×

வீர மரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனித் தகனம் செய்யப் படமாட்டாது.

வீர மரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனித் தகனம் செய்யப் படமாட்டாது.

அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்துக்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட “மாவீரர் துயிலும் இல்லங்களில்” இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப் பட்டு அங்கே நினைவுக் கற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலைபெறும்.

மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம் என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.

போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்? போராளிகள் தனிமனிதர்கள் அல்லர். அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள் அந்த இனத் தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் மரண நிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கும். அதாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன் படும்.

எனவே தான் போராளிகளது உடல்களை புதைத்து, கல்லறைகளை எழுப்பி, அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம்.

அன்புக்குரிய எமது பெற்றோர்களே, மக்களே!

எமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு, காலங்காலமாக இருந்து வந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்கு முரணாக இருக்கின்றது என நீங்கள் கருதலாம். ஆனால் உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்த நாட்டின் பொதுச்சொத்தாக, பொக்கிசமாக இருக்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இப்பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது.

அவை பொருள் வடிவில் என்றென்றும் எம் மண்ணில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க, எமது சகதோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின்றன. அதாவது, பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கிறோம்.

என்னதான் எமது தோழர்கள் சூழ நின்று தகன நிகழ்ச்சிகளை நடாத்தினாலும் கூட, அப்போராளியைப் பெற்றெடுத்த – சீராட்டி வளர்த்த தாய் தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ அங்கே இல்லாதது எமது மனதை நெருடுகின்றது.

போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் நாளை இப்பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக்காட்டப் போகின்றோம்? ஒன்றன் பின் ஒன்றாக நூற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம்?

அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவ வாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.

எனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து
ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவிசெய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப்பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள்.

அன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானதுதான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே!

கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செய்வதால் மன நிம்மதி அடையும்.

‘எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா?’ என யாராவது வினா எழுப்பலாம்.

நீண்டகாலம் தொட்டு இருந்து வரும் ‘தகனம் செய்வது’ தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானூற்று இலக்கியமும் ஈமத்தாளி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் நடுகற் களும் இதை நிரூபிக்கப் போதுமானது.

ஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும். உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டுமே பொருந்தும். பொதுமக்களுக்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப் பிரச்சினை எழ நியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக்கிரியை நிகழ்ச்சி அல்ல. அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திரத் தியாகத்தின் சின்னம்.

-சூரியப்புதல்வர்கள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments