
கர்ணன் முகாமில் இந்தியப் படையினருக்கு நடந்தது பாடம்.
குமுழமுனை இந்தியப் படையின் முகாம் ஒரு மேடான மலைப்பகுதியில் அமைந்திருந்தது. அம் முகாமிலுள்ள காவல் நிலையில் இருந்து கொண்டே இந்தத் தேநீர் கடையையும், அயலில் உள்ள பல பிரதேசங்களையும் நன்கு அவதானிக்க முடியும். அதனால் மாலை மங்கிய நிலையிலேயே படையினரை மடக்கிக் கைதுசெய்ய முடியும். வழமையாக இரு படையினரும் தேநீர் அருந்த மாலை வேளையிலேயே வருவதால் போராளிகளுக்கு அது நல்ல வசதியாகப் போய்விட்டது.
அன்றும் வழமைபோல் இரு படையினரும் தேநீர் அருந்த வந்திருந்தனர். அவர்கள் இருவரும் வந்திருந்தபோது அங்கு சில பொது மக்களும் தேநீர் அருந்திக்கொண்டு இருந்தனர். இதுதான் சரியான தருணம் எனக் கருதிய போராளிகள், அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
இரு படையினரில் ஒருவரிடமே எஸ்.எம்.ஜி ரக துப்பாக்கி இருந்தது. அந்தத் துப்பாக்கி பறிக்கப்பட்டாலோ அல்லது அதனை இயங்கா நிலைக்கு கொண்டு வந்தாலோ மட்டுமே, முகாமில் இருக்கும் படையினர் உசார் அடையாமல் இருவரையும் மடக்கிப் பிடித்துக்கொண்டு செல்லமுடியும். முகாமில் இருக்கும் படையினர் உசாரடைந்துவிட்டால் இருவரையும் உயிருடன் கொண்டு செல்வது முடியாத காரியமாகிவிடும். அதனால் சிப்பாயின் தோளில் கொழுவியிருக்கும் அந்தத் துப்பாக்கியை பறித்தெடுக்க வேண்டும்.
ஆனால், தோளில் கொழுவியுள்ள அந்தத் துப்பாக்கியை இலகுவாகப் பறித் தெடுக்க முடியாது என்பது போராளிகளுக்கு புரிந்தது. அத்துடன் சாதாரணமாக எஸ்.எம்.ஜி ரக துப்பாக்கிகள் குலுக்குப்பட்டாலே போதும் தானாகவே அவை சுடுநிலைக்கு (Auto charged) வந்துவிடக் கூடியவை. எனவே மிகவும் அவதானமாகவே இதனைக் கையாளவேண்டியிருந்தது. அதனைப் பறித்தெடுப்பதை விட, முதலில் அதனைச் செயலிழக்கச் செய்வதே போராளிகளுக்கு முக்கியமானதாக இருந்தது.
எனவே, கப்டன் பாவு படைச்சிப்பாயிடம் இருக்கும் துப்பாக்கியை செயலிழக்கச் செய்ய, சேரன் அவர்களை மடக்குவது என முடிவாகியது. தேநீர் கடையில் தேநீர் அருந்தச் செல்வது போன்று, கைக்குண்டுகளை மறைத்து எடுத்தபடி இரு போராளிகளும் அங்கு சென்று தேநீருக்கு ‘ஓடர்’ கொடுத்து விட்டு, லெப். பாவு சிப்பாயின் கையில் இருந்த துப்பாக்கியை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்.
மெதுவாக சிப்பாயின் அருகில் போய் நின்றுகொண்டார் அந்தப் போராளி. எஸ்.எம்.ஜி துப்பாக்கியில் தோட்டாக்கள் நிறைந்த மகசினை பற்றிப் பிடித்திருக்கும் ஒரு பட்டனை அமுக்கினால் போதும் மகசின் தானாகவே கழன்று வந்து விடும். நிலைமை தனக்கு சாதகமாகும் வரை காத்திருந்த கப்டன் பாவு, தருணம் சரியாக அமைந்ததும் அதன் பட்டனை அமுக்கி விட ‘மகசின்’ கழன்று கீழே விழுந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சிப்பாய் திடுக்கிட்டுப்போனார். சுதாகரிப்பதற்கு இடையில் ‘மகசினை’ பாவு கையிலெடுக்க, சேரன் தனது கைக்குண்டை கையில் எடுத்து அதன் கிளிப்பை உருவிவிட்டு, கைக் குண்டை சிப்பாயின் முகத்துக்கு நேரே பிடிக்க இரு சிப்பாய்களும் வெல வெலத்துப் போனார்கள்.
அதற்கிடையில் அங்கு தேநீர் குடித்துக்கொண்டிருந்த மக்களும் சுற்றி வளைத்து படையினர் இருவரையும் கட்டிப்பிடித்து, சிப்பாயின் தோளிலிருந்த துப்பாக்கியை பறித்தெடுத்து கப்டன் பாவுவின் கையில் கொடுத்தார்கள். அத்துடன், அவர்களே வேகமாகச் செயற்பட்டு படையினர் இருவரினதும் கைகளைக் கட்டிவிட்டார்கள். மக்களின் உதவியுடன் படையினர் இருவரையும் மடக்கிய போராளிகள், இரு படையினரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து விலகினார்கள். இதேநேரம் அங்கு நின்றிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படையினர் அங்கு இருக்கும்போது பயந்து பயந்து இருந்தவர்கள் இப்போது அவர்களை போராளிகளிடம் பிடித்துக்கொடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஆனாலும், இரு படையினரையும் காணாததால் வேறு படையினர் அங்கு தேடி வரலாம் என்பதால் பின்னர் மெதுவாக அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இரு படையினரையும் கைது செய்த போராளிகள், இரு வரையும் வற்றாப்பளை கேப்பாபுலவு கர்ணன் முகாமுக்கு கொண்டு வந்தனர். கர்ணன் முகாம் மீது இந்தியப் படையினர் எப்போதும் தாக்குதல் நடத்தலாம். அந்தத் தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட படையினர் இலக்காகி கொல்லப்படலாம் என்பதால், கைது செய்யப்பட்ட இரு படையினரின் உயிர் பாதுகாப்பிற்காக அவர்களை பதுங்குகுழி அமைத்து அதற்குள் தங்க வைக்குமாறு ஏற்கனவே பால்ராஜ் அண்ணை உத்தரவிட்டிருந்தார். அதனால், அவர்களுக்கென பிரத்தியேக பதுங்குகுழி அமைத்திருந்த போராளிகள், இருவரையும் அந்த பதுங்குகுழிக்குள் சிறை வைத்தனர்.
இதேநேரம் இரு படையினரையும் காணாத இந்தியப் படையினர் அன்றிரவு முதல் குமுழமுனைப் பகுதியெங்கும் தேடுதலை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களிடம் தீவிர விசாரணைகளை நடத்தினார்கள். ஆனாலும் படையினரால் இருவரினதும் உடல்களையோ அவர்கள் காணாமல் போனதற்கான அடையாளங்களையோ கண்டுபிடிக்க முடியாதமையால் புலிகள்தான் அவர்களை ஏதாவது செய்திருக்க வேண்டும் என நம்பினார்கள். படையினரின் உடல்கள் கிடைக்காதபடியால் புலிகள் அவர்களைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என இந்தியப்படையினர் எண்ணிக் கொண்டனர். அதனால், புலிகள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதிகளிலேயே அவர்களைக் கொண்டு சென்று வைத்திருக்கக்கூடும் எனக் கருதிய படையினர் அவ்வாறான பகுதிகளைத் தேடத் தொடங்கினார்கள். அப்போதுதான் வற்றாப்பளையில் புலிகளுக்கு ஒரு முகாம் இருப்பதை இந்தியப் படையினர் அறிந்து கொண்டனர். அந்த முகாமை முற்றுகையிடுவதற்கான நடவடிக்கையிலும் படையினர் இறங்கியிருந்தனர்.
இதேவேளை, இரு படையினரும் கைது செய்யப்பட்ட சில நாட்களின் பின்னர் அவர்களைப் பார்வையிடுவதற்காக பால்ராஜ் அண்ணை கர்ணன் முகாமிற்கு வந்திருந்தார். அங்கிருந்த படையினரைப் பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியவர், அன்றிரவு கர்ணன் முகாமிலேயே தங்கியிருந்தார். போராட்டத்தில் மக்கள் புரிகின்ற உதவிக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கூறிய பால்ராஜ் அண்ணை, இராணுவத்தினரைப் பிடித்துக்கொடுக்க உதவிய மக்களுக்கு நேரில் சென்று நன்றியைத் தெரிவிக்குமாறும் போராளிகளிடம் வலியுறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை போராளிகள் சிலர் அருகில் கச்சான்புலவுக்குள் அமைந் திருந்த தோட்டக் கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து முகாம் தேவைக்கு கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். மீண்டும் இரண்டாவது தடவையாகவும் தண்ணீர் எடுப்பதற்காக அவர்கள் கிணற்றடிக்கு சென்று கொண்டிருந்தபோது கிணற்றடியில் இந்திய இராணுவத்தினர் சிலர் நிற்பதைக்கண்டு அதிர்ந்து போனார்கள். கிணற்றைச் சுற்றி நின்று படையினர் ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்ததால், போராளிகள் வந்துகொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.
கிணற்றில் இருந்து அப்போதுதான் தண்ணீர் எடுத்ததற்கான அடையாளங்களை அவர்கள் கண்டிருக்க வேண்டும். தண்ணீர் எடுத்துச் செல்லும்போது ஊற்றுப்பட்டு தெரிந்த அடையாளங்களின் வழியைத் பின்தொடர்ந்து சென்று தாக்குவதற்கு அவர்கள் தீர்மானித்திருக்க வேண்டும். நிலைமையைப் புரிந்து கொண்ட போராளிகள் தளபதியின் கட்டளையைப் பெறாமலேயே, படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டார்கள். திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் நிலைகுலைந்த படையினர், தாக்குதலைத் தொடுப்பதற்கு பதிலாக பாய்ந்தடித்து தங்களுக்கு பாதுகாப்பான பகுதிகளை தேடி நிலையெடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.
இதேவேளை படையினர் முகாம் பகுதிக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்த பால்ராஜ் அண்ணை, உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு பகுதியாகப் பிரித்துக்கொடுத்தார். மிகவும் வேகமாக தாக்குதல் திட்டத்தை போராளிகளுக்கு கூறிய போதும் பல இடங்களிலும் இருந்து ஏராளமான போராளிகள் தாக்குதல் நடத்துவதுபோன்று அமைந்திருந்தது அவரது தாக்குதல் திட்டம். அதேநேரம் ஒரு சில போராளிகளை, கைது செய்து வைக்கப் பட்டிருந்த படையினருக்கு காவலாக முகாமில் நிற்குமாறு பணித்தவர், ஒரு பகுதிக்கு தனது அணியினரை அழைத்துக்கொண்டு பால் ராஜ் அண்ணை சென்றுவிட்டார்.
கிணற்றடியில் நிலையெடுத்த படையினர் போராளிகள் மீது தாக்குதலைத் தொடுக்க, போராளிகளும் பதில் தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். கடுமையான தாக்குதலை போராளிகள் நடத்திக்கொண்டிருந்தபோது, பால்ராஜ் அண்ணையும் அவருடன் நின்றிருந்த போராளிகளும் இன்னொரு பக்கத்தால் சென்று தாக்குதலை தொடுத்தனர். பால்ராஜ் அண்ணையும் அணியினரும் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த இடத்திலேயே ஆறு படையினர் கொல்லப்பட, ஏனைய படையினர் இறந்த படையினரது உடலங்களையும் ஆயுதங்களையும் கைவிட்டு விட்டு இன்னொரு வழியால் தப்பி ஓடத்தொடங்கினார்கள். படையினரின் உடலங்களையும், ஆயுதங்களையும் போராளிகள் கைப்பற்றிய நிலையில், இந்தியப் படையினரின் வோக்கி டோக்கிக்கு தொடர்பெடுத்தார் பால்ராஜ் அண்ணை…….
இன்று சமர்க்களநாயகனின் நினைவுநாள்.
மாவீரன் லீமாவுக்கு வீரவணக்கம்
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்
