×

வரலாற்றின் வெளிச்சத்தில் புதிய கோலங்கள். (2)

வரலாற்றின் வெளிச்சத்தில் புதிய கோலங்கள். (2)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கி.பி நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படும் சிங்களத்தின் முதன்மை வரலாற்று நூலாக அவர்களால் கருதப்படும் தீபவமிசம் இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. சிங்களத்தை தாபித்தவனும் அதன் முதற் குடிமகனுமான விசயனை முன்நிறுத்தி சிங்களத்தின் வழிவந்ததால் சிகல எனப்படும் லங்கா தீவின் வரலாற்றினை இங்கு விபரிக்கப்போகின்றேன்; கேளுங்கள்’அனகாரிக தருமபாலர் 1902ம் ஆண்டில் இவ்வாறு குரலெழுப்பினார்.

“இற்றைக்கு 2446ம் ஆண்டுக்கு முன்னே வங்காளத்தின் சிங்கபுர நகரிலிருந்து ஆரியர் குழுவொன்று படகுகளேறி புதிய வளமான பகுதிகளைத் தேடிக்கிளம்பினர். ஆயுதம் தாங்கிய சிங்க மன்னனாக சிங்கபாகுவினால் உருவாக்கப்பட்ட சிங்கபுரத்தின் ஆரியக் குடியேற்றவாசிகளே சிங்களவர் என அழைக்கப்பட்டனர். இவ்வாயுதம் தாங்கிய சிங்க மன்னனின் வழித் தோன்றல்களே இன்றைய சிங்களவர்”

செருமானியரே தூய ஆரிய இனத்தார் என பொய்மைக்கருத்தொன்றைப் பரப்ப கிட்லருக்கு உதவிய கோய பெல்சைத்தான் உலகமறியும். ஆனால் கோயபெல்சிற்கு முன்னரே மகாநாமரிருந்ததை உலகமறியாது. உண்மையிலே கோயபெல்சுக்கே இரண்டாவது அல்லது இன் னொரு மகாநாமர் என்றே வசைமொழிப் பட்டம் சூட்டப்பட்டிருக்க வேண்டும். மகா விகாரத்துள் முடங்கிக்கிடந்த மகாநாமர் என்ன செய்தார் பாருங்கள். அன்று அவருக்கு அவரினம் சார்ந்து சில நெருக்கடிகள் நிர்ப்பந்தங்கள் இருந்தமையை எம்மால் உணர முடிகின்றது. ஆனால் அதற்காக முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் விபரீத வரலாற்று ஐதீகமொன்றை அவர் எழுதியமை நுட்பமாக ஆராயப்பட வேண்டியது. வட இந்தியாவில் தோன்றிய பௌத்தம் தென்னிந்தியாவில் இலங்கையில் பரவியது இலங்கையில் வாழ்ந்த பெருங் கற்பண்பாட்டு மக்கள் மத்தியிலும் செறிந்தது. அநுராதபுரத்தின் அரச மதமாகியது. ஆனால் முதலாம் நூற்றாண்டளவில் தேரவாதம், மகாயானம் என இரு பிரிவுகளாக பிளவுண்டது. தென்னிந்தியாவில் மகாயானம் பரவியது. இங்கு தேரவாதம் நிலவியது. அங்கிருந்து இலங்கைக்கும் மகாயானம் பரவவே இங்கு மதமோதல் வெடித்தது. தென்னிந்தியாவிலிருந்து மகாயானம் வந்ததால் இம்மோதல் தென்னிந்திய தமிழர்க்கெதிரான மோதலாக வடிவம் பெறவாய்ப்பு நேர்ந்தது. எரிகிற நெய்யில் எண்ணெய் ஊற்றியது போல கி . பி 3ம் நூற்றாண்டளவில் தமிழ் பிக்குவான சங்கமித்தர் சிங்கள மகாசேன மன்னனை மகாயானத்திற்கு மாற்றவே மகாவிகாரையில் மையம் கொண்டு வாழ்ந்த தேரவாதப்பிக்குகள் வெகுண்டனர். மகாசேனவினர் பாதிக்கவும் பட்டனர்

இதுவொரு நெருக்கடி, மற்றைய நெருக்கடி இந்தியாவில் இந்து சமயத்தார் புத்த சமயத்திற்கெதிராக எதிர்ப்பியக்கம் நடத்தி இறுதியில் இந்து சமயக்கடவுள் ஒருவரின் அவதாரமே புத்தர் என பெரும் நுட்பமான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு இந்து சமயத்தினை விட்டு வெளியேறிய புத்தரையே உள் வாங்கி விழுங்கிக் கொண்டனர். பல முற்போக்கான புதிய எண்ணக் கருத்துக்களைக் கொண்ட மகாயானமே ஈற்றில் அருகிப்போனது. தேரவாதத்தினைக் காத்தலே தமது இருப்பிற்கான உத்தரவாதம் என்பது மகாவிகாரப் பிக்குகளுக்கு நன்றாகவே உறைத்தது. இக்கட்டத்திலே கி. பி. 6ம் நூற்றாண்டளவில் தென்னிந்தியாவிலே பல்லவர், பாண்டியர் காலத்திலே பக்தியியக்கம் தோன்றி இலங்கையிலும் குறிப்பாக தமிழர் மத்தியில் தனது தாக்கத்தை நிகழ்த்தியது. இப்பக்தியியக்கமே இலங்கையில் பௌத்த, இந்து மத வேறுபாடுகளை தோற்றுவித்து இனப்பண்பாடு என்கிற வேற்றுமைகளை தமிழர்,சிங்களவர் மத்தியில் வளர்த்தது, என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் கே.எம். டி. சில்வா. பெருங்கற்கால பண்பாட்டு நிலை மாற்றம் கண்டு ஒரு பகுதியில் திராவிட மரபிலமைந்த கோவில்களும் மறுபகுதியில் விகாரங்களும் என்றானது.

இத்தகைய பின்னணியில் முன்பின்னாக வாழ்ந்த மகாநாயர் புத்தியிலே புத்த சமயத்தை பாதுகாக்கும் வித்து உதித்து மகாவமிசமாகி கைமுனு – எல்லாளன் போரை இன மதப் போராக மாற்றியதும் இராட்சத நச்சு மரமாக வளர்ந்த இம் ‘மகாவாசக் குணக்குறியின் ‘ விளைவுகள் நாமறிந்தவை; நாமனுபவித்தவை. இவ்விபரீத சிங்கள பௌத்த ஐதீகத்தின் பொருளென்ன? “தம்பதீப என உரைக்கப்படும் இக் கோட்பாடு இலங்கை பௌத்தத்தின் பொருட்டு புத்தர் பிரானாலே விஜயனே இலங்கையின் முதல் மனிதன். அவனே அரசு என்பதை இங்கு உருவாக்கினான். விசயனும் அவனது வழிவந்தோருமே பௌத்தத்திற்கென்றே தெரிவு செய்யப்பட்டவர்கள்.

இவ்வாறாக இனம், மதம், மொழி, நாடு, அரசு என்கிற இவ்வைந்து அம்சங்களும் ஒன்றாகவே பின்னிப் பிணைந்து உருவானதே இந்த ஐதிகம்”

இக் கருத்துருவாக்கத்தை நுணுகிப் பார்த்து அரசியல் மொழியில் கூறினால் சிங்கள மக்களின் இறைமை, அவர்களின் அரசுருவாக்கம், அதற்கான தேசியக்கருத்தாக்கம். இன்று சிங்களவர் விடாப்பிடியாகவும் அவர்களை விடாப்பிடியாகவும் பற்றி நிற்கும் ஒற்றையாட்சி வேதாளம் எல்லாமே மகாநாமரினதும் அவரது வழி வந்த கருத்துருவாக்கிகளினதும் கைவண்ணமே என்பது புலனாகும்.

இக்கருத்துருவாக்கத்தினை எவ்வாறு 1948 இன் பின் சிங்கள அரசுகள் தம்
இருப்பினை உறுதிப்படுத்த பயன்படுத்தினர் என்பது நொம் சோம்ஸ்கி போன்ற ஆய்வாளர்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியவை.

இக்கருத்துருவாக்கத்தின் விளைவென்ன? இன்றைய, இக்கண

‘குடை விரித்த பனைமரங்கள் “குறாவிப் போய்’ தள்ளாட

பெந்தோட்ட மாத்தறை கடவத்தை, கனேமுல்லை என்றேங்கோ இருந்தவர்கள் குடத்தனையில் குழைக்காட்டில் குஞ்சர் கடைச் சந்தியிலும் ஏன் கிடந்து காய்கின்றார்? ஏதோ பெருந்துயரம் நெஞ்சள்ள…

தொடரும்……….

க. வே. பாலகுமாரன்.
வெளிச்சம் 2001.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments