×

தமிழ் மொழி

உலக செம்மொழிகளில் ஒன்றாகவும், மிகப் பழமையான இலக்கண, இலக்கியங்களில் கொண்டிருப்பதில் மூத்த மொழி எனவும், வரலாறு கொண்ட தமிழ் மொழி, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் திசையிலும் (தமிழ்நாடு, ஈழம்), மலேசியா, சிங்கப்பூர், மெளரிசீயசு உள்ளிட்டப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவும் பர்மா, பிரன்சு கையனா போன்ற பகுதிகளில் சில நூற்றாண்டுகளாகவும் பேசப்பட்டு வரும் உலக மொழி ஆகும்.

இன்றைய நவீன உலகில் தமிழ் பேசக்கூடிய தமிழர்கள் சுமார் 175ற்கும் மேற்பட்ட நாடுகளில் வசித்தும் வருகின்றனர்.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன

தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும், தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
• சங்க காலம் (கிமு 400 – கிபி 300)
• சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)
• பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)
• மையக் காலம் (கிபி 1200 – கிபி 1800)
• தற்காலம் (கிபி 1800 – இன்று வரை)

ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின், எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூரிலும் நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து [24] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதனை அறிவித்தார்.

 

guest
2 Comments
Inline Feedbacks
View all comments