×

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி.

சாவகச்சேரி, மட்டுவில் பகுதிகள் எறிகணை வீச்சில் சிதைந்து கொண்டிருக்கின்றது. போரின் அவலங்களை தவிர்க்க முடியாமல் தாங்கிக் கொள்கின்றது. வாழ்விற்கான வளங்கள் அனைத்தையும் இழந்த குடும்பங்கள் ஒரு சில நிமிடங்களில் நாதியற்றவையாகின. பழங்களுக்குப் பெயர் பெற்ற பிரதேசம் பாழடைகின்றது. இந்த மக்களைத்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கின்றோம் என இராணுவம் பிரச்சாரம் செய்து வந்தது. அந்த மக்கள் மீதே எறிகணை வீச்சினால் இப்போது சிதை மூட்டுகின்றது. ஓயாத அலை 03ன் தொடர் தோல்விகளால் அரண்டுபோன இராணுவம் தன் வழமையான பாணியில் வகை தொகையின்றி அவர்களைக் கொன்று குவிக்கின்றது. நிமிடத்திற்கு நிமிடம் உயிர்கள் பறிபோயின. தலைமுறைச் சேமிப்பால் உருவான வீடு வாசல்கள் எல்லாம் கற்குவியல்களாகின்றன. போராளிகள் உதவிபெற்று, சாவயல்களைக் கடந்து, பூநகரி நீரேரி தாண்டி,வன்னிப்பெருநிலம் செல்வதா? இல்லை தன் தலைக்கு மேல் மட்டும் குண்டுவீசா இயல்புடைய பகைவன் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட பிரதேசங்களினுள் ஒதுங்குவதா? இல்லை நடப்பது நடக்கட்டும். எல்லாம் ஊழ்வினைப் பயன் என இங்கேயே தங்கிவிடுவதா? முடிவெடுக்க முடியாமல் மக்கள் தடுமாறுகின்றார்கள்.

வெளிகளை அண்மிய பிரதேசங்களில், மரநிழல்களில் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டிருக்கின்றார்கள். மாட்டுவண்டிகள், உழவியந்திரங்கள் போன்ற வாகனங்களைச் சுற்றிவர தங்கள் மூட்டை முடிச்சுக்களை அடுக்கி வைத்துள்ளனர். எறிகணைகள் விழும் வேளை அவற்றை அரண்களாகப் பாவித்துப் பதுங்கியும் கொள்கின்றார்கள். காயமடைந்த கால்நடைகள் கூட தாங்கள் வளர்த்த வீட்டிற்கு வந்தே தங்கள் இறுதி மூச்சை விடுகின்றன. இறந்து ஊதிப்பெருத்து வெடித்துப் புழுத்த விலங்குகளால் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் பரவிக்கிடக்கின்றது. அவசர அவசரமாக அங்குவந்த போராளிகள் கள மருத்துவமனையொன்றை அமைப்பதில் மும்முரமாக ஈடுபடுகின்றார்கள். அருகில் ஒரு குடும்பம் இருப்பதை அவதானித்து அவர்களிடம் சென்று நிலைமையை விளங்குகின்றார்கள். தங்கள் மருத்துவமனையை எதிரி எப்படியும் மோப்பம் பிடித்துவிடுவான். அதன்பின் தொடரான செறிவான எறிகணைவீச்சை மேற்கொள்வான். ஆதலால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிருந்து வெளியேறுங்கள் எனக் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் ‘தம்பிமாரே! நீங்கள் இருக்கிறியள் தானே! நாங்களும் இருப்பம்’ எனக்கூறி மறுத்துவிட்டார்கள். அகதிகளாகி தங்கள் கௌரவத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதைப் புரிய முடிகின்றது. விளைவு எதிர்பார்த்தபடியே விபரீதமாக நடந்தே விட்டது. மறுநாள் நடைபெற்ற எறிகணை வீச்சில் குடும்பத் தலைவி அவ்விடத்திலேயே மரணமடைந்து விட்டார்.

ஒருவன் சிதைந்திருந்த தன் செல்ல மகளை நெஞ்சோடு அணைத்த வண்ணம் மறுகையால் காயமடைந்திருந்த மற்ற மகனை இழுத்தபடியே, காயங்களுடன் இரத்தம் சொட்டச் சொட்ட இவர்களிடம் வந்து சேர்ந்தார் தந்தை. அக்கோரக் காட்சியைக் கண்டவர்கள் உறைநிலையிலிருந்து மீள சில நிமிடங்கள் எடுத்தது. வேகமாக உயிர்காப்பிற்கான அவசர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். காயமடைந்திருந்த ஏனைய போராளிகளுடன் மேலதிக சிகிச்சைக்காக அவர்களையும் வன்னித்தளம் அனுப்பி வைக்கின்றனர். இடையில் கிடைத்த சிறு ஓய்வின்போது இறந்த தாயின் உடலை அருகில் இருந்த பதுங்கு குழியொன்றினுள் போட்டு மூடிவிடுகின்றனர். அவ்விடம் இப்போது இராணுவ சூனிய பிரதேசத்தினுள் காணப்படுகின்றது.

‘காயம்’ ஏற்றிவந்த போராளிச் சாரதியொருவன் கூறுகின்றான் “அண்ணா! முன்னுக்கு ஒரு குடும்பம் மாட்டுப்பட்டிருக்கு ஒரு அம்மா பிள்ளை பெறப்போறா. இந்தச் செல்லடிக்குள்ள அங்கால இங்கால நகர ஏலாது என்று பயப்பிடுதுகள். நீங்கள் ஒருக்காப் போய்ப் பாருங்கள்.” உடனேயே இருவர் அவ்விடம் செல்கின்றார்கள். சிறிது நேரத்திற்கு முன் அவ்வீட்டில் எறிகணை வீழ்ந்து வெடித்துள்ளது. வீட்டின் முன்பகுதி சிதைந்து காணப்படுகின்றது. வெடிமருந்தின் நெடி பலமாக வீசுகின்றது. முறிந்து வீழ்ந்திருக்கும் வேப்பமரத்தைத் தாண்டி வீட்டினுள் செல்கின்றார்கள். ‘ஏடாகூடமாக ஏதாவது நடந்திருக்குமோ’ எனும் அச்சம் துளிர்விடுகின்றது. பிரசவவலியால் துடிக்கும் அப்பெண் கட்டிலின் கீழே கிடத்தப்பட்டுள்ளார். ஏனையவர்கள் ஆங்காங்கே பதுங்கியுள்ளனர். இவர்கள் அப்பெண்ணின் மருத்துவப் பதிவேட்டை வேண்டிப் பார்க்கிறார்கள். உடனே கூறுகின்றார்கள் “அம்மா எங்களுக்கு மகப்பேறு சம்மந்தமான வைத்தியத்தில் போதிய அனுபவம் இல்லை. உங்கட பிரிவு இரத்தமும் அவசரத்திற்கு இங்கு எடுக்க இயலாது. நாங்கள் வேகமாக ஒழுங்கு செய்யிறம் நீங்கள் வன்னிக்குப் போங்கள்.” கூறியவர்கள் அவர்களின் அனுமதிக்கு நிற்காமலேயே ‘பிக்கப்’ வாகனமொன்றை அவ்விடத்திற்கு வரவழைத்து அவர்களைப் பின்னுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். பூநகரி நீரேரியினுள் பரவலாக எறிகணைகள் விழுந்து வெடிக்கின்றன. அதனால் ஐம்பதடி உயரம் வரை நீர்த்திவலைகள் எழுந்து வானவேடிக்கை
காட்டுகின்றது. எதனையும் நிதானித்து அவதானிக்காமல் வாகனத்தில் இருந்தவர்களை வேகமாக விசைப்படகிற்கு மாற்றி நீரேரியைக் கிழித்துச் செல்கின்றார்கள். இக்கரை கொண்டு வந்து சேர்க்கவும் மழலை வணங்கா மண்ணை எட்டிப்பார்க்கவும் சரியாக இருந்தது. தாயையும் சேயையும் ‘அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. காயமடைந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் எண்ணிக்கை மூன்றாம் இலக்கைத் தொட்டுவிட்டது. வாகன விசைப்படகுகளின் விரைவான விநியோகங்கள் தடைப்பட்டு விட்டன. அப்பொழுது சில மக்கள் தடுமாற்றமும் நம்பிக்கையீனமும் நிறைந்த முகங்களுடன் இவர்களிடம் வருகின்றார்கள். அவர்கள் கேட்ட உதவி இயக்க மருத்துவரைத் தடுமாற வைத்துவிட்டது. சற்றுத் தொலைவில் இரவு பிள்ளைபெற்ற தாயொருத்தி பதுங்குகுழியொன்றினுள் படுத்துள்ளார். அவரின் நச்சுக்கொடி (சூல்வித்தகம்) இன்னும் வெளிவரவில்லை. இரத்தப் பெருக்கும் அதிகமாக இருக்கு. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்கள் கேட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாதிடமும் மருத்துவர் ஒருவரிடமும் உதவிகேட்டு அது கிடைக்கவில்லை என்பதையும், சாவகச்சேரி பொது மருத்துவமனை ஆளரவமற்று சிதைந்து கிடக்கிறது என்பதையும் சேர்த்தே சொன்னார்கள்.

