×

சிறீலங்கா-புலிகள் பேச்சுக்களும், இந்தியப் படை வெளியேற்றமும்

சிறீலங்கா-புலிகள் பேச்சுக்களும், இந்தியப் படை வெளியேற்றமும்

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிரேமதாசா, 1989இன் ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். வட-கிழக்கில் முடிவில்லாமல் தொடரும் யுத்தமும், தென்னிலங்கையில் ஜே.வி.பியின் கிளர்ச்சியுமாக வன்முறைச் சுவாலைகள் இலங்கைத்தீவு முழுவதிலும் பரவியிருந்தன. புலிகளுக்கு எதிரான யுத்தத்தைச் சாக்காக வைத்து, வட-கிழக்கில் இந்திய இராணுவம் நிரந்தரமாக நிலைகொண்டிருக்கலாம் எனப் பிரேமதாசா அஞ்சினார். ஜே.வி.பியினரும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான கோசத்தை முன்வைத்தே கிளர்ச்சியை நடாத்தி வந்தார்கள். எனவே விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடாத்தி, இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட வேண்டுமெனப் பிரேமதாசா விரும்பினார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் எனப் புலிகளும் விரும்பியதால், பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தனர். நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுக்கள் சுமுகமாக நடைபெற்றன. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பிரேமதாசா அரசு புலிகளுடன் கைகோர்த்து நின்றமை, ராஜீவ் அரசுக்குச் சினத்தைக் கொடுத்தது.

சிங்கள இராணுவத்திற்கு முண்டுகொடுத்து, சிறீலங்கா அரசின் நலனுக்காக இந்திய ஜவான்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில், பிரேமதாசா அரசு புலிகளை அரவணைத்து நிற்பது இந்தியாவுக்கு அவமானத்தையும், ஆத்திரத்தையும் கொடுத்தது. புலிகளின் விவேகமான ராஜதந்திர காய்நகர்த்தலால் இந்திய-இலங்கை உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார். இலங்கையின் அழைப்பின் பேரில் அமைதி காக்க வந்ததாகக் கூறிவந்த இந்திய அரசுக்கு, நிலைமை சங்கடமாகியது. அவமானப்பட்டு, முகத்தில் கரிபூசியபடி இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது.

எத்தனையோ திட்டங்கள் வகுத்து, எத்தனையோ அரசியல், ராஜதந்திர நாடகங்களை அரங்கேற்றி, எத்தனையோ கோடி பணத்தை செலவளித்து, எத்தனையோ ஜவான்களின் உயிரைப் பலிகொடுத்து, இறுதியில் வெறும் கையுடன், எதிர்பார்த்தது கைகூடாமல், அவமானப்பட்டு வெளியேறுவதை இந்தியாவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments