
மாவீரர் பொன் சிவகுமாரன்
தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான உரும்பராயைச் சேர்ந்த பொன்னுத்துரை சிவகுமாரன் ஒரு சில இளைஞர்களைச் சேர்த்து சிங்கள அரசையும், தமிழ்த் துரோகிகளையும் எதிர்த்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார். 1971ம் ஆண்டு தமிழினத்தின் உரிமைக்குரலை நசுக்க வட பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசின் தலைமைத் தரகராக இருந்து செயற்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கொல்லும் முயற்சியில் இறங்கினான். அவன் வைத்த குறி தவறவில்லை. யாழ் பிரதான வீதியில் வைத்து துரையப்பாவின் காருக்குள் நேரக்கணிய வெடிகுண்டு (டைம் பாம்) வைத்தான். சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடித்த வேளையில் துரையப்பா காரில் இல்லாத காரணத்தினால் உயிர் தப்பினான். கார் சிதறிச் சின்னாபின்னமானது.
அதுபோன்று சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் துணை அமைச்சராகச் செயலாற்றிய சோமவீர சந்திர சிறியின் காருக்கும் வெடிகுண்டு வைத்தான். இந்த இரு நடவடிக்கைகளின் பேரில் பொலீசாரால் கைது செய்யப்பட்ட சிவகுமாரன் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டான். அவனது நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் கருவிகள் எவ்வாறு அவனுக்குக் கிடைத்தது என்று பதில் சொல்லுமாறு பொலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டான். இருந்தும் அவன் தனக்கு உதவியவர்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஆட்சியாளரால் அவன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட முடியாத நிலையில் சிவகுமாரன் விடுதலையானான்.
விடுதலையாகி வெளியே வந்த சிவகுமாரன் தன்னை மீண்டும் விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக அர்ப்பணித்தான். தமிழினத்தை பற்றிக் கொண்டிருந்த தீண்டாமை நோயை அகற்ற அதற்கான பிரச்சாரங்களிலும் சமபந்தி போசனம் போன்ற நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டான். அவன் ஊரான உரும்பராய் என்ற இடத்திலே சாதிவெறி பிடித்த நாகலிங்கம் நடராசா என்ற பெற்றோல் நிலைய உரிமையாளன் சிறிமாவோ கட்சிக்காரன். பொலீசாருக்குத் தகவல் தருபவன். சிவகுமாரன் தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போசனம் போன்ற நடவடிக்கைகளினால் வெறி கொண்டு சிவகுமாரனும் அவனது தோழர்களும் அரசுக்கு எதிராகச் செயற்படுவது குறித்து பொலீசுக்குத் தகவல் கொடுக்கிறான்.
இது சிவகுமாரனுக்குத் தெரிய வருகிறது. போராட்டம் இடையூறின்றி நடைபெற வேண்டுமானால் துரோகி ஒழிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்து அவன் மீது குறி வைத்தான் சிவகுமாரன். சிவகுமாரனும் அவனது தோழர்களும் அந்தத் துரோகியை ஒழிப்பதற்கு எடுத்த இரண்டு முயற்சிகளிலிருந்து துரோகி நடராசா தப்பி விடுகிறான்.
அதே காலத்தில்தான் (1974 ஜனவரியில்) யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியின் போது மாநாடு பார்க்க வந்த ஒன்பது தமிழர்கள் பொலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாகக் கொல்லப்பட்டனர். இதை நேரில் பார்த்த சிவகுமாரன் அந்தப் படு கொலைக்குக் காரணமான சிங்கள பொலீஸ் அதிகாரி சந்திரசேகரவைப் பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதமேற்று இரண்டு தடவைகள் முயற்சியில் இறங்குகிறான். சிவகுமாரனுடன் கூடச்சென்ற தோழர்களின் குறைபாடுகளினால் இரண்டு தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சியின் போதும் சந்திரசேகரா தப்பி விட்டான். இந்நிலையில் 1974ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள் கோப்பாய் என்ற இடத்தில் வைத்து பொலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சிவகுமாரன் கையிலிருந்த துப்பாக்கியின் இறுதிக்குண்டு தீரும்வரை போராடி பொலீசாரிடம் கைதாகும் நிலை ஏற்பட்டதும் தன்னிடம் தயாராக வைத்திருந்த ‘சயனைட்’ விடத்தினை அருந்தி வீர மரணடைந்தான்.
சிவகுமாரன் அமைப்பு ரீதியாகச் செயற்படாமல் தன் தோழர்களின் உதவியோடு செயற்பட்டான். சிங்கள ஆட்சியாளருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி முதற்களப் பலியானான் சிவகுமாரன். அவன் எண்ணியவற்றை அவன் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமற் போயிருக்கலாம். ஆனால் தனது 24 வயதிற்குள் 3 ஆண்டுகளைச் சிறைக்கூடத்தில் கழித்த அவன் தன் இலட்சியத்துக்காக இறுதிவரை போராடி மாண்டான். ஈழத் தமிழருக்காக முதன் முதலில் ஆயுதப் போரில் தன்னுயிரை அர்ப்பணித்து ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தி மறைந்தான் மாவீரன் சிவகுமாரன். அவனது போராட்ட அனுபவங்கள் பிற்கால இளைஞர்களுக்கும், இயக்கங்களுக்கும் பாடங்களாக அமைந்தன. அரசியல் தலைவர்களுக்கே அதுவரை நடைபெறாத அளவிற்கு மக்கள் பெருந்திரளாகக் கூடி அவ்வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தமிழ்ப்பெண்களும் மாணவிகளும் நடைமுறை மரபை எல்லாம் மீறிச் சுடுகாடு வரை சென்று அவ்வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பு:
02.07.1976 அன்று, விடுதலை வீரன் சிவகுமாரன் சாதி ஒழிப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்டு பொறுக்க முடியாது சாதி வெறி பிடித்து – அவனை வன்முறையாளனென சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுத்ததுடன், தொடர்ந்தும் விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த தமிழ் இளைஞர்களைப் போலீசாருக்குக் காட்டிக் கொடுத்து வந்த உரும்பராயைச் சேர்ந்த பெற்றோல் நிலைய அதிபர் நாகலிங்கம் நடராசாவை விடுதலைப் புலிகள் குண்டு வீசிக் கொன்றனர்.
– விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்