
வாழ்வு தந்து போனவர்…..
09.01.1997 நடுநிசி தாண்டிய அதிகாலைவேளை. ஆனையிறவு பரந்தன் கூட்டுப் படைத் தளத்தினூடு புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்கு தலுக்கு சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள்,உப்பு வெளிகள், சிறிய – சிறிய உவர் நீர்க் கடல்கள், இப்படித் தான் இருந்தது அந்தச் சூழல். எனினும் முகாமின் முக்கியத்துவம் நன்கு உணரப் பட்டிருந்தது. போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடன், “எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டும்” என்ற மன உறுதியுடன் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடு ஊர்ந்து கொண்டிருந்தனர். அது ஒரு நீண்ட நகர்வு. புலிகளின் போரியல் வரலாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காக, சண்டையை எதிர் பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிய நகர்வு. எங்காவது
எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிரும் கேள்விக்குறியாகும் நிலை.
அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளில் ஒரு அணியாகத்தான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அந்தக் குறிப்பிட்ட அணியும் நகர்ந்து கொண்டிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுடையதாக இருந்தது சிக்கலான அவர்களின் அன்றைய பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது.
சண்டை தொடங்கிவிட்டிருந்தது. அவர்களுக்குரிய பாதை வழியாக அந்தக் குறிப்பிட்ட அணியும் சண்டையத் தொடங்கியிருந்தது. முட்கம்பி வேலிகளை ‘டோப்பிட்டோ’ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் இவர்களை நோக்கிச் சடசடக்க; அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை தெரிந்தது அவர்களுக்கு.
ஆம் ஏற்கனவே எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளைவிட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள்த் தடையை எதிரி அமைத்திருந்தான். ‘செக்கன்’களும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஒரு இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையை தாண்டி உள்நுழையா விட்டால் எதிரி தன்னைத் தயார்ப் படுத்தக்கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமல் கூடப் போய்விடும். புதிதாகக் கிடந்த தடையை உடைக்க ‘டோப்பிட்டோ’வும் கைவசம் இல்லாத நிலை. மாற்று வழிகளை பரிசீலிக்கக்கூட நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச்சென்ற எங்கள் தோழனும் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவைபட்டு வீழ்ந்துவிட, எதிரி அந்த இடத்தில் முட்கம்பிகள் வெட்டப்படாமல் இருப்பதையும், நாம் அவற்றை வெட்ட முயற்சிப்பதையும் கண்டு கொண்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங்கொள்ள வைத்தான். அது ஒரு வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல், அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஒரு அணி அங்கே தடையை உடைக்க முடியாமல் நிற்க, தனியொருவனாய் சஜந்தன் நிலைமையை மாற்றியமைத்தான்.
அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்ததால், அன்றைய சண்டையின் முடிவு கண்களில் பட அவன் அவ்வாறு முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட் கம்பிச்சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின்மேல் அவன்கிடக்க, அவன் அமைத்துத் தந்த அந்த உயிர்த்துடிப்பான அந்தப் பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.
அவனது அணி தனக்குக் கொடுக்கப் பட்ட எதிரிப் பகுதியை பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழவேண்டியவர்களாய் இருந்த நிலைமாறி அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக்கணக்கான எதிரிகளை நாம் வீழ்த்தியிருந்தோம். எதிரியின் பீரங்கிகளை அழித்திருந்தோம். அந்த வெற்றிக்கு வழி சமைப்பதற்காக தன் உடலால் வழிசமைத்தவன் எங்கள் சஜந்தன்.
உடலின் ஒவ்வொரு உயிர் அணுக்களும் வேதனையால் துடிக்க, அத்தனை வேதனை உணர்ச்சி களையும் தாங்கி எதிரியின் முட் கம்பித் தடையின் மீது பாய்ந்து தோழர்களுக்கு வழிசமைத்தவனின் வீரம் அத்தனையும் அன்றைய சண்டையின் வெற்றிக்காய், அந்த வெற்றியால் தீர்மானிக்கப்படும் அவன் நேசித்த மக்களின் வாழ்விற்காய்.
“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத் திலிருந்தே பிறக்கின்றது” என்ற தலைவர் அவர்களின் கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன், பின் ஜெயசிக்குறு சமரில் வித்தாகிப் போனான். இவன் போன்ற போராளி களின் தியாகங்களே இன்றும் தொடரும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.
– அன்பு
– சூரியப்புதல்வர்கள் 1999.
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்