போர்க் கடமையில் ஈடுபட்டிருக்கும் களமருத்துவர்கள் கைபிசைந்து நிற்கின்றார்கள். மகப்பேற்றியல் மருத்துவத்தில் போதிய அனுபவம் பெறத் தவறியமையையிட்டு மனம் வருந்துகின்றனர். என்ன முடிவெடுக்கலாம் என களமருத்துவப் பொறுப்பாளரைப் பார்க்கின்றனர். அவர் சொல்கின்றார். “இதனைக் கையாளக்கூடிய பெண் மருத்துவரை அனுப்பச்சொல்லி இருக்கிறான். ஆனால் ஆள்வந்து சேர இரண்டு மூன்று நாள் எடுக்கும்..” சிறிது நிதானித்தவர் தொடர்கின்றார். “நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். நடக்கிறதுக்கு நான் பொறுப்பெடுக்கிறன். இவர் பொறுப்பெடுப்பதாகக் குறிப்பிட்டது, குறித்த தாயின் உயிர்ப்பிழைப்பையோ அல்லது உயிரிழப்பையோ மட்டுமல்ல. அதிகமாக காயங்கள் வரும் நேரம் இரு மருத்துவரின்
பங்களிப்பு இவ்விடத்தில் இல்லாமல் போவது சிலரின் உயிரிழப்பிற்கு வழிவகுக்கும். லாபநட்டக் கணக்குப் பார்த்தால் ஒரு உயிரைக்காக்க போகிறவர்களும் திரும்பிவர முடியாது போகலாம்.” ஆகியவற்றையும் சேர்த்துத்தான் பொறுப்பாளரின் இம்முடிவு அவரின் ஆத்மார்த்த உணர்வையே வெளிப்படுத்துகின்றது.

களமருத்துவர் ஒருவரும் இவர்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டாம் வருட மருத்துவபீட மாணவனுமாக இருவரும் புறப்பட ஆயத்தமாகின்றார்கள். தேவையானவை எனக் கருதிய மருந்துகளையும் உபகரணங்களையும் பெட்டியொன்றினுள் அடுக்குகின்றார்கள். இருவரையும் பயம் பற்றிக் கொள்கின்றது. சிகிச்சை செய்ய முயற்சித்து உயிரைப் பறித்து விடுவோமோ! எனும் அச்சம் அவர்களின் பேச்சையே அடைத்து விட்டது. எந்தப் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களும் அவர்களின் மூளையில் உறைக்கவில்லை. குறித்த இடம் வந்து சேர்ந்தவர்களுக்கு துர்நாற்றம் முகமன் கூறுகின்றது. ஆட்டுக்கொட்டகையொன்றின் அருகில் அப்பதுங்குகுழி அமைந்துள்ளது. ஒன்றரையடி அகலமும், ஐந்தடி நீளமும் குறைந்த ஆழமும் உடையதாகவே அது காணப்படுகின்றது. அதனுள் அப்பெண் சோர்ந்து கிடக்கின்றாள். மகப்பேறு நடந்து பலமணிகள் கடந்து விட்டிருந்தது. குருதியிழப்பு முகத்தை வெளிறடித்து விட்டுள்ளது. போர்ச்சூழலில் பிரசவித்த பசுந்தளிரை பரிதவிக்க விட்டு இறந்துவிடுவோமோ என்னும் ஏக்கம் அவள் பார்வையில் வெளிப்படையாகவே தெரிகின்றது. திரவஊடகம் ஏற்றி அவளின் குருதியிழப்பைத் தற்காலிகமாக ஈடுசெய்தவர்கள் சிறிது யோசிக்கின்றார்கள். தாங்கள் சிகிச்சை செய்வதிலும் பார்க்க, அனுபவம் வாய்ந்த மேற்படி மருத்துவமாதோ அல்லது மருத்துவரோ செய்வதே சாலச்சிறந்தது எனும் முடிவிற்கு வருகின்றார்கள். அவர்களை நாடிச் செல்கின்றார்கள்.

மேற்படி இருவரிடமும் குறித்த பெண்ணின் உடல்நிலையை விளக்கிக் கூறுகின்றார்கள். சிகிச்சையளித்து உதவும்படி கேட்கிறார்கள். அவர்கள் மறுத்துவிடுகிறார்கள், நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் அப்பெண்ணை இங்கு கொண்டு வருகின்றோம் எனவும் கேட்டுப் பார்த்தார்கள். அதற்கும் அவர்கள் நாகரீகமாக மன்னிப்புக் கேட்டு மறுத்துவிட்டார்கள். இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது. நடப்பது நடக்கட்டும். நாங்களே முயற்சிப்போம் எனும் முடிவிற்கு வருகிறார்கள்.

மீண்டும் திரும்பியவர் முகங்களை உறவினர்கள் உற்று நோக்குகின்றனர். அதனூடு எதையோ வினாவ முயற்சிக்கின்றனர். எதுவும் கதைக்காமல் இருவரும் பதுங்கு குழியினுள் இறங்குகின்றனர். ஒருவன் நோநிவாரணி ஊசிமருந்தை தாயின் தோள்மூட்டுத் தசையில் ஏற்றுகின்றான். மற்றவன் கையுறைகளை அணிந்து கொள்கின்றான். தனது இடக்கையால் வயிற்றறையைத் தொட்டுணர்ந்த வண்ணம், வலக்கையை மெதுவாக மிகமெதுவாக கருப்பை வாசலுக்கு கொண்டு செல்கின்றான். சூழ்விந்தகம் வெளிவரவில்லை. தொப்பிழ்கொடி மட்டும் தட்டுப்படுகின்றது. தொப்பிழ் கொடியை அதிகவிசை கொடுத்து இழுத்தால் கருப்பை புறவளமாக வெளித் தள்ளப்படலாம். பார்த்திருக்க இரத்தம் பெருகி உயிரிழப்பு ஏற்படும். அதனைத் தவிர்ப்பதற்காக மிக நிதானமாக தனது கரத்தினை உட்செலுத்துகின்றான். அடிப்பானைத் தயிர் வழிக்கும் உணர்வுடன் சூழ்விந்தகத்தை கருப்பைச் சுவரிலிருந்து பிரித்தெடுக்கின்றான்.

அதிகூடிய நிதானம் ஏற்படுத்திய மன அழுத்தம் இருவர் உடல்களையும் வியர்வையில் தெப்பமாக்கிவிட்டது. அநுபவமே சிறந்த ஆசான் ஆகமுடியும் என்பதை அநுபவ வாயிலாக உணர்ந்து கொள்கின்றனர். பல நிமிட பிராயத்தனத்திற்குப் பின்னர் சூழ்விந்தகத்தையும் தொப்பிழ் கொடியையும் வெளியில் எடுக்கின்றனர். மீதிகள் எதுவும் உள்விடப்படவில்லை என்பதை உறுதி செய்ய அவற்றின் முழுமையை ஆராய்கின்றனர். மகப் பேற்றிற்குப் பின்னான குருதிப்பெருக்கு ஏற்படுகின்றதா என்பதனையும் சிறிது நேரம் அவதானிக்கின்றனர். ஆபத்தான கட்டம் தாண்டப்பட்டுவிட்டது. இனி எப்பகுதிக்குள் செல்ல வேண்டும். எனும் முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும் இடையில் கவனம் கலைக்கப்படக் கூடாது என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்புக் கருவியை இயக்குகின்றனர். அது இவர்களை அழைத்த வண்ணம் உள்ளது. உடனேயே வருகின்றோம் என்றவர்கள் தங்கள் உந்துருளியை நோக்கி விரைகின்றனர்……

– தூயவன்
-வெளிச்சம் இதழ், சித்திரை-வைகாசி2003.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments