
ஆறாவது சட்டத் திருத்தம்
இந்த இனத்துவேச வன்முறையானது தமிழ், சிங்கள தேசங்களை என்றுமில்லாதபடி பிளவுபடுத்தியது. தமிழ்த் தாயகத்தில் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டும் தனியரசுப் போராட்டத்திற்கு என்றுமில்லாத உத்வேகம் பிறந்தது. இனவுணர்ச்சிப் பிரவாகத்தில் உந்தப்பட்டு ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கத் தயாரானார்கள். தனியரசுப் போராட்டம் மேலோங்குவதைக் கண்டு பயந்த சிங்கள அரசு, அவசர அவசரமாக அரசியலமைப்பில் ஆறாவது திருத்தம் ஒன்றை அமுல்படுத்தித் தமிழரின் தன்னாட்சி உரிமைக்குத் தடைவிதித்தது. இந்தத் தடை தனியரசுப் போராட்டத்திற்கு மேலும் உரமேற்றுவதாக அமைந்தது. இந்தச் சமயத்தில் பாராளுமன்றத்திலும் இருக்க முடியாது, தமிழீழத்திற்கும் திரும்ப முடியாது தத்தளித்த கூட்டணித் தலைவர்கள், தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர்.
இந்தியத் தலையீடு
இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிர வைத்த சம்பவங்களையும், அதன் வரலாற்றுப் போக்கினையும் உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு, யூலைக் கலவரத்துடன் இலங்கையில் தலையிட முடிவு செய்தது. இந்திய வல்லாதிக்கத்தை வெறுத்த ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஏகாதிபத்திய சார்புப் போக்கும், இலங்கையில் இந்தியப் பகைமைச் சக்திகளின் ஊடுருவலும் பாரத அரசுக்குச் சினத்தை மூட்டியது. அதே சமயம் ஈழத்தமிழர்கள் மத்தியில் மேலோங்கி வரும் தனியரசுப் போராட்டமும், அதனை முன்னெடுத்த புலிகளின் ஆயுத எதிர்ப்பு இயக்கமும் இந்திய உப கண்டத்தில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கலாம் எனவும் இந்தியா அஞ்சியது. எனவே, இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலங்கைத் தீவைத் தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இந்திய அரசு தீர்மானித்தது. இந்த நோக்கை நிறைவேற்ற இரகசியத் திட்டம் ஒன்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சினால் தீட்டப்பட்டது.
இந்த இரகசியத் திட்டத்தின்படி, தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்து, ஆயுத எதிர்ப்பியக்கத்தைத் தீவிரமாக்கி, ஜெயவர்த்தனா அரசுக்கு நெருக்குதலை உண்டுபண்ணி, ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர இந்தியா விரும்பியது. ஜெயவர்த்தனாவின் திமிரை அடக்கி அவரை வழிக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், தமிழீழ மக்களின் தனியரசுப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்தியா திட்டமிட்டது. ஏனைய அமைப்புக்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும், பயிற்சியும், பண உதவியும் அளித்து விட்டால் இராணுவ சமபலத்தை மாற்றியமைத்து, தனிநாட்டு இலட்சியத்தில் உறுதியுடன் நிற்கும் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவும் இந்திய அரசு கருதியது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத்தை இந்திரா காந்தி அம்மையார், இந்திய உளவுப்படையான ‘றோ’வுக்கு (RAW) வழங்கினார்.