுடியாது. இவற்றையெல்லாம் விட எனக்கு இவனில் பிடித்த குணம் என்னவெனில் நான் மருத்துவ சம்பந்தமாக என்மனதில்பட்ட கருத்துகள் எண்ணங்கள் ஆலோசனைகள் ஏதாவது சொன்னால் அதை ஒரு போதும் மறக்கமாட்டான். அசட்டை செய்யமாட்டான். அக்கறையாக கருத்தில் எடுத்துக் கொள்வான். பின்பு இவற்றையெல்லாம் பல சந்தர்;ப்பங்களில் செயலில் காட்டி வெற்றியும் கண்டுள்ளான்.
இவன் மன்னார் கிளம்பும் நாளன்று வண்டிக்கு போகமுதல் என்னுடன் கதைக்கும்போது, என்னிடம் ஓர் உதவி கேட்டான். அதை உதவியென்று சொல்வதைவிட வேண்டுகோள் என்றே சொல்லலாம். அது என்னவெனில் ‘அக்கா நாம் இன்று மன்னார் போறம். நீங்கள் படிப்பித்ததை, சொல்லித் தந்ததை நிச்சயமாக செயலில் காட்டுவம். நீங்கள் தொடர்ந்து எங்களை மாதிரிப் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேணும். என்றோ ஒரு நாள் நாம் தமிழீழத்தைப் பார்க்கும் போது அங்கை காண்கிற இடமெல்லாம் அக்காவின் பிள்ளைதான் மெடிக்ஸ் செய்யவேணும். இது என்ரை ஆசை. அதோடை நீங்க நாட்டுக்கு போனால், எமது தலைவரிடம் அனுமதி பெற்று ஒருக்கா மன்னார் காட்டுக்கு வந்து (அப்ப அவர்கள் காட்டு வாழ்க்கை தான்) அங்கை எங்களுக்கு ஒரு மினித் தியேட்டருடன் கூடிய ஓர் மெடிக்ஸ் செற்றப் செய்ய ஆலோசனை தரவேணும். அக்கா நீங்கள் மருந்து சம்பந்தமாக புதிதாக ஏதாவது அறிந்தால்> அல்லது மருந்துகளைப் பற்றி புதியதகவல்கள் கிடைத்தால் ஏதாவது ஆலோசனைகள் தெரிவிக்கவேணும் என்றால்> அவற்றையெல்லாம் விளக்கமாக எழுதி என் பெயர் போட்டு மன்னாருக்கு அனுப்பி வையுங்க’ என்றான். இன்று வரை நான் இவனின் வேண்டுகோள்களை நிராகரித்தது கிடையாது. தொடர்ந்தும் இவனின் ஆசையை இறுதி மூச்சுவரை செய்யக் காத்திருக்கின்றேன்.
நான் இந்தியாவில் இருந்து 90ம் ஆண்டு எமது மண்ணிற்கு வந்த காலம் தொட்டு இவனுடன் கடிதம் மூலம் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இவனை முதல் முதலாக நேரடியாக சந்தித்தது சிலாவத்துறை வரலாற்றுச் சமரின்போது தான். இத்தாக்குதலுக்கு நாம் போன போது ஏற்கனவே இவனும்> இவனுடன் இருந்த மற்றைய மருத்துவப் போராளிகளும் சகலவிதமான ஒழுங்குகளையும் செய்து முடித்திருந்தார்கள். ஒரு களத் தாக்குதல் நடவடிக்கைக்கு எப்படி மருத்துவக்குழு தயாராக வேண்டுமோ அப்படி எதுவித குறையுமில்லாமல் தயார்ப்படுத்தி வைத்திருந்தான். இவன் அத்தாக்குதலில் அடம்பனிலுள்ள ஒரு மருத்து வீட்டில் என்னுடன் நின்று செயற்பட்டான்.
அங்கு நாம் எம்மிடம் வந்த காயமடைந்தவர்களில் உடனடியாக விசேட சிகிச்சைக்குட்படுத்த வேண்டியவர்களை உடனுக்குடன் வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு> மீதி சிறிய காயம் உள்ளவர்களை வேறு ஒரு மருத்துவ முகாமிற்கு அனுப்பினோம். அடுத்தநாள் காலை தாக்குதல் நின்றுவிடும். நானும் இவனும் முதல் நாள் இரவு வேறு ஒரு முகாமிற்கு அனுப்பிய சிறியகாயமுள்ள போராளிகளை போய்ப்பார்வையிட்டு அங்கு அவர்களுக்கு பூரணசிகிச்சை அளிப்போம். இதில் இவனின் பங்கு கணிசமானது> வியக்கத்தக்கது> பாராட்டத்தக்கது. இதில் ஒரு நோயாளிக்கு நான் மயக்க மருந்து கொடுத்தால் இவன் ஒப்பிறேசன் செய்வான். மற்றைய நோயாளிக்கு ‘ நான் மயக்க மருந்து கொடுக்கிறேன். நீங்க அக்கா ஒப்பிரேசன் செய்யுங்க’ என்பான். இதில் இருந்து என்ன விளங்கிறது என்றால்> இவன் ஒரே நேரத்தில் சேர்ஜரியையும். அனஸ்தீசியாவையும் படிக்க> பழக விரும்புகிறான். இதற்குரிய காரணத்தையும் இவனே சொன்னான். ‘அக்கா இப்படி நாம பழகினால் தான் தற்செயலாக நீங்க வர முடியாவிட்டாலும் நாம எங்கட பொடியங்களைக் காப்பாற்றலாம். அதோட அவசரத்துக்கு உதவும்’ என்றான்.
நான் இவனைப்பற்றி எழுதிக் கொண்டிருந்த வேளையில்> ஒரு மருத்துவ கருத்தரங்கிற்காக மன்னார் மாவட்ட மருத்துவப் பொறுப்பாளர் ஜீவன் இங்கு வந்திருந்தார். இவரும் சயந்தனும் 1985ம் ஆண்டு தொடக்கம் ஒன்றாக செயற்பட்டவர்கள். நான் அவருடன் சயந்தனைப்பற்றி அளவளாவிக் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அவர், ‘அக்கா அவன் மருத்துவத்தில் மட்டுமல்ல. வேறும் பல வேலைகளில் திறமைசாலி. உதாரணமாக குறிபார்த்து சுடுவதில், வாகனம் ஓட்டுவதில் ஏன் கண்ணிவெடி வைப்பதில் அவனுக்கு நிகர் அவனே தான். அத்துடன் அவனில் ஒரு பழக்கம் என்னவென்றால் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உடனடியாக சொல்லிக்கொடுக்கவேணும் அந்த விடயத்தில் பலரை ஊக்குவித்து முன்னேற்ற வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை உடையவன்’ என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘அவன் பங்குபற்றின தாக்குதல் பல. அவற்றில்:
பின்பு 87ம் ஆண்டு ஆனி மாதம் பூநகரி கோட்டைத்தாக்குதலிலும்,
என்று கூறி ‘அக்கா இதன் பிறகு 91ம் ஆண்டு மாசி மாதம் நடைபெற்ற சிலாவத்துறை தாக்குதலில் தொடங்கி இறுதிவரை அவன் செய்த செயற்பாடுகள் யாவும் உங்களுக்கு தெரியும் தானே’ என்றும் சொல்லி முடித்தார்.
ஆம் உண்மைதான். அதன் பின்பு நடைபெற்ற பல தாக்குதல்களிலும் நான் இவனுடன் கூட இருந்தேன். இதில் பலராலும் பேசப்படும் பெரியதம்பனை அடிபாட்டை எடுத்துக்கொண்டால்> அத்தாக்குதலில் இவன் மருத்துவசேவையை மட்டும் செய்யாமல் கண்ணிவெடி வைத்தல். வாகனம் செலுத்துதல் போன்ற பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தான். இதற்கு நான் ‘ஏன் இப்படி செய்கிறாய் மெடிக்சை விடப்போகிறாயா? என்று கேட்டால், ‘இல்லை அக்கா நான் மெடிக்சை விடமாட்டன். ஆனால் நாம நாட்டுக்கு நிறைய செய்யக்கிடக்கு. தனிய மெடிக்ஸ் செய்தா காணாது’ என்பான். இத்தாக்குதலில் தான் ஒரு சந்தர்ப்பத்தில் லெப்.கேணல் ராஜனுக்கு கையில் காயம். அதில் இருந்து கடுமையான குருதிப்பெருக்கு. பகல் நேரம். சகடைகள் இரண்டு இடைவிடாது மாறிமாறிக் குண்டுகளை கண்டபாட்டுக்கு போட்டுக்கொண்டிருந்தன. சிந்திக்க நேரமில்லை. துணிந்து வாகனத்தை எடுத்தான். லெப்.கேணல் ராஜனை ஏற்றினான். வெட்டையூடாக, குண்டு மழைக்கு மத்தியில் ‘எங்கை ஏலுமானல் என்ரை வாகனத்துக்கு குண்டு போடு பாப்பம்’ என்ற விதமாக வேகமாக படுசாமர்த்தியமாக, ஆனால் எதுவித பாதிப்போ சேதமோ இல்லாமல் அவரை எம்மிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான். இந்நிகழ்வை பின்ப சகல பொறுப்பாளர்களும் பாராட்டியதை> நான் என் காதால் கேட்டு மகிழ்ந்தேன்.
இறுதியாக இவன் என்னை யாழ்ப்பாணத்தில் வைத்து 1992ஆம் ஆண்டு தைமாதம் 1ம் திகதி சந்தித்துக் கதைத்தான். அப்போது மீண்டும் என்னிடம் இரு உதவிகள் கேட்டான். ஒன்று: தான் மேலும் சத்திரசிகிச்சை பற்றிப் படிக்கவேணும். அதற்கு ஒழுங்கு செய்யும்படியும், மற்றது முதலுதவி பற்றி முழுவதுமாக உள்ளடக்கி ஓர் புத்தகம் எழுதி தனது மாவட்டத்திற்கு தருமாறு கேட்டான். நான் என்றுமே இவனின் வேண்டுகோளை நிராகரித்தது கிடையாது. இவனின் ஆசைகள் வேண்டுகோள்கள் யதார்த்தமானவை. இவனின் ஏக்கங்கள் நியாயமானவை. இவன் இவ் உதவிகள் கேட்டு ஐந்து நாள், மிக அவசரமாக தன் உன்னதபணிகளை விட்டு விட்டு, எம்மையும் விட்டு விட்டு, தூரப்போய் விட்டான். நான் மன்னாருக்கு இறுதியாக நடந்த தாக்குதலுக்கு போனபோது இவனில்லை. என்னை வரவேற்க. இவன் காட்டிய இடங்கள், இவன் நடந்த இடங்கள் ஆகியன என்னை வெறுமையாக பார்ப்பது போல் உணர்வு. அதிலும் குறிப்பாக குஞ்சிக் குளத்திலுள்ள தொங்கு பாலத்தில் நடந்தபோது இவன், கூட வருவது போல் ஒரு பிரமை. ஆனால் இவன் தான் இன்று எம்மிடையே இல்லையே தவிர இவன் வளர்த்து விட்ட இவனின் தகமைகளைக் கொண்ட பல சயந்தன்கள் இவனின் ஆசைகள்> எதிர்பார்ப்புக்களைச் சுமந்து கொண்டு மருத்துவ சேவையை செய்யத்தொடங்கியுள்ளார்கள். இன்று இவனின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. இவனது ஆசைகள் பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.
-டாக்டர் அக்கா-
![]()