×

தமிழர்களின் பண்டைய துறைமுகங்கள்

பண்டையத் தமிழர்கள் பன்னெடும் காலமாக பல்வேறு நாடுகளுக்கு பலதரப்பட்ட வணிகப் பொருட்களை தங்களின் துறைமுகங்கள் வழியே ஏற்றுமதி/இறக்குமதி செய்து வந்துள்ளார்கள். தமிழர்களின் பெரும் பொருளாதாரமும் துறைமுகங்களின் வணிகங்கள் வழியே வளர்ந்தும் உள்ளது. இலக்கிய, அகழ்வாராய்ச்சி, வரலாற்று ஆவணங்கள் வழியே தமிழகம்-ரோமாபுரி, தமிழகம்-கிரேக்கம் என நாடுகளுக்கிடையேயான வணிகத்திற்கான சாட்சிகள் நிறைய கிடைத்துள்ளன, தமிழகத்தின் உணவுபொருட்கள் மற்றும் நகைகளுக்கென இந்த நாடுகளில் பெரும் ஈர்ப்பு இருந்துள்ளன. இவ்வரலாறுகளை சுட்ரோபோ, ஃபிளனி, மெகஸ்தினஸ் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.

இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பனவும் ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.ரோமாபுரி மற்றும் அரேபிய கடலோடிகள் இந்தியப் பெருங்கடலின் பருவக்காலம் காற்றோட்டம், கடல் வழிப் பயணங்கள் குறித்த தெளிவினை தமிழர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வணிகத்திற்கான உட்கட்டமைப்பு, வணிக மேலாண்மை/வரிவிதிப்புகள் உள்ளிட்டவைகளுக்கான முறையான நிர்வாகத்தை வகைப்படுத்துதல் என இருவகைகளில் தமிழர்களின் பண்டைய அரசுகள் வணிகத்தை இருவழிகளில் மேம்படுத்தியும் வளர்த்தெடுத்தும் உள்ளனர்.

கடல்வணிகத்திற்கான துறைமுகங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலங்கரை விளக்கம், பொருட்களுக்கான கிடங்குகள், கப்பல்கள் நிறுத்துவதற்கான, பயணிகள், வணிகர்கள் தங்குவதற்கான கட்டிடங்கள் என பலவற்றையும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகளாக உருவாக்கி இருந்தனர்.

சோழப் பேரரசர்களின் தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் இருந்தது காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்). இரண்டாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ரோம் நாட்டு சுற்றுலா பயணி தாலமி, பூம்புகார் முக்கிய வணிக நகரமாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த நகரை, ‘கபேரிஸ் எம்போரியான்’ என்று கூறியுள்ளார்.

பட்டினப்பாலை, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களில், பூம்புகார் நகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பெரியதும், சிறியதுமான படகுத் துறைகளும், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடந்ததைப் பற்றியும், பட்டினப்பாலைக் குறிப்பிடுகிறது.
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்…
என்று நீளும் அந்தப் பாடலில், எந்தெந்த ஊர்களில் இருந்து, என்னென்ன பொருட்கள் வந்தன என்பது பட்டியலிடப்படுகிறது.

இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டும் பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.

சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. பாண்டியர்களிடம் கொற்கை, அழகன்குளம்,  காயல்பட்டினம், மருங்கூர், எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

 

guest
2 Comments
Inline Feedbacks
View all comments