×

அமெரிக்காவின் மத்திய பகுதியில் நிலவிய பழைமையான நாகரிகம் மாயா நாகரிகமாகும்.

அமெரிக்காவின் மத்திய பகுதியில் நிலவிய பழைமையான நாகரிகம் மாயா நாகரிகமாகும்.

இது அமெரிக்க இந்தியருடையதாகும் . கி.மு. 2000 ஆண்டு தொடக்கம் நிலவியது இந்த நாகரிகம். இந்த நாகரிக மக்கள் போர் வீரர்களை வழிபட்டார்கள். இந்த நாகரிகத்தின் உயர் நிலையின் இறுதிக்காலத்தில் நிறுவப்பட்ட” போர்வீரர்களின் கோயில்” மிகவும் புகழ்பெற்றது சில சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படும் *போர்வீரர் கோயில்” மிகவும் கவர்ச்சிகரமானது.

நாட்டுப் பாதுகாப்புப் போரில் ஈடுபட்டு இறந்த வீரர்களை மாவீரர்களாகக் கொண்டு அவர்களை மதித்துப் போற்றும் மரபு உலகெங்கும் நிலவுகிறது. தமிழர் பண்பாட்டில் சங்ககாலத்திற்கு முந்திய காலம் பெருங்கற் பண்பாட்டுக் காலம் எனப்படுகின்றது. இது இறந்தோரை அடக்கம் செய்யும் முறையை ஒட்டிய பெயரீடாகும். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பெருங்கற் பண் பாட்டு தாழிக்காடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பண்பாட்டிலிருந்தே சங்ககாலப் பண்பாடு உருவானதாகக் கருதப்படுகின்றது.

சங்ககாலத் தமிழகத்தில் பல இனக்குழுக்கள் காணப்பட்டன. எனினும், பேரரசு உருவாக்கும் நோக்குடன் இக்குழுக்களுக்கிடையே போர் நடைபெற்றது. ஏனைய குழுக்களிடமிருந்து மண்ணையும் பெருஞ்செல்வமாகக் கருதப்பட்ட மாடுகளையும் காக்கப் போர் நடைபெற்றது. இப்போர்களிலே பெருந் தொகையானோர்
இறந்தனர். இவர்களை மக்கள் தெய்வீக நிலையில் போற்றினர். இவர்கள் உரையும், பாட்டும் உடையவர்களாக விளங்கினர். இம்மாவீரர்களின் நினைவாக நடுகற்கள் நிறுவப்பட்டன. பெரு மன்னர், சிற்றரசர், குறுநிலத் தலைவர், படைத்தலைவர், போர் வீரர் முதலிய அனைவர்க்கும் நடுகற்கள் நிறுவப்பட்டன.

புறநானூறு 221 ஆம் பாடல் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுடைய நடுகல்லைக் குறிப்பிடுகிறது. மன்னனின் உயிர் நண்பரான பொத்தியார் நடுகல்லைப் பரவிய செய்தி இப்பாடலிற் கூறப்படுகிறது. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நினைவு நடுகல் நாட்டி விழாக் கொண்டாடப்பட்டது. அதில் ஔவையார் கலந்து கொண்டார். அப்போது அவனது பெருமையை நினைந்து ஒளவையார் வருந்திப் பாடிய பாடல் புற நானூற்றில் 232ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இவர்கள் பெருமன்னர்.

ஒரு குறுநிலப்பரப்பில் பகைவர் ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். அப்பகுதித் தலைவன் அவர்களைத் தொடர்ந்து சென்று போரிட்டு ஆநிரையை மீட்டு வந்தான். காயம் பட்ட அவன் ஊரெல்லையில் வரும்போது வீழ்ந்திறந்தான். அவ்விடத்தில் அவன் வீரச் செயலைப் பாராட்டி நடுகல் நட்டு பந்தரிட்டுப் பரவினர். இச்செய்தி புறநானூறு 260 ஆம் பாடலில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்களல்லாத படை வீரர்களுக்கும் நடுகல் நடப்பட்டது. அகநானூறு, ஐங்குறுநூறு முதலிய நூல்களில் பாலை நிலத்திலும் வீதிகளிலும் நடப்பட்ட பெருந்தொகையான நடுகற்களைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. இவை பெருந்தொகையாக இருப்பதுகொண்டே இவை சாதாரண படை மறவர்க்கான நடுகற்கள் என்பது புலனாகின்றது.

வீரர்கள் வீழ்ந்துபட்ட இடங்களில் இந்நடுகற்கள் நடப்பட்டன. இவற்றில் இறந்த வீரனது பெயரும், பீடும் எழுதப்பட்டன. இந் நடுகற்களுக்கு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சிறப்புக்கள் செய்யப்பட்டன. நீராட்டுதல், மாலை சூட்டுதல், படையலிடல், மயிற்பீலி சூட்டுதல், தூபமிடல், விளக்கேற்றுதல் இசைக்கருவிகளை ஒலிக்க செய்தல் முதலியவற்றைச் காலைதோறும் நடுகல்லை மக்கள் கை தொழுது வழிபட்டனர்.

சங்ககால நடுகற்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அவற்றில் பெயரும் பீடும் எவ்வாறு எழுதப்பட்டன என்பதை அறியமுடியவில்லை. பல்லவர் காலத்தில் நிறுவப்பட்ட (கி. பி 6-8) நடுகற்களே கிடைத்துள்ளன. இக் கற்களில் அரசன் பெயர், இறந்த வீரனின் பெயர், அவன் இறந்துபட்ட போர் பற்றிய செய்தி முதலியன நடுகற்களில் இடம் பெற்றன. செங்கம் நடுகற்களில் சாசனச் செய்தியுடன் வாளும், கேடயமும் ஏந்திப் போரிடும் வீரனின் உருவப் பொறிப்பும் இடம்பெற்றது. கேரளத்துப் புலப் பள்ளியில் கிடைத்த வீரக் கற்களில் வீரன் போரிடல், இறந்த அவனது உயிரை உயர் நிலை உலகத்து மகளிர் மாலை சூட்டி வரவேற்றல், வீரன் சிவனை இலிங்க வடிவில் வழிபடல் ஆகிய காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தென்னகத்தில் நடுகல் வழிபாட்டில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சிகளை இச்செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

தமிழீழ விடுதலைப் போரில் மாவீரராகும் போராளிகளுக்கான மாவீரர் மயானங்கள் பெருங்கற் காலத்தையும் சங்ககாலத்தையும் ஒரு சேர நினைவூட்டுகின்றன.

இங்கு மாவீரர் அனைவரையும் ஒரே இடத்தில் புதைப்பது பெருங் கற் காலத் தாழிக் காடுகளை நினைவூட்டுகிறது. நினைவுச் சின்னம் அமைத்து பெயரும் பீடும் எழுதுவதும், போற்றுவதும் சங்க கால நடுகல் மரபை நினைவூட்டுகிறது. போரில் உயிர்க்கொடை செய்த ஒவ்வொரு மாவீரனதும் வரலாற்றை உருவாக்கும் முயற்சி தமிழீழத்துக்கே தனியுரிமையானது. படங்களும், உருவச்சிலைகள் வெளியிடலும், அமைத்தலும் செங்கம், புலப்பள்ளி நடுகல் மரபுகளை நினைவூட்டுகிறது.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்பது மனித தெய்வங்கள் பற்றி வள்ளுவரின் மதிப்பீடு. மாவீரர்களும் மனிதர்களே எனினும், அவர்கள் தமது ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக தமது உடமை, உயர்வு, உயிர் அனைத்தையும் நல்க முன் வந்தவர்கள். இதனால்தான் மனித இனத்துக்கு நன்மை செய்ய முனைந்து உயிர்க்கொடை செய்த மாவீரர்களை அதிமானிடர்களாக மக்கள் கருதி அவர்களை மதித்துப் போற்றுகிறார்கள்.

– எரிமலை இதழ், மார்கழி 1992.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments