×

26.06.2000 – குடாரப்பு – ஜெயசிக்குறு

காடு. பெருங்காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்தார்கள் அவர்கள். ஒட்டவெட்டிய முடி, பார்வையில் கூர்மை, பலமான உடலமைப்பு, பார்த்தாலே தெரியும் இவர்கள் எமது சிறப்புப் படையணியினர் என்பது.

முன்னணியில் நகர்ந்த மேஜர் மாதங்கிக்கு வெளிப்புறத்தே நடக்கும் பெருஞ் சண்டையின் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. மணலாற்றிலுள்ள ஐந்து படைத்தளங்கள் ஒரேநேரத்தில் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிலங்கா இராணுவத்தினரும் மிக விழிப்புடன் இருந்ததால், வெளிப்புறக் காப்பரணிலேயே கடும் மோதல் வெடித்திருந்தது.

மேஜர் மாதங்கியின் அணியோ தளத்தினுள் ஊடுருவி, ஆட்லறி ஏவு தளத்தைக் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தது. போகும் வழியிலேயே சண்டை தொடங்கிவிட்டது. இடைவழியில் இவர்களைக்கண்ட இராணுவம் சுட, இவர்களும் சுட்டவாறே நகர்ந்தனர். முடிந்தவரை சண்டையைத் தவிர்க்க முயன்றும், முடியாமல் போனதால் சண்டையிட்டபடியே ஆட்லறித் தளத்தினை நெருங்கியது அணி. இவர்கள் சுட்டுவீழ்த்த, புற்றீசல் போல் படையினர் வந்துகொண்டேயிருந்தார்கள்

ரவைகள் முடியும்வரை சண்டை நடந்தது. ரவைகள் முடிந்த பின்பும் சண்டை தொடர்ந்தது. சுடுகலன்களும் கைகளாலும் கால்களாலும் சிங்கள இராணுவத்தினரை அடித்து வீழ்த்தியவாறும், இழுத்து விழுத்தி மரங்களோடு மோதியவாறும் நிலைமையைத் தொடர்ந்தும் தம் கட்டுப்பாட்டில் வைத்தபடியே, ஆட்லறியைத் தகர்த்தார்கள் இவர்கள்.

பெறுமதிமிக்க நூற்று எழுபத்தைந்து வீராங்கணைகளின் உயிர்கள், ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள், மழைக் காலங்களில் நனைந்தவாறும், நீர் நிறைந்த பதுங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள், வெயில் காலங்களில் நாவரண்டு மர இலைகளில் வழியும் பனிநீரையும் விடாது சேகரித்துக் குடித்த நாட்கள், சிறிலங்கா படையினர் நகரும் திசைகளிலெல்லாம் பதுங்கு குழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூர சுமைதாங்கிய நடைப் பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடற்களைப்பு எல்லாவற்றையும் கடந்து ஓயாத விழிப்புடன் 2ம் லெப். மாலதி படையணி போரிட்டது || ஜெயசிக்குறு \| எதிர் நடவடிக்கைக்களத்தில்.

நெடுங்கேணியில் ஆரம்பமாகி, புளியங்குளம், புதூர், மன்னகுளம், மாங்குளம், வன்னிவிளாங்குளம் என்றுபோய் கடைசியில் அம்பகாமம்வரை களம் நீண்டு அகன்றது. போரனுபவம் மிக்க பழையவர்கள், போர்க்களத்தில் வைத்தே புதிய போராளிகளுக்குச் சண்டை பழக்கிய களம் அது. மறுபடி மறுபடி சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்கும் அணிகள் ஊடுருவ முயன்றுகொண்டேயிருக்கும். இரவுபகல் என்றில்லாது எந்நேரமும் விழிப்புடனிருக்கும் 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளின் சுடுகுழல்கள் கனன்று கொண்டேயிருக்கும்.

அப்போதுதான் குறுகியகால படைய தொடக்கப் பயிற்சியை நிறைவுசெய்த புதிய அணியினர் அம்பகாமத்துக்கு வந்திருந்திருந்தனர். 1998ஆம் ஆண்டின் ஜுன் மாதம், ஏற்கனவே இருதடவை சிறிலங்காப் படையினரை இவர்கள் எதிர்கொண்டிருந்தனர். இன்று மூன்றாம் முறையாக இராணுவம் முன்னேறியது.

படையினர் முன்னகர்வதை, காப்பரண்களிலிருந்து குறிப்பிட்டளவு தூரம் முன்னே அவதானிப்பு நிலையில் நின்ற 2ம் லெப்.இன்குறிஞ்சி கண்டு, சுடத் தொடங்கிவிட்டார். இவரைத் தொடர்ந்து பின்னே காப்பரணில் நின்ற தர்சினி, மேஜர் வாணி முதலானோரும் தாக்கத் தொடங்கிவிட்டனர்.

இவர்கள் பின்னே வரும்படி கத்தியதையும் கருத்திலெடுக்காமல், அவதானிப்பு நிலையைவிட்டு வெளியேறாமல் தனியாக நின்று, தனது ரவைகள் முடியும்வரை சுட்டு விட்டு, நெஞ்சில் பட்ட காயத்துடன் எழும்பி ஓடிவந்து காப்பரணில் விழுந்தவர், விழிமூடிப் போனார்.

அச்சம் சிறிதுமற்ற அந்தப் புதிய போராளியின் துணிச்சல் 2ம் லெப். மாலதி படையணியின் அன்றைய நாளை பெறுமதியாக்கி விட்டிருந்தது.

உலக வரலாற்றின் இரண்டாம் நோர்மன்டித் தரையிறக்கம் அது. இம்முறை அது குடாரப்புவில் 2000.03.26 அன்று அதிகாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments