
அண்ணன் புதுவை இரத்தினதுரை
இன்று அண்ணன் புதுவை இரத்தினதுரைக்கு அகவை நாள் 03.12.1948. காணாமல் ஆக்கப்பட்டு பல ஆண்டுகள். ஈழத்துத் தேசியக்கவியாக, கலை, பண்பாட்டுப் பொறுப்பாளராக, நீ ஆற்றிய அளப்பரிய பணியின் அழிக்கமுடியா நினைவுகளுடன் நாங்கள்.. உன் நினைவாக உன் கவிதை ஒன்று…
*எங்கள் தாயகம் எத்தனை அழகு*!
தாயின் மடிச்சகத்தையும்
தாய் மண்ணின் தனிச்சகத்தையும்
எழுதத் தொடங்கினால்…
என் பேனா வற்றுவதில்லை?
“அமுதசுரபி” போலவும்
“அட்சய பாத்திரம்’ போலவும்
ஏன் அள்ள அள்ள குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு!
கள்ளிக்கொடி படர்ந்த கலடுத் தரையானாலும்
பச்சை போர்த்த படுக்கை போல
பார்க்கும் போது கண்ணில் காதல் வழிகிறதே!
ஒழுங்கில்லா ஒற்றையடிப் பாதைகள் கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின் தலையைப் போல
உன்னத அழகோடு ஓடிவருகின்றனவே
ஏன்?
தொட்டளைந்த பூமியின் சுகமும், மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது,
எங்கள் அன்னை மண் எத்தனை எழில்
பிஞ்சுப் பிள்ளைகளின் பூவிரல்கள்போல….
வைகாசி மாதத்து மாமரங்கள் போல ….
துள்ளித் குதிக்கும் கன்றுகள் போல ….
வெள்ளைகள் கரையொதுங்கும்
நுரைப்பூக்களைப் போல…
எங்கள் தாயகம் எத்தனை அழகு!
என நீளும் அந்த நீண்ட கவிதை….