
உறவு
“ஸ்ரீமந்த பீஷ்ட வரதாகிய லோக ஸ்ரீதோ ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஜகதேகதயையா க ஸிந்தோ!'”
‘டொ க்’ என்ற ஓசையுடன் பதினெட்டாவது கல் பாட்டி வீட்டு ஓட்டின் மேல் விழுந்தது. ஸுப்ரபாதம் படித்துக் கொண்டிருந்ததால் பாட்டியால் எழும்ப முடியவில்லை. இப்பொழுது இவ்வளவு கல்லெறி வீழ்ந்த பிற்பாடு பாட்டியால் பொறுக்க முடியவில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு முற்றத்திலே இறங்கிய பாட்டி நேரே நாவல் மரத்தடிக்குப் போனார்.
பாட்டிக்குத் தெரியும், றோட்டால் போற குஞ்சுகள் நாவலுக்கு எறிகின்ற கல்லுகள் தான் ஓட்டில் வீழ்கின்றன என்று. “தார் உது கல்லெறிகிறது” என்று உறுக்கினார். பாட்டியின் குணம் தெரிந்த குஞ்சுகள் பாட்டியைப் பார்த்து உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி’ எனப் பாடிவிட்டு ஓடின. பாட்டிக்கு சிரசிற்கு ஏறியது கோவம்.
“நாசமாப் போனதுகள் இந்த வயதில அதுகளின்ர முத்தல் குணத்தைப் பாரன். உதுகள் நல்லா வராதுகள். குறுக்கால தான் போகுங்கள். நானும் அந்தக் காலத்தில ஆறு பிள்ளையள வளர்த்தனான். சீ… இதுகளைப் போல தறுதலையளைக் கண்டதில்லை. இதுதான் சொல்லுறது பிள்ளையளை ஒழுங்கா வளக்க வேணும் எண்டு. இதென்னெண்டால் மாதத்திற்கு ரெண்டைப் பெறுகிறது. அதுகள் காவாலிகளாத் திரியுதுகள்” எனக் கர்ஜித்தார்.
“என்ன பாட்டி கத்திறியள் எனக் கேட்டுக்கொண்டு பக்கத்து வீட்டுச் சிவகாமி வந்தாள். ‘வாடியம்மா சிவகாமி! இந்தக் கட்டையில் போறதுகள் செய்கிற வேலையைப் பாரன். கல்லை எறிஞ்சு ஓடுகளை உடைச்சுப் போட்டுதுகள். இதுகள் நல்லா வருங்களே!”
“என்ன பாட்டி ஸுப்ரபாதம் படிச்ச வாயாலை வெள்ளிக்கிழமையானாத்து அதுகளை திட்டுறியள்” என்றாள். “ஓமெடி… ஓமெடி… நீங்கள் எனக்கு புத்தி சொல்ல வந்திட்டியள். உடைஞ்சது உன்ரை வீட்டு ஓடு இல்லை. என்ரை வீட்டு ஓடுதானே, உனக்கென்ன” பொரிந்து தள்ளினார். காமாட்சிப் பாட்டிக்கு அறுபது வயதிருக்கலாம். கணவன் வேலுப்பிள்ளை, மலேசியப் பென்சனியர். பத்து வருடங்களுக்கு முன்தான் ஆச்சியை விட்டுப் போனார். ஆறுபிள்ளைகள். நடுவான் நாலும் புலம்பெயர்ந்து பறந்துவிட்டுதுகள். மூத்தமகள் மாத்திரம் சாவகச்சேரியில், ஆசிரியையாக இருக்கிறாள். எத்தனையோ முறை பாட்டியை தன்னுடன் வந்திருக்குமாறு அழைத்துவிட்டாள். ஆனால் பாட்டி சம்மதிக்கவில்லை. தன்னிஸ்டப்படியே நடக்கட்டும் என விட்டு விட்டாள். எப்பொழுதாவது இருந்துவிட்டுதான் தாயிடம் வருவாள் ; பேரப்பிள்ளைகளுக்கோ பாட்டியைக் கண்டால் வயிற்றில் புளியைக் கரைத் தது மாதிரி.
பாட்டியின் வீடு, அந்தக் காலத்து நாற்சார்வீடு. பாட்டி தனியாகத்தான் வசிக்கிறார். வாடகைக்கு இருக்கவாறதுகள் பாட்டியின் சட்டதிட்டம் பொறுக்க முடியாது இரண்டு மாதத்திற்குள்ளேயே மூட்டை கட்டிவிடுங்கள். வேலைக்கு வருபவர்களுக்கும் அச்சந்தான். ஒரு மரத்திற்கு பத்து ரூபாய் தேங்காய் பிடுங்க என்றால், சரியெனப் பிடுங்கிப் போட்டுதிற்கு ஏழு ரூபாய் கொடுத்துக் கலைப்பார். பாட்டியுடன் கனகாலமாக ஒத்துப் போற ஆள் எண்டால் எடுபிடி வேலைக்கு வரும் அன்னப்பிள்ளைதான். ஏனென்றால், அன்னப்பிள்ளைக்குத் தெரியாமல் அந்த ஊருக்குள் ஒன்றும் நடந்ததில்லை. என்ன விசயம் என்றாலும் பாட்டிக்கு தெரிந்த பிற்பாடுதான் கடவுளுக்கே தெரிய வரும். அதனால்தான் அன்னப்பிள்ளையிடம் ஓட்டுதல் பாட்டிக்கு.
“என்னடி அன்னப்பிள்ளை உன்னை ஏழுமணிக்கெல்லோ வரச்சொன்னனான். இப்பஎன்ன நேரம் சொல்லு பாப்பம்'”
“இல்லையெணை புவனேஸ் அக்காவோடை கதைச்சுக் கொண்டு நிண்டதில நேரம் போனதே தெரியேல்லை” கூறி விட்டு தனது காவிப்பற்கள் தெரியச் சிரித்தாள் அன்னப்பிள்ளை.
“என்னவாம்” உங்கட முன்வீடு… அது தான் இவர் மாணிக்கத்தாரும் பின்னாலை இருக்கிற சோம சுந்தரத்தாரும் குடும்பங்களோடை கனடாவிற்கு எல்லோ போட்டினம்.”
‘”அதுக்கு இப்ப என்ன?”
சும்மா குறுக்க கதைக்காமல் இதைக் கேளணை. அந்த வீடுகளை இயக்கமெல்லே எடுத்து வச்சிருந்தது. முதல்ல ஆரையோ இருத்தப் போறதா கதைவந்தது. இப்ப என்னவெண்டால் இது நல்ல வசதியான இடமாம். இயக்கப் பொடிச்சியளைக் கொண்டுவந்து போடப்போயினமாம்’ ” என்றாள் அன்னப்பிள்ளை.
பாட்டிக்கு நெஞ்சில் இடி இறங்கியது.
“ம்… சரியாப் போச்சுது. இவங்கள் வந்திருக்கிறாங்களெண்டு ஆரேன் அறிவிச்சால் துலைஞ்சுது. அந்த நாசமாப் போவாங்கள் குண்டுகளைப் போட்டு எல்லாத்தையும் நாசமாக்கிப் போடுவான்கள்.”
“நீயணை இஞ்சையே இருக் கப் போறாய்.”
”ஏன்ரி என்னையும் துரத்திப்போட்டு இந்த வீட்டையும் நாசமாக்கத்தான் நீ நினைச்சிருக்கிறியோடி. பாட்டி பேசத் தொடங்கினால் இப்போதைக்கு ஓயமாட்டார்.
பேச்சை மாற்றுவதற்காக ”உனக்கெணை ஒரு விசயம் தெரியுமே, பாலசிங்கத்தின்ரை பொட்டைச்சி யாரோ ஒரு சாதி. குறைஞ்ச பெடியனோடை ஓடிப்போட்டுதாம். உலகம் ரொம்பத்தான் கெட்டுப் போச்சு.
”யார் யாரோடை ஓடினாலும் உனக் கென்ன? நேற்று ஊறப்போட்ட ஓலையெல்லாம் கிணத்தடியில உக்குது அதைப்போய்ப் பின்னு” கூறியபடி தேநீர் போடச்சென்றார் பாட்டி.
இரண்டு கிழமை கழிந்திருக்கும். ஒரு நாள் காலைவேளை பாட்டியின் வீட்டிற்கு முன்னால் சில வாகனங்கள் நிற்கும் சத்தம் கேட்ட பாட்டி “யேய் அன்னப்பிள்ளை உதென்னடி வாகனங்கள் வந்து நிக்குது. ஒருக்கால் எட்டிப்பார்.”
“என்னடி விசயம் திகைச்சுப் போய் நிக்கிறாய்.”
கத்தாதையெணை பிக்கப்பிலும் ‘வானி’லும் ” ”இயக்கப் பொடிச்சியள் வந்திட்டினம்.”
“அப்ப எங்களுக்கு கலிகாலம் பிடிச்சிட்டுது எண்டு சொல்லு”
“அம்மா… அம்மா” என்ற குரல் கேட்டபாட்டி” உதார் கூப்பிடுறது” என்றார்.
“தாரோ இயக்கப் பொடிச் சியணைவந்து நிக்குது.”
சற்றுப் பலமாகவே “என்னவாம்” என்றார் பாட்டி.
“அலவாங்கு இருந்தால் ஒருக்கால் தருவீங்களோ அம்மா”
அலவாங்குமில்லை ஒரு வாங்குமில்லையெண” வெடுக்கென பாட்டி கூறினார்.
அந்தப் போராளி சிரித்துக் கொண்டு சென்றாள். பாரன் அவளின்ர சிலுப்பாத் தலையையும் ஆம்பிளையளை மாதிரி ” களிசானையும் இது என்னடி உலகம். அந்தக் காலத்தில் நாங்கள் வெளிக்கிடுறத்துக்கு எண்டால் அப்புவோடையோ ஆச்சியோடையோ தான். இந்தக் காலத்துக் குமரியளுக்கு நல்ல ஒரு சைக்கிள். ஊர்முழுக்க அடியுண்டு திரிவாளவையள். இதுகள் ஒழுங்கா இருந்தால், பொம்பிளையளா ஏன் இவ்வளவு பிரச்சனையளும் வரப்போகுது. எடியேய் அன்னப்பிள்ளை நான் சொல்லுறன் நீயென்னவெண்டால் நட்டமரம் மாதிரி நிக்கிறாய்.”
“இல்லையெணை என்ன வடிவான பெட்டைச்சி. சும்மா ஒரு நூல்சாறி கட்டினாலேயே தங்க விக்கிரம் போல இருக்கு.”
“அவளுக்குப் பேந்து சாறி கட்டிப் பாக்கலாம். இப்ப போய் மண்ணெண்ணையை வாங்கி வா” என அனுப்பினார்.
மார்கழி மாதம். மழை கொட்டிக் கொண்டிருந்தது. கதவு எல்லாவற்றையும் பூட்டி விட்டு முன்னுக்கு வந்த பாட்டிக்கு, முன்வீதியால் இரண்டு போராளிகள் சீருடையில் செல்வதை பார்த்த போது திகைத்தார். பாட்டியின் வாழ்க்கையே புயலாக்கிய, பாட்டி மறக்க நினைத்தாலும் மறக்க முடி யாத அந்தச் சம்பவம் நினைவுற்கு வந்தது.
1988 மார்கழி மாதம். இரவு. அன்றும் இப்பிடித்தான் மழை பெய்து கொண்டிருந்தது. பாட்டியின் கடைசி மகன் அரவிந்தன் கடைசி வருட வைத்திய பீட பரீட்சையை எழுதி விட்டு முடிவிற்காக காத்திருந்தான். பாட்டி வீட்டிற்கு சற்றுத் தொலைவில் ‘சட… சட… சட…’என துப்பாக்கிச் சத்தம் கேட்டது.
‘”அறுந்து போவான்கள் யாரையோ தீத்துக் கட்டுகிறான்கள். இந்த வடக்கத்திக்காரன்கள் எப்பதான் துலையப் போறான்களோ.
டேய் அரவிந்தா விளக்கை அணைச்சுப் போட்டு போய்ப் படு” எனக் கூறியபடி விளக்கை அணைத்து விட்டுப் படுத்தார்.
சற்று நேரத்திற் கெல்லாம் கதவுபலமாக தட்டும் சத்தம் கேட்டு பாட்டி அச்சத்துடன் “யாருது?” என்றார்.
“அம்மா ஒருக்கா கதவை திறவுங்கோ’ என யாரோ அச்சத்துடன் குரல் கொடுப்பது கேட்டது. பாட்டி மெதுவாக கதவை திறந்து பார்த்தார். யாரோ ஒரு இளைஞன் கையில் இரத்தம் வடியவடிய உள்ளே நுழைந்தான்.
“அம்மா ஆமி சுட்டுப் போட்டாங்கள். அங்கை தேடிக் கொண்டு நிக்கிறாங்கள் கதவை சாத்துங்கோ” என பட படத்தான்.
பாட்டிக்கு அந்த இளைஞனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “தம்பி இஞ்சை வாடா” என குசினிக்குள் கூட்டிக் கொண்டு போய் மறைவாக விட்டுவிட்டு, “அரவிந்தா இஞ்சை யொருக்கா வா” என மகனைக் கூப்பிட்டார். அந்த இளைஞ னின் காயத்துக்கு அரவிந்தன் தன்னிடமிருந்த மருந்தைக்கட்டி விட்டான்.”அம்மா; அண்ணை உங்க ளுக்கு என்ரை நன்றி. இப்ப சத்தம் குறைஞ்சிருக்கு இனி நான் இஞ்சை நிண்டால் உங்களுக்குத்தான் ஆபத்து. நான் போட்டு வாறன்!” புறப்பட ஆயத்தமானான் இளைஞன்.
“தம்பி கவனமாக போம்” என்றான் அரவிந்தன்.
“ஓம் அண்ணை”
அந்த இரவு விடிகின்ற நேரம். பாட்டி வீட்டுக்குள். துரோகக்கும்பல் ஒன்று நுழைந்தது.
“என்ன தம்பி வேணும்”என்றார் பதற்றத்துடன் பாட்டி.
“உங்கட மகன் டாக்குத்தருக்குப் படிக்கிறவர் தானே அம்மா. எங்கட ‘காம்’பில ஓராளுக்கு சரியான வருத்தம் அதுதான் கூட்டிக்கொண்டு போக வந்தனாங்கள்” என அரவிந்தனை அழைத்தனர்.
”தம்பி நானும் வாறன் பீதியுடனும் துயரத்துடனும் கேட்டார் பாட்டி.
“இல்லையம்மா நாங்கள் கொண்டு வந்து விடுவம்” எனக் கூறி அழைத்துச் சென்றனர். பாட்டிக்கு நிம்மதியில்லை. பக்கத்து வீட்டுச் சிவகாமியை துணைக்கு அழைத்தார். சற்று நேரத்திற்கெல்லாம் துப்பாக்கிச் சத்தம் கேட்ட பாட்டிக்கு மரண வியர்வை வியர்த்தது.
அடுத்த நாட்காலை குளக் கரையில் அரவிந்தன் முகம் சிதைந்து, கபாலம் பிளந்து கிடந்தான் …….
இப்போது “என்னம்மா கோயிலுக்கு போட்டு வாறியளோ” என்றாள் அந்தப் போராளி.
“ஏன் தெரியேல்லையோ” எனக் கேட்டுவிட்டு வீட்டை நோக்கி விரைந்தார் பாட்டி.
அடுத்த நாள் பாட்டி கோயிலுக்குப் போய்வரும் போது வீதியில் சறுக்கி வீழ்ந்து விட்டார். அப்பொழுது கோவிலடியால் வந்த அந்தப் போராளியும் வேறு சிலருந்தான் பாட்டியை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்.
“என்னம்மா சரியாக நோகுதே”எனக் கேட்டபடி ஒரு போராளி தடவிவிட்டாள்.
“உன்ர பேர் என்னமோனை”
”பவானியம்மா”
“எந்த இடமடிபிள்ளை”
“மட்டக்களப்பு”
“பிள்ளை நான் கேக்கிறன் எண்டு கோவிக்காதை. இதென்ன பிள்ளையள் உங்கட கோலம். காலாகாலத்தில களியாணம் கட்டிக் குடித்தனம் நடத்தாமை இது என்ன வாழ்க்கை பிள்ளை. பொம்பிளையள் எண்டால் அடக்க ஒடுக்கமாக எல்லோ இருக்கவேணும் மோனை.”
“அம்மா நீங்கள் அந்தக் காலத்திலேயே இருக்கிறியள். ஆக கலியாணம் கட்டி பிள்ளையள் பெறுகிறது தான் வாழ்க்கையெண்டு நினைக்கிறியள். சமூகத்திற்கு எங்களை சுமையாக்கப் பாக்கிறியள். போராட்டம் என்கிறது தனிய நாட்டு விடுதலை மட்டுமில்லை. சகல அடிமைத் தனங்களையும் அறுத்தெறிந்தால்தான் அது பூரண சுதந்திரமாகும். காலம் இட்ட பணியம்மா இது. இப்ப சகல துறைகளிலும் ஆண்களுக்கு சரி நிகரா எங்களால நிற்க முடியும்” என்றாள்பவானி.
“நீ என்னமோ சொல்லு மோனை நீங்கள் ஏதோ போராட்டம் எண்டு தொடங்கினதால தான் நான் பொத்தி பொத்தி வளர்த்த என்ரை அருமையான குஞ்சை இழந்தனான்.”
“ஆரையம்மா” மகனின் படத்தைக் காட்டிய பாட்டி நடந்தது முழுவதையும் கூறிமுடித்தாள்.
”பரவாயில்லையம்மா உங்கட மகனையாவது உதவி செய்ததற்காகத் தான் சுட்டார்கள். ஆனால் ஒண்டுமே அறியாத அப்பாவிகளான என்னுடைய அப்பாவையும், அம்மாவையும், அண்ணன்மாரையும் நான் பார்த்துக் கொண்டு இருக்க என்ர கண்முன்னாலேயே வெட்டிக் கொண்டாங்கள். இதைப் பார்த்த பிறகுமா நான் கலியாணம் செய்து பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ வேண்டும். நாட்டில இப்படி எத்தனையோ துன்பங்களம்மா ……..
“நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் எண்டால் எங்களுக்கு ஒரு நிலம் வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சாதி, மத வேறுபாடின்றி, ஆண், பெண்
என்கின்ற பேதம் இன்றி போராடுகிறோம்” என்றாள்.
”நீ சொல்லுறது சரிதான் மோனை”.
“ஆ… மறந்தே போனன். உங்களுக்கு என்ன உதவி வேணும் எண்டாலும் எங்களிட்டை கேளுங்கோ அம்மா. உங்களிட்டை வாற அன்னப்பிள்ளையக்காவை காணேல்லை” எனக் கேட்டுவிட்டு சிரித்தாள் பவானி.
நாட்கள் கழிந்தன. ஒருநாள் மத்தியானம் போல் பவானி, “அம்மா ” என அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந் தாள் .
“என்னம்மா பவானி இந்த நேரத்தில”
“நாளைக்கு நான் வேற இடம் போறனம்மா. நாளைக்கு நேரம் கிடைக்காது. அதுதான் உங்களிட்ட சொல்லிப்போட்டு போக வந்தனான்.”
“நாளைக்குப் போறியோ? எங்கை?
“சண்டைக்குத் தானம்மா! நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேணும் அம்மா” என்றாள்.
என்ன பவானி”
“நான் இந்தச் சண்டையில வீரமரணம் அடைந்தால்!…”
‘சீ… சீ… இது என்னமோனை கதை.”
“இல்லையம்மா சண்டையில வீரமரணம் அடைந்தால் இனிமேல் இஞ்சை வாற போராளிகளையும் எங்களை நடத்தின போல அன்பாக நடத்தவேணும்” என்றாள்.
”பவானி நான் முந்தின ஆள் இல்லையம்மா. நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் போராளிகளையென்ன சனங்களோடை கூட அன்பாகத்தான் பழகுவன்.” என்றார்.
“நன்றியம்மா நான் போட்டு வாறன்” எனக்கூறினாள்.
“என்ரை குஞ்சு கவனமாகப் போட்டு வாணை”
அடுத்த நாட்காலை பாட்டி தன் தெய்வங்களிடம் பவானிக்காகவும் ஏனைய. போராளிகளுக்காகவும் பிரார்த்திக்கத் தொடங்கினார் பவானியின் குழு புறப்பட்ட வாகனம் சந்தியால் திரும்பும் போது வீதியின் அருகாமையில் உள்ள கோவிலில் பாட்டி ஐயரிடம், பவானி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கூறுவது அவளின் காதில் தெளிவாகக் கேட்டது.
– சுதுமலை நி. அகிலன்
– வெளிச்சம் ஐப்பசி 1995.
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்