
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டது.
லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.
யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.
திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.
இதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள்.

-பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?
பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.
-தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?
விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.
தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்!
அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.