×

இன்று (21-01-1989) பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுநாள்

தமிழரின் சால்பு பேராசிரியர் வித்தியானந்தன்

இன்று (21-01-1989) பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுநாள். அமரர் வித்தி யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மட்டுமல்ல, ஈழத்தின் முதல் தமிழ்த் துணைவேந்தருமாவார். இவர் முத்தமிழுக்கும் அளப்பெரிய பங்காற்றிய அறிஞன்.

👉இயல் – முனைவர் பட்டத்திற்காக பதிற்றுப்பத்தினை தேர்ந்து இந்த ஆய்வினை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு `தமிழர் சால்பு` என மொழி பெயர்த்தும் கொடுத்தவர். இன்னமும் பல நூல்களையும், பற்பல கட்டுரைகளையும் எழுதியவர்.

👉இசை – தமிழிசை, யாழிசை பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டவர். மட்க்களப்பு நாட்டுப் பாடல்கள், மன்னார் நாட்டுப் பாடல்கள் போன்ற நூல்களில் நாட்டார் பாடல்களின் சிறப்பினை உலகறியச் செய்தவர்.

👉நாடகம் – தனது ஆசிரியரான பேரா. கணபதிப்பிள்ளையின் நாடகச் செயற்பாடுகளின் படிமலர்ச்சியாக நாட்டுக் கூத்துகளை, இன்றைய வாழ்வியல் முறைக்கு ஏற்ற வகையில் புதுமைப்படுத்தினார். அரங்காற்றுகை மட்டுமன்றி, பல நாட்டுக்கூத்துப் படிகளை அச்சேற்றினார். ஒரு பேராசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்களோடு கூத்து ஆடுவதற்கு என்றுமே தயங்காதவர்.

இவர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் (3ஆம் மாநாடு=பிரான்சு, 4ஆம் மாநாடு = யாழ்) முன்னின்று பங்காற்றியவர்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்”

என்ற குறளுக்கேற்ப இவர் விட்டுச் சென்ற படைப்புகள் இவரது தகமையினை ஒரு புறம் காட்டுமெனில், மறுபுறம் இவர் விட்டுச் சென்ற இவரது மாணவர்களான பேரா. வேலுப்பிள்ளை, பேரா. கைலாசபதி, பேரா. சிவத்தம்பி, பேரா. உவைசு (மா.மு.உவைஸ்) போன்ற அறிஞர் கால்வழி இவரது பெருமையினைப் பறை சாற்றும்.

இவர் ஏட்டில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் தமிழர் சால்பினைக் காத்த பெருமகனார் , பின்வருவன இதற்கான சான்றுகளாக அமையும்.

கமலாதேவி அம்மையாரைக் காதலித்து மணம் புரிந்தார். இவரது மணவிழாவில் பார்ப்பானரின் பங்குபற்றல் இல்லை, வடமொழி மந்திரங்கள் இல்லை, அக்கினியில்லை , யாகம் இல்லை. தமிழ் முறைப்படி பேரா.கணபதிப்பிள்ளை, விரிவரையாளர் வி.செல்வநாயகம் ஆகியோரே இவரது மணவிழாவினை நடாத்தி வைத்தனர்.

👉1957 ஆம் ஆண்டிலேயே திருமணம் முடிந்த போதும், (பெருமளவிலான) பழந்தமிழ் வழக்கப்படி 1958 தைத்திங்களில் தனிக்குடித்தன வாழ்வினைப் பேராதனையில் தொடங்கினர்.

👉தனது பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைத்தார். அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என்பன அவர் தனது பிள்ளைகளுக்குச் சூட்டிய பெயர்களாகும்.

சிவநெறியில் ஆழ்ந்த பற்றுதல் இருந்த போதும், தமிழ் என வந்தால் மதத்தினைத் தள்ளி வைத்து விட்டு மொழியினை மொழியாக மட்டும் பார்த்த பெருமகனார் இவர்.

அதே போன்று ஏனைய மதத்தவர்களையும் நேசித்தவர். இலங்கையில் இசுலாமியர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றித் தனது மாணவனான உவைசுடன் சேர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டவர்.

`பிறையன்பன்` என்ற புனைப்பெயரில் `கலையும் பண்பும்`என்ற பெயரில் இவர் வெளியிட்ட நூல் இசுலாமியத் தமிழ்த் தொண்டு பற்றிய பல செய்திகளைக் கொண்டு வந்தது { கவனிக்குக `பிறையன்பன்` எனும் புனைப் பெயரினை}. தமிழர் எனும் அடையாளத்தில் இருந்து இலங்கையில் முசுலீம்கள் விலகிப் போவதனை அல்லது எதிர்காலத்தில் விலகிப் போகப் போவதனை முன்னறிந்தே , அதனைத் தடுக்கும் வகையில் இவரது இத்தகைய முயற்சிகள் அறுபதுகளில் (1960 களில்) எடுக்கப்பட்டன. இறுதியாக இன்னொன்றையும் சொல்லி முடிக்கின்றேன். `மக்களுக்காகவே மொழி` என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த வித்தி ஐயா தனது ஆய்வுகளையும் தனது மாணவர்களின் ஆய்வுகளையும் மக்களுக்குக் கிடைக்கச் செய்து வந்தவர், அது போன்றே அவரது ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் யாழ். பல்கலைக் கழகத்தினையும் மக்களுடன் பிணைத்தே வைத்திருந்தார்.

தெல்லிப்பழையில் 08-05-1924 அன்று பிறந்த வித்தியானந்தன் ஐயா அவர்கள் 21-01- 1989 அன்று தனது தமிழ்த் தொண்டினை நிறுத்திக் கொண்டார். அமரர் வித்தி ஐயா தமிழ் உள்ளவரை நினைவுகூரப்படுவார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments