
இந்திய இராணுவத் தலையீட்டின் படுதோல்வி
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட போது சோவியத் யூனியன் கையாண்ட யுக்தியை இந்தியா கடைப்பிடிக்க முனைந்தது. புலிகளிடமிருந்து தனது பொம்மை ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு கூலி இராணுவத்தை உருவாக்க இந்தியா முயன்றது. ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ என்ற பெயரில் இந்த இராணுவம் அமைக்கப்பட்டது. பலவந்தமாகத் தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும் வேட்டையாடிப் பிடித்து, பயிற்சி அளித்து, பெருந்தொகையில் நவீன ரக ஆயுதங்களை வழங்கிப் புலிகளுக்கு எதிரான ஒரு படை திரட்டப்பட்டது. பெருமாளின் மாகாண சபை நிர்வாகத்திற்குப் பாதுகாப்பு அரணாக இந்தப் படையை உருவாக்கிவிட்டு, இந்திய இராணுவம் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் படிப்படியாக வெளியேறியது.
இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் புலிகள் வசம் வீழ்ந்தன. இலட்சிய உறுதியும், போர் அனுபவமும், வீரமும் மிகுந்த புலிப்படை வீரரின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ சிதறுண்டு ஓடியது. பெரும்பான்மையானோர் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். மாகாண சபை கவிழ்ந்தது. பெருமாளும், அவரது சகாக்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இந்திய அரசின் இறுதித் திட்டமும் தவிடு பொடியாகியது.
எண்பதுகளின் இறுதி ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வெளியேற்றத்துடனும், ‘தமிழ்த் தேசிய இராணுவத்தின்’ வீழ்ச்சியுடனும் முடிவடைந்தது. இந்திய இராணுவத் தலையீடு தோல்வியில் முடிந்ததால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எழுந்த மிகப்பெரிய ஆபத்து நீங்கியது. இந்திய வல்லாதிக்கம் விடுத்த பெரியதொரு சவாலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தில் அநியாயமாகத் தலையிட்டதன் கசப்பான வரலாற்றுப் பாடத்தை இந்திய அரசு கற்றுக் கொண்டது. இந்திய இராணுவப் பூதத்தைத் தனித்து நின்று எதிர்த்து வெற்றிகொண்டதால், உலகத்தின் தனிச்சிறந்த போராட்ட சக்தியாகப் புலிகள் இயக்கம் புகழைத் தேடிக் கொண்டது.