×

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு குடிகளாக காட்டிவரும் நிலை யில், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதைத் தமிழர்களே இன்னும் அறியாத நிலையே இருந்து வருவது கவலைக்குரியதாகும்.

குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை

வேடுவத் தெய்வ வழிபடு

தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள்

அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன

ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்வுகள் பற்றிய ஆர்வம் அதிகமாக வெளிவருகின்ற நிலையில் தமிழரின் பல்வேறு வரலாறுகள் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன.

இருந்த போதிலும் தோண்டி எடுக்கப்படும் தொல்பொருள் ஊடான தமிழர்களின் வரலாறுகளை இளந்தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை கவலைக்கு உரியதாகும்

குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் கண்டு பிடிக்கப்படும் தமிழர்களின் தொன்மையானது, இலத்திரனியல் வாசிப்பு முறையில் உள்ளீர்க்கப்பட்டு, அவை எதிர்கால சந்ததியினர் இலகுவில் படித்தறியக் கூடிய வகையிலான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் ஆதிக்குடிகள்

இந்த நாட்டில் தமிழர்கள் ஆதிக்குடிகள். ஏனையோர் அனைவரும பின்னர் இங்கு வந்து குடியேறிய வந்தேறுகுடிகள் என்பதை இந்த உலகம் அறியும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் ஆதிக்குடிகள்

இன்றும் தமிழர்கள் தங்களது வரலாறுகளை அறிவதில் போதியளவு அக்கறையற்ற நிலைமையே காணப் படுகின்றது. இவ்வாறான நிலையினை பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்குக் காணப்படுகின்றது. எனவே எமது பாரம்பரியங்களை தேடியறிந்து, அவற்றினை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

இன்று இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள் தான் என்று கூறும் சிங்கள ஆய்வாளர்கள், அதற்காக முன்வைக்கும் ஆதாரங்கள் தமிழருக்கு உரியதாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் உள்ள ஆதிவாசிகள் தொடர்பான பார்வையும் காணப்படுகின்றது

இலங்கையில் இன்றுள்ள ஆதிவாசிகளைக் கொண்டு இலங்கையின் ஆதிக்குடிகளைச் சிங்களவர்களாகவே காட்ட முற்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் எங்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரியங்கள் தொடர்பில் எமது எதிர்காலச் சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உரியதாகும்.

 ஆதிக்குடிகள்

இலங்கையைப் பொறுத்த வரையில், ஆதிக் குடிவாசிகள் வாழும் பகுதியாக தெற்கில் உள்ள மகியங்கனை இன்று சர்வதேசம் வரையில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்களும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆதிவாசி களைக் காண்பதற்கும், அவர்களின் பாரம்பரிய கலாசார பண்பாடுகளை அறிவதற்கும் அதிகளவில் செல்லு மிடமாகவும் அப்பகுதி உள்ளது.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான்

இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள் தான் என்னும் வகையில் இந்தச் செயற்பாடுகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.  கிழக்கில் இன்றும் ஆதிவாசிகள் வாழ்கின்றார்கள். ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்று அதன் உண்மைத் தன்மையினை வெளிக் கொணர்வதற்கு யாரும்

தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள்தான் என்பதை வெளிப்படுத்துவது போன்று மகியங்கனை ஆதிவாசிகள் பகுதி மிகவும் பிரமாண்டப் படுத்தப்பட்டு அனைவரையும் ஈர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையின் ஆதிக்குடிகளாக தமிழர்கள் உள்ள நிலையிலும்  அவர்களின் வழித் தோன்றல்களாக மட்டக்களப்பில் ஆதிக்குடிகள் வாழும் நிலையிலும் அது தொடர்பான அடையாளத்தினை வெளிப்படுத்துவதற்கான போதிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

மட்டக்களப்பு ஆதிவாசிகள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ஆதிவாசிகள், மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில், மதுரங்கேணிக்குளம் கிராம அதிகாரி பிரிவிலுள்ள, குஞ்சங்கல்குளம் பகுதியில் மாத்திரம் 74 ஆதிவாசிக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சங்கல்குளம், மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சை, கொக்குவில், மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், ஆலங்குளம், நாசிவந்தீவு, குகனேசபுரம், பனிச்சங்கேணி, கண்டலடி, தட்டுமுனை, பால்சேனை, அம்பந்தாவெளி, திக்கான, கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு ஆதிவாசிகள் தங்களுடைய ஜீவனோபாய தொழில்களாக விவசாயம், வீட்டுத் தோட்டம், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இங்குள்ள பிள்ளைகள் தங்களுடைய கல்வியை மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலையில் கற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம், குஞ்சங்கல்குளம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் கீழ், கிழக்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்

வேடுவத் தெய்வ வழிபடு

இவர்கள் காலை எழுந்து தங்களுடைய இயற்கைத் தெய்வமான வேடுவத் தெய்வத்தினை வழிபட்டு, அதன் பிற்பாடு தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயம், வீட்டுத் தோட்டச் செய்கை, தேன் எடுத்தல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

அத்தோடு தங்களது உறவுகளுடன் இணைந்து தமது சந்ததிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமது இனத்தின் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரை யாடல்களை வழமையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிற்பாடு தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட வனங்களுக்கு சென்று தேன் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர். குறிப்பாக மழைக் காலம் தவிர்ந்த காலங்களில் அவர்கள்  தேன் எடுப்பது வழக்கம்.

இன்றும் இவர்கள் தமது முன்னோர்கள் வழியாக வந்தவற்றைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்ற போதிலும், உணவுப் பழக்கம், பேச்சு வழக்கம், கல்விமுறை உட்பட்ட பல விடயங்களில் காலத்திற்கேற்ப முன்னேறிய நிலையில், இவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை இங்கு அவதானிக்க முடிகின்றது.

எவ்வாறாயினும் ஏனைய பகுதிகளில் ஆதிவாசிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமும், வசதி வாய்ப்புகளும் தங்களுக்கு கிடைப்பதில்லையென

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் தெரிவிக்கின்றார்.

“எனது நீண்ட நாள் ஆசை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் எங்களது ஆதிவாசிகளின் நடைமுறைகளை உள்ளடக்கியதான பொருட்களைக் கொண்டு ஒரு நூதனசாலை அமைக்க வேண்டும் என்பதாகும். எங்களது சமூகத்தவர்களின் பல பெறுமதி மிக்க எங்களது பழமையான பொருட்கள் சிலவற்றைக் கடந்த கால யுத்தத்தின் போது இழந்து விட்டோம். மிகுதியாக இருக்கும் எங்களது பொருட்களையும் எங்களது பாரம்பரிய நடைமுறைகளைச் சித்தரிக்கக் கூடிய வகையில் ஒரு நூதனசாலை அமையப்பெறுவது அவசியம்” என்கிறார்.

“ஆதிவாசிகள் என்றால் அது மகியங்கனையை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்”

“கிழக்கு மாகாணத்தின் கரையோர ஆதி வாசிகளை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகப் புறக்கணித்தே வருகின்றன. மகியங்கனை, தம்பானையில் உள்ள ஆதிவாசிகளின் இருப் பிடத்திற்கு அரசாங்க அமைச்சர்கள் செல்வதும் அவர்களை சந்திப்பதும், அவர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  கூட எங்களை வந்து சந்திப்பதும் இல்லை. எங்களது குறை நிறைகளை கேட்பதுமில்லை” எனவும் ஆதிவாசிகளின் தலைவர் வேலாயுதம் தெரிவித்தார். “ஆதிவாசிகள் என்றால் அது மகியங்கனையை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் புறக்கணிக்கப் படுகின்றோம்” எனவும் தெரிவித்தார்.

தமிழர்களின் பூர்வீக குடிகள் என்ற அடிப்படையில் அவர்களை வெளியுலகிலிருந்து மறைப்பதற்கான முயற்சியாக கூட இது இருக்கலாம். தமிழர்களான ஆதிக்குடிகளை சிங்களவர்களாக காண்பித்தவர்களுக்கு, மட்டக்களப்பில் உள்ள ஆதிக்குடிகளை சிங்களவர்களாக மாற்றமுடியாத நிலையில் இன்று அவர்களின் பாரம்பரியத்தினை வெளிக்காட்டுவதை விரும்பாத நிலையே இருந்து வருவது கண்கூடாக உள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ள இந்த மக்கள் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள் கவனம்

செலுத்தாமல் இருப்பதும் மிகவும் கவலைக்குரியது.

அவர்கள் தொடர்பான முழுமையான வரலாறுகள் எழுதப்பட்டு, அவர்களின் பாரம்பரியங்களும் காட்சிப்படுத்தப்படும் போது, தமிழர்கள் தொடர்பான வரலாறு மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதனைச் செய்வதற்கு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments