×

தமிழீழ இணக்க மன்று

தமிழீழ இணக்க மன்று

தமிழீழப் பகுதியில் பல வருடங்களாக நடந்த போரினால் சட்டம், ஒழுங்கு முறையாகப் பேணப்படவில்லை. சட்டம், ஒழுங்கு ஓரளவு முறையாகப் பேண அமைக்கப்பட்டவைகளே தமிழீழ இணக்கமன்றுகள் ஆகும்.

இந்த இணக்க மன்றுகள் மூலம் மக்கள் பெருமளவில் பயனடைந்தார்கள்.

  1. அந்தந்த ஊரில் வாழ்ந்து வருபவர்களும், நிலைமையை முழுமையாக நன்கறிந்தவர்களும். மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களுமே மன்றில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதனால் பிணக்குகளை அவர்கள் எளிதில் விளங்கி,குறுகிய காலத்தில் நீதி வழங்கினார்கள்.
  2. பெருமளவில் பணத்தைச் செலவழித்து,நேரத்தைச் செலவழித்து, அரச நீதிமன்றம் சென்று பிணக்குகளுக்குத் தீர்வு காணவேண்டிய தேவைகள் இருக்கவில்லை.”
  3. பணமுள்ளவர்களால் தமக்கேற்ற முறையில் வழக்குகளின் தீர்ப்புகளை மாற்றமுடியாதிருந்தது.
  4. சாதாரண ஏழைகள், ஒருகாலத்தில் பணமின்றி நீதிமன்றம் செல்லமுடியா திருந்தவர்கள், பணப் பலம் கொண்டோரால் ஒடுக்கப்பட்டவர்கள். எல்லோரும் இவ் இணக்க மன்றுகள் மூலம் பெரும் பயனடைந்தார்கள்.
  5. ஒவ்வொரு ஊர்மக்களும் பிணக்குகளைத் தமக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்ளும் அளவிற்குப் பக்குவம் பெற்றுள்ளார்கள்.

எனவே, இம் மன்றுகள் மக்களுக்குப் பணச்செலவு அதிக ‘மின்றி காலதாமதமின்றி, குறுகிய காலத்தில் எந்தச் சிக்கல்களையும், தீர்த்துவைத்து நீதித்துறையில் பெரும்பங்காற்றி வருகின்றன. இம்மன்றுகள் அனைத்துமே நேர்மையாக, ஒழுங்காக நடப்பதை மேற்பார்வை செய்ய வேண்டியது அவ்வூர் மக்களின் கடமையாகும். இது உங்கள் இணக்க மன்று. இதனைச் சிறப்பாகச் செயற்படச் செய்வது உங்கள் பொறுப்பு. இம் மன்றுகள் சிறப்பாகச் செயற்படுவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் முழு ஒத் துழைப்பையும் ஆதரவையும் வழங்குவார்கள்.

சிற்றூர் இணக்க மன்று

அமைப்பும் அதிகாரமும்

  1. வசதிக்கேற்றபடி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றூர் அவைப்பிரிவுகள் தோறும் ஒவ்வொரு சிற்றூர் இணக்க மன்று அமைக்கப்பட்டு இயங்கும்.
  2. தமிழீழ மக்களின் தேசவழமைச்சட்டம், உரோமன் டச் சட்டம், முஸ்லீம் மக்கள் தொடர்பான சட்டங்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், மனிதாபிமான அடிப்படையிலும், சமுதாய நீதிகளை அடிப்படையாகக் கொண்டும் பிணக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்வு காணப்படல் வேண்டும்.
  3. முறைப்பாடு தாக்கல் செய்யப்படுவதற்குக் கட் டணமாக ரூபா 25/-அறவிடப்படும். முறைப் பாட்டாளர் வறுமைக் கோட்டுக்குட்பட்ட நபரென இணக்க மன்று தீர்மானிக்கின்ற போது, இக்கட்டணம் ரூபா 10/- ஆகக் குறைக்கப்படும். முறைப் பாட்டுப் படிவத்தில் பிணக்கைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் எழுதி, செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்.
  4. குறித்த சிற்றூர் அவை எல்லைக்குள் நிரந்தரமாய் வசிக்கும் 18 வயதுக்குமேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டமொன்றில் இணக்கமன்று உறுப்பினர் களாக, பொது மக்களால் (5)ஐந்து பேரும், தமிழீழ விடுதலைப்புலிகளால் (5) ஐந்துபேருமாக மொத்தம் (10) பத்துப்பேர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இவர்களுக்கு எதிராக யாரும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், இரகசியமான முறையில் தெரிவிக்கலாம். ஆட்சேபனை உண்மையானதெனக் காணப்படின், வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார், இதன்பின் கூட்டப்படும் கூட்டத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல்(7) ஏழுபேர் இணக்கமன்று உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர். மிகுதி (3) மூவர் மேலதிக உறுப்பினர்களாக இருப் பார்கள். வாக்கெடுப்பின் பின்னர் எழுப்பப்படும் ஆட்சேபனைகள் நிராகரிக்கப் படும். இணக்கமன்று உறுப்பினர்களில் யாராவது, வராமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது விலகும்போது, மேலதிக உறுப்பினர்களில் இருந்து அவ் வெற்றிடத்துக்கு இணக்க மன்றுப் பொறுப்பாளரின் உதவியுடன் உறுப்பினர் நிய மிக்கப்படுவார்.
  5. உறுப்பினர்கள் அனைவரும் சமமான அதிகாரத்தைக் கொண்டிருப்பர். இவர்கள் தமக்குள் ஒரு செயலாளரையும் துணைச் செயலாளரையும், பொருளாளரையும் தெரிவு செய்து கொள்ளவேண்டும். இணக்க மன்றுகளுக்கு வட்டரீதியாக பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுவார். இவர் இணக்கமன்றுகளை மேற்பார்வை செய்வார். ஆயினும் விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கமாட்டார்.
  6. கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற புலன் விசாரணைக்குரிய பிணக் குகளை இணக்கமன்றின் விசாரணைக்கு எடுத்தல், தவிர்க்கப்படல் வேண்டும். ஆனால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சண்டை போன்ற நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு உறுப்பினர்கள் உடன் சென்று, பார்வையிட்டு, தமது அறிக்கையை இணக்க மன்றுப் பொறுப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவ்விடத்தில்விசாரணை செய்யமுடியாது.
  7. பிணக்குகளுக்கு இணக்கம் அல்லது தீர்ப்பு வழங்கும் போது அபராதமோ, நட்ட ஈடோ, தண்டனையோ வழங்க இணக்க மன்றுக்கு அதிகாரமுண்டு.
  8. விசாரணைக்குத் தொடர்ந்து அறிவித்தல் தராமலும், தகுந்த காரணமின்றியும், (2) இரண்டு தவணைக்கு வரத் தவறும் முறையீட்டாளரின் முறைப்பாடு தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதேபோல குற்றம் சாட்டப்பட்ட வரும், சாட்சிக்காரரும், தொடர்ந்து (3) மூன்று தவணைக்குத் தகுந்தகாரணமின்றி வரத் தவறும் பட்சத்தில் அது பற்றி இணக்கமன்றுப் பொறுப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும்.
  9. இணக்க மன்றில், இரு பகுதியினரும் ஒருமித்து இணக்கம் செய்து கொண்ட சமாதானத்தீர்வை உதாசீனம் செய்ய முடியாது.
  10. ஓர் இணக்க மன்றின் எல்லைக்குள் வசிக்கும் மக்கள் அப்பகுதி இணக்க மன்றில் மட்டுமே முறைப் பாட்டைத் தாக்கல் செய்ய முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது இணக்க மன்றின் எல்லைக்கு அப்பால் வசிப்பவராயின், அவர் வதியும் பகுதியிலுள்ள இணக்க மன்றுக்கு முறைப்பாடு செய்ய முடியும். பெண்களுக்கு எதிரான குடும்பப் பிணக்குகள் சம்பந்தமான முறைப்பாடுகள் குறித்த பெண் வசிக்கும் எல்லைக்குள் உள்ள இணக்க மன்றிலேயே தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன் காணி தொடர்பான பிணக்குகளும், குறித்த பிணக்கில் சம்பந்தப்பட்ட காணி அமைந்துள்ள சிற்றூர் இணக்கமன்றிலேயே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  1. இணக்க மன்றின் எல்லைக்கு வெளியே வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கான அல்லது சாட்சிக்காரருக்கான அழைப்பாணையை அப்பகுதி இணக்க மன்றுக்கு ஊடாக அனுப்பலாம்.
  2. இணக்க மன்று மண்டபத்தில் அமரும் எவரும் மது அருந்திய நிலையில் வருவதோ, அல்லது புகைத்தலோ, அல்லது தேவையற்ற வார்த்தைகள் பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
  1. எந்த விதத்திலும் இணக்கம் காண இயலாத பிணக்குகளை இணக்க மன்றுனர் நன்கு அலசி ஆராய்ந்தபின் தமது அறிக்கையை மன்றப் பொறுப்பாளருக்கு வழங்கமுடியும். ஆனால், எவ்விதத்திலும் தமது முடிவைக் குறித்த பகுதியினர் ஏற்கும்படி வற்புறுத்த முடியாது.

மேன் முறையீட்டு இணக்க மன்று

அமைப்பும் அதிகாரமும்

  1. வசதிக்கேற்றபடி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வட்ட அவைப்பிரிவுகள் தோறும் ஒவ்வொரு மேல் முறையீட்டு இணக்கமன்று அமைக்கப்பட்டு இயங்கும்.
  2. முறையீட்டு இணக்க மன்று விசாரணைக் குழுவில் ( 5 ) ஐந்து பேர் அங்கம் வகிப்பர். இவர்களில் (2) இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுவர். (3) மூன்று பேர் சிற்றூர் இணக்கமன்று உறுப்பினர்களிடையே தேர்தல் மூலம் நியமிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் சமமான அதிகாரத்தைக் கொண்டிருப்பர். அத்துடன் ஒரு செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தெரிவு செய்து கொள்வர். வெற்றிடமான உறுப்பினர் ஒருவரின் இடத்துக்கு ஒருவர் இணக்க மன்றுப் பொறுப்பாளரின் உதவியுடன் நியமிக்கப்படுவார்.
  3. அவ்வப்பகுதி வட்ட அவைப் பிரிவுக்குட்பட்ட சிற்றூர் இணக்கமன்றுகளின் தீர்ப்புகளுக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்படும். பிணக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க மேன் முறையீட்டு இணக்கமன்றுக்கு அதிகாரமுண்டு.
  4. சிற்றூர் இணக்க மன்றுகளின் தீர்ப்புக்கெதிராக மேன் முறையீடு செய்ய விரும்புபவர்கள் தீர்ப்பு வழங்கி, 14 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்தல் வேண்டும்.
  5. மேன் முறையீடு தாக்கல் செய்வதற்குக் கட்டணமாக ரூபா, 100/- (நூறு) அறவிடப்படும். ஆனால், மேன் முறையீடு செய்பவர் வறுமைக்கோட்டுக்குட்பட்ட நபரென விசாரணை மன்று தீர்மானித்தால் இக் கட்டணம் ரூபா, 50/-(ஐம்பது) ஆகக் குறைக்கப்பட வேண்டும்.
  6. இணக்க மன்றுத் தீர்ப்புக் கெதிராக மேன்முறையீடு செய்ய விரும்புபவர், குறித்த பிணக்கை விசாரித்த சிற்றூர் இணக்க மன்றுச் செயலாளரிடம் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தைபெறலாம்.அப் படிவத்தில் பிணக்கு விபரத்தையும், மேன் முறை யீடு செய்வதற்கான காரணத்தையும் சுருக்கமாகக் குறிப்பிட்டு அதற்குரிய கட்டணத்தையும் மேன் முறையீட்டு விண்ணப்பப் படிவத்தையும், மேன் முறையீட்டு இணக்க மன்றுச் செயலாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும். அவர் குறித்த பிணக்குத் தொடர்பான கோவைகளையும், ஆவணங்களையும் சிற்றூர் அவை இணக்கமன்றுச் செயலாளரிடம் பெற்று விசாரணைக்கான ஒழுங்கு களைச் செய்ய வேண்டும்.

விசாரணை முறைகளும் நடைமுறைகளும்.

  1. விசாரணை மண்டபத்தில் ஒழுங்கும் அமைதியும் பேணப்படல் வேண்டும்.
  2. ஒவ்வொரு பிணக்கும்’ இணக்க மன்றில் (5) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவாலும், மேன் முறையீட்டுமன்றில் (3) உறுப்பினர்களைக் கொண்ட குழுவாலும் விசாரிக்கப்படல் வேண்டும்.
  3. குறித்த பிணக்குக்கும் விசாரணைக்குழு உறுப்பி னருக்கும் தொடர்பு இருப்பின் குறித்த உறுப்பினர் அவ்விசாரணையிலிருந்து பூரணமாக ஒதுங்கி இருக்கவேண்டும்.
  4. விசாரணையின் போது கடும் வார்த்தைப் பிரயோகமோ, துன்புறுத்தலோ, மிரட்டலோ மேற்கொள்ளப்படலாகாது.

5.விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மன்று உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகக் கலந்தாலோசித்துக் குறித்த இருபகுதியினரும் இணங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

  1. உணர்வுடன் கூடிய குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை செய்யும்போது அவதானமாக இருந்து, இரு தரப்பினரையும் இணங்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  2. குடும்பம் தொடர்பான பிணக்குகளை விசாரிக்கும் போது முறையீட்டாளர் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கும் சந்தர்ப்பத்தில், பார்வையாளர் அனைவரும் விசாரணை மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்படவேண்டும். ஒரு பெண்ணை விசாரிக்கும் போது இன்னுமொரு பெண் அவருக்குப் பக்கத்தில் அல்லது பார்க்கக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும்.
  3. அரச நீதிமன்றுகளில் ஏற் கனவே தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்குகளைக் குறித்த இரு பகுதியினரது எழுத்து மூலமான ஒப்புதலின்றி விசாரணை செய்தல் தடை செய்யப் பட்டுள்ளது.
  4. விசாரணைக்கு வரமுடியாத உறுப்பினர்கள் அது பற்றி விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டும்.
  5. இணக்கமன்று உறுப்பினர் ஒருவர் குறித்த விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கருதும் எவரும் அதுபற்றி விசாரணை தொடங்கு முன்பு இணக்கமன்றுப் பொறுப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வேண்டும்.

விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகள்.

  1. விசாரணையின் போது புகைத்தல், மதுபானம் அருந்திய நிலையில் இருத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

2.விசாரணைமன்று உறுப்பினர் எவரும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு சாட்சியையும் விசாரிப்பதோ, அல்லது வேறு இடங்களில் விசாரிப்பதோ, கூடாது.

  1. விசாரணை சம்பந்தமாக உறுப்பினர்கள் அன்பளிப்போ நன்கொடையோ பெற்றுக் கொள்வது கூடாது.
  2. எந்தவொரு பிணக்கிலும் சொந்தம், பந்தம் ஆகிய தொடர்புகளை களைத்து நடுநிலைநின்று, குறித்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கை தீர்த்து இணக்கம் காணவேண்டும்.
  3. இரு பகுதியினருக்கு மிடையே ஏற்பட்டுள்ள பிணக்கைத் தீர்த்து இணக்கம் காண வேண்டும். இரு பகுதியினருக்கிடை யே இணக்கம் காணப்பட்ட தீர்வை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்படின் அது பற்றி இணக்கமன்று பொறுப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும்.
  4. இணக்கமன்று உறுப்பினர்கள் மாதம் ஒரு தடவை ஒன்றுகூடி இணக்கமன்றுக் கூட்ட அறிக்கைகளையும், கணக்கு அறிக்கைகளையும், இணக்க மன்றுப்பொறுப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  5. இணக்க மன்றில் உள்ள உறுப்பினர்கள் எவரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அல்லது உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை மீறியதாகக் காணப்படின். அவர் உடனடியாக இணக்கமன்றிலிருந்து வெளியேற்றப்படுவார்.

இணக்கமன்றுகளுக்கு பொதுமக்களிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்குரிய தகைமைகள்

  1. குறித்த சிற்றூர் அவைப் பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவராயும், (30) முப்பது வயதுக்கு மேற்பட்டவராயும், நன்நடத்தையும் ஒழுக்கமும், சமூகத்தில் நன்மதிப்புப்பெற்ற வராயும், அனுபவம் வாய்ந்தவராயும் இருத்தல் வேண்டும்.
  2. மோசடி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து வியாபாரம் போன்ற சமூக விரோதச்செயல்களில் ஈடுபடாதவராக இருத்தல் வேண்டும்.

அத்துடன் கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF),

ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF),

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO),

தமிழீழமக்கள் விடுதலைக் கழகம் (PLOT),

போன்ற துரோக இயக்கங்களில் உறுப்பினராக இருந்த துரோகிகளுக்கும், தமிழீழ மக்களின் புனிதப் போருக்கு விரோதியாகச் செயற்பட்ட சமூக விரோதக் கும்பல்களுக்கும், காட்டிக்கொடுத்த கயவர் களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தந்த அடி வருடிகளுக்கும். இவ் இணக்கமன்றுகளில் உறுப் பினராக இருக்க அருகதை இல்லை.

செயலாளர் கடமைகள்

  1. முறைப்பாட்டுப் படிவத்தை வழங்குதலும், பதிவுகளைப் பேணலும்.
  2. பிணக்குகளுடன் தொடர் பானவர்களுக்கு, அழைப் பாணைகளை விசாரணை தினத்துக்கு (7) ஏழுநாட்களுக்கு முன்புஅனுப்பிவைத்தல்.
  3. விசாரணைக் குழுக் கூட்டத்தை ஒழுங்கு செய்தல்.
  4. மன்றின் அறிக்கைகளை யும், தீர்வுகளையும், மறு உறுப்பினர்களுடன் இணைந்து தயாரித்தல்.
  5. இணக்கமன்றுப் பொறுப்பாளருடன் இணக்கமன்று விடயம் தொடர்பாக தொடர்பு கொள்ளல்.
  6. விசாரணை நடைபெறும் தினத்தின் நிகழ்வு, அறிக்கையை தயாரித்து இணக்க மன்றின்பொறுப்பாளர் ஊடாக வட்ட அவைப்பிரிவுப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைத்தல்.

 பொருளாளரின் கடமைகள்

  1. வரவு செலவுப் பதிவேடு களைப் பேணுதலும், பற்றுச் சீட்டு வழங்குதலும்.
  2. வரவு செலவுக் கணக்கு தயாரித்தல்
  3. மாதாந்த வரவு செலவுக் கணக்கு அறிக்கைகளை இணக்கமன்றின் பொறுப்பாளர் ஊடாக வட்ட அவைப்பிரிவுப் பொறுப்பாளருக்கு அனுப்பி வைத்தல் என்பன.

தமிழீழ தனி அரசு மக்கள்நலன் சார்ந்து மக்களுக்கான தீர்வுகளை அவர்களைக் கொண்டே நீதி பரிபாலனமுறையை  வழங்கிய, உலகத்திலேயே அதை நடைமுறையில் நடத்திக்காட்டிய பெருமை கொண்ட ஒரே நாடு என்பதில் என்ன வேற்று கருத்து இருக்க முடியும்.

  • தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments