×

தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி திருமணம் 

தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி திருமணம் 

1983–84 : மாணவர் போராட்டப் பின்னணி ஆயுதப் போராட்டம் மும்முரம் அடைந்த 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில்,சிங்கள தேசமெங்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இதன் காரணமாக, தெற்கு இலங்கையில் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, தெற்கு பல்கலைக்கழகங்களில் பயின்ற தமிழ் மாணவர்கள், “தாம் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே கல்வியைத் தொடரும் வசதிகளை செய்து தர வேண்டும்” என்று சிங்கள அரசிடம் வெண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், அந்த வேண்டுகோளுக்குசிங்கள அரசு செவிசாய்க்கவில்லை. யாழ் பல்கலைக்கழக உண்ணாவிரதம் இதன் பின்னணியில், 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் நாள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராதனை (Peradeniya) மற்றும் கடுப்பொத்த (Katupotha) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் நான்கு மாணவிகளுமாக ஒன்பது பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய நிலை உருவானது. அதோடு, உண்ணாவிரதத்தின் ஆறாம் நாளில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையை எட்டினார்.

இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
தலையிட்டு, அந்த மாணவ, மாணவிகளை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாதுகாப்பாக அழைத்து இந்தியாவிற்கு கொண்டு சென்றனர்.

இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் முதலில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சகிச்சை பெற்றனர்.

மாணவர்களில் ஜனகன் மற்றும் படிகலிங்கம் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். மற்ற மாணவர்கள் தங்களது விருப்பப்படி வேறு வழிகளில் சென்றனர்.

மாணவிகள் குறித்து பிரபாகரனின் முடிவு

மாணவிகளை மதுரையிலேயே வைத்திருக்கவும், பயிற்சி முகாம்களுக்கு அனுப்பவும் பிரபாகரன் அவர்கள் விரும்பவில்லை.

எனவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
• மதிவதனி
• வினோஜா
• ஜெயா
• லலிதா

ஆகிய நான்கு மாணவிகளும், திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் –அடேல் தம்பதிகளின் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.

மதிவதனி: பின்னணி

பிரபாகரன் அனுப்பிய நான்கு பெண்களில், “மதி” என அழைக்கப்பட்ட மதிவதனி அம்மையார், ஒல்லியான உடல் அமைப்பும், வெளிர்ந்த நிறமும், இனிய முகமும், விளையாட்டுத் தன்மையும் கொண்டு அனைவரையும் ஈர்த்தார் என, “The Will to Freedom” என்ற நூலில் அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மதிவதனி அம்மையார், புங்குடுதீவின் மாதத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்து மதத்தைப் பின்பற்றும், பக்தியுள்ள குடும்பத்தில் ஏரம்பு – சின்னம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர்.

அவரது தந்தை கிராமத்தில் “ஏரம்பு மாஸ்டர்” என அறியப்பட்ட ஆசிரியராக இருந்தார். இத்தகைய குடும்பச் சூழலில் வளர்ந்ததால், மதிவதனி அம்மையாருக்கு பக்தி, மென்மை, பரிவு, அறிவு இயல்பாகவே இருந்தது; அவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.

கல்வி மற்றும் உண்ணாவிரதம்

கால்நடை மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்றிருந்த அவர், குடும்பத்தின் விவசாயப் பின்னணியின் தாக்கத்தால் வேளாண்மை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலத்திலேயே தமிழ் மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்தபோது,

இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர், வீட்டிற்கு திரும்பி பெற்றோருடன் தங்கி இருந்த நிலையில்தான் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மதிவதனி அம்மையார், மேலே குறிப்பிட்டபடி திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

திருவான்மியூர் இல்லத்தின் சூழல்

சமூக அழுத்தங்களுக்கிடையே, அந்த நான்கு பெண்களின் வருகையால்
திருவான்மியூர் இல்லம் மகிழ்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த இடமாக மாறியது.

சமையல் பொறுப்பை அந்த நால்வரும் ஏற்றுக்கொண்டனர்.

பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாண உணவுகளை ரசித்துச் சாப்பிட்டார்.

பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வருகை தரும் நாட்களில் சிறப்பான உணவுகளும் தயாரிக்கப்பட்டன. காதல் உருவான தருணம் இயல்பாகவே சுறுசுறுப்பும் குறும்புத்தனமும் கொண்ட மதிவதனி அம்மையார்,

“ஹோலி பண்டிகை” நாளில் வீதியில் மக்கள் ஒருவர்மீது ஒருவர் வர்ணம் கலந்த நீரை ஊற்றுவதை கவனித்தார். அதே “ஹோலி பண்டிகை” நாளில், பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வந்தபோது,

மதிவதனி அம்மையார் மஞ்சள் பொடியைக் கரைத்து வைத்திருந்த நீரை, வேறு ஒரு முக்கிய அலுவலுக்காகச் செல்லத் தயாராக வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்திருந்த பிரபாகரன் அவர்கள் கதவைத் திறந்தவுடன் அவர் மீது ஊற்றினார்.

இதனை எதிர்பாராத பிரபாகரன் அவர்கள், இவ்வாறான உரிமையை தன்னுடன் எவரும் எடுத்துக்கொண்டதில்லை என்பதால் சற்று அதிர்ச்சி அடைந்தார். தனது சட்டையை பயன்படுத்த முடியாத கோபத்தில், மதிவதனியைத் திட்டிவிட்டார். இதனால், மதிவதனி அம்மையார் அழுதுகொண்டே ஓடினார்.

பின்னர், தானும் அவசரப்பட்டு பேசிவிட்டேன் என மனம் நெகிழ்ந்து, தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்திய அந்தக் கணத்தில்தான் காதல் பொறி பிறந்தது. மதிவதனி அம்மையாரின் காதலை பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தினார். திருமணத்திற்கான முடிவு.

இந்தக் காதல், பிரபாகரனுக்கு அமைப்பிற்குள்ளும் வெளியிலும் சில சிக்கல்களை உருவாக்கியது. சில மூத்த உறுப்பினர்கள், இது ஒழுக்கக் கோட்பாட்டை மீறுவதாக கருதினர்.

அந்தக் கடினமான காலத்தில், பாலசிங்கம் – அடேல் தம்பதிகள் பிரபாகரனுக்குத் துணை நின்றனர். திருமணம் மனித உணர்வுகளுக்குத் தேவையான ஒன்று என்றும், விதிகளில் நெகிழ்வு இருக்க வேண்டும் என்றும் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். மேலும், திருமணம் ஒரு பொதுவிதியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

பெற்றோர் சம்மதம்

திருமண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் முன்னர், மதிவதனி அம்மையாரின் பெற்றோருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்களது சம்மதமும் பெறப்பட்டது. ஆரம்பத்தில், “உன் வாழ்க்கை எப்போதும் அபாயத்தில் இருக்கும்” என்று தந்தை ஏரம்பு எச்சரித்தபோதும், “அவருக்காக உயிர் தியாகம் செய்யத் தயார்” என்று மதிவதனி அம்மையார் கூறியதை அடுத்து, அவரது தந்தை ஏரம்புவும் பூரண சம்மதம் தெரிவித்தார்.

திருமணம்

1984ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில், மிக எளிமையான முறையில், மாப்பிள்ளைத் தோழனாக கே.பி. இருக்க, மதிவதனி – பிரபாகரன் திருமணம் நடைபெற்றது.

  • கனடா ஈழமுரசு பதிரிகைக்காக
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments