×

“மௌனக்குரல்” “கடலில் நேற்று சண்டை நடந்ததாம்

“மௌனக்குரல்”
“கடலில் நேற்று சண்டை நடந்ததாம்

சுமையான நினைவுகளற்று சாதாரண மனநிலையில அவர் களோடு கதைத்தபடி இருந்த எனக்குள் கல்லெறிந்து கலைத்தது போல மனம் தளம்பித் தடுமாறியது.

நாலு கரும்புலிப் போராளிகளும். கடற்புலிப் போராளிகள் ஐந்து பேரும் வீரச்சாவாம். பெயர் விபரம் இன்னும் தெரியேல்ல”

அந்தப் போராளி இன்னும் அதுபற்றியே தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.

நெஞ்சுக்குள் ஏதோ பரபரத்து இயங்க அங்கே தொடர்ந்திருக்க வலுவின்றி மெதுவாக எழுந்தேன்.

வெளியே மழைதூறிக் கொண்டிருந்தது.

‘என்னக்கா மழைக்குள்ள போறீங்களோ என்றாள் அவள்.

“ஓமம்மா முகாமில் ஒராள்தான் நிக்கிறா. மற்றாக்கள் எல்லாம் வெளியில போயிட்டினம், மழைவிடும் போல இல்லை நான் போறன்”

பதிலைச் சொல்லியபடி சைக்கிளோடு வெளியே வந் தேன்.

எனக்காகர் காத்திருந்தது போல மழை மெதுவாகப் பெலக்கத்தொடங்கியது

சீரான சந்தத்தில் துளிகள் மண் மீது விழுந்து கொண்டிருந்தன.

மழைநீரோடு கலந்த செம்மண் வீதியின் கரையோடு கலைந்தோடியது.

ஆளரவம் குறைந்து, வீதி தனித்துப்போய்’ மழையில் சிலிர்த்தபடி நீண்டு கிடந்தது.

தெருவின் கரையோரப் பெருமரங்கள் மழை நீர் சொட்டச் சொட்ட வீதிக்கு காவலிருந்தன .

பேசுவதற்கு எப்போதும் பொழுதிருக்கின்ற பிரியாத நண்பர்கள் போல அவைகளின் மீது மௌனம் அப்பிக்கிடந்தது.

எப்போதேனும் சடசடத்துப் பாய்கின்ற மோட்டார் சைக்கிள்கள் தவிர எப்போதும் வழித்துணையாக வருகின்ற ஒனறிரண்டாய் கடந்துபோகும் சைக்கிள் மனிதர்கள்.

மழையில் நனையும்போது மனம் சிறுபிள்ளையினது போலாகுமோ என்னவோ.

நனைவதற்கு தயாராகி விட்ட சாவகாசம் அவர்களின் முகங்களில் புன்னகையாகப் பூத்துக்கிடந்தது.

எந்தத்துயரின் நினைவுகளும் இவர்களில் எவர் மனதிலும் இருக்காதா?

என்ன அழகாய், மழைத் துளிகளின் மெல் இழையுள் புகுந்து வந்ததான பரவசத்தில் மிதந்து போகிறார்கள்.

இல்லை என்னைப்போலவே தான்.

சுதாக்கா… மறுபடி மறுபடி அந்தப்பெயரை உச்சரித்து அதனொலியில் என் மனதின் சுமையை கரைத்து விடவேண்டும் போலிருந்தது.

என்ரை அக்கா. என் உடன் பிறந்த அக்கா”

என்முகம் மோதிய மழையின் துளிகள் கண்ணீர் போல விழி களைத்தாண்டி கன்னங்களில் பரவியது.

ஒவ்வொரு கடற்சண்டைகளின் போதும் அதிர்ந்து அதிர்ந்து அடங்குகின்ற மனம் இன்று நிகழ்ந்திருக்கும் என்பதாகவே உணர்ந்தது.

உண்மை என்பதை அறியப் போகின்ற முதல் நாடியை எவ் விதம் கடந்து செல்வது?

எந்த முடிவுமில்லாது இந்தப்பாதை நெடுகிலும் எனக்குள் நானே நினைவுகளில் அமிழ்ந்து நெடுந்தொலைவு போக வேண்டும் போலிருந்தது.

அழலாம். அழவேண்டும் போலவும் தோன்றியது. ஒவ்வொரு சாவின் போதும் வதைபட்டு, வதைபட்டு இறுகிய நெஞ்சுள் கசிவதற்கு கண்ணீரும் இல்லை என்பதாக வரண்டு கிடந்தது.

மழை இருளில் பொழுது புதைந்து இருண்டு கிடந்தது.

வீதியோடு அருகாக இருந்த குளத்தின் மீது மழையிருள் அடர்ந்து பரந்திருந்தது. கரைகளின் மீது கவிந்தபடி நீலக் கருமை.

மழை துளித்துளியாக விழ மேலெழுந்து சிதறும் நீரலைகளுக்குள் தாமரை வெண்மையாகப் பூத்துக்கிடந்தது.

கண்ணாடியாக ஒளிர்ந்து சிதறுகின்ற நீரலைகளின் மேலே வான்வரை ஏதுமற்று வெளி விரிந்து கிடந்தது. இடமும்,காலமும் அழிந்து போக எங்களூரின் தெருவொன்றில் போவதுபோல மனதெணணியது. என்னை, என் நினைவுகளை கண்ணீ ராக்கி அம்மாவின் மடிமீது கரைத்து விடுவதற்கு, காலெடுத்து ஓட வேண்டும் போல எண்ணம் பரபரத்தது.

சிலுவில் குளத்திலும் இப்ப தாமரை பூத்திருக்கும். அது செந்தாமரைப் பூ. வயல் வரப்புகள் மீது சறுக்கி விழுந்து தாமரைப் பூப்பிடுங்க இருவரும் போவோம். எத்தனை பூப் பிடுங்கினாலும் எல்லாமும் எனக்கே தந்துவிட்டு தான் ஒன்று மட்டும் வைத்திருப்பாள்.

மழை காலங்களில் வீட்டுள் இருக்க மனமின்றி வெளியே போய்விடத்துடிப்பாள்.

கோயிலென்றும், கடையென்றும் காரணஞ் சொல்லியபடி வயற்கரைகளின் மீதுதான் சுழன்று கொண்டிருப்பாள். அவவிலிருந்து தவறாது நனும் இழுபட்டுக்கொண்டிருப்பேன். மார்கழிப் பனிக்குளிரில் செல்லப் பிள்ளையார் கோயில் திருவெம்பாவை பூசைக்குப்போவோம்.

பூசை முடிந்து வீடுபோகும் போதுதான் லேசாக விடியத் தொடங்கும்.

பெரிய மனுசத்தனத்தோடு வீட்டில் எல்லோருககும் விபூதி சந்தனம் கொடுப்பாள். அப்போதும் அக்காவின் பின்னே தான் நின்றிருக்கிறேன்.

இருள், வெய்யில், மழை, பனி எல்லாவற்றினூடும் புகுந்து எழுந்து வந்துவிடக் கூடியவள் போன்ற செயல் கொண்டவள்.

இதெல்லாம் எங்களுக்காகத் தானே ஏன் பயந்து ஒதுங்க வேண்டும்” என்பாள்.

எதன் மீதும் துயர்கொள்ளாத மனம் இயற்கையானாலும் மனி தரானாலும் எல்லாவற்றையும் நேராக்கித்தான் பார்க்க முயலுவாள்.

விளையாட்டுத்தனத்திலும், அபாரமான துணிச்சலிலும் வளர்ந்து முதிர்ந்தவள்.

இரண்டு வயதுதான் எங்களுக்குள் வித்தியாசமானாலும் வயது முதிர்ந்த மூத்த சகோதரியைப் போல அனேகமான பொழுதுகளில் அம்மா போலத்தான் அக்காவை உணர்ந்திருக்கிறேன்.

இயக்கத்தில் இணைந்த பின்னும் அவள் என்னுடைய பாதையிலே இருக்கிறாள் என்ற நம்பிக்கைதான் பல பொழுதுகளில் துணிவு தந்திருக்கிறது.

இன்று அந்தப் பற்றுதலின் இழை அறுந்து விட்டதோ? போனவருடம் ஐந்து நாள் விடு முறையில் என்னுடன் நின்ற போது தன் முடிவுபற்றி மிக மெதுவாக ஆனால் அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள்.

“நாங்கள் இரண்டு பேரும் போராளிகள்.

என்னுடைய முடிவின்ர அவசியம் உனக்கு மிக நன்றாக விளங்கும். மன வெறுப்பில்லாமல் இதை நீ ஏற்க வேணும். எத்தினை ஒண்டொண்டா போராளிகள் சாகினம்.

இதை மௌனமாகப் பார்த் கொண்டு என்னுடைய நாளுக்காக என்னால காத்திருக்க இயலாமல் இருக்குது. எனக்கான நாளை நானே தேடப் போறன் என்ர இலக்கு பெரிதாக அமைஞ்சு தாக்குதல் வெற்றியாக நடந்திட்டால் அதுதானடி எனக்கான உண்மையான சந்தோசம்.

அம்மா, அப்பாவை சந்திக்கேக்க நீ உயிரோட இருந்தால் எல்லாம் விபரமாகச் சொல்லு’

வார்த்தைகள் மெதுவாக உடைந்து, உடைந்து ஒற்றைச் சொற்களாக என் காதில் விழுந்தன.

அவளிடம் பதிலாகச் சொல்வதற்கு எந்த வார்த்தைகளும் எனக்கு வரவில்லை.

உன்னைப் புரிந்து கொள் கிறேன் என்பதை மட்டும் சொல்லி முடிக்க எண்ணினாலும் சொல்லும் போது அழுது விடுவேனோ என்பதால் மௌனமாக இருந்தேன். அக்காவின் பின்னே இழுபட்டபடி திரிந்த சினைவயதின் காலத்துள் இருவரும் மறுபடியும் புகுந்துவிட வழிகிடையாதா என மனமேங்கியது. தாமரைப் பூக்களோடும் திருவெம்பாப் பூசையோடும் ஒழுங்கைகள் சுற்றிச் சுற்றி அக்கா சைக்கிள் ஓட்ட, பின்னே இருந்து பாடசாலை போகும் மகிழ்வோடும் மறுபடியும் அந்த இளமைக் காலம் எங்களைக் கரங்களில் எடுத்துச் சென்றுவிடாதா?

கண்கள் பனிக்க அக்காவை நிமிர்ந்து பார்த்தேன். லேசாகப் புன்னகைத்தவள் என்னை இறுக்க கட்டியணைத்தாள்.

அக்கா முதலும் பின் நானுமாக இயக்கத்தில் இருவரும்
ஒருவருட இடைவெளியில் இணைந்தவர்கள். இயக்கத்திற்கு வந்த பின் இருமுறை சந்தித்திருந்தாலும் எப்போதும் போதுமான அவகாசம் கிடைத்ததில்லை. இரண்டொரு சொல் பேசிப்பிரியத்தான் நேரமிருந்திருக்கிறது. “தருகின்ற வேலைகளில் நேர்மையாக இருக்க வேணும். எப்பவும் சின்னப்பிள்ளைபோல உடனே கோபப் படக்கூடாது. பொறுமையாக இருக்கவேணும்” என்பாள்.

‘போட்டுவாறன்’ சொல்லி பிரிகின்ற கடைசி நிமிடத்தில் கைகளை இறுகப்பற்றி கவனமம்மா’ என்பாள்.

கண்களுக்குள் பரிதவிக்கின்ற அம்மாவின் முகந்தான் எனக்குத் தெரியும்.

“நீயும் கவனமக்கா என்று சொல்லவும் தோன்றாமல் தலையசைத்து விட்டுவருவேன்.

மெலிந்து வளர்ந்த அந்த உருவமும் பாசம் நிறைந்த விழிகளுந்தான் நெஞ்சுள் நினைவாக இருக்கும். இனி எப்போதுமே அந்த நினவு மட்டுந்தான் துணை என்றாகி விட்டதோ?

வேகம் தணிந்து மழை தூற்றலாக சிதறிக் கொண்டிருந்தது. முகாமினுள் நுழையும் போதே மோட்டார் சைக்கிள் ரயர் அடையாளம் மழை நிலத்தில் பதிந்து கிடப்பது தெரிந்தது.

உள்ளே மெலிந்து அடங்கிய தொனியில் பேச்சுக் குரல்கள் கேட்டது.

எங்கடை பொறுப்பாளர் அக்கா வந்திருக்கிறா. அவவின்ர மோட்டார் சைக்கிள்தான்.

இது வழமையான வருகை இல்லை.

மறுபடியும் மனம் அழுத்திச் சொன்னது.

சைக்கிளை உருட்டியபடி முன்பகுதிக்கு போக அவவோடு இன்னும் நாலைந்து போராளிகள் இருப்பது தெரிந்தது. நான் உள்ளே நுழைய பேச்சு
அறுபட என்னை வரவேற்பது போல் எழுந்தார்கள்.

எந்த முகத்திலும் புண்னகை இல்லை. எப்படித் தொடங்குவது என்பதாக அவர்கள் தயங்குவது புரிந்தது.

தாக்குதல் வெற்றிதானே என்றேன் மெலிந்த குரலில்.

தோள்மீது கைவைத்து தன்னோடு சேர்த்தணைத்த பொறுப்பாளர் மெதுவாகத் தலையசைக்க என்னுள் அறுந்து உயிரிழையின் தவிப்பை உணர்ந்தபடி மெளனமாக இருந்தேன்.

-பிரதீபகுமரன்

-வெளிச்சம் கார்த்திகை_மார்கழி 2001 .

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments