×

1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க ‘தனிச் சிங்களச் சட்டம்’

1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க ‘தனிச் சிங்களச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு  70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது

தமிழ் மொழிக்கு இருந்த உத்தியோக தகைமையையும் சம அந்தஸ்து நிலையையும் நீக்கி , நாட்டின் ஒரேயொரு உத்தியோக மொழியாகச் சிங்களத்தை 1956 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி SWRD பண்டாரநாயக்க நிலைப்படுத்தினார் இதன் மூலம் அரச நிர்வாக சேவையில் பணிபுரிபவர்கள் சிங்களத்தில் தகைமை பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது.

தமிழ் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் மறுக்கப்பட்டு, சிங்கள மொழி கற்காவிட்டால் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது விதியாக்கப்பட்டது அரச சேவை வேலைவாய்ப்பு வசதிகளுக்கான கதவுகள், எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமான தமிழர்களுக்கு அடைத்து மூடப்பட்டன.

அதாவது அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தது. அப்போது அரச நிர்வாக ஆளணியில் 30 % காகவிருந்த தமிழர்களின் வாய்ப்புகள் முற்றாக முடக்கப்பட்டது விசேடமாக இலங்கை மருத்துவர், மற்றும் பொறியாளர்களில் 60% பங்கை தமிழர்கள் கொண்டிருந்த நிலை மாற்றியமைக்கப்பட்டது.

இதற்கிடையில் ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளன்று திரு சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ‘தனிச் சிங்கள’ சட்டமூலத்தை எதிர்த்து தமிழரசு கட்சி போராட்டமொன்றை நடத்தியது .

அமைதி வழியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகமிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களை ரௌடிகளும் காடையர்களும் மிக கொடூரமாக தாக்கினார்கள் சுற்றிவர பொலிஸ் காவலுக்கு நின்றபோதும், பொலிஸார் ரௌடிகளையும் காடையர்களையும் தடுக்கவில்லை.

அஹிம்சை வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் மீதான வன்முறைகள் அத்தோடு நிற்கவில்லை. காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறையின் தொடர்ச்சியாக கொழும்பு வீதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்களின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இப்படியாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவிய வன்முறை, அம்பாறை மற்றும் கல்-ஓயாவில் தனது கோர முகத்தை வெளிக்காட்டியது. இங்கு இங்கினியாகல என்ற இடத்தில் கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 150 தமிழ் மக்களை சிங்களக் காடையளர்கள் வெட்டிப் படுகொலை செய்தார்கள்.

பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அரை குறை உயிருடன் இருந்த பெண்களும் குழந்தைகளும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டார்கள்.
தமிழ் இன படுகொலை வரலாற்றில், இக்கினியாக்கலைப் படுகொலைதான் அதிக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இருந்தது தமிழர்களை எப்படியாவது ‘தனிச் சிங்கள’ சட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக இவ்வாறு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் தனிச்சிங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஒரு புறம், அதனைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலை மறுபுறம் என தமிழ் அரசியல் வரலாற்றை முற்றுமுழுவதாக புரட்டிப் போட்டதொரு நிகழ்வாக அமைந்தது  தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவையும் இங்கேயே உருவாகத் தொடங்கியது.

தாங்கள் தம்மை ஆள்வதற்கான ஓர் ஏற்பாட்டின் அடிப்படையில், தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனும் நிலைக்கு தமிழர்கள் வந்து சேர்ந்ததிற்கும் இந்த கொடூரம் காரணமாக அமைந்தது  ஆனால் 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இன மக்களுக்கான வாய்ப்புகள் தொடரந்து மறுக்கக்கப்படுகின்றது

அரச மொழி கொள்கைகள் ஊசலாகி கொண்டிருக்கின்றது ஒற்றையாட்சியின் பிடி தளரவில்லை. பௌத்த மதம் அரசியலுடன் ஒன்றிணைந்து, நாட்டின் கொள்கை மற்றும் நிர்வாகத் திசைகளை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் பௌத்த மத அரசியலை கைவிட்டு ஒற்றையாட்சி கட்டமைப்பை கடந்து வராமல் இலங்கை தீவு முன்னோக்கி நகர்த்த முடியாது என்பதை இலங்கை முறிவடைந்த பின்னரும் ஆட்சியாளர்கள் உணரவில்லை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments