×

தமிழர் பண்பாடு

தமிழர்களின் பண்பாட்டு கூறுகள் (காதல், வீரம், நட்பு, விருந்தோம்பல், ஈகை, கொடை, கற்புடமை, உலக ஒருமைப்பாடு) இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி; பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது ‘அகக்கூறு ‘ பின்னது ‘புறக்கூறு’. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் மெச்சத்தக்கது.  தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன.

தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.”தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாடு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.”

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம்.பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு.இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழரின் பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments