×

ஓயாத அலைகள் – 02,03

ஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக மாறியதில் சிங்கள அரசு சினத்தோடு இருந்தது.

ஆனையிறவைப் பிடிக்கும் அவாவில் மறுபடியும் சிறிலங்காப் படையினர் முன்னேற முயல்வர் என்பதை உய்த்துணர்ந்த தலைவர் அவர்கள், திட்டமொன்றைத் தீட்டினார். எழுதுமட்டுவாள், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என நீண்டுகிடக்கும் போராளிகளின் முன்னரங்குகளைப் பாதுகாக்கும், பலப்படுத்தும் திட்டம் அது.

திட்டத்தைச் சுமந்தபடி லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு களமிறங்கியது. காப்பரண்களில் நின்ற 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளும், மேஜர் சோதியா படையணிப் போராளிகளும், வேலைசெய்து கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு (லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு பெண் போராளிகளை மட்டுமே கொண்டது) காப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். வேலை முடிந்தது. 2001.04.24 காலை விடிந்தது. 5.30 மணியளவிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உடைப்பை ஏற்படுத்திய சிறிலங்காப் படையினர், வேகமாக உள்நுழைந்து ஒரு கிலோமீற்றர் தூரம்வரை போய், பெட்டிவடிவில் போராளிகளைச் சுற்றி
வளைத்தனர்.

தொடங்கியது கடும் சண்டை. படையினரின் கைகளில் விழுந்த காப்பரண்களைப் போராளிகள் கைப்பற்றியபடியே போக, பின்னாலேயே படையினரும் வந்து புகுந்துவிடுவர். மறுபடியும் காப்பரண்களை மீட்டபடி போராளிகள் போக, பின்னால் வேறு படையினர் வந்து புகுந்துவிடுவர். பதினான்கு தடவைகளுக்கு மேல் படையினரிடமும் போராளிகளிடமும் காப்பரண்கள் கைமாறிக்கொண்டிருந்தன.

லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் மகளிர் படையணியின் எறிகணை செலுத்திகள், முன்னரங்கக் காப்பரணில் நின்று சமராடியபடியே ஆதரவுச் சூடுகளைக் கேட்கும் போராளிகள் சொல்கின்ற ஆள்கூறுகளுக்கு அமைவாக, எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தன. முன்னேறிய சிங்களப் படையினர் இப்போது எறிகணை செலுத்தியை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

சாதாரணமாக, சமர்க்களத்திலிருந்து பாதுகாப்பான தூரத்துக்கு அப்பால்தான் எறிகணை செலுத்தி இடம் மாற்றப்படும். எறிகணை செலுத்தும் குழுவினர், தமது போர் உத்தியில் மாற்றம் செய்தனர். முன்னரங்கப் போராளிகளுக்கான ஆதரவுச்சூடு வழங்குவதை இடைநிறுத்தாமல் தொடர்ந்து செய்யும்படியே, சூழவந்த படையினரைத் தமது சுடுகலன்களால் தாக்கத் தொடங்கினர். எறிகணைகளை ஏவி, ஏவி பீரங்கிவாய் சிவந்தது. பீரங்கியைப் பகைவரிடமிருந்து பாதுகாக்க சுடுகலன்களும் சிவந்தன. பின்னரங்கில் போர் தீச்சுவாலை கக்கியது. மூன்றாம் நாளின் முடிவில், இழப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இராணுவம், முற்றுகை வளையத்தை விலக்கிக்கொண்டு தப்பியோடத் தொடங்கியது. பகைவர் உள்நுழைந்த பாதைகள் யாவற்றையும் எஞ்சிய போராளிகளும் எல்லைப்படை வீரர்களும் இணைந்து மூடிவிட, உள்நிற்கும் இராணுவத்துக்கு முன்புறமும் போராளிகளின் தாக்குதல், முதுகுப்புறமாகவும் தாக்குதல்.

கலைந்து செல்லும் பட்டிபோல கண்ணில் பட்ட திசைகளாலெல்லாம் முன்னரங்க காப்பரண் வரிசையைக் கடந்து ஓட முற்பட்ட இராணுவத்தினரின் கால்கள் பறந்தன. விழுந்தவரின் உயிர்களும் பறந்தன. தப்பியோடும் திசையெல்லாம் வௌ;வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள், பொறிவெடிகள், சூழ்ச்சியமைப்புகள் எல்லாம் வெடிக்க, லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி கூட தமிழீழத்தையே நினைக்கும் தலைவனின் உழைப்புத் தெரிந்தது.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments