×

சமர் ஆய்வு மையம்

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனை களுக்குத் ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை அனைத்துலகம் உணரவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட போராட்ட வரலாற்றில் பல அரிய வகை செயல்கள் செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் உள்ள போர்களைப் பார்க்கிறோம். அதில் உள்ள அரிய, பெரிய விடயங்களைப் பற்றி பேசுகிறோம்.ஆனால் குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட ஒரு தேசிய இனமானது, மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட படைக்கு எதிராக தற்போதும் போராடி வருகிறது. உலகின் 4 ஆம் வல்லரசு என்று சொல்லப்படுகிற இந்தியாவுக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தியது.

இந்த போராட்டத்தில் புதிய, புதிய உத்திகள், தற்கொடைகள் மற்றும் சாதனைகள் புரியப்பட்டிருப்பதை உலகமும் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழரின் நீண்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரின் காலம் என்பது வேறுபட்ட ஒன்றாகும். கரிமருந்து என்பது வந்த பின்னர் தமிழரின் வரலாறு என்பது சரியானதாக பதிவு செய்யப்படவில்லை. பண்டார வன்னியன், சங்கிலியன் ஆகிய மன்னர்கள் போராடினார்கள். ஆனால் அவர்கள் புதுமைப் படைக்கலன்களை முறையாகப் பயன்படுத்தினார்களா? என்ற கேள்வி உள்ளது.

கரி மருந்தின் வருகைக்குப் பின்னரான அந்த புதுமைப் படைக்கலன்களை சரியான முறையிலும் வித்தியாசமான முறையிலும் கையில் இருக்கின்ற வளங்களோடு புதிது புதிதாக அதனை புனைந்தது கையாள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. அதற்கு ஊக்க சக்தியாக எமது தலைவர் பிரபாகரன்தான் இருந்திருக்கிறார். இந்த வரலாற்றிலே- போரியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் சமர் நூலாக்கப் பிரிவு செயற்படுகிறது.

முன்பும் இத்தகைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் போராட்டம் எப்படி வளர்க்கப்பட்டது- எவ்வளவு பெரிய சிக்கல்களோடு இந்தப் போராட்டம் வளர்க்கப்பட்டது- உலகத்தில் இருக்கின்ற பல இயக்கங்களை மிஞ்சிய இயக்கமாக எப்படி உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவது ஒரு நோக்கம்.

இன்று 30 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது 3 அல்லது 4 தலைமுறையை இந்தப் போராட்டம் கடந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகளாக இருந்தவர்களில் பலர் வீரச்சாவடைந்தனர். அதன் பின்னர் தளபதிகள் வந்தார்கள். இப்படியாக 4 ஆம் தலைமுறை நிலை வந்துள்ளது. இவர்களுக்கும் இந்த நீண்ட போராட்டத்தில் எப்படியெல்லாம் சாதித்தோம் என்பதை கற்றுத் தருவதற்கும் அதனூடாக அவர்கள் ஒரு படிப்பறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த சமர் நூலாக்கப் பணிகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

அந்த வகையில்தான் இந்தப் பிரிவு தலைவர் அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்டது. இன்றுள்ள சூழலில் அந்தப் பணியை நாம் முழுமையாக செய்ய முடியாது போயினும் ஓரளவுக்கேனும் செய்து கொண்டு வருகிறோம்.

இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி நாம் இந்த சமர் நூலாக்கப் பணிகளைச் செய்து வருகிறோம். இதில் ஒரு சிக்கலும் உள்ளது. இன்னமும் போராட்டம் தொடர்ந்து நடப்பதால் பல விடயங்களை நாம் வெளிப்படுத்த இயலாது. பாதுகாப்பான முறையிலே வெவ்வேறான இடங்களிலே இதனைச் செய்வதில் சிக்கல் உண்டு.

சோழர்கள் மிகப் பெரிய கப்பற்படை வைத்திருந்தனர் என்றாலும் அது தொடர்பிலான பதிவுகள் இல்லை. தமிழர்களைப் பொறுத்தவரை இத்தகைய பதிவுகளைப் பேணுவது அதை அடுத்த தலைமுறைகளுக்கு தருவது என்பதில் ஒரு குறைபாடு உண்டு. அந்தக் குறையை இல்லாது செய்ய இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த இக்கட்டுக்குள்ளும் அவை தப்பிப் பிழைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

புலம்பெயர் நாடுகளில் இந்தப் போராட்டத்திலே பங்கேற்று பல சாதனைகளைச் செய்த பலரும் இப்போதும் உள்ளனர். முன்னாள் போராளிகள் என்று மட்டுமல்ல – இந்தப் போராட்டத்துக்கு மறைமுகமாக உதவிய பொதுமக்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவர்களைப் பற்றிய பதிவுக்குமான ஒருங்கிணைப்பு பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments