×

தமிழர் வணிகம்

சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிக சமூகம் பல சமயங்களில் நியாமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கை பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் “வர்க்க போராட்டத்தில்” ஈடுபட்டு வணிகரை எதிர்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக “உழவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ் நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குகெதிராக திரண்டெழுந்ததை” குறிப்பிடலாம்.

தொல்காப்பியத்தில் வணிகருக்குரிய ஐந்து தொழில்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன:

தமக்குரிய நூல்களை ஓதுதல்

தமக்குரிய யாகங்களைச் செய்தல்

தாம் பெற்ற பொருட்களை நல்வழியில் ஈதல்

உழவு செய்வித்தல்

பசுக்களைக் காத்தல் என்பனவாம்.

வணிகர்கள் அரசர்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்பட்டனர். வணிகரைப் பாதுகாத்தல் ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை இலக்கியங்கள் கூறியிருக்கின்றன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனை வாழ்த்தி குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர் ‘பலவகை உணவுப்பண்டங்களை விற்கும் வணிகருடைய குடிகளைக் காப்பாற்றி வருகின்றாய்’ என்று பொருள்பட “கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ” என்று பாடியிருக்கிறார்

பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை என்பது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தில் தமிழக நிலப்பகுதியில் அமைந்திருந்த பொருளியல் நிலையையும் கூறிகளையும் குறிக்கும். வேளாண்மை, நெசவு, முத்துக் குளித்தல், இடுபொருட்களைக் கொண்டு பயன்படு பொருட்களைச் செய்யுதல், கட்டுமானம் ஆகியன முதன்மையான தொழில்களாக இருந்தன. பல பகுதிகளில் நெற்பயிர் வேளாண்மை ஓங்கியிருந்தது. அதுவே மிகுதியாக உட்கொள்ளப்பட்ட உணவுப் பொருளாகவும் உள்நாட்டு வணிகத்தில் பண்டமாற்றுப் பொருளாகவும் இருந்தது. மிளகு, கம்பு, சோளம், பருப்பு வகைகள், கரும்பு ஆகியனவும் அதிக அளவில் பயிரிடப்பட்டன. மதுரையும் உறையூரும் ஆடைத் தொழில் மையங்களாகவும், கொற்கை நகர் முத்து வணிக மையமாகவும் விளங்கின.

வணிகத்தை மேற்கொண்டவர்கள் எவ்வகையான போக்கு வரத்தைக் கைக்கொண்டிருந்தனர் என்பதும் முக்கியமாகும். கோவேறு கழுதைகள், குதிரைகள், மாட்டுவண்டிகள், கழுதைகள் ஆகிய பிற புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. தரை வாணிகம் புழக்கத்தில் இருந்த காலத்தில், கடல் வாணிகமும் நடைமுறையில் இருந்தது. ஆழ்கடல் பயணம் இருந்ததா? அல்லது கடலோரத்தில் மட்டுமே பயணம் செய்தனரா? என்ற விவாதம் எழுப்பப்பட்டது. பசிபிக் கடலில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் வணிகம் நிமித்தம் பயணம் செய்திருப்பதை மயிலை சீனி. உறுதிப்படுத்துகிறார். இதன் மூலம் ஆழ்கடல் பகுதி களுக்கும் சென்றிருப்பதை அறியமுடிகிறது.

அரபு நாட்டினர், யவணர், சாவக நாட்டினர், ஆகிய பிறர் தமிழ்நாட்டிற்கு வணிகத்திற்காக வருகைபுரிந்தனர். இதற்காக பல்வேறு துறைமுகங்களும் உருவாக்கப்பட்டன. குமரித் துறைமுகம், கொல்லந்துறை துறைமுகம், எயிற்பட்டின துறைமுகம், அரிக்கமேடு துறைமுகம், காவிரிபூம்பட்டின துறைமுகம், தொண்டித் துறைமுகம், மருங்கூர்ப் பட்டின துறைமுகம், தொண்டி, முசிறி துறைமுகங்கள், இலங்கையில் பல இடங்களில் இருந்த துறைமுகங்கள் எனப் பல்வேறு இடங்களில் துறைமுகங்கள் இருந்ததைஅறிய முடிகிறது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் வணிகம் தொடர்பான செய்திகள், வளர்ச்சி பெற்ற நாகரிகம் மிக்க சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

சங்க காலத்தில் காவிரிபூம்பட்டினம், மதுரை ஆகிய பிறபெரும் நகரங்களாக விளங்கியமையைக் காண முடிகிறது. வஞ்சி, சேரநாட்டின் தலைநகரமாக விளங்கியதை மயிலை சீனி. ஆய்வு செய்துள்ளார்.

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments