
தைப்பூசம்.. விழாக்களும், வழிபாடுகளும், கொண்டாட்டமும் தமிழர்களின் வாழ்வியல் பாரம்பரியமாகும்.
தைப்பூசத் திருநாள் என்பது தமிழர்களுக்கே உரித்தான ஒரு விழாலாகும். தை மாதத்தில் பௌர்ணமியும் பூசநட்சத்திரமும் இணைந்து வரும் நாள்தான் தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாள் சிவனுக்கும், முருகனுக்கும் விசேசமான ஒரு நாளாகும். அப்பரும் ஞானசம்பந்தரும் தைப்பூசத்திருநாளை வெகு சிறப்பாகத் தங்கள் பதிகங்களில் பாடியுள்ளார்கள். வரலாறுசொல்லும் பல கல்வெட்டுகளிலும் தைப்பூசத்திருநாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சிவனுக்கு உகந்த நாளாக இருந்தாலும் முருகனுக்கு ஒரு சிறப்பான நாளாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களும் விழாக்கோலம் காணும்.
பக்தர்களின் பாதயாத்திரை, பால்காவடி. ஆட்டம். பாட்டம். சிறப்பு வழிபாடு என்று களை கட்டும். தமிழகம். ஈழம், மலேசியா, சிங்கப்பூர் என்று தமிழர்கள் வாழும் எப்பகுதியிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
தமிழ் கடவுளுக்குத் தித்திப்பானத் திருநாள் ஆயிற்றே இந்நாள்…
அது ஏன் முருகனை மட்டும் தமிழ்க் கடவுள் என்கிறோம்.?

முருகு வழிபாடு பாரதம் முழுக்கப் பரவியிருந்தாலும் முருகு வழிபாட்டின் அடித்தளம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. சிலப்பதிகாரம் கூறும் வேற்கோட்டம் என்னும் வேல் மட்டும் கருவறையில் இடம்பெறும் ஓர் கோவிலின் தொல்லியல் சான்றாக சாளுவன் குப்பம் முருகன் கோவில் இடம்பெறுகிறது. சங்க கால வேல், சங்ககாலக் கோவில் என்ற தனிச்சிறப்புடைய தமிழகத்தில் மட்டுமே உள்ள கோவிலாகும்.
முருகனின் அறுபடைவீடுகளும் தமிழகத்தில் மட்டும் உள்ளது. ஆகமங்கள் கூறும் முருகனின் வடிவங்கள் அனைத்தும் தமிழகக் கோவில்களில் மட்டுமே உள்ளது. சங்க இலக்கியம் கூறும் யானை மேல் அமர்ந்து வரும் குறிஞ்சி நில வேந்தன் முருகனின் சிற்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அம்மையப்பருடன் இளமுருகுவாக உடனுறை வடிவம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.
அன்னையிடம் பெற்ற சக்தி ஆயுதம், இந்திரனிடம் பெற்ற வஜ்ராயுதம்.. இவ்விரண்டையும் ஏந்திய முருகனின் ஞானசக்திதரர் வடிவம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. பிரம்மனுக்கு பிரணவத்தைப் போதித்து பிரம்மனுடைய அக்கமாலை, கமண்டலத்துடன் காட்சி தரும் பிரம்மசாஸ்தாவாக தர்மசாஸ்தாவாக முருகன் காட்சி தரும் சிற்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.
கையில் தாமரை மலர் ஏந்தும் பாலசுவாமி, தண்டம் வைத்திருக்கும் கந்தசாமி, வேலுடன் காட்சி தரும் வேலாயுதர்,கோழிக்கொடி ஏந்திய சண்முகர், தேவசேனாதிபதி, வள்ளி தெய்வானை உடனுறைபவர், மயில் வாகனர், சேவற்கொடியோன் குமாரசாமி, ஆறுமுகர், இன்னும் ஏராளமான முருகனின் பிரத்யோக வடிவங்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மட்டுமே உள்ளது.
முருகனது வழிபாட்டு முறையும் தமிழகத்தில் இருப்பது போல் மற்ற இடங்களில் இல்லை. தமிழ்க் கடவுள் முருகன் என்று கூறுவதில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது.
அன்புடன்.
மா.மாரிராஜன்.