×

எம்.ஜி.ஆரும் புலிகளும் – விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்

எம்.ஜி.ஆரும் புலிகளும் – விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்

அந்த வரலாற்றுக் காலகட்டத்தில், அந்த மனிதரிடம் தான் தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கும் அரசியல் அதிகாரம் இருந்தது. அரசியல் அதிகாரத்துடன் பண பலமும் இருந்தது. இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர். மக்கள் திலகமென தமிழுலகம் அவரைப் போற்றியது. அவர் ஒரு அபூர்வமான மனிதர். அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி. அவரிடம் ஒரு புதுமையான மனிதம் இருந்தது. அந்த மனிதப் பண்பு மனிதர்களைக் கவர்ந்து இழுக்கும் சக்தி பெற்று விளங்கியது. அவர் மிகவும் கவர்ச்சி மிக்க தலைவராக விளங்கினார். அவர்தான் எம்.ஜி.ஆர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்களின் பெருமை பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவரது திராவிட இயக்கப் பின்னணி பற்றியும் கலை உலக, அரசியல் உலக வாழ்க்கை பற்றியும் அறிந்திருக்கின்றேன். ஆயினும் அவரை சந்தித்துப் பழகும் வாய்ப்புக் கிட்டுமென நான் கனவுகூட கண்டதில்லை. என்றாலும் அந்த வாய்ப்புக் கிட்டத்தான் செய்தது. எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் மத்தியில் ஒரு உறவு பிறந்தது. அது ஒரு வரலாற்று உறவாக மலர்ந்தது.

தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர விடுதலை வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

அவர்கள் மத்தியிலான உறவு நல்லுறவாக வளர்ந்து, நட்புறவாகப் பரிணமித்தது. பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தன்னாலான உதவிகளை வழங்க எம்.ஜி.ஆர் முன்வந்தார். பல வழிகளில் உதவியும் செய்தார். அவரது பேருதவிகள் எமது விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் என்றுமில்லாத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.

எம்.ஜி.ஆர் அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வழிகளில், எப்படியாக உதவினார்? எத்தகைய ஆபத்தான எதிர்விளைவுகளையும் பொருட் படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து அவர் காரியங்களைச் சாதித்தார்? எமது இயக்கத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள், நெருக்குவாரங்களிலிருந்து எவ்வாறு எமக்குக் கைகொடுத்து உதவினார்? இப்படியான பல விடயங்கள் காலத்தால் சாகாத நினைவுகளாக எமது போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை. எம்.ஜி.ஆர் அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் முதன்முதலாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனைத் தொடர்ந்து, தனித்தும் தலைவர் பிரபாகரனுடனும் பல சூழ்நிலைகளில் முதலமைச்சரை சந்தித்து உறவாடும் அரிய சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன. அவற்றை எல்லாம் உண்மை வழுவாது சுருக்கமாக இங்கு பதிவு செய்துள்ளேன். தமிழீழ விடுதலை வரலாற்றில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் இக்குறிப்புகள் பயன்படும் என்பது திண்ணம்.

முதன் முதலாகத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்தித்த பின்னணி ஒரு சுவாரஸ்யமான கதை.

1984ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்பொழுது நானும் எனது மனைவி அடேலும் சென்னை நகரப் புறத்திலுள்ள திருவான்மையூரில் விடுதலைப் புலிப் போராளிகளுடன் வசித்து வந்தோம். எமது இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் மூத்த தளபதிகள் சிலரும் போராளிகளும் எமது இருப்பிடத்திற்குச் சமீபமாகத் தங்கியிருந்தனர். இந்திய மத்திய அரசு இரகசியமாக ஒழுங்கு செய்த இராணுவப் பயிற்சி முடிந்தபோதும், தமிழக நாட்டுப் புறங்களில் பயிற்சிப் பாசறைகளை நிறுவி, புதிய போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அடையாறில் அமையப்பெற்ற விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகத்தில் நான் பணிபுரிந்து வந்தேன்.

அந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகள் மட்டுமன்றி மற்றைய போராளி அமைப்புகளும் சென்னையைப் பிரதான பின்தளமாகக் கொண்டு இயங்கி வந்தன. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்), ஈழ விடுதலை அமைப்பு (ஈரோஸ்) ஆகியன, இந்திய இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் செயற்பட்டு வந்தன. பிளவுபட்டு, பிரிந்து நின்ற போராளி அமைப்புக்களை ஒரே இலட்சியத்தில், ஒரே அணியாக ஒன்றிணைத்தால் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலப்படும் என தமிழ் மக்கள் மத்தியில் அவ்வேளை பரவலாக கருத்தொற்றுமை நிலவியது. பல்வேறு வட்டாரங்களிலிருந்து ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் வசித்த ஈழத் தமிழ் பிரமுகர்கள் சிலர் சென்னைக்கு வருகை தந்து விடுதலை அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இந்த ஒற்றுமை முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 1983ஆம் ஆண்டு ஜூலையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இன ஒழிப்புக் கலவரத்தை அடுத்து தமிழ்நாடு எங்கும் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி கிளர்ந்தது. என்றுமில்லாத வகையில் தமிழின உணர்வு மேலோங்கி நின்றது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த போராளி அமைப்புகள் மீது அனுதாபமும் ஆதரவும் நிலவியது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கி, தமிழ்நாட்டுத் தமிழரின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் போட்டியும் நிலவியது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

அப்பொழுது திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். ஈழ விடுதலை அமைப்புகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த அவர், விடுதலை அமைப்புக்களின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பையும் விடுத்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் ஈழ விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் தம்மைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் இந்த அழைப்பை தமிழ்நாட்டுத் தினசரிகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன.

இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களிடமிருந்து இன்னொரு அழைப்பு வந்தது. திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் குறிப்பிட்ட தினத்திற்கு முதல்நாள் தம்மைச் சந்திக்குமாறு ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்களுக்கு திரு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். கலைஞரின் அழைப்பினைத் தி.மு.க. பத்திரிகைகள் முக்கியமளித்துப் பிரசுரித்தன.

ஈழ விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை முயற்சியில் தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களும் போட்டியில் இறங்கியது எமக்கு ஒரு சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. தமிழ்நாட்டு அரசியலில் பக்கசார்பற்ற நிலையைப் பேணுவதும் எமது கொள்கையாக இருந்தது. அப்படியிருக்கும் பொழுது திராவிட இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள இப்போட்டி எமக்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. திரு. பிரபாகரன் அவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன்.

கலைஞரின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தால் எம்.ஜி.ஆரைப் பகைக்க நேரிடும், கலைஞரின் அழைப்பை நிராகரித்து, எம்.ஜி.ஆரைச் சந்தித்தால் கலைஞரைப் பகைக்க நேரிடும். இவ்விரு தலைவர்களினதும், அவர்கள் தலைமை தாங்கும் அரசியல் இயக்கங்களினதும் ஆதரவும் அனுதாபமும் எமக்கு அவசியம், எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவசியம். ஆகவே பக்க சார்பு நிலையெடுத்து யாரையும் பகைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை. அத்துடன் எமக்கு இன்னொரு பிரச்சினையும் இருந்தது. எமது இயக்கத் தலைமையின் பாதுகாப்புப் பிரச்சினை அது. அக் காலகட்டத்தில் போராளி அமைப்புகள் மத்தியில் முரண்பாடும் பகைமையும் நிலவியது. குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கும் புளொட் இயக்கத்திற்கும் மத்தியில் மோதல் வெடிக்கும் அளவிற்குப் பகைமை இருந்தது. ஏற்கனவே, சென்னையிலுள்ள பாண்டி பஜாரில் புளொட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, இரு அமைப்புகள் மத்தியிலும் விரோதம் முற்றியிருந்தது. அப்படியான சூழ்நிலையில் ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவது என்பது சாத்தியமற்றது. ஆபத்தானதும் கூட. ஒற்றுமையை வேண்டி நின்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு எம்மிடையே நிலவிய முரண்பாடுகள், பகைமை உணர்வுகள் பற்றி எடுத்து விளக்கிப் புரிய வைப்பதும் சாத்தியமில்லை. இந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிற்கும் ஒரேயொரு தீர்வுதான் இருந்தது. அதாவது கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் சந்திக்காமல் தவிர்ப்பது. இந்த யோசனையைப் பிரபாகரன் ஏற்றுக் கொண்டார்.

கலைஞர் கருணாநிதி அழைப்பு விடுத்த நாள் வந்தது. விடுதலைப் புலிகளையும் புளொட் இயக்கத்தையும் தவிர ஏனைய அமைப்புகளின் தலைவர்களான திரு.பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்), திரு.சிறீசபாரெத்தினம் (ரெலோ), திரு.பாலகுமார் (ஈரோஸ்) ஆகியோர் கலைஞரைச் சந்தித்தனர்.திரு.பிரபாகரனும், திரு.உமா மகேஸ்வரனும் தமது அழைப்பை ஏற்று வரவில்லை என்பது கலைஞருக்குக் கவலைதான். ஆயினும், எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்கு முன்னராக ஏனைய விடுதலை அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்ததை அவர் ஒரு அரசியல் வெற்றியாகக் கருதியிருக்க வேண்டும். அதனால்தான் அந்த சந்திப்பை அவர் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பெரிதுபடுத்திப் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.மறுநாள் அந்தச் சந்திப்பைத் தலைப்புச் செய்தியாகப் புகைப்படங்களுடன் தி.மு.க. பத்திரிகைகள் பிரசுரித்தன.

தான் குறித்த தினத்திற்கு முதல் நாளே, கலைஞர் கருணாநிதி மூன்று ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து, ஒரு அரசியல் நாடகத்தை மேடையேற்றி, அதனை ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது எம்.ஜி.ஆருக்குக் கடும் சினத்தை ஏற்படுத்தியது. ஒரு நல்ல நோக்குடன் தான் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சியைச் சுயநல அரசியல் நோக்கத்திற்காகக் கலைஞர் குழப்ப முயற்சிக்கிறார் என அவர் எண்ணினார் போலும்.

அன்று மாலை, தமிழ்நாட்டு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ்மா அதிபர் (D.I.G) திரு.அலெக்ஸாந்தர் அடையாறிலிருந்த எமது அரசியல் செயலகத்திற்கு வருகை தந்து என்னைச் சந்தித்தார். திரு.அலெக்ஸாந்தரை எனக்கு ஏற்கனவே தெரியும். பல தடவைகள் சந்தித்து உறவாடியதால் நல்ல பழக்கம். சென்னையில் எழுந்த சில பிரச்சினைகளை அவர் தலையிட்டுத் தீர்த்து வைத்து எமக்கு உதவியவர். முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமானவர் என்பதும் எனக்குத் தெரியும்.

“கலைஞர் கருணாநிதி மீதும், அவரைச் சந்தித்த போராளி அமைப்புகளின் மீதும் முதலமைச்சர் கடும் சினங்கொண்டிருக்கிறார். அந்த மூன்று அமைப்புகளின் தலைவர்களையும் தான் இன்று சந்திக்கப்போவதில்லை என்றும் முதல்வர் கூறினார். விடுதலைப் புலிகளை மட்டும் அவர் இன்று சந்திக்க விரும்புகிறார். இன்று மாலை விடுதலைப் புலிகளை, சென்னை பறங்கிமலையிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்து வருமாறு எனக்கு அவர் ஆணை பிறப்பித்து இருக்கிறார்” இவ்வாறு சொன்னார் திரு. அலெக்ஸாந்தர்.

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. எதற்கும் நான் தலைமைப்பீடத்துடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என்றேன். “முதலமைச்சர் உங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார். தயவு செய்து அவரை ஏமாற்றிவிட வேண்டாம். நீங்கள் முதலமைச்சரையும் தமிழ்நாட்டு அரசையும் பகைத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் செயற்படுவது கடினமாக இருக்கும்” என்று லேசாக ஒரு எச்சரிக்கையும் விடுத்தார். உமா மகேஸ்வரனையும் முதல்வர் சந்திப்பாரா என்று கேட்டேன். புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புளொட்டின் தலைவர் உமாவுக்கும் மத்தியிலான பகை முரண்பாடு பற்றி அலெக்ஸாந்தர் நன்கு அறிவார். உமாவைப் பிறிதொரு தினத்தில் முதலமைச்சர் சந்திப்பார் என்றும், முக்கியமாகப் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் சந்திப்பதையே அவர் பெரிதும் விரும்புகிறார் என்றும் அலெக்ஸாந்தர் சொன்னார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது. முதல் சந்திப்பில் எமது இயக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும். எமது இயக்கத்தின் போராட்ட இலட்சியத்தை எடுத்து விளக்க வேண்டும் . ஆகவே, முதற் சந்திப்பிற்கு என்னைப் போகுமாறு பிரபாகரன் பணித்தார். எம்.ஜி.ஆர் வற்புறுத்தினால் பின்பு தாம் அவரைச் சந்திக்கலாம் என்றும் பிரபாகரன் முடிவு எடுத்தார். எனது தலைமையில் ஒரு குழுவாகச் சென்று அன்று மாலை முதலமைச்சரை சந்திப்பதென்று முடிவாயிற்று. என்னுடன் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ர மணியம் (இளங்குமரன்), சமீபத்தில் வீரச்சாவு எய்திவிட்ட கேணல் சங்கர், அன்று ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்த திரு.மு.நித்தியானந்தன் ஆகியோர்.

நாளை சந்திக்கும் தினமாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் கலைஞர் கருணாநிதி வீம்பிற்காக தானும் ஒரு அழைப்பை விடுத்து ஒரு நாள் முன்கூட்டியே ஈழ விடுதலை அமைப்புகளைச் சந்திக்க விரும்பினார். கலைஞர் விடுத்த அழைப்பு ஒற்றுமை முயற்சியை நோக்காகக் கொண்டதன்று. அவர் உங்களுடன் போட்டி போட்டு அரசியல் இலாபம் தேட முயற்சித்தார். அதனால்தான் நாங்கள் அவரது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.” என்று விளக்கினேன். முதல்வரின் முகம் மலர்ந்தது. “நீங்கள் தமிழ்நாட்டு அரசி யலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றீர்கள்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.”

“ஈழ விடுதலைப் போராளிகள் ஐந்து அமைப்புகளாக ஏன் பிளவுபட்டு நிற்க வேண்டும். ஒரே அணியில் ஒன்றுசேர முடியாதா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
“ஒற்றுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஒரு உறுதியான, தெளிவான இலட்சியத்தின் அடிப்படையில்தான் போராளி அமைப்புகள் ஒன்றுசேர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிறையவுண்டு. நடத்தையிலும் வேறுபாடு உண்டு. விடுதலைப் புலிகள் தனித்துவமானவர்கள். தனித்துவப் பண்பியல்பு கொண்டவர்கள். ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு போன்ற உயரிய பண்புகளை இறுக்கமாகப் பேணுபவர்கள். சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகளும் இலட்சிய உறுதிப்பாடும் ஏனைய அமைப்பினரிடம் காணமுடியாது” என்று விளக்கினேன். மௌனமாக ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலி வீரர்கள் கடைப்பிடிக்கும் பண்பியல்புகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

– தொடரும்
– விடுதலை
– தேசத்தின்குரல் பாலா அண்ணை
– தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments