
கீழடி அகழ்வாய்வில் கைப்பிடியுடனான பானை :-
கீழடி அகழ்வாய்வில் கைப்பிடியுடனான பானையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு புறமும் கைப்பிடி கொண்ட இப் பானையின் ஒரு புறக் கைப்பிடி சேதமடைந்த நிலையில் ஒரு கைப்பிடியுடனேயே இப் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பயன்படுத்தும் சமையல் கலன்களில், தூக்குவதற்கு வசதியாக இரண்டு பக்கமும் கைப்பிடி கொண்ட கலன்களைப் பயன்படுத்துகின்றோம் அல்லவா! `இரட்டைக் காது` கொண்ட கலன் (பாத்திரம்) எனச் சொல்லப்படும் இது போன்ற ஒரு மண்பானையினையே எமது முன்னோர் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியுள்ளனர்.
சங்க இலக்கியங்களில் பானையானது பின்வரும் பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது.
உறி
மண்டை
குழிசி
தசும்பு
பானை
கரகம்
இப்போது இவை எல்லாவற்றினையும் `பானை` என்ற ஒரே பொருளில் எடுத்துக் கொண்டாலும், அக் காலத்தில் இவற்றுக்கிடையே நுண்ணிய வேறுபாடுகள் இருந்திருக்கலாம். அத்தகைய ஒரு வகைப் பானையாகவே `இரட்டைக் கைப்பிடி` கொண்ட இப் பானையும் இருந்திருக்கலாம். இதற்கு முந்திய அகழ்வாய்வில் ஆதன், குவிரன் போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்தன அல்லவா! அதனைச் சிலப்பதிகாரம் பதிவு செய்து வைத்துள்ளது.
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” (சிலப்பதிகாரம் 111-112) என மக்கள் தமது பெயரினை அடையாளமாகப் பொறித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. அது போன்றே கைப்பிடி கொண்ட பானைக்கும் ஒரு பெயர் இருந்திருக்கலாம். அகழ்வாய்வுச் சான்றுகளோடு இணைத்து சங்க இலக்கியம் மறு பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